பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

பெறுவது இயல்பு. ஆனால், இஸ்லாமியப் படைப்போர் இலக்கியங்களில் வெற்றி பெற்ற வீரர்களின் பெயர் தலைப்பாக அமையாது, படையெடுத்து வந்து, போரிட்டு, தோல்வியடைந்த பிற சமய வீரர்களே, மன்னர்களே தலைப்புகளில் இடம் பெறுகின்றார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

போரை முதலில் தொடங்கியவர், படையெடுத்து வந்தவர்களாகிய பிற சமயத்தவர் பெயரிலேயே படைப்போர் இலக்கியங்கள் அமைந்துள்ளன. முஸ்லிம்கள் தற்காப்புக்காக பிற சமயப் படையெடுப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் மட்டுமே. அவர்கள் இறுதியில் வெற்றி பெற்றாலும்கூட, படையெடுப்பு நடத்திய பிற சமய வீரர்களையே கதாநாயகர்களாக அமைத்து இலக்கியம் படைத்து, இஸ்லாமியக் கோட்பாட்டை நிலைநிறுத்தியவர்கள் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.

இனி, இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா என்பதை வரலாற்றுப் பூர்வமாக சமூகவியல் அடிப்படையில் பார்ப்போம்.

இந்திய முதல் போரே தற்காப்புப் போர்

இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே நடைபெற்ற முதல் போர் சிந்துப் பகுதியிலே நடைபெற்ற போர் என வரலாற்றிலே குறிக்கப்படுகிறது. இந்தப் போர் எதற்காக நடைபெற்றது?

இந்தியாவில் தொடக்கக் காலத்தில் அராபிய வணிகர்கள் சிந்துப் பகுதியிலே வணிகம் செய்து வந்தார்கள். இவர்களின் சிறப்பான வணிகத்தைக் கண்டு பொறாமைப்பட்ட சிந்துப் பகுதியைச் சேர்ந்த பிற சமய வணிகர்கள் அளவுக்கதிகமான தொல்லைகளைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு அப்பகுதியை ஆண்டு வந்த இந்து மன்னனின் ஆதரவும் இருந்து வந்தது. இதனால் அரபகம்