பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகிய நான்கு நூல்களைப் பாடியுள்ளார், திருவாய்மொழி 'திராவிடவேதம்' என்று போற்றப்படுகிறது; இஃது இறுதி ஆயிரமாகத் திகழ்கிறது; வேத சாரமாக விளங்குகிறது. இதற்குப் பல உரைகள் உள்ளன; அவற்றுள் பெரியவாச்சான் பிள்ளை உரை சிறந்து விளங்குகிறது.

“பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்று காண்டொறும்-பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வாவை
எல்லாம் பிரான் உருவே”

இஃது இவர் உளங்கசிந்து உருகும் பாடல்.

12. மதுரகவியாழ்வார்

இவர் நம்மாழ்வாரின் சீடர். திருக்கோளூர் இவரது பிறப்பிடமாகும் அயோத்திக்குச் சென்றபோது ஒரு ஒளியினைக் கண்டு அதனைத் தொடர்ந்து வந்து நம்மாழ்வாரைக் கண்டார் என்பர். நம்மாழ்வாரின் பாடல்களனைத்தையும் தம் கரத்தால் எழுதிப் பெருமை பெற்றவர்; இவர் நம் ஆழ்வாரையே தம் தெய்வமாகக் கருதி வழிபட்டவர். ‘கண்ணி நுண் சிறுதாம்பு' என்பது இவர் பாடிய நூலாகும். அஃது அளவால் மிகச் சிறியது.

நண்ணித் தென்குருகூர் நம்பியென் றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே

என்பது போல இவர் பாடும் பாடல்கள் எல்லாம் நம்மாழ்வார் சிறப்பைப் பாடுவனவாகவே உள்ளன.

பிறநூல்கள்

சங்கம் மருவிய நூல்களாகக் குறிப்பிடத்தக்கன முத்தொள்ளாயிரமும் பெருங்கதையுமாகும்.