பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நரி பரியாக்கிய படலம்

161


விடுதலை பெற்ற வாசகரை அவர் மாளிகைக்கு அனுப்பி வைத்து அரசன் வந்திருந்தவருக்கு உபசாரம் செய்து பிரிந்து தன் அரண்மனையை அடைந்தான். வாசகர் நேரே சோமசுந்தரர் திருக்கோயிலை அடைந்து அவர் அற்புதத் திருவிளையாட்டை எண்ணி எண்ணி இறைவனுக்குத் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். 

60 பரி நரியாகிய படலம்

கட்டி வைத்த பரிகள் அன்று இரவு உரு மாறின; கொட்டி வைத்த கொள்ளும் புல்லும் தின்னாமற் கிடந்தன. பரிகள் நரிகள் ஆயின. காட்டில் திரிந்து கொண்டிருந்த தம்மை இப்படிக் குதிரைகளாகக் கட்டிப் போட்டார்களே என்று அவை வருந்தின. நத்தையும் நண்டும் தின்று பழகிய தமக்கு இந்தச் சொத்தைப்புல்லைப் போட்டு வாட்டினார்களே என்று வேதனைப்பட்டன. எப்பொழுது விடுதலை பெறுவோம் என்று காத்துக் கிடந்தன.

கட்டிய கயிறுகளை அறுத்துக் கொண்டு ஓடுவதில் முனைந்தன. பிணமும் அழுகலும் தின்று பழகிய அவற்றிற்கு ஊனும் இறைச்சியும் தின்ன வேட்கை பெருகியது. ஏற்கனவே கட்டி வைத்த குதிரைகளைக் குதறித் தின்றன; அவை கதறி ஓலமிட்டன; ஊருக்குள் புகுந்து ஆடுகளையும் கோழிகளையும் கடித்துக் கொன்றன. குதிரைகளின், கனைப்பொலி கேட்ட கொட்டகைக் காவலர்கள் நரிகள் ஊளையிடும் குரலைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். நடு இரவில் கொள்ளை அடிக்கப் புகுந்த கள்வர்களைப் போல நரிகள் நாலாபுறமும் ஓடி ஊரை அல்லோலகப்படுத்தியது. அவரவர் தம் உடைமைகளாகிய ஆடு மாடுகளை நரிகள் குதறித் தின்பதைக் கண்டு கதறி முறையிட்டனர்,