பக்கம்:எக்கோவின் காதல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

அவனும் வந்தான். ஆனால் அவன் முகத்தில் எப்பொழுதும் காணப்பட்ட மகிழ்ச்சிக் களைகாணப்படவில்லை. பொன்னம்மாள் முகத்தில் புதுவிதமான ஒரு பொலிவு காணப்பட்டது.அரங்கசாமியின் முகத்தைப் பார்த்ததும் அந்தப் பொலிவு சிறிது மங்குவதுபோல் காணப்பட்டது.

“ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறீர்கள்” என்று பரிவுடன் கேட்டாள்.

“ஒன்றும் இல்லை” என்று தரையைப் பார்த்த வண்ணம் கவலையோடு பதில் சொன்னான்.

“ஒன்றுமில்லை யென்றால் உம்ம் என்று ஏன் இருக்க வேண்டும்?” என்று அவன் முகத்தைத் தன் பக்கமாக நிமிர்த்தினாள்.

"பொன்னம்மா! அப்பா, கலியாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறராம்” என்று அரங்கசாமி சொன்னான்.

“அப்பாவுக்கு இது தெரியுமா?” என்று பெருமகிழ்ச்சியுடன் கேட்டாள் பொன்னம்மாள்.

“இது தெரிந்திருந்தால் திருச்சிராப்பள்ளியில் பெண் பார்த்திருப்பாரா?” என்று சிறிது கோபமும் வருத்தமும் கலந்த குரலில் பேசினான்.

"திருச்சிராப்பள்ளியில் பெண்ணா” என்று திடுக்கிட்டு நின்று “அப்படியானால் என் கதி” என்றாள்.

“பொன்னம்மா! நான் என் தாயாரிடம் இப்போது திருமணம் வேண்டாமென்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அப்பா கேட்பதாகக் காணோம். ஒரே பிடிவாதமாக இருக்கிறார்.