புறநானூற்றுச் சிறுகதைகள்/11. பறவையும் பாவலனும்

விக்கிமூலம் இலிருந்து

11. பறவையும் பாவலனும்

இளந்தத்தன் நிரபராதி. ஆனால் நெடுங்கிள்ளிக்கு அதை எப்படிப் புரியவைப்பது? ஒரு பாவமு மறியாத புலவன் அவன். ஆனால் அவனை ஒற்றன் என்று கருதித் தண்டிக்க முடிவு செய்துவிட்டான் நெடுங்கிள்ளி. சந்தேகத்தைப் போலப் பயங்கர வியாதி இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை! அது நிரபராதியைக் குற்றவாளியாக்கி விடுகிறது. குற்றவாளியை நிரபராதியாக்கி விடுகிறது. இன்னும் என்னென்னவோ செய்து விடுகிறது.

முதல் நாள் அவன் கருவூரில் நலங்கிள்ளியிடம் பரிசில் பெற்றுக்கொண்டு பின் உறையூருக்கு வந்திருந்தான். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகை என்பதும், அதனால் உறையூரார் கருவூருக்கு வருவதில்லை என்பதும் கருவூரார் உறையூருக்குப் போவதில்லை என்பதும் அவனுக்குத் தெரியாது. இரண்டு அரசர்களுக்கும் உள்ள கடும்பகை காரணமாக ஒர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் போகிறவர்கள் ஒற்றர்களாகக் கருதப்பட்டுத் தண்டனை பெற்றுக்கொண்டிருந்த காலம் அது!

உறையூர்க்காரர்கள் எவராவது கருவூருக்கு வந்தால் அவர்களை நெடுங்கிள்ளியின் ஒற்றர்கள் என்று சந்தேகித்துத் தண்டணை கொடுத்துக் கொண்டிருந்தான் நலங்கிள்ளி, கருவூர்க் காரர்கள் எவராவது உறையூருக்கு வந்தால் அவர்களை நலங்கிள்ளியின் ஒற்றர்கள் என்று சந்தேகித்துத் தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தான் நெடுங்கிள்ளி.

இளந்தத்தனோ இந்த இரு ஊர்களுக்கும் புதியவன். ஒரு நாடோடிப் புலவன். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவருக்கும் கடும்பகை இருப்பதை அறிந்துகொள்ளாமல் நலங்கிள்ளியைச் சந்தித்துப் பாடி பரிசில் பெற்றுக்கொண்டு கருவூரிலிருந்து உறையூருக்கு வந்து நெடுங்கிள்ளியிடம் பரிசில் வாங்க அவன் முயன்றான்.

அவன் உறையூர்க் கோட்டை வாயிலை அடைந்தபோது கோட்டைக் காவற்காரர்கள் அவனை இன்னாரென்று கூறுமாறு விசாரித்தனர். “நான் நலங்கிள்ளியிடமிருந்து பரிசில் பெற்றுக் கருவூரிலிருந்து வருகிறேன்” என்றான். ‘நலங்கிள்ளியிடம் பரிசில் வாங்கிக் கொண்டு வருகிறேன்’ என்றால் அது பெருமையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டுதான் ஒரு பாவமுமறியாத அந்த இளம் புலவன் இப்படிக் கூறிவைத்தான்.

நலங்கிள்ளி, கருவூர் என்ற இந்த இரண்டு சொற்களை அவனிடமிருந்து கேட்டார்களோ இல்லையோ, கோட்டைக் காவற்காரர்கள் தங்களுக்குள் ஏதோ குறிப்புத் தோன்ற ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தக் கொண்டனர்.

“கருவூரிலிருந்துதானே வருகிறாய்!”

“ஆமாம்! கருவூரிலிருந்துதான்; நலங்கிள்ளியைச் சந்தித்துவிட்டு வருகிறேன்.”

“உனக்கு இங்கென்ன வேலை?”

“நான் நெடுங்கிள்ளி மன்னரைச் சந்திக்க வேண்டும்”

காவற்காரர்கள் இருவரும் தங்களுக்குள் விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டனர். ஒருவன் உள்ளே போய்விட்டுச் சில விநாடிகளில் திரும்பி வந்தான்.

“மன்னரையா பார்க்க வேண்டும்? அப்படியானால் என்னோடு வா! பார்க்கலாம்.”

ஒருவன் இளந்தத்தனைத் தன் பின்னால் அழைத்துக் கொண்டு சென்றான். ஆனால் மன்னரைக் காண்பிக்கவில்லை. அந்த அப்பாவிப் புலவனைத் தந்திரமாக அழைத்துக்கொண்டு போய்ச் சிறைக்குள் தள்ளி அடைத்துப் பூட்டிவிட்டான்.

“ஐயோ! நான் நாடோடிப் புலவன் ஐயா! எனக்கு ஒரு பாவமும் தெரியாது! என்னை ஏன் ஐயா சிறையில் அடைக்கிறீர்கள்?”

“பேசாதே! நீ இருக்க வேண்டிய இடம் இந்தச் சிறைதான்” காவற்காரன் அதட்டிவிட்டுப் போய்விட்டான். ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டதே’ என்று தவித்தான் இளந்தத்தன். ‘கருவூரிலிருந்து நலங்கிள்ளியைப் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னதற்கு இவ்வளவுபெரிய தண்டனை ஏன்?’ என்று அவனுக்குப் புரியவில்லை. உறையூரின் பெருமை, வந்தாரை வரவேற்று விருந்தோம்பும் சோழர் குடிப் பெருமை, எல்லாப் பெருமையின் மேலும் எரிச்சல் எரிச்சலாக வந்தது அவனுக்கு இளந்தத்தன் கருவூரிலிருந்து புறப்பட்டுவந்த சிறிதுநேரத்திலேயே கோவூர் கிழார் என்ற புலவரும் அவனைப் பின்பற்றி உறையூருக்கு வந்தார்.இளந்தத்தன் முன்பே உறையூருக்கு வந்திருப்பதை அறிந்து வாயிற்காவலர்களிடம் அவன் அடையாளங்களைக் கூறி, “இப்படி ஒரு பாவலன் சற்று முன்பு இங்கே கோட்டைக்குள் வந்தானா?” என்று வினவினார். கோவூர்கிழார் உறையூர் அரண்மனையில் எல்லோருக்கும் வேண்டியவராகையினால் காவலர்களுக்கு அவரிடம் அதிக மரியாதை உண்டு.

“ஆமாம் ஐயா! அப்படி ஒர் இளைஞன் க்ருவூரிலிருந்து சற்றைக்கு முன் இங்கே வந்தான். நாங்கள் மன்னரிடம் போய்க் கேட்டோம். அவன் கருவூரிலுள்ள நலங்கிள்ளியிடமிருந்து வந்திருந்தால் அவனை உடனே சிறையில் அடையுங்கள். ஒற்றனாக இருந்தாலும் இரப்பான் என்று அரசர் உத்தரவு இட்டார். உத்தரவுப்படியே சிறையில் அடைத்திருக்கிறோம்” என்று கோட்டைக் காலவர்களிருவரும் கோவூர் கிழாரிடம் கூறினர்.

உடனே கோவூர்கிழார் நெடுங்கிள்ளியைக் கண்டு இளந்தத்தனைப் பற்றிய உண்மையைக் கூறினார்: “அரசே! சுதந்திரமாகப் பறந்து திரியக்கூடிய பறவையைப் போன்றவன் பாவலன். அவனை வாழச் செய்வது, அரசர்கள் அன்புற்று அளிக்கும் பரிசில். தீமையில்லாமல் பழுமரம் நாடிச் செல்லும் பறவையைப் போன்ற ஓர் அப்பாவிப் பாவலனைச் சந்தேகமுற்றுச் சிறையில் வைக்கலாமா?”

“எந்தப் பாவலனை அப்படிச் செய்திருக்கிறேன் நான்”

“நேற்றுக் கருவூரிலிருந்து வந்த இளந்தத்தனென்னும் புலவனை?”

“மன்னியுங்கள் ஒற்றனென்று தவறாகக் கருதிச் சிறையில் அடைத்துவிட்டேன். இதோ இப்போதே விடுதலை செய்து விடுகிறேன்.”

“நல்லது! பாவலன் ஒரு சுதந்திரமான பறவை. அவனைச் சிறை செய்வதுபோன்ற கொடுமை வேறில்லை”

வள்ளியோர்ப்படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஒம்பாதுண்டு கூம்பாது விசி வரிசைக்கு
வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட

நண்ணார் நாண அண்ணாந்தேகி
ஆங்கினி தொழுகின் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நூம்மோரன்ன செம்மலும் உடைத்தே! (புற நானூறு - 47)

வள்ளியோர் = கொடுப்பவர், புள்ளின் = பறவையைப்போல, சுரம் பல = பல வழிகளை வல்லாங்கு = இயன்ற அளவு கூம்பாது = சேர்த்து வைக்காமல், அண்ணாந்து = பெருமிதங் கொண்டு, செம்மல் = சிறப்பு, படர்ந்து = சென்று, வடியா நா = முற்றாத நா.