பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கீரனுக்கு உபதேசித்த படலம்

147

பெண்ணை உணர்த்துவதால் வழு அமைதியாகும் என்றும் கூறுவர்.

அதே போலக் காதல் உணர்வால் தன் காதலியின் கூந்தல் மணம் இயற்கையானது என்று கருதுவது தக்கதாகும்.

இந்த நுட்பத்தை எல்லாம் அறியாமல் எல்லாத் தொடர்களும் வழா நிலையாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது போதிய இலக்கண்ப் பயிற்சி இன்மையே யாகும். அதனால் நக்கீரன் பொருள் இலக்கணம் கற்க வேண்டும் என்று இறைவன் விரும்பினார்.

அதற்குத் தக்க ஆசிரியர் யார் என்று ஆராய்ந்தார். அகத்தியர் தம்மிடம் பொருள் இலக்கணம் கற்றுப் பொதிகை மலையில் தங்கி இருப்பது அவருக்குத் தெரியும். அவரை வரவழைத்து நக்கீரனுக்குத் தமிழ் வழாநிலை வழு அமைதிகள் பற்றிய இலக்கணம் அறிவித்தார்.

கவிஞன் உணர்வுபடப் பாடும் போது அதில் பொருட் குற்றம் காண்பது அறியாமையாகும்.

"நிலா நிலா ஒடிவா நில்லாமல் இங்கு ஓடிவா" என்று பாடுவதாகக் கொண்டால் நிலா எப்படி நிலம் நோக்கி வரும் என்று கேட்டால் அந்தப் பாட்டுக்கே வாழ்வு இல்லாமல் போய்விடும்.

சிறுவர்களுக்குக் கதைகள் கூறும்போது காக்கை நரி பேசுவதைக் சொன்னால் அது எப்படிப் பேசும் என்று கேட்டால் கதைகளே சொல்ல முடியாமற் போய்விடும்.