பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

இஃது இவரது திருமால் பத்தியை நன்கு விளக்குகிறது, இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு.

9. திருப்பாணாழ்வார்

இவர் உறையூரைச் சார்ந்தவர்; பாணர் குலத்தில் தீண்டத்தகாதவராய்ப் பிறந்தார். அதனால், இவர் கோயிலுள் புகாமல் காவிரியாற்றங் கரையிலேயே நின்று அரங்கன் ஆலயம் நோக்கிப் பாடி வந்தார். ஒரு நாள் இவரைப் பக்தரென்று பாராது கல்லெறிந்தனர். அதனால் திருவரங்கநாதர் தம் நெற்றியில் குருதி கொட்டச் செய்தார்; நல்லவர் கனவில் தோன்றித் திருப்பாணாழ்வாரை ஆலயம் புகவைத்தார். இறைவனை நேரில் கண்ட இவ்வாழ்வார். இறைவன் அழகிலே மையல் கொண்டு, 'அமலனாதிபிரான்' என்ற பதிகத்தைப் பாடியருளினார்.

கொண்டல் வண்ணனைக்கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே'

இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு.

10. குலசேகராழ்வார்

இவர் சேர அரச பரம்பரையில் திருவஞ்சைக்களத்தில் தோன்றியவர். சேரகுலமும், வைணவமும் தழைக்கப் பிறந்ததனால் இவர் 'குலசேகரர்' என்றழைக்கப் பெற்றார். வீரப்போர் புரிந்து வெற்றிபல கண்ட இவர், இறுதியில் திருமால் அடியவரானார், இராமன்மீது பித்துக் கொண்டு இவர் பாடிய பாடல்கள் கற்பார் உள்ளத்தை உருக்க வல்லன. இவர் வடமொழியும், தமிழ் மொழியும் நன்குணர்ந்தவர். வடமொழியில் 'முகுந்தமாலை' என்னும் நூலையும்,