பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று பாயிரத் தொடர் இவரது இலக்கணப் புலமைக்கும், வடமொழி அறிவுக்கும் சான்றாகும். இவரை உரையாசிரியர்கள் அகத்தியரின் மாணாக்கர் என்பர்.

தொல்காப்பியம், எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றிப் பொருளுக்கும் இலக்கணம் கூறுகிறது; எழுத்திலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல்லிலக்கணத்தைச் சொல்லதிகாரத்திலும், பொருளிலக்கணத்தைப் பொருளதிகாரத்திலும் விளக்குகிறது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. எழுத்துக்களின் இயல்பு. அவை மொழியாகும் திறம், மொழி புணருங்கால் ஏற்படும் திரிபு முதலியவற்றை எழுத்ததிகாரம் விளக்குகிறது ஒலிகளின் அமைப்பைப் பிறப்பியல் அடிப்படையில் விளக்குவது தொல்காப்பியத்திற்கே உரிய தனிச் சிறப்பாகும். இது மேலை நாட்டார் அணுகுமுறையை ஒத்துள்ளது. பெயர், வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்களையும் அவை தொடரும் முறையையும் சொல்லதிகாரம் விளக்குகிறது; வேற்றுமைத் தொடர், அல்வழித் தொடர் எனத் தொடரியலைப் பிரித்துக் காட்டுகிறது. இவ் அடிப்படையிலேயே சந்தியிலக்கணமும் அமைந்துள்ளது. பொருளதிகாரம் தமிழ் இலக்கிய மரபுகளைத் தெளிவுபடுத்துகிறது; அகத்திணை, புறத்திணை எனும் ஒழுக்கங்களையும், உவமை எனும் அணி வகையையும் மெய்ப்பாடுகளையும், செய்யுள் அமைப்புகளையும், சொற்பொருள் மரபுகளையும் விரிவாக விளக்குகிறது.

தொல்காப்பியம் வகுத்துள்ள மரபுகளை ஒட்டியே சங்க இலக்கியங்களின் பொருள் மரபும், யாப்பும், அணி நயங்களும் அமைந்துள்ளன. பிற்காலத்து இலக்கண நூல்களும் அதனையொட்டியே பெரும்பாலும் அமைத்துள்ளன. காலத்துக்கு ஏற்றவாறு அவற்றில் சில மாற்றங்கள் தோன்றின.