பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

எழுந்து கை கழுவி டவலில் கை துடைத்தார். ‘சிகார் பைப்’ புகையத் தொடங்கியது. சிணுங்கல் இருமலும் புகைந்தது.

“தம்பி, எனக்கு வரவர உடம்பு ரொம்ப க்ஷீணதசைக்கு வர ஆரம்பிச்சிட்டுது !...”

"ஆமாங்க ! நீங்க முதலில் உங்க உடம்பைப் பார்த்துக்கணும் !”

“அது சரி. இனி எல்லாம் சரியாகிப்பிடும். எனக்கென்று—என் மனசாட்சிக்கென்று—சில இலட்சியங்கள்—சில கனவுகள் — சில கடமைகள் உள்ளன. அவை பூர்த்தி ஆக வேண்டிய காலம் நெருங்கி வருது. நீ என் பக்கம் இருக்கையிலே, எனக்கென்ன தம்பி கவலை ? எல்லாம் தன்னாலே சரியாகிப்பிடும் ! எல்லாம் அப்பன் செந்தில் வேலன் கிருபை !” என்று மெய்யுணர்ந்து பேசினார். இமை ஒரத்தே ஈரக்கசிவு இருந்தது.

ஞானபண்டிதன் வாய் மூடி மெளனியாக வீற்றிருந்தான். தந்தையின் உள்மனத்தின் பேச்சைப் பொதுப்படையாகவே எடுத்துக்கொண்டான் அவன். ஆனால் அவர் இறுதியில் கூறிய ‘எல்லாம் அப்பன் செந்தில் வேலன் கிருபை!’ என்ற வாசகம் அதனுள் வேலை செய்தது. பங்களாவுக்கும் ‘செந்தில் விலாசம்’ என்ற பெயர் சூட்டியிருப்பதற்கான முகாந்தரம் அவனுக்கு இப்போது பிடிபட்டுவிட்டது. ‘அப்பாவுக்குத்தான் முருகக் கடவுள் பேரில் எவ்வளவு ஈடுபாடு !’

“தம்பி !”

“அப்பா !”

“டயர் பாக்டரி ஆரம்பிப்பதற்கு முன்னாடி நீ எனக்கு ஒரு காரியம் செஞ்சாக வேனும் தம்பி !”

“சொல்லுங்கப்பா !”

“உன்னை நான் மாலையும் கழுத்துமாப் பார்க்க வேணும் !”. என்று சொல்லி, அவன் கண்களை ஆழ்ந்து நோக்கினார் சோமசேகர்.

இத்துணை பெரும் பொறுப்பை இவ்வளவு சீக்கிரமாகத் தன்னிடம் சுமத்திவிடுவார் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லையே!-அப்போதைய அவர் மனநிலையில் தான்