பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

சு. செல்லப்பனார் அவர்கள் ஆதாரப்பூர்வமான தகவல்களினடிப்படையில் பேசி வியக்க வைத்தார்கள். ஒரு சிறு குறையைக்கூட முஸ்லிம்களால் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு திருமறையின் துணையோடு அண்ணலாரின் வாழ்வையும் வாக்கையும் சுலைமான் நபி போன்ற பிற நபிமார்களின் வாழ்வையும் வாக்கையும் அதியற்புதமாகச் சித்தரித்துப் பேசினார்கள். அதே போன்று 'சூஃபி' கருத்தரங்கில் ஆய்வு நிகழ்த்திய பேராசிரியர் இரா. மாணிக்கவாசகம், இஸ்லாமிய சூஃபிமார்களாகிய பீர் முஹம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் போன்றவர்களின் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் தமிழ்ப் பாடல்களை சித்தர்களின் பாடல்களோடு ஒப்பீட்டாய்வு செய்து பேசும்போது, ஞான இலக்கியத்தைத் தொட்டவர்கள் சித்தர்கள், திறம்பட முழுமையடையச் செய்தவர்கள் தமிழ் சூஃபிமார்கள் என்பதைத் திறம்பட ஆய்வு செய்து பேசினர். முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற சமய மக்களும் வியந்து போற்றினார்கள். அதே செய்தியை நான் கூறியிருந்தால் மணவை முஸ்தபா ஒரு முஸ்லிம். அவர்கள் மார்க்கப் பெருமையை அவர்கள் உயர்த்திப் பேசுவது இயல்புதானே எனக் கருதி அதற்கொரு முக்கியத்துவம் கொடுக்காமலே போயிருப்பார்கள். ஆனால், அதே விஷயத்தைப் பேராசிரியர் மாணிக்க வாசகம் பேசினால், அவர் மற்றச் சமயத்தைச் சார்ந்தவர்; சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். விஷயம் அறிந்தவர். அவரே இப்படிக் கூறுகிறார் என்றால் நிச்சயம் அது உண்மையின்பாற்பட்டதாகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் அதை ஏற்றிப் போற்றவே செய்வார்கள்.

எனவே, பிற சமயத்தவர் மத்தியில் நாம் பேச நினைப்பதை, மற்ற சகோதர சமயத்தவர்களைக் கொண்டே சொல்லச் செய்தால், பிறர் நம்மைப் பற்றிக் கொண்டுள்ள தவறான கண்ணோட்டம் மறையவும் சரியான தகவல்கள் சரியான கோணத்தில் சரியான இடத்தை அடையவும் வாய்ப்பேற்பட முடியும்.