பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடை இலச்சினை இட்ட படலம்

105

திருவிளையாடல் என உணர்ந்து எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தான். சைவ சமயம் ஓர் எல்லைக்கு உட்பட்டதன்று; சோழநாடு பாண்டியநாடு மட்டும் அல்ல அரசுகள் எல்லாம் பேரரசு ஆகிய பெருமானின் முன் நில்லா என்பதை உணர்ந்தான் ; சோழனையும் தன் ஆருயிர் நண்பனாக மதிக்கத் தொடங்கினான். யார் வந்து வணங்கினாலும் அதற்குத் தடைகூடாது என்று திருந்திய மனம் பெற்றான். 

35. தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்

காடு வெட்டிய சோழனோடு பாண்டிய நாட்டு அரசனாகிய இராசேந்திரன் நல்லுறவு வளர்த்து அவன் நட்பைப் பெருக்கினான்; அவனும் அன்புக் காணிக்கையாக ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் தந்தான். அதற்கு ஈடாக வரிசைகள் சிலவற்றை அனுப்பினான். நட்பு இருவருக்கும் கொடுத்தல் வாங்கல் உறவுக்கு அடி சோலியது

சோழன் தன் மகளைப் பாண்டியன் இராசேந்திரனுக்குத் தந்து மணமுடிக்க நினைத்தான்; அதற்கு வேண்டிய பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இராசேந்திரனின் தம்பி இராசசிங்கன் என்பவன் முந்திக்கொண்டான். அவனே சோழ நாட்டுக்குச் சென்று சோழன் திருமகளைத் தன் துணைவியாக ஆக்கிக்கொள்ள விழைந்தான்; அதற்காக அவன் தலைநகராக இருந்த காஞ்சி நகருக்கு நேரிற்சென்றான். வீடு தேடி வந்த வேந்தனுக்குத் தன் மகளைக் கொடுக்க முடிவுசெய்தான்; இளையவனுக்குத் தன் மகளை மணம்செய்து தந்தான்.