எங்கே போகிறோம்/தவத்திரு அடிகளார் அவர்களின் சிந்தனைத் துளிகள்

விக்கிமூலம் இலிருந்து


 

தவத்திரு அடிகளார் அவர்களின்
சிந்தனைத் துளிகள்

முயற்சி - எந்த ஒரு செயலையும் நோன்பு போல் பிடிவாதமாக ஏற்றுக்கொண்டு செய்யும் மனப்போக்கு இருந்தால்தான் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

ஆன்மிகம் - சித்துக்களை காட்டி ஆன்மிகத்தை வளர்ப்பது செயற்கையாக மூச்சுவிடுதலைப் போலத் தான்.

விஞ்ஞானம் - ஞானம் கண்ட உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டு வரும் பணியை விஞ்ஞானம் செய்கிறது.

உழைப்பு - ஆற்றலைத் தருவது ஆர்வம்; ஆர்வத்தைத் தருவது வாழ்க்கையின் மீது ஏற்படும் ஆசை. ஆசைகள் ஆர்வங்களாக மாறவேண்டும். ஆர்வங்கள் அயரா உழைப்புக்களாக மாறவேண்டும் இதுவே வாழ்வு.

அறியாமை - தனக்குரியதை விட்டுக்கொடுக்காமல், மற்றவர்களிடம் தியாகத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

காலம் - காரியங்கள் நடந்தால் மட்டும் போதாது. உரிய காலத்தில் நடக்கவேண்டும்.

திட்டம் - உலகின் சிறு சிறு நிகழ்வுகள் கூட திட்டமிட்டே நிகழ்கின்றன. ஆனால் மனிதன் திட்டமிட மறுக்கிறான்.

மனிதன் - மூடிவைக்காத பதார்த்தம் கெட்டுப் போகும். கண்காணிக்காத மனிதர்களும் கெட்டுப் போவார்கள்.

சுற்றுச்சூழல் - ‘சூழ்நிலை’ என்பது மாற்ற முடியாத ஒன்றல்ல. சூழ்நிலையை மாற்றுவதே பெற்றுள்ள பகுத்தறிவின் கடமை.

இயக்கம் - தண்ணீர் ஓட்டமில்லாமல் நின்றால் பாசி பிடிக்கிறது. அதுபோல வாழ்க்கையில் எந்த இடத்திலாவது இயக்கமின்றி நின்றுவிட்டால் தனி மனிதனும் கெட்டுப் போவான்! சமுதாயமும் கெடும்.

முறைப்படுத்தல் - பெய்யும் மழைநீர், முறைப்படுத்தப் பெறாது தன்போக்கில் ஓடுமானால் நில அரிப்பு ஏற்படுகிறது. அதுபோல், தோன்றும் எண்ணங்கள்; எழுச்சிகள் முறைப்படுத்தப் பெறாது போனால் சமுதாய அரிப்புகளாகிய சுரண்டல், கலகம் தோன்றும்.

லஞ்சம் - வாழ்க்கையை எளிதாக நடத்திக் கொள்ளக் கூடிய சூழல்களை உருவாக்காது பணத்தின் மூலம் மட்டும்தான் வாழ்க்கையை நடத்த இயலும் என்று சூழ்நிலை உள்ளவரையில் லஞ்சத்தை ஒழிக்க இயலாது.

விழிப்பின்மை - நோயுற்றால் காட்டும் அக்கறையை நோயுறாது வாழும் நெறியில் யாரும் காட்டுவதில்லை.

அமைதி - அமைதி என்றால் சண்டையற்ற தன்மை என்று மட்டும் கருதக்கூடாது. நல்லெண்ணத்தின் அடையாளம் உடன்பட்ட கொள்கைகள் இணக்கமும், ஒத்துழைப்புத் தன்மையும் வாய்ந்த செயற்பாடுகள் பொருந்தினாலேயே அமைதியாகும்.

மனம் - மனத்திற்கு நல்ல பற்றுக்கோடு தராவிட்டால் அது சைத்தானைப் பற்றுக்கோடாக எடுத்துக் கொள்ளும். ‘வாழ்தல் வேறு; பிழைத்தல் வேறு.’

சடங்கு - சடங்குகளினால் விளையும் பயன்கள் யாதொன்றும் இல்லை. ஆனால், உணர்வைத் தூண்ட சடங்குகள் துணை செய்யும்.

காலம் - ஒரு நொடிப்பொழுது வாழ்க்கை நின்றாலும் பல நாள்களின் முன்னேற்றம் தடைப்படும்.

பொதுநலம் - நடைமுறைச் சில்லறைச் செலவுகளில் கவனம், மூலதனத்தைக் காப்பாற்ற உதவும்.

பொருளாதாரம் - அவரவர் நலனில் உள்ள அக்கறை அளவுக்கு அவரவர் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். பொதுநலனில் அக்கறை ஏற்பட்டுவிட்டால் உலகு செழிக்கும்.

ஏழைகள் - ஏழைகளுக்கு துன்பம் பழகிப் போனதால் முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்பட மறுக்கிறார்கள்.

கலை - மக்கள், இலக்கியம், கலை, இசை இவற்றை அனுபவிக்கக் கற்றுக்கொண்டால் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்.