பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




25. பழியஞ்சின படலம்

இராசசேகரனுக்குப்பின் அவன் மகன் குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்யும் நாளில் இந்த அற்புத நிகழ்ச்சி நடந்தது. திருப்புத்தூரிலிருந்து ஒரு பார்ப்பனன் தன் மனைவியோடு மதுரையை நோக்கிக் காட்டு வழியே வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் நீர் வேட்கையால் வருந்தும் தன் மனைவியையும் கைக்குழந்தையையும் ஆலமரத்தின் நிழலில் உட்கார வைத்து விட்டுத் தண்ணீர் கொண்டு வரச் சென்றான்.

அந்த ஆலமரத்தினின்று ஓர் அம்பு கீழே விழுந்து அவள் வயிற்றில் பாய்ந்து உதிரம் ஒழுகச் செய்து அவள் இன்னுயிரைப் பிரித்து விட்டது. தண்ணீர் எடுக்கச் சென்றவன் திரும்பி வந்து பார்க்கும் போது இந்தக் கோர மரணத்தைக் கண்டு அதிர்ச்சியும் அவலமும் அடைந்தான்.

அதே ஆலமரத்தில் பறவை வேட்டையாடும் வேடுவன் ஒருவன் அலுத்துக் களைத்து நிழலுக்கு ஒதுங்கினான். அவன் கையில் வில்லும் அம்பும் இருக்கக் கண்டு வேறு ஓர் சொல்லும் சொல்லாமல் அவனை இழுத்துக் கொண்டு அரண்மனை வாயிலில் நிறுத்தினான்; அழுகின்ற குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு செத்துக் கிடந்த பார்ப்பினியை முதுகில் சுமந்து கொண்டு வேடுவனோடு அரண்மனை வந்து சேர்ந்தான்.

"கொலை, கொலை" என்று கத்தி அரண்மனையில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தினான். ஒரு பாவமும் அறியாத தன் மனைவியைக் காரணம் இல்லாமல் அந்த வேடுவன் அம்பு எய்து அழித்துவிட்டான் என்றும், தானும் சேயும் அனாதைகள் ஆக்கப்பட்டு விட்டனர் என்றும் முறையிட்டான்.