பக்கம்:எக்கோவின் காதல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

107

அடுத்தபடி அர்ச்சுனன் பேசவேண்டுமென்று தலைவர் குறிப்பிட்டார்.

"தோழர்களே! நமது கழகம் தொழிலாளர் நலனை விட்டு வேறு வழியில் செல்வதாகக் கருதுகிறார் தோழர் கிருஷ்ணன். எந்த வழியில் போனாலும் நமது நலனுக்காகத் தான் செல்கிறதே ஒழியத் தீமைக்காகச் செல்லவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் செயலாளன் என்ற முறையில். நாம் வெற்றி பெற வேண்டுமானால் -நமது உரிமையைப் பெற வேண்டுமானால், நாம் மனிதனாக வாழ வேண்டுமானால் நமது முயற்சியில் - ஊக்கத்தில் - உழைப்பில் - ஒற்றுமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை இழந்து விட்டு ஆண்டவன் உதவியை இந்த விடயத்தில் நாடுவது ஆபத்து மட்டுமன்று, தோல்வியும் துயரமும் அடையச் செய்யும். ஆண்டவன், முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர். வைரமுடி, பீதாம்பரம் இவற்றை இறக்கி வைத்துவிட்டுத் தொழிலாளர் குறையைக் கவனிப்பதற்கு அவருக்கு நேரமில்லை. (சிரிப்பு) முதலாளித் துவம் நமது இரத்தத்தை உறிஞ்சி விட்டு இரத்தினத்திற்கு விலை கேட்கிறது. இது ஏன்? என்று கேட்டால் உலகம் 'விதி' என்று விடை தருகிறது. இந்த 'விதியைச் சுயநலமிகளின் சதி என்று முதலில் உணர வேண்டும். அதை முறியடித்தால் தான் நமது முன்னேற்றத்தை நாம் காண முடியும். ஆகவே 'விதி' என்று கூறும் வீணரின் கூற்றை நம்பாதீர்கள். நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இரஷ்யாவைப் பார்க்கிறோம். இன்னும் விடுதலை பெற்ற ஒவ்வொரு நாட்டையும் பார்க்கிறோம். எப்படி அவை அந்த நிலை யடைந்தன? அந்த முறையில் நாமும் முயல வேண்டும்.