பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

திருவிளையாடற்புராணம்

வகையில் பத்தினிப் பெண் மற்றொருத்தியைத் தேடி மணம் செய்து கொண்டான்.

பாண்டியன் குலோத்துங்கன் ஈசுவரன் திருச்சந்நிதியை அடைந்து, "கருணாநிதியே! பழி அஞ்சும் பரம்பொருளே! என் விழி திறந்து உண்மை காணச் செய்தாய்" என்று கூறிப் போற்றி வணங்கித் தம் அரண்மனை நோக்கிச் சென்றான். பின் தன் ஆட்சியைச் செம்மையுற நடத்திச் செங்கோலுக்குச் சிறப்புச் சேர்த்தான். 

26. மாபாதகம் தீர்த்த படலம்

குலோத்துங்கன் ஆட்சி செய்த காலத்தில் பாண்டிய நாட்டில் அவந்தி என்னும் நகரில் பார்ப்பனன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தும் அவன் தாழ்ந்த ஒழுக்கத்தை உடையவனாக இருந்தான்; காமம், களவு, கொலை இவற்றுக்கு அஞ்சாதவனாக இருந்தான்.

அவன் தவறான ஒழுக்கத்தை அவன் தந்தை கடிந்து வந்தார். அப்பொழுதும் அவன் திருந்தியபாடு இல்லை. தன் தந்தை தன்னைக் கண்டிப்பதை அவன்விரும்பவில்லை. தாய் தடுத்தும் அவன் தன் தந்தையைக் கொலை செய்து விட்டான்; அவர் உடலை வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்து விட்டான்.