பக்கம்:எக்கோவின் காதல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

143)

மக்கள் உன்னை நம்பியிருக்கிறார்கள்; அவர்கள் வாழ்வுக்கு வழி கோலுவாய் என்று எண்ணினேன். ஆனால், நீ செல்லும் வழி...?”

"நண்பா! குடிப்பது கெடுதல் என்றா எண்ணுகிறாய்! இன்னும் நீ பத்தாம் பசலியாக அல்லவா இருக்கிறாய்! இதைக் கெடுதல் என்றால் காப்பியும் குடிதான். காப்பியிலாவது கெடுதல் உண்டு. நான் பயன் படுத்துவது பழச்சாறு. அவ்வளவும் இரத்தம் - உடலுக்கு உறுதி. பழச்சாறு கெடுதல் என்பது பைத்தியக்காரத்தனம்”. என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அந்தோ! அவன் வறுமையிலேயே இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ வளமான பாடல்களைப் பெற்றிருக்குமே தமிழகம்! பணம் அவனைக் கெடுத்துவிட்டது..... இல்லை .... நான் தான் அவனைக் கெடுத்து விட்டேன். பணக்காரனாக்கியது நான்தான். அதனால்தான் அவன் கெட்டுவிட்டான்.

போற்றுவாரின்றி அழிந்து விடுமோ இந்தப் புரட்சிக் கவிதைகள் என்று அன்று வருந்தினேன். இன்று அவன் புகழ் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். இவன் மாறியதால் புரட்சி அழிந்துவிடுமோ - மக்கள் விழிப்புணர்ச்சி அழிந்து விடுமோ - என்று துடிக்கிறேன்.

“கண்ணா ! எதிரிகள் ஏசுவார்களே! உன் இனத்தை இழிவுபடுத்தும் கூட்டம் தூற்றிவிடுமே! உனக்காக நான் கூறவில்லை. உன் நாட்டிற்காக -- உன்னை நம்பிப் பின்பற்றும் மக்களுக்காகக் கூறுகிறேன். அதற்காகவாவது இந்தப் பழக்கங்களை விட்டுவிடும். கண்ணா ! கண்ணா!”