பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

சமயவாதிகளும் சமயப் பூசலும்

சமயம் தனி மனிதச்சார்புடையது என்பதை அந்தந்த சமயத்தைச் சார்ந்த சமய ஆச்சாரியர்கள் நன்குணர்ந்துள்ளனர். அதற்கேற்பவே அவர்தம் வாழ்வும் செயற்பாடுகளும் உள்ளன. அவர்களிடையே பிணக்கோ சச்சரவோ அறவே இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் மதித்து அவரவர் வழியில் செல்கின்றனர். எங்காவது பாதிரியாருக்கும் கோயில் அர்ச்சகருக்கும் தகராறு, சச்சரவு எனக் கேள்விப் பட்டிருக்கிறோமா? அல்லது இமாமுக்கும் பாதிரிக்கும் அல்லது இமாமுக்கும் அர்ச்சகருக்கும் சண்டை என எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லை. அவரவர் சமய ஆச்சாரப்படி அவரவர் வழியில் அமைதியோடும் பிற சமயங்களை மதிக்கும் நல்லிணக்க உணர்வோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சார்பாகப் பேச அவதாரம் எடுத்திருப்பதாக கருதிக் கொண்டிருப்பவர்கள், சமய அறிவோ, சமயச் சிந்தனையோ இல்லாத அரசியல்வாதிகள். அவர்களால்தான் அனைத்துப் பிரச்சினைகளும் உருவெடுக்கின்றன. இந்தப் பேருண்மையை உணர்ந்து, சமயத்தை அரசியலில் கலந்து, குட்டையைக் குழப்பி, ஆதாயம் காண முயலும் சமூக விரோத சக்திகளை இன்றையத் தலைமுறை அடையாளம் கண்டுவருவது ஆறுதல் தரும் செய்தியாகும். இத்தகைய சமூக விழிப்புணர்வை ஊட்டுவதில் இஸ்லாத்துக்குப் பெரும் பங்கு உண்டு. பிற சமயங்களை மதிக்கப் பணிக்கும் இஸ்லாம், சமய சகிப்புணர்வோடும் நல்லிணக்கச் சிந்தனையோடும் மனித்துவத்தைக் கண்டறியவும் மதித்துப் பாராட்டவும் இஸ்லாம் வழிகாட்டும் ஒளி விளக்காக இன்று ஒளிர்ந்து கொண்டுள்ளது என்பதை அறிவுலகமே போற்றுகிறது.

(24.7.98 அன்று துபாய் லூத்தா மஸ்ஜிதில் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சிச் சொற்பொழிவுச் கருக்கம்)