பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


விருந்தினர் ஹால்

யிரம் விளக்குச் சுற்றுச் சார்பில் மறைந்து போன அந்த MSX 4043 என்ற எழுத்துக்களும் எண்களும் ‘செந்தில் விலாசம்’ பங்களா வாசலில் மீண்டும் ஒளிவிடத் தொடங்கி விட்டன.

ஞானபண்டிதனும் இப்போது நல்ல மூச்சு விட்டான். பூவழகியுடன் இருக்கையில் தானும், தன்னுடன் இருக்கையில் பூவழகியும், போக்கிரி ஒருவனின் கழுகுப் பார்வைக்கு, நரம்பற்ற — இதயமிழந்த பேச்சுக்கோ இலக்காகக்கூடாதென்றே அவனும் கருதித்தான் அப்பொழுது பூவழகியின் இஷ்டப்படி காரைச் செலுத்தவும் செய்தான்.

முகப்பில் வந்து கின்றது ‘ஸ்டாண்டர்ட்.’

நில நிறக் குழலொளியில் அவள் அங்கிருந்து பிய்த்துக் கொள்ள வேளை நோக்கி நின்றாள்.

அவனோ அவளை நோக்கி, “வா, மாடிக்குப் போகலாம்!” என்று கெஞ்சிய குரலில் உரிமையைக் குழைத்துக் கூப்பிட்டான்.

பூவழகி விரக்தியுடன் சிரிப்பை உமிழ்ந்தாள். “நான் போய்விடுகிறேன். இல்லாவிட்டால், என்னுடன் கூடப் பிறக்காத அக்காளுக்குத் துரோகம் செய்தவளாகிவிடுவேன்! நான் அப்புறம் பேராசைக்காரியாகவும் ஆகிவிடுவேன்!... குழலி தான் உங்களுக்கு உகந்தவள். நான் உங்களை மறந்துவிட முயலுகிறேன். நீங்களும் என்ன மறந்துவிடுங்கள்!” என்று வீறு கொண்டு பேசிவிட்டு, அவள் அங்கிருந்து புறப்பட முனைந்தாள்.

அப்போது, ஞானபண்டிதன் பூவழகியின் பொற்கரங்களைப் பற்றினான். அவனது கண்ணீர்த்துளிகள் அவளது புறங்கைகளில் விழுந்தன.

க.ம.-9