பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

ஒரு இடைவெளி விழுந்திட்டுது. எனக்கிண்ணு ஒரு முடிவு இருக்குது. அது எனக்கு மட்டுந்தான் தெரியும் !... நான் புறப்படுகிறேனுங்க !... இன்னொரு முக்கியமான சமாசாமுங்க !... குழலி அக்கா உங்களைத்தான் ரொம்ப தூரம் மனபபூர்வமாக நம்பியிருக்குதுங்க !... அந்த மனசை என்னாலே நல்லா புரிஞ்சுக்கவும் முடிஞ்சுதுங்க. அதோட ஆசை ரொம்பவும் நியாயமான — நேர்மையான — இயல்பான ஆசைதானுங்க !...

“இன்னொரு விஷயத்தையும் நான் மறந்திட மாட்டேனுங்க. என் ஆவி பிரியிறமட்டும் அது என் நெஞ்சை விட்டு — நினைவை விட்டு — அகலாதுங்க ! நீங்க என் பேரிலே காட்டின கருணைக்கு — நீங்க என் மேலே வச்சிருக்கிற நேசத்துக்கு — நீங்க எங்கிட்ட கொண்டிருக்கிற ஈரத்துக்கு நான் எவ்வளவுவோ கடமைப்பட்டிருக்கேனுங்க.

“உங்க லெட்டரை நான் மட்டும் படிக்கலை , அக்காவையும் படிக்கச் சொன்னேன். உடனே, இங்கிட்டுப் புறப்பட்டு வந்தேனுங்க !... சரிங்க, நான் போயிட்டு வாரேனுங்க !...??” என்று சொல்லிக் கைகளை நளினமாக எழிலுடன் குவித்து வணங்கிப் பின் வசமாகத் திரும்பி, புறப்படுவதற்குத் தோதாக நின்றாள். பரவிய ஒளியில், அவள் முகத்தில் துயரம் தெரியவே செய்தது.

ஞானபண்டிதனின் கண்கள் கலங்கின. மனக்கோட்டை தகர்ந்து விழ, அதன் சிதிலத் துகள்கள் அவனது நேத்திரங்களில் விழுந்திருக்கவும் கூடும்.

அவன் கல்லாய்ச் சமைந்து நின்றான். சமைந்து நின்றவனை மீண்டும் உயிர்ப்பூட்டியது பூவழகியின் பதட்டக் குரல். “ஸார் !... அதோ செங்கோடன் வந்துக்கிட்டிருக்கான் ! சீக்கிரம் வண்டியை ஸ்டார்ட் செய்யுங்க ??” என்று காரில் ஏறி அமர்ந் கொண்டாள் அவள். பேயைக் கண்டவளாகக் குலை நடுங்கினாள்.

செங்கோடன் மறைந்தானோ என்னவோ, அந்தக் கார் மட்டிலும் மாயமாய் மறைந்தது !