கம்பராமாயணம் (உரைநடை)/பால காண்டம்

விக்கிமூலம் இலிருந்து

கம்பராமாயணம்
பால காண்டம்


கோசல நாடு

மானுடத்தின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய முதல் தெய்வ மகன் இராமன்; அவன் அவதரித்த அழகிய திருநாடு கோசல நாடு. அது பழம் பெருமைமிக்கது; அதைச் சத்திய விரதன் ஆகிய தசரதன், சக்கரவர்த்தி என்ற பெருமையோடு ஆண்டு வந்தான். அவன் உதித்த குலம் சூரிய குலம் என்பர்.

மனு என்பவனும் இக் குலத்தில் பிறந்தவனே. மக்களை நன்னெறிப்படுத்த நீதிநெறிகளை வகுத்துக் கொடுத்தவன் இவன். மழைவளம் குன்றி, மண்வளம் குறைந்த மகிதலத்துக்கு விண்ணுலகினின்று கங்கையை வரவழைத்த பகீரதனும் இக்குலத்தில் தோன்றியவனே. அவனுடைய விடாமுயற்சியை மாநிலம் போற்றுகிறது. அரிதின் முயன்று ஆற்றும் செயலுக்குப் “பகீரதப் பிரயத்தனம்” என்ற தொடர் இன்றும் வழங்குகிறது.

இச்சுவாகு என்ற அரசனின் மெச்சத்தக்க புகழ் இன்றும் பேசப்படுகிறது. அவனால் இக்குலம் “இச்சுவாகு குலம்” என்று நச்சி உலகம் போற்றுகிறது. காகுத்தன் என்பவன் தேவர்களின் ஆகுலங்களைத் தீர்த்தவன்; அவர்கள் குறை கேட்டு அசுரர்களோடு போராடி அவர்கள் வாழ்வை மலரச் செய்தவன். பெருமைமிக்க இக் குலத்தில் பிறந்ததால் இவனைக் “காகுத்தன்” என்றும் அழைத்தனர். ரகு என்ற அரசனும் இக்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவன்; அதனால் இராமனை, “இரகுராமன்” என்றும், “இரகுகுல திலகன்” என்றும் அழைத்து வந்தனர். நீதியும் நேர்மையும் வீரமும் பேராற்றலும்மிக்க மன்னர் இராமனின் குல முதல்வர்களாய்த் திகழ்ந்தனர். இராமன் பிறந்ததால் இக்குலமும், உயர்வு பெற்றது; இக்குலத்தின் பெருமையால் இராமனும் உயர்வு பெற்றான்.


நாட்டு வளம்

மழை வளம் கரந்தால் நாட்டின் வளம் மறைந்து விடும். கோசல நாட்டில் பருவ மழை தவறாது பெய்தது. வெள்ளிப் பனிமலை மீது உலவிய கரிய மேகங்கள் அள்ளிப் பொழிந்த மழைநீர் வெள்ளமாகப் பெருக் கெடுத்தது; அது சரயூநதியாகப் பாய்ந்தது. மலைபடு பொருள்களாகிய மணியும், பொன்னும், முத்தும், சந்தனமும், அகிலும், தேக்கும் அவ்வெள்ளம் அடித்து வர அலைபடு பொருள்கள் ஆயின. வணிக மக்களைப்போல அந்நதி இப் பொருள்களை வாரி அடித்துக் கொண்டு வந்தது. நீள்நதி அந்த மலையின் உச்சியையும் அகலத்தை யும் தழுவி வந்ததால் அது கணிகை மகளை ஒத்திருந்தது. அலைக் கரத்தில் மலைப் பொருள்களை ஏந்தி வந்து அடி வாரத்தில் குவித்தது.

சரயூநதி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களில் பாய்ந்தது; அந் நாட்டை வளப்படுத்தியது. மலைக் கற்களிடையே தோன்றி வெள்ளம், கானாறாய்ப் பெருகிப் பாய்ந்து குளம், குட்டை, ஏரி, கால்வாய்களில் பரவி, வயல்களையும் சோலைகளையும், பசுமையுறச் செய்தது. மூலப் பொருள் ஒன்று எனினும் ஞாலம் அதைப் பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கிறது. அதேபோல் கடல் நீர், மேகம், மழை, அருவி, வெள்ளம், வாய்க்கால், ஏரி, குளம், ஆறு, தடாகம் என்னும் பல வடிவங்களைக் கொண்டு விளங்கியது.

கல்வியும் செல்வமும்

ஏட்டையும் தொடுவது தீமை என்று கூறி, நாட்டைக் கெடுத்தவர்கள் அக்காலத்தில் இல்லை. பெண் கல்வி நாட்டு முன்னேற்றத்திற்கு நலம் விளைவிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். பொருட் செல்வம் இயற்கை தருவது; கல்வி மானுடர் தேடிப் பெறுவது. செல்வக் குடியிற் பிறந்த செல்வியர் கல்வி கற்றுக் கவின் பெற்றுச் சிறப்பு அடைந்தனர். கலைமகளும், திருமகளும் அவர்களை அடைந்து கொலுவீற்றிருந்தனர். கற்ற இப்பெண்களால் உற்ற நல் அறங்கள் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தன. இவர்கள் வறியவர்க்கு இல்லை என்னாமல் வாரி வழங்கினர்; விருந்தினர் வந்தால் விழைந்து வரவேற்றனர்; இன்முகம் காட்டி நல்லுரை பேசி உணவும் உறையுளும் தந்து சிறப்புச் செய்தனர். மாதரார்தம் செயலால் மாட்சி மிக்க அறங்கள் தழைத்து ஓங்கின.

அன்ன சத்திரங்கள் ஆயிரக்கணக்கில் செயல் பட்டன. அங்கே சோறு வடித்த கஞ்சி ஆறு போலப்

பெருகியது. அது கால்வாய்களாகக் கிளைத்துச் சோலைகளிலும், வயல் நிலங்களிலும் பாய்ந்து வளம் பெருக்கியது; தேர் ஒடுவதால் தெருக்களில் துகள் கிளம்பியது. யானையின் மதநீர்பட்டு அது தெருவினைச் சேறு ஆக்கியது; அதில் யானைகள் வழுக்கி விழுந்தன. மகளிர் குழை எறிந்து கோழி எறியும் செல்வ வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். சிறுமியர் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்தனர். முத்துகளை அவர்கள் சிறுசோறாக அமைத்தனர்; அம் முத்துகளை இளம் விளையாட்டுச் சிறுவர்கள் தம் காலில் இடறிச் சிதைத்தனர். அவை அவர்கள் திரட்டி எடுத்துப் போடும் குப்பைகளாகக் குவிந்து கிடந்தன; அவை ஒளி செய்தன.

மருத நிலத்துச் சோலைகளில் மயில்கள் தோகை விரித்து ஆடின; குயில்கள் கூவின; தாமரை முகைகள் விளக்குகள்போல் ஒளி வீசின; முகில்கள் இடித்து முழவாக் ஒலி செய்தன; நீர் அலைகள் அழகிய திரைச்சீலைகள் ஆயின. குவளைகள் கண்விழித்து நோக்கின. இவ்வாறு மருத நிலம், நாட்டிய அரங்காகப் பொலிவு பெற்று அழகு செய்தது. அன்னப் பறவைகள் தாமரை மலர்களை அடைந்து துயில் கொண்டன; தம் அருகே தம் இளங்குஞ்சுகளை உறங்கச் செய்தன.

சேற்று நிலத்தில் கால் வைத்த எருமைகள், தம் கொட்டிவில் உள்ள கன்றுகளை நினைத்துக் கொண்டு ஊற்று எனச் சுரந்த பாலை இச் சின்னப் பறவைகள் வாய்வைத்து மடுத்தன. தேரைகள் எனப்படும் பசுமை நிறத் தவளைகள் தாலாட்டுப் பாடின. அவை அதனைக் கேட்டு மயங்கித் துயின்றன.

சேற்று நிலத்தில் எருமைகள் பாலைச் சொரிந்ததால் நாற்று நடும் வயல்கள் வளம் காட்டின. நெற்பயிர்கள் செழித்தன.

அரங்குகளில் அரிவையர், ஆடலும் பாடலும் நிகழ்த்தினர். யாழும் குழலும் இணைந்து இசை அரங்குகளில் இனிமை கூட்டின. சதங்கை ஒலிகள், பதங்களுடன் சேர்ந்து, நாட்டிய நங்கையருக்கு நளினம் சேர்த்தன. இசையும் நாட்டியமும் வசையில் கலைச் செல்வங்களாய்க் கவின் செய்தன. காவியக் கதைகளில் தேர்ச்சி மிக்கவர் சொரியும் கவி அமுதம் செவிநுகர் கனிகள் ஆயின.

நகர் வளம்

இந்நாட்டின் தலைநகர் அயோத்தி என்னும் மாநகர் ஆகும். செல்வச் சிறப்பால் அளகை நகரையும், இன்பச் சிறப்பால் பொன்னகராம் அமராவதியையும் இது ஒத்து இருந்தது. எழில்மிக்க இந் நகரைப் பொழில் சூழ்ந்த மதில்களும், குழிகள்மிக்க அகழிகளும் சூழ்ந்திருந்தன. மதில்கள் விண்ணைத் தொட்டன. அகழிகள் மண்ணின் அடித்தலத்தை அழுத்தின.

காவல்மிக்க இக் கடிநகரை நால்வகைப் படைகள் காத்துப் போற்றின. மக்கள் தம் உயிர் என மன்னனை மதித்தனர். அவனும் மக்களைக் கண்களை இமை காப்பது போல் காத்துவந்தான். ஏழையின் கந்தல், உழைப்பாளியின் ஒரே நிலம் அவர்களின் உடைமைகள்; அவற்றைப் போல அரசன் நாட்டைக் காத்தது, அவன் கடமை ஆயிற்று. பகைவர் காட்டிய பகை, அவன் முன் எரிமுன் வைத்த பஞ்சு ஆகியது. அவர்கள் அஞ்சிப் புறமுது

கிட்டனர். மக்கள் பசியும், பிணியும் நீங்க, வளனும் வாழ்வும் பெற்று, அவன் குடை நிழலில் குளிர்ந்தனர்.

உட்பூசலும் வெளித்தாக்கலும் இன்றி நாட்டில் அமைதி நிலவியது; ஆக்கம் தழைத்தது; ஊக்கம் நிலவியது; செம்மைகள் நிலைத்தன. மாதரார்தம் கற்பின் திறத்தால் நாட்டின் பொற்பு உயர்ந்தது. அறத்தின் ஆக்கத்தால் துறக்கமும் தோற்றது. ஆடவர் தம் மறச் செயலால் வீரம் செறிந்தது; புகழ்மிக்க நாடு எனத் திகழ்ந்தது. கொடைச் சிறப்பால் வறுமை நீங்கியது: வள்ளல்கள் என்று ஒரு சிலர் புகழ் பெற முடியாமல் அனைவரும் பிறர் துன்பத்தைக் களைந்தனர். பிறர் கை ஏந்தாமல் பீடும் பெருமையும் பெற்று, மக்கள் வாழ்க்கை நடத்தினர். செல்வம், தனி உடைமை என்று கூற முடியாமல் அனைவர்க்கும் உரியதாய் இருந்தது. கல்வியும் மக்கள் உடைமையாக இருந்தது. கற்றவர் கல்லாதவர் என்ற பேதம் இன்றி, அனைவரும் கல்வி கற்று அறிவிற் சிறந்தவராய்த் திகழ்ந்தனர்.

மகவு வேள்வி

புறச் செல்வத்திலோ, அற வாழ்க்கையிலோ குறை காணாத மன்னன், தன் அக வாழ்வில் நிறைவு காணாத வனாய் வாழ்ந்தான். மக்கட்செல்வம் அவனிடம் வந்து அவனை மகிழச் செய்யவில்லை. யாழும் குழலும் அவனுக்குத் திகட்டிவிட்டன. அமுதமொழி பேசும் குழந்தைகளின் மழலைமொழி கேட்டு மகிழ விரும்பினான். கோடி இருந்தும் என்ன பயன்? நாடித் தன்மடியில் தவழும் நன்மக்களை அவன் பெறவில்லையே.

“ஒருத்திக்கு மூவர், அவனுக்கு மனைவியர்; எனினும் கருத்தரித்துக் காதல் நன்மகனைப் பெற்றுத் தரவில்லை” என்ற குறை அவனை அரித்தது. “சூரிய குலம் அவனோடு அத்தமித்து விடுமோ?” என்ற அச்சம் உண்டாகியது. அவனுக்குப் பின் யார் அந்த நாட்டை ஆள்வது? வாரிசு இல்லாமல் வறுமை உற்றுக் கிடந்தது அவன் வாழ்வு. இன்பம் சேர்ப்பதற்கு ஏந்திழையர் பலர் இருந்தனர்; துன்பம் துடைப்பதற்கு ஒரு மகவு இல்லையே என்ற ஏக்கம் அவனைத் தாக்கியது.

வயித்தியனைக் கேட்டான்; வழிவகை அவனால் கூற இயலவில்லை. ஆசிரியனை அணுகினான். வசிட்டர் அவன் குலகுரு; அரசியல் ஆசான்; வாழ்க்கை வழிகாட்டி: சாத்திரம் அறிந்தவர். அவரை அடைந்து தன் குறையை வெளியிட்டான்.

“பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் மாந்தர்தம் முயற்சியால் பெருகுவன; அவை ஈட்டத் தக்கன; மக்கட் செல்வம் பெறத் தெய்வ அருள் தேவைப்படுகிறது. அதற்கு மறை கற்ற மாமறையோன் நீர் தாம் வழி காட்ட வேண்டும்” என்றான்.

மழை இல்லாவிட்டால் மறையவர் வேள்விகள் இயற்றுகின்றனர்; மற்றையோர் இசை பொழிவித்து இறைவனை வேண்டுதலும் உண்டு. இந்த மரபுகளை ஒட்டி மகவு இல்லை என்றால் யாகம் எழுப்பித்தல் அக்கால மரபாகக் கொண்டிருந்தனர். அதற்குப் புத்திர காமேட்டி யாகம் என்று பெயரிட்டனர்.

“மகவினை நல்கும் மகிமை இந்தப் புத்திர காமேட்டி யாகத்துக்கு உள்ளது என்றும், தக்கவரைத் தலைமையாகக்

கொண்டு இதை நடத்துக” என்றும் வசிட்டர் அறிவுரை தந்தார். தெய்வ அருளால் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் விளங்குவான் என்ற நம்பிக்கையும் சேர்ந்து கொண்டது.

அக்கால வழக்கப்படி இம்மகவு வேள்வி இயற்றுதற்குமுன் மற்றோர் வேள்வி இயற்ற வேண்டும் என்ற மரபு இருந்தது. இதற்கு அசுவமேதயாகம் என்று பெயரிட்டனர். மாபெரும் மன்னர், தம் வெற்றிச் சிறப்பைத் திக்கு எட்டும் அறியச் செய்ய விரும்பினர். அடக்க முடியாத குதிரை ஒன்றினை முன் அனுப்பி அதனை மடக்குபவரை எதிர்க்கப் படைகள் பின் தொடர்ந்தன. அதனைக் கட்டி வைப்பவர் மாவீரன் என்ற புகழ் பெறுவர்; அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றுத் திறை பெற்றுத் தம் இறையிடம் சேர்த்தனர். சிற்றரசர்கள் அடி பணிந்து பேரரசனின் ஆணையை ஏற்றனர். அரசன் மாமன்னன் என்று புகழப்பட்டான். தசரதனும் இப்பரிவேள்வியைச் செய்து முடித்துவிட்டுப் பின் இம்மகவு நல்கும் நல்வேள்வி நடத்தினான்.

தெய்வங்கள் புகழ்ச்சிக்கும் வழிபாட்டுக்கும் மகிழ்ந்து கேட்ட வரங்களைக் கொடுத்து வந்தன. தவம் செய்வோர்க்கு ஆற்றலையும், ஆயுளையும் தந்தன. அசுரர்களும் அமரர்களும் மாறிமாறித் தவங்கள் செய்து சிவனிடமும் பிரமணிடமும் வேண்டிய வரங்களைப் பெற்றனர். வரங்களைப் பெற்றதும் தம் தரங்களை மறந்து, உரம் கொண்டு முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் இடையூறு விளைவித்தனர்.

அரக்கர்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லாத தேவர்களும், மாமுனிவர்களும் தெய்வங்களை அடைந்து தம்மைக் காக்கும்படி வேண்டினர். வரம் கொடுத்த தெய்வங்களே வழி தெரியாமல் திகைத்தன. பிரமனும் சிவனும் பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரமனிடம் சென்று முறையிட்டனர்; அவர்களோடு இந்திரனும் சென்றான்.

திருவுறை மார்பன் ஆகிய திருமால் அருள் செய்ய வந்து, அவர்களுக்கு ஆறுதல் உரை கூறினார். தெய்வங்கள் தந்த வரத்தை மானுடனே மாற்ற முடியும் என்று கருதித் தான் மானுட வடிவம் எடுத்துத் தசரதன் மகனாய்ப் பிறந்து, அந்தக் கொடியவரை வேர் அறுப்பதாய் வாக்களித்தார். அங்கு முறையிட வந்த வானவர்கள், தாமும் மண்ணில் வானரராகப் பிறந்து உதவுவதாய் உறுதி அளித்தனர். அவனுக்கு “வண்ணப் படுக்கையாய் இருந்த ஆதி சேடன், இலக்குவனாகப் பிறக்க” என்று ஆணையிடப் பட்டது; “தம் கைகளில் தங்கி இருந்த சங்கு சக்கரங்கள் பரத சத்தருக்கனர்களாகப் பிறக்க” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தெய்வங்கள் நேரிடையாகக் களத்தில் இறங்கத் தயங்கினர். அவர்கள் குரங்களுக்குத் தலைமை தாங்கினர். இந்திரனின் கூறு, வாலியாகவும், அங்கதனாகவும் செயல்பட்டது; காற்றின் மைந்தனாக ஆற்றல் மிக்க அனுமன் பிறந்தான். பிரமனின் கூறாகச் சாம்பவான் ஏற்கனவே பிறந்திருந்தான் என்பது அறிவிக்கப்பட்டது. “அனுமன் காற்றின் மைந்தன்; எனினும், சிவனின்

சீற்றமும், ஆற்றலும் விரச் செயலும் அனுமன்பால் அமையும்” என்று அறிவிக்கப்பட்டது.

தெய்வ நகர்களில் தேவர்களும், தெய்வங்கள் மூவரும் முன் பேசிய பேச்சுரைகள் இப்பொழுது செயற்படும் காலம் வந்துவிட்டது என்பதை வசிட்டர் உணர்ந்தார். திருமால் தசரதன் மகனாய்ப் பிறப்பார் என்பதை அறிந்து செயல்பட்டார்; மகனை நல்கும் வேள்வி செய்விக்க வழி வகைகளைக் கூறினார்.

“வேள்விக்குரிய ஆசான் யார்? அவர் எங்கு இருக்கிறார்? எப்படி அவரை அழைத்து வருவது” என்ற முறைகளைக் கேட்டுத் தசரதன் செயல்பட்டான். “வேள்வி ஆசான் அதற்குத் தகுதி, கலைக்கோட்டு மாமுனிவர்க்குத் தான் உளது” என்று வசிட்டர் அறிவித்தார். அவரை ருசிய சிருங்கர் என்றும் கூறுவர். அவர் அங்க நாட்டில் தங்கி இருக்கிறார் எனவும், உரோம பாதர் அந்நாட்டு அரசன் எனவும், அவர் தம்மகளை இம் முனிவருக்கு மணம் முடித்துத் தம் அரண்மனையில் மருகனாய் இருக்க வைத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டன.

“அங்க நாட்டிற்கு அக் கலைகோட்டு மாமுனிவர் செல்லக் காரணம் யாது?” என்று தசரதன் வினவினான்.

கலைக்கோட்டு மாமுனிவர் வரலாறும் அழைப்பும்

அங்க நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாமல் பொய்த்துவிட்டது. பஞ்சமும் பசியும் மக்களை அஞ்ச வைத்தன. ‘நல்லார் ஒருவர் இருந்தால் அவர் பொருட்டு மழை எல்லார்க்கும் பெய்யும்’ என்று கூறுவார்கள்.

எனவே நன்மை மிக்க அம்முனிவர் இருக்கும் இடம்நாடி அவரைத் தம் மண்ணை மிதிக்க வைத்தனர்.

கலைக்கோட்டு மாமுனிவர் விபாண்டன் என்னும் தவ முனிவரின் ஒரே மகன்; அவர் வெளியுலகப் பாதிப்புகள் இல்லாமல் வளர்க்கப்பட்டார்,‘காமம்’ என்பதன் நாமமே அறிய முடியாதபடி அவர் வளர்ந்தார்; காட்டில் திரியும் மான்! அதற்குக் கொம்பு உண்டு. மகளிர்க்கு வம்பு செய்யும் வனப்பு உண்டு; அவரைப் பொறுத்தவரை மானுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடே இல்லை; கச்சணிந்த மாது ஆயினும், இச்சையைத் துண்ட இயலாதபடி அவர்களிடமிருந்து ஒதுக்கி அவர் வளர்க்கப்பட்டார். காட்டுச் சூழலில் தவசிகள் மத்தியில் வாழ்ந்ததால் நகர மாந்தர்தம் ஆசைகள் அவருக்கு அமையவில்லை. “சுத்தம் பிரமம்” என்று சொல்லத்தக்க நிலையில் ஞானியாய் வாழ்ந்து வந்தார். அவரை மயக்கி நகருக்கு அழைத்து வர அந்த நாட்டு நங்கையர் சிலர் முன்வந்தனர்.

அவர்கள் அரசன் உரோமபாதரிடம் “கலைக் கோட்டு முனிவனைத் தம்மால் அழைத்து வரமுடியும்” என்று உறுதி தந்திருந்தனர்; அவர்கள் ஆடல் பாடலில் வல்ல அழகியர். அரசனும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்; கட்டற்ற செல்வத்தை அவர்களுக்கு வாரி வழங்கினான்; ஆடை அணிகள் தந்து, அவர்களைச் சிறப்பித்தான்.

நாட்டைவிட்டுக் காட்டை அடைந்த அக் காரிகையர், தூரிகையில் எழுதிய சித்திரங்கள்போல் அவன்முன் நின்றனர். முல்லை சூடிய அம் முறுவலினர் அவர் தங்கியிருந்த தவச் சாலையை மகளிர் சாலையாக்கினர்; காயும் கனியும் கொண்டு சென்று மருளும் மான்போல அவரை அணுகினர். புத்தம் புதிய மாதராய அவர்களை முதற்கண் நித்தம் தவம் புரியும் தவசியர் என்றே நினைத்தார். அழகும், இளமையும் அவரை ஈர்த்தன; அவர்கள் தந்த பழங்களைச் சுவை பார்த்தார். “தம்மோடு வருக” என்று அவர்கள் அழைத்தனர்; விழிகளால் அவருக்கு வழிகாட்டித் தம் பின்னால் வரச் செய்தனர்; வேல்விழி மாதரார் காட்டிய சாலை வழியே சென்று நாட்டு மண்ணை மிதித்தார் அம் மாமுனிவர்; காலடி பட்டதும் வறண்ட நிலங்கள் எல்லாம் வான் மழை நீரால் நிரம்பி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தன. வற்றி உலர்ந்திருந்த மரங்கள் எல்லாம் பசும் தழைகளைப் போர்த்தன. மயில்கள் எல்லாம் களிநடம் செய்தன. சாய்ந்து கிடந்த நெற்பயிர்கள் தழைத்துக் கதிர் மணிகளை விரித்து, முகம் காட்டின.

உரோமபாதர், “கலைக்கோட்டு மாமுனிவர் வருகையால்தான் மழை பெய்தது” என்பதை உணர்ந்தார்; ஒடோடி வந்து அவர் மலரடிகளில் விழுந்து வணங்கினர்; நங்கையர் சிலர் தவசிகள்போல வந்து மயக்கியமையை மன்னிக்கும்படி வேண்டினர்; ‘எல்லாம் நன்மைக்கே’ என்று அம் மாமுனிவர் நயம்படக்கூறி, அவர் அச்சத்தைப் போக்கினார். காவி உடை அணிந்து காயத்திரி தேவியைச் செபம் செய்து வந்து தவசி, சாவித்திரி ஒருத்தியைக் கைப் பிடிக்க அரசன் வழி வகுத்தான். தன் ஒரே மகள் சாந்தை என்பாளை அவருக்கு மணம் முடித்து உயர்பேறு பெற்றான். சுத்த பிரம்மம் ஆக இருந்த ஞானி மாயையின் பிடியில் அகப்பட்டு உலகக் குடிமகனாக மாறினார். எனினும், ஒழுக்கசீலர் என்பதால் விழுப்பம் உடையவர் என மதிக்கப்பட்டார். உரோமபாதரின் மருமகனாக இருந்த கலைக்கோட்டு மாமுனிவரை அழைத்து வரத் தசரதன் சென்றான்.

அவர் தலைமையில் மகவு நல்கும் வேள்வி நடத்த இருப்பதாயும், அவரை அனுப்பி வைக்கும்படியும் அழைப்பு விடுத்தான். மாமன்னன் வேண்டு கோளை மறுக்க முடியாமல் மாமுனிவராகிய கலைக் கோட்டா சானை அவரிடம் அனுப்பி வைத்தார் உரோம பாதர். வந்தவருக்கு வரவேற்பும், வாழ்த்தும் கூறிச் சிறப்புகள் செய்தான் தசரதன்.


வேள்வி தொடங்குதல்

கலைக்கோட்டு ஆசான் வேள்வித் தலைவராய் இருந்து சடங்குகளையும், முறைபாடுகளையும் செம்மை யாய்ச் செய்வித்து அவ்வேள்வியை நடத்தி வைத்தார்.

வேள்விக் குழிகளில் வெந்தி எழுப்பி மகப் பேற்றுக்கு உரிய அவிசுப் பொருள்களை அதில் இட்டு வேத மந்திரங்களை விளம்பித் தேவர்களுக்கு இட அவர்கள் மகிழ்ந்து அருள் செய்தனர்; ஒமக் குழியில் இருந்து பூதம் ஒன்று வெளிப்பட்டது; தட்டு ஒன்று தாங்கி வந்து அதைக் கலைக்கோட்டு ஆசானிடம் தந்து விட்டு மறைந்துவிட்டது. பொன்னொளி வீசிய பொற்புடைய தட்டில் அற்புதமான அமுதப் பிண்டம் இருந்தது. அந்தப் பிண்டத்தை அவர் அரசனுக்குத் தந்து நல் ஆசி கூறினார்.

தட்டில் இருந்த அமுதத்தைக் கட்டிய மனைவியர் மூவர்க்கும் பகிர்ந்து அளித்தான். தசரதன் எஞ்சியிருந்த மிச்சத்தை மீண்டும் இளையவள் சுமித்திரைக்குத் தந்து, அவளை இரட்டையர்க்குத் தாயாக்கினான். இலக்குவன் சத்துருக்கனன் சுமித்திரைக்குப் பிறந்தனர். கோசலைக்குக் கரிய செம்மலாகிய இராமனும், கைகேயிக்கு அரிய பண்பினன் ஆகிய பரதனும் பிறந்தனர். தசரதன் வாழ்வு மலர்ந்தது. எல்லாச் செல்வமும் அவனை வந்து அடைந்து மகிழவைத்தன. மக்கட் செல்வம் அவனை மிக்கோன் ஆக்கியது.


கல்வியும் பயிற்சியும்

கட்டிளங்காளையர் நால்வரும் கலை பயில் தெளிவும், மலை நிகர்த்த ஆற்றலும், போர்ப் பயிற்சியும் பெற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தனர். வசிட்டர் அவர்களுக்கு வேத சாத்திரங்களைப் பயிற்றுவித்தார். நூலறிவும் போர்ப் பயிற்சியும் மிக்கவர்களாய் வளர்ந்தனர். நாட்டாட்சி முறை கற்க, அவர்கள் மக்களோடு பழகினர்; அவர்கள் குறைகளை நேரில் கேட்டு அறிந்தனர்.

மாலை வேளைகளில் சாலை நிலைகளில் ஊர்ப் புறம் சென்று மக்களைச் சந்தித்தனர். உதய சூரியன் உதித்ததுபோல அவர்கள் அவனை மதித்துப் போற்றினர். செல்லும் இடம் எல்லாம் வெல்லும் திறனுடைய இளவல் இலக்குவன், இராமனைத் தொடர்ந்தான். அவ்வாறே பரதனைச் சத்துருக்கனன் நிழல்போல் தொடர்ந்தான். “தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான்” என்று கூறும்படி இலக்குவன் இராமனுக்கு அரணாக விளங்கினான். “உடன் பிறப்பு’ என்பதற்கு இலக்கணம், இந்நால்வர் உறவில் விளக்க முற அமைந்திருந்தது. பாசம் அவர்களைப் பிணித்தது; மூத்தவன் இராமன் என்பதால் மற்றவர் அவனிடம் யாத்த அன்பும் பாசமும் காட்டி மதித்தனர். தலைமை இராமனிடம் இயல்பாக அமைந்து கிடந்தது. மக்களும் அவனை மற்றையவர்களைவிட மிகுதியாய் நேசித்தனர்.


விசுவாமித்திரர் வருகை

ஆற்றுவரியாக இயங்கிய தசரதன் வாழ்க்கை புயலையும் இடியையும் சந்திக்க நேர்ந்தது. மக்களைப் பெற்று மனைநலம் பெற்றிருந்த மன்னன், அவர்களைப் பிரியும் சூழல் உருவாகியது.

விசுவாமித்திரர் “ராஜரிஷி” என்று பாராட்டப் படுபவர்; அவர் அரசராய் இருந்தவர்; அவர் தம் அரச பதவியை விலக்கிக் கொண்டு, தவ வேள்விகளைச் செய்து, உயர்பேறுகளைப் பெற்று வந்தார். வேகமும், விவேகமும் அவர் உடன்பிறப்புகள். சினமும் சீற்றமும் அவர் நாடித் துடிப்புகள், அவர் வருகையைக் கண்டாலே மாநில அரசர்கள் நடுங்கினர்; அடுத்து என்ன நேருமோ என்று அஞ்சினர்.

பீடுநடை நடந்து ஏற்றமும் தோற்றமும் தோன்றத் தன் அவைக் களம் அணுகிய அம் முனிவரைத் தசரதன் தக்க வழிபாடுகள் கூறி வரவேற்று அமர வைத்தான். “தாங்கள் எழுந்தருளியதற்கு நாங்கள் மிக்க தவம் செய்தோம்” என்று அடக்கமாய்ப் பேசி, அன்புடன் வரவேற்றான். இருகை வேழம் என விளங்கிய தசரதன்,

“தருகை எது வாயினும் தயங்கேன்” என்று கூறினான். கேட்பது எதையும் தருவதாய் வாக்கும் அளித்தான்.

“யான் கேட்பது பொன்னும் பொருளும் அல்ல; பூவும் வழிபாடும் அல்ல; உன் நன்மகன் இராமன்! அவனை என்னுடன் அனுப்புக” என்றார் முனிவர்.

கேட்டதை அரசனால் மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் மகனைவிட்டுப் பிரியவும் அவனால் இயலவில்லை.

“அதைத் தவிர வேறு ஏதேனும் கேட்டால் உவப்பேன்” என்றான்

“வந்ததே அவனுக்காகத்தான்; தருவேன் என்று கூறியபின் மறுப்பு ஏன்?” என்றார் முனிவர்.

“துறவிக்கு இவன் எவ்வகையில் உதவுவான்; இவனை மறப்பதற்கு வழி தேடின் நலமாகும்” என்றான் வேந்தன்.

“நான் துறவிதான்; அறம் தழைக்க அவனை அழைக்கின்றேன். இழைக்கும் வேள்விகளை அழிக்கும் அரக்கரை ஒழிக்கும் வகைக்கு அவன் வந்து உதவ வேண்டும்” என்றார் முனிவர்.

“போர்ப் படை காணாத பச்சிளம் பாலகன் என் மகன்; தேர்ப்படை கொண்டு உமக்குத் துணையாக நானே வருகிறேன்” என்றான் வேந்தன்.

“கேட்டது தருவேன் என்றாய்; வேட்டது தருவாய் என்று கேட்டேன்; வாய்மை தவறாத மன்னன் நீ;

இப்பொழுது வாய் தவறுகின்றாய்; பாசமும், பந்தமும், உன் மகன்பால் வைத்த நேசமும் உன்னை இழுத்துப் பிடிக்கின்றன; இருதலைக் கொள்ளி எறும்புபோல் உன் நிலைமை ஆகிவிட்டது. மறுத்தலைச் சொல்லும் உன் மாற்றம் வியப்புக்கு உரியது” என்றார் முனிவர்.

நீரினின்று எடுத்துப் போட்ட மீனின் நிலைமையை மன்னவன் அடைந்தான்; எதிர்பாராத சூழ்நிலையில் எது பேசுவது என்பது தெரியாமல் தவித்தான்; “தவிர்க” என்றும் சொல்ல இயலவில்லை; “செல்க” என்று வாழ்த்தி அனுப்பவும் முடிய வில்லை; “முடியாது” என்று முடிவு கூறவும் இயலாமல் தவித்தான்.

வசிட்டர் தசரதனைப் பார்த்து, “உம் பாசம் போற்றத்தக்கது தான்; அதனால் உன் மகனுக்கு நாசம் விளைவித்துக் கொள்கிறாய்; குடத்து விளக்குப்போல் உன் மகனை வளர்க்கிறாய்; அவனைத் தடத்தில் விட்டுத் தழைக்கச் செய்ய வழி விடுக; காற்று வரும்போது தூற்றிக் கொள்வது ஏற்றம் தரும். கல்வி கரையற்றது; கற்க வேண்டியவை இன்னும் உள; படைக் கலம் பயின்ற மாமுனிவன், உன் மகன் கரை ஏறக் கிடைத்த மரக்கலம் என அறிக, ஆசானாக வந்த அறிஞர் அவர்; அவருடன் அனுப்புக; அரச முனிவர் ஆதலின் விரசுபடைக் கலன்கள் பல அவரிடம் உள்ளன; அவற்றைத் தக்கவர்க்குத் தரக் காத்து இருக்கிறார்; “'உன் மகன் வீரம்மிக்கவன்” என்று தெரிந்தால் அவற்றை அவனுக்கு அளிப்பது அவர் உறுதி; வாய்ப்புகள் வந்துகொண்டே இருப்பதில்லை; அதைத் தவறவிட்டால் வழுக்கி விழ வேண்டுவதுதான். நீர் அவருக்கு உதவுவது எளிது; அதைவிட அந்த வாய்ப்பை

உம் மகனுக்குத் தருவது வலிது. அதனால் அவனுக்குப் புதுப் பயிற்சிகள், முயற்சிகள், வெற்றிகள் காத்துக் கிடக்கின்றன. அவனை அனுப்பி விட்டு மறுவேலை பார்; அவனைத் தடுக்க நீர் யார்?” என்று நன்மைகளை எடுத்துக்கூறிச் செல்வதன் நன்மையை அறிவுறுத்தினார்.

இருள் அகன்றது; ஒளி தெரிந்தது, பாசத் திரை தன் பார்வையை மறைத்திருந்தது. அதை விலக்கிவிட்டு, விழி பெற்றவனாகத் தசரதன் நடந்து கொண்டான்; வழி தவறியதற்கு வருந்தினான்; குருடனாக நடந்துகொண்ட அவன், புத்தொளி பெற்று, மகனை முனிவனுடன் அனுப்பி வைத்தான்.

விசுவாமித்திரர் இராமனைத்தான் கேட்டார்; இலக்குவன் வருவதைத் தடுக்கவில்லை. நிஜத்தை விட்டுப் பிரியாத நிழலாக இளையவன் இலக்குவன், அழைக் காமலே அண்ணன் இராமனைப் பின் தொடர்ந்தான்; முனிவன் முன்னே நடக்க, அவன் பின்னே இவ் விளையவர் இருவரும் தொடர்ந்து நடந்தனர்.

உடன்போதல்

கூட்டை விட்டுப் பறவைகள் வெளியே பறந்து செல்வதுபோல, நாட்டை விட்டுக் காட்டு வழியே முனிவனுடன் சென்றனர்; மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், அசையும் கொடிச் சீலைகளும், அவர்களை வழி அனுப்பின. வானவில்லின் வண்ண நிறங்களும், பிரபஞ்சத்தின் பேரொளியும் அவர்கள் கண்ணைக் கவர்ந்து மகிழ்வு ஊட்டின. காந்தத்தின் பின்

தொடரும் இருப்பு ஊசிபோலக் கறுப்புநிறச் செம்மலும் இளவலும் தவ முனிவன்பின் சென்றனர்; அறிவு நிரம்பிய ஆசானின் அணைப்பில் அவர்கள் பெருமிதம் கொண்டனர்; புதிய இடங்களுக்குச் சென்று மனதில் பதியும் புதிய காட்சிகளைக் கண்டனர்; அவற்றைக் கண்டு வியப்பும் அறிவும் பெற்றனர்; ஆறுகளையும், சோலைகளையும் கடந்து, வேறுபட்ட சூழல்களைக் கண்டனர். அந்தப்புரங்களையும், ஆடல் அரங்குகளையும் கண்டவர் எளிமையும், எழிலும், ஞானப் பொலிவும் நிரம்பிய முனிவர்களின் ஒலைக் குடிசைகளைக் கண்டனர்.

ஆசிரமங்கள் அவர்களுக்குப் பசும்புல் விரிப்புகளைப் பரப்பி, வரவேற்புச் செய்தன; காட்டு மரங்கள் காற்றில் அசைந்து அவர்களோடு கவிதைகள் பேசின; மனிதர்களைப் போலவே தாவரங்கள், மரம், செடி, கொடிகள் அவர்களிடத்தில் பாசமும், பரிவும் காட்டின; விலங்குகளும் தத்தமக்கு உரிய நெறிகளின் படி உலவிச் செயல்பட்டுத் திரிவதைக் கண்டனர். தேவைக்கு மேல் அவை உயிர்களைக் கொன்று தின்பதில்லை; தேடித் திரிவதுமில்லை; மனிதன் தேவைக்கு மேல் பொருள் திரட்டுவதைக் கண்டு பழகிய அவர்களுக்கு அம்மிருகங்கள் மதிக்கத்தக்கவையாக விளங்கின. மாந்தர்விடும் மூச்சில் கலந்துள்ள அசுத்தங்களைத் தாம் வாங்கிக் கொண்டு காற்றைத் துய்மைப்படுத்தி உதவும் தாவரங்களின் உயர்வை அறிய முடிந்தது. தீமை செய்பவர்க்கும் தாம் உள்ள அளவும் நன்மை செய்யும் நல்லியல்பு அவற்றிடம் காண முடிந்தது. தம்மை வெட்டிக் கீழே சாய்க்கும் முரடனுக்கும் காயும், கனியும் நறுநிழலும் தந்து உதவும்

அவற்றின் உயர்வைக் காணமுடிந்தது. பூத்துக் குலுங்கும் பூவையரின் எழிலையும் பொலிவையும் செடி கொடிகளிடம் முழுமையாகக் காண முடிந்தது.

காமாசிரமம்

சரயூநதிக் கரையில் சஞ்சரித்த அவர்கள், பசுமையான சோலை ஒன்றனைக் கண்டனர். அதில் தவசியர் வசிக்கும் குடில்கள் மிக்கு இருந்தன. அம் முனிவர் இவர்களைக் கண்டதும் பேருவகை அடைந்தனர்; வரவேற்பும், உண்டியும், இடமும் தந்து உபசரித்தனர்; எழில்மிக்க பொழில்கள் சூழ்ந்த ஆசிரமத்தில் இரவுப் பொழுதைக் கழித்தனர்.

பொழுது புலர்ந்தது; அந்த ஆசிரமம் அவர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அதன் ஆதி அந்தத்தைக் கேட்டு அறிய அவாவினர். அதன் பெயரே புதுமையாய் இருந்தது. “காமாசிரமம்” என அது வழங்கப்பட்டது. காமத்தை ஒழித்து, ஏமநெறி காணும் முனிவர்கள், தாம் வாழும் இடத்துக்கு இப் பெயர் சூட்டியுள்ளமை வியப்பைத் தந்தது. “இதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்க வேண்டும்” எனக் கருதினர். ஆரண வேதியனை அணுகி, “இப்பெயர் இதற்கு அமையக் காரணம் யாது?” என்று வினவினர்.

“மலரம்புகளை விட்டு மற்றவரை எரிக்கும் காமன் இங்கே எரிபட்டான்; அதனால், இந்த இடம் “காமாசிரமம்” என வழங்கலாயிற்று” என்றார்.

“'காமன் கூடவா தவம் செய்ய இங்கு வந்தான்?'</p?

“செய்கிற தவத்தைக் கெடுக்க அவன் அம்புகளைத் தொடுக்க, அது சிவன் மேல்பட, அவர் சினந்து எரிக்க, அவன் சாம்பல் ஆனான்” என்று கூறினார்.

“மதன் மதம் அழிந்து, அவன் அதம் தீர்ந்து, அழிந்து ஒழிந்தான்” என்பதைக் கேட்ட இவர்கள், “ஆழம் தெரியாமல் காலைவிட்டால் இந்தக் கதிதான் நேரும்” என்று பேசிக் கொண்டார்கள்.

“மன்மதன் எரிந்து விட்டானா?” என்று இளையவன் கேட்டான்.

“எரிந்தாலும் அவன் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான்” என்று முனிவர் விடை தந்தனர்.

இந்தக் கதை கேட்பதற்குச் சுவையாக இருந்தது. காணும் இடம் எல்லாம் அது கதைகளைப் பெற்றிருந்தது. முனிவர்களின் அற்புதங்கள் சொற்பதங்களாகப் பேசப்பட்டன. இதைப் போலவே காணும் காட்சிகள், செல்லும் இடங்கள், கடக்கும் ஆறுகள், தங்கும் சோலைகள் இவற்றின் பெயர்களையும் வரலாறுகளையும் கேட்டு அறிந்தனர்; நடை வருத்தம் மறந்தனர்.

அவர்கள் கடக்கும் வழியில் வெப்பம்மிக்க பாலை நிலம் ஒன்று குறுக்கிட்டது. அறம் சாராதவர் மூப்புப் போல் அது அழிவைப் பெற்று இருந்தது. குடிக்க நீரும், உண்ண உணவும், தங்க நிழலும் கிடைக்காத கொடிய காடாக இருந்தது. காட்டு விலங்குகளும் அந்த மேட்டு நிலத்தில் நடப்பதைத் தவிர்த்தன. அதன் வெப்பம் தாங்க

வொண்ணததாய் இருந்தது. அதை நீக்கும் செப்பம் தேவைப்பட்டது. மாமுனிவன் உபதேசித்த மந்திரங்களைச் சொல்லி, இவர்கள் பசியும் நீர் வேட்கையும் நீங்கினர். சுற்றுப்புறம் வெம்மை நீங்கித் தண்மை அளித்தது. “அம் மந்திரம் பிரம்ம தேவனால் விசுவாமித்திரருக்கு அளிக்கப்பட்டது” என்பதைக் கேட்டு அறிந்தனர்.

பாலை நிலம்

இதுவரை நடந்து வந்த வழிகளில் எல்லாம் பசுஞ்சோலைகளைக் கண்டவர், இங்கு மட்டும் ஒரு பாலை நிலம் இருப்பது வியப்பைத் தந்தது. செடிகள், கொடிகள், மரங்கள் பிடுங்கி எறியப் பெற்றுச் சருகுகளாக உலர்ந்து கிடந்தன. யாளிகளும், யானைகளும், மானும், மாடுகளும் உலவித் திரிந்த இடம் அது; அவற்றின் வற்றி உலர்ந்த எலும்புக் கூடுகள் அவற்றின் சரிதத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தன; சிங்கமும் புலியும் ஒன்று இரண்டு ஒதுங்கித் திரிந்து கொண்டிருந்தன. அவையும் சினம் அடங்கிச் சிறுமை உற்று இருந்தன. அங்கே வாழ்ந்த உயிரினங்கள் என்ன ஆயின? களப்பலி கொள்ளும் காளி கோயில் முற்றம்போல் இரத்தம் புலர்ந்த தரைகளும், எலும்பின் சிதைவுகளும் புலால் நாற்றம் வீசிக் கொண்டிருந்தன. அழிவுச் சின்னங்கள் அலங்கோலப் பின்னங்கள் அவற்றின் வரலாற்றைக் கேட்க ஆர்வத்தைத் துண்டின.

“இவை அரக்கர்களின் அழிவுச் செயலாகத்தான் இருக்க வேண்டும்; இதற்குக் காரணம் யார்?” என்று இளைஞர் வினவினர். மாமுனிவருக்குப் பேச ஒரு

வாய்ப்புக் கிடைத்தது. எதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரோ அதைச் சொல்லத் தக்கதொரு வாய்ப்புக் கிடைத்தது.

“'தாடகை என்னும் தையலாள்தான் காரணம்” என்றார்.

“அரக்கி அவள்; இரக்கமில்லாதவள்; இந்தத் தண்டகாருணிய வனமே அவள் கொடுமைக்கு ஆளாகி விட்டது. சிங்கமும் புலியும்கூட அவளைக் கண்டால் அஞ்சி நடுங்கி விடும்; உயிர்களைக் கண்டால் அவள் செயிர் கொண்டு அழிப்பாள்; அவற்றின் குருதியைக் குடிப்பாள்; எலும்புகளை முறிப்பாள், ஆலகால விஷம் போலச் சுற்றுப் புறத்தைச் சுட்டு எரிப்பாள். அவள் இங்கு உலவித் திரிகிறாள்” என்று அவளைப் பற்றிய செய்திகள் அறிவித்துக் கொண்டு இருந்தார்.

தாடகை வருகை

அதற்குள் எதிர்பாரத விதமாகக் கோர வடிவம் உடைய அவ்வரக்கி அவர்கள்முன் வந்து நின்றாள். மனித வாடை, அவளை அங்குக் கொண்டுவந்து சேர்த்தது.

இடியின் ஒலியை இதுவரை வானின் மடியில் தான் கேட்டிருந்தார்கள். இப்பொழுது முதன்முறையாகப் பெண்ணின் குரலில் இடி பேசுவதைக் கேட்டார்கள்; மின்னல் என்பதை மழை மேகத்தில்தான் கண்டிருக்கிறார்கள்; அதைப் பின்னிய சடையுடைய அவ்வரக்கியின் கோரச் சிரிப்பில் காண முடிந்தது. அவள் மலை ஒன்று அசைந்து வருவதைப் போல அவர்கள்முன் நடந்து

வருவதைக் கண்டனர்; பருவதம் அசையும்” என்பதை அவள் வருகையில் கண்டனர். வானில் கண்ட மதிப்பிறையை அவர்கள், அவள் கூனல் பற்களின் வளைவில் கண்டனர். வேள்வித் தீயில் காணும் தீப்பொறிகளை அவள் வேள்விக் குறிகளில் காண முடிந்தது. கண்கள் சிவந்து கிடந்தன. பசி என்பதற்கு எரிமலையின் வடிவம் உண்டு என்பதை நெறி தவறிய அவள் இரைச்சலில் கண்டனர்.

தாக்கும் போக்கில் அவர்களை நோக்கி நடந்தாள். “உங்கள் சடைமுடி என்னை ஏமாற்றாது; நீங்கள் மணிமுடி தரிக்கும் மன்னவனின் சிறுவர்கள் என்பது எனக்குத் தெரியும்; வற்றி உலர்ந்த தவசிகளைப் பற்றித் தின்று என் பற்கள் கூர் மழுங்கிவிட்டன. செங்காயாகச் சிவந்து கிடக்கும் கனிகள் நீங்கள்; சுவை மிக்கவர்கள், நவை அற்றவர்கள்; நெய்யும் சோறும் நித்தம் தின்று கொழு கொழுத்து உள்ள மழலைகள் நீங்கள்; காத்திருந்த எனக்கு வாய்த்த நல் உணவாக அமைகிறீர்கள்” என்று சொல்லிக் கொண்டு சூலப்படை எடுத்து அந்த மூலப்பொருளை நோக்கி எறிந்தாள். வில் ஏந்திய வீரன் இராமன் தன் விறலைக் காட்ட அம்பு ஒன்று ஏவினான். அது அவள் ஏவிய சூலத்தை இருகூறு ஆக்கியது; சூலம் தாங்கிய அவள், அதை இழந்து ஒலம் இட்டாள். மறுபடியும் அவள் போர்க் கோலம் கொண்டாள்.

பெண் என்பதால் அவளைக் கொல்லத் தயங்கினான். அவள் பேயாக மாறிவிட்டதால் அவளை அடக்க வேண்டியது அவன் கடமையாகியது. மெல்லியல் என்ற சொல்லியலுக்கு அவளிடம் எந்த நல்லியலும்

காணப்படவில்லை. அவள் அடங்கி இருந்தால் இவன் முடங்கி இருப்பான்; அவள் போர் தொடங்குவதால் இவன் செயல்பட வேண்டியது ஆயிற்று.

“சேலை கட்டியவள்; அவள்மீது வேலை எறிவது தகாது” என்று எண்ணினான். அடித்துத் துரத்துவது என்று ஆரம்பத்தில் எண்ணினான். அதற்கு முனிவனின் அனுமதி கிடைக்கவில்லை. தம்மோடு தங்கை பிறவாத வெறுமை அவளிடம் அன்பு காட்டச் செய்தது. பெண் கொலை புரிதல் பெரும்பழி உண்டாக்கும் என்று தயங்கினான். ஆவும், ஆனியல் பார்ப்பனரும், பெண்டிரும், மகவு பெறாதவரும் களத்தில் அனுமதிக்கப்படுவது இல்லை; களத்தில் எந்தப் பெண்ணும் நின்று போராடியது இல்லை; இவன் கற்ற கல்வி, அவளைக் கொல்லத் தடையாக நின்றது.

“கொலையிற் கொடியரைக் களைதல் களை பிடுங்குதற்குச் சமமாகும். அது நாட்டு அரசனின் கடமையாகும். தீயவரை ஒழித்தால்தான் உலகில் நன்மை நிலைத்திருக்கும். அறம் நோக்கி அழிவு செய்வது ஆளுநரின் கடமையாகும்.

“நீ தனிப்பட்ட மனிதன் என்றால் தயங்கலாம்; நீ அரச மகன்; உனக்குத் தீயோரை ஒறுத்தல் கடமை யாகும்; இது உன் தந்தை செய்ய வேண்டிய கடமை; அதை அவர் இதுவரை செய்யாமல் தாமதித்தது பெருந் தவறு; நீ அவளை இரக்கம் காட்டி, விட்டுவிட்டால், “'நீ அஞ்சி அகன்றாய்” என்று உலகம் பேசும்; “கோழை” என்று ஏழையர் பலர் கூறுவர்; தருமத்தின் முன்னால் ஆண்

பெண் பேதம் பார்ப்பது ஏதம் தரும்; வேதமும், பெண் ஆயினும் அவள் தவறு செய்தால் ஒறுப்பதை அனுமதிக்கிறது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று பேசிப் பேதம் காட்டுவது அரச நெறியாகாது”.

“மேலும் அவள் தாக்க வந்தவள்; அவள் உயிர் போக்குவது ஆக்கமான செயலே. “கொடியவள் ஒருத்தியை வீழ்த்தினாய்” என்று உன் புகழை உலகம் பேசும்” என்றார்; முன்னோர் பலர் தவறு செய்த பெண்களைத் தீர்த்துக்கட்டிய சான்றுகளை அவன் முன் வைத்தார்.

இராமன் அவர் கூறியவற்றைப் பொறுமையாய்க் கேட்டான்; இனித் தாமதித்துப் பயனில்லை.

“விசுவாமித்திரர் வாக்குதான் வேதவாக்கு; அதற்குமேல் சான்றுகள் தேவை இல்லை” என்பதை உணர்ந்தான்; அதற்குமேல் வாதங்கள் தொடரவில்லை.

அம்பு துளைத்தல்

இராமன் ஏவிய முதல் அம்பு, அவள் சூலத்தை முறித்தது; அடுத்து விட்ட அம்பு அவள் மார்பகத்தைத் துளைத்து முதுகு புறம் வெளியேறியது. கல்லாத மடையர்களுக்குச் சொல்லும் நல்லுரைகள் அவர்கள் வாங்கிக் கொள்வது இல்லை; உடனே அவர்கள் அதைவிட்டு விடுவார்கள். அதுபோல அவ் அம்பு அவள் மார்பில் நிற்காமல் வெளியேறிவிட்டது.

குருதி கொப்பளித்தது; அதில் அவள் நீராடினாள். செக்கர் வானம் தரையில் சாய்ந்ததைப் போல அவள்

தரையில் விழுந்தாள். மை வண்ண அரக்கி, செவ் வண்ணச் சிலையாக நிலை மாறினாள். கறுப்பி என்று பேசப் பட்டவள் செவ்வலரி மலரானாள். மண் சிவந்தது; அதில் அவள் கண் சிவந்து துடித்துக் கதறினாள்; அந்த ஒலி யானையின் பிளிறல்போல் நாற்புறமும் சிதறியது. இராவணனது கொடிக் கம்பம் சாய்ந்ததைப் போல இந்தக் கொடிய கம்பம் கீழே விழுந்தது. இராவணன் அழிவை முன் கூட்டி அறிவிப்பதுபோல் இந்தச் சாய்வு காணப் பட்டது.

மக்கள் புரட்சி முன் கொடுங்கோல் மன்னன், ஆட்சி இழந்து வீழ்ச்சி உற்று அலங்கோலம் அடைவதைப் போல இக்கோர அரக்கி பிணக்கோலம் கொண்டாள்; இதைக் கண்ட வானவர் ஆரவாரித்தனர்; மகிழ்ச்சி அடைந்தனர். தீமை அழியவும், அறம் தழைக்கவும் இராமன் சரம் செயல்பட்டதை அறிந்து அவர்கள் ஆசி கூறினர்.

“மாவீரன்” இவன் என்று தேவேந்திரன் பாராட்டினான். தேவர்கள் தெய்வப் படைக் கருவிகள் சிலவற்றை ஏற்கெனவே விசுவாமித்திர முனிவரிடம் ஒப்படைத்து இருந்தனர்; அவற்றைத் தக்கவனிடம் சேர்க்கச் சொல்லி அறிவித்திருந்தனர்; “தக்கோன் இவனே” என்று சொல்லி மிக்கோன் ஆகிய முனிவரிடம் “அப்படைகளை இராமனிடம் தருக” என்று அறிவித்தனர்.

மாமுனிவனும் தேவர்களின் ஏவல் கேட்டுக் காவல் மன்னன் ஆகிய இராமனுக்குப் படைக் கருவிகளைத் தந்தான்; அவற்றோடு எய்யும் ஆற்றையும் கற்பித்தான். அரிய படைப்பயிற்சி அவனுக்குக் கிடைத்தது. ஆற்றல்மிக்க படைக் கருவிகள் அவனை அடைந்தன. தவவேள்வி

தாடகை தரையில் பட இராமன் வில்லை வளைத்தான்; இது அவனுக்கு வெற்றியைத் தந்தது; அவன் வீரம் பாராட்டப்பட்டது; எனினும், “அவன் ஒரு பெண்ணைக் கொலை செய்தான்” என்ற பெரும் பழியும் அவனைச் சூழ்ந்தது.

இதைக் கூனி கைகேயிடம் உரையாடலில் குறிப்பிடுகிறாள். இராமன் பெருமையை உலகம் பேச, அவன் சிறுமையைக் கூனி ஏசக் காண்கிறோம். “தாடகை என்னும் தையலாள் படக் கோடிய வரி சிலை இராமன்” என்று வன்பழிக் கூறி கைகேயிக்கு அவன்பால் உள்ள அன்பை அழிக்கிறாள் கூனி.

தாடகையின் வீழ்ச்சி, அரக்கர்களின் தாழ்ச்சிக்கு ஆரம்பநிலை; அவர்கள் அழிவுக்குப் பிள்ளையார் சுழி, இனி அடுத்து அவள் மைந்தர்கள் சுபாகுவும் மாரீசனும் இராமனை எதிர்க்கின்றனர். அதற்கு உரிய சூழல் உருவாகியது.

வேள்வி காத்தமை

கடமையை முடித்துக் கொண்டு காகுத்தன், அந்த இடத்தை விட்டுச் சில யோசனை தூரம் நடந்து சென்றான். மூவரும் அழகிய பசுஞ்சோலை ஒன்றனைக் கண்டனர். அதன் பழைய வரலாறு மாமுனிவன் கூற, இருவரும் செவிமடுத்தனர். “அந்த இடத்தில் திருமால் இருந்து தவம் செய்தார்” என்ற கதை பேசப்பட்டது.

அதே இடத்தில்தான் மாவலி என்ற மன்னனும் ஆண்டு வந்தான் என்பதும் அறிவிக்கப்பட்டது. வள்ளல் ஒருவன் அழிந்தான் என்பது கேட்கப் புதுமையால் இருந்தது. தீயவர்கள் அழிவதும் நல்லோர்கள் வாழ்வதும் அறத்தின் ஆக்கம் என்று கூறுவர். கொடை வள்ளலாக வளர்ந்தவன்; புகழின் எல்லையில் நின்றவன்; அவனை ஏன் திருமால் காலால் மிதித்து மாய்க்க வேண்டும்?

நல்லது செய்தாலும் ஆணவம் கூடாது; அடக்கம் காட்டி இருக்க வேண்டும். ஈகை என்பது மற்றவர்கள் தேவை அறிந்து அவர்கள் குறையைப் போக்குவது. உடையவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுதல், அவர்கள் கடமையாகும். மேகம் மழை பெய்கிறது என்றால், மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று அது எதிர்பார்ப்பது இல்லை; அது தன் கடமையைச் செய்கிறது. “மாரி அன்ன வண்கை” என்றுதான் புலவர்கள் வள்ளல்களைப் பாராட்டினார்கள். ஊரில் நீர்நிலை இருந்தால், அது தனி ஒருவனுக்கு மட்டும் உரியது அன்று; அதேபோலத் தான் செல்வர்களின் செல்வமும் பயன்படவேண்டும். ஈயார் தேடிய பொருளைத் தீயார் கொள்வர்; ஈட்டும் செல்வம் நாட்டுக்குப் பயன்பட வேண்டும்.

மாவலி தந்தது புகழ் கருதி மட்டும் அன்று; இதனை ஒரு யாகமாகக் கொண்டான்; அதனால் புண்ணியம் கிடைக்கிறது; அதன் விளைவு இந்திரப் பதவி என்று திட்டம் தீட்டினான்; அவன் செயலில் கண்ணியம் இல்லை; புண்ணியம்தான் இருந்தது.

தேவர்கள் வந்து திருமாலிடம் முறையிட்டனர். “இவன் புகழ் மிக்கவனாக வளர்ந்தால் விரைவில் இந்திரப் பதவியை அடைவான்; இவனை அடக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். “ஆணவம் மிக்க அவனை அவன் சொல்லாலேயே அழிக்க வேண்டும்” என்று திட்டமிட்டு, வாமனனாய் அவதரித்து, மூன்று அடி மண் கேட்டு, விண்ணையும் மண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை அவன் தலைமேல் வைத்து, அவனைப் பாதளத்தில் அழுத்தினார். இந்தக் கதையை அவ் இளம் சிறுவர்க்கு வளம்மிக்க தவம் உடைய முனிவர் எடுத்து உரைத்தார்.

மாவலி ஆண்ட மண் அது; அவன் மாண்டதும் அதே மண்தான்; அதனால் அந்த இடம் பெருமை பெற்றது என்பதைவிட வாமனனாய் வந்து, நெடு மாலாய் நிமிர்ந்து நின்ற இடம் அது; அதனால் அது சிறப்புப் பெற்றது. திருமாலின் திருவடி தீண்டப் பெற்றதால் அந்த இடம் ‘திவ்வியத் தலம்’ ஆயிற்று. அந்த இடத்துக்குச் ‘சித்தாசிரமம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. “நினைத்த பொருள் கைகூடும் இயல்பினது” என்ற பொருளில் இந்த இடத்துக்கு இப் பெயர் அமைந்தது.

வேதம் கற்ற அந்தணர், வேள்விகள் இயற்றுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். தீ வளர்த்து, அவிசு சொரிந்து, தேவர்களுக்கு உணவு தந்தனர்; அவர்கள் புகழ்மிக்க இந்தத் திருத்தலத்தைத் தாம் யாகம் செய்யும் பூமியாகத் தேர்ந்து எடுத்தனர்; அதனால், அங்கே ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு வேதம் ஓதுவதும் வேள்விகள் இயற்றுவதும் தம் தொழிலாகக் கொண்டனர்; விசுவாமித்திரரும் தாம் மேற்கொண்ட தவத்துக்குரிய இடமாக அந்த இடத்தைத் தேர்ந்து எடுத்தார்; அங்கு வந்திருந்த ஏனைய வேதியர்களும் முனிவர்களும் அவர் தலைமையை ஏற்று அடிபணிந்தனர். வந்தவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இவ் வாலிபர்கள் தசரதன் நன்மக்கள் என்பதை எடுத்து உரைத்தார். இவர்கள் காவல் இருக்கத் தாம் கண்ணிய வேள்விகளைப் பண்ணி முடிக்கலாம் என்று உரைத்தார்.

வேள்வி தொடங்கியது; கேள்வி மிக்க முனிவர் அங்கு வந்து கூடினர்; “இனி அரக்கர் வந்து அழிவு செய்ய முடியாது” என்பதால் அச்சமும் அவலமும் நீங்கி, உவகை பெற்றுச் செயல்பட்டனர். தீயை வளர்த்து, உலகத்துத் தீமைகளை அழிக்க முயன்றனர். விசுவாமித்தரர் யோக நிலையில் அமர்ந்து, தம் வேகம் எல்லாம் ஒடுக்கி, மவுன விரதம் மேற்கொண்டார். ஆறு நாள்கள் இந்த வேள்வி தொடர்ந்தது; வேறு அரக்கர் வந்து தொடர்ந்து வேள்விக் குழிகளைக் குருதிச் சேறு ஆக்காமல் இவ்விருவரும் ஊண் உறக்கம் இன்றி, வில் ஏந்திய கையராய்க் காவல் காத்து நின்றனர்.

அரக்கருடன் போர்

தாடகை பட்டதும் அந்த அதிர்ச்சிமிக்க செய்தி அரக்கர்களைச் சுட்டது; அது காடு முழுவதும் எட்டி எதிர் ஒலித்தது. அவள் மாரீசன் சுபாகு என்பவனின் தாய்; அரக்கர்களின் தலைவி, அக்கிரமங்களின் உறைவிடம்; “அவள் வீழ்ந்தாள்” என்றதும் அரக்கர்கள் துயரில் ஆழ்ந்தனர்; கொதித்தனர்; திக்கெட்டும் முரசுகள் அதிர்த்தனர்; வான் எங்கும் குழுமினர்; அவர்கள் கொக்கரித்து இடி முழக்கம் இட்டனர். வானத்தில் கரிய மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் இவ்வரக்கர்கள் ஒருங்கு திரண்டனர்; “தலைவியை வீழ்த்திய அந்தத் தறுகணாளர்களை அழிப்பது” என்று உறுதி கொண்டனர்; வேள்விப் புகை கிளம்பியது; அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர்; “இந்த முனிவர்களுக்கு என்ன துணிச்சல்?” அதை நினைத்து அவர்களுக்கு ஒரே எரிச்சல்.

மாமிசத் துண்டங்களை அந்த வேள்விக் குண்டங்களை நோக்கி வீசினர்; குருதிப் புனலை அக் குழிகளில் கொட்டி நெருப்பை அவிப்பதில் உறுதியாய் இருந்தனர். யாக மேடையைக் களப்பலி மேடை போலப் புலால் நாற்றம் வீசச் செய்தனர். கைவில்லை ஏந்தி நாண் ஏற்றி, அவர்கள் மீது அம்பு செலுத்தித் தொல்லைப் படுத்தினர். படைக்கலங்களை வீசி, அவர்கள் நெய்க் குடங்களை உடைத்தனர். விண்ணில் இருந்து அவர்கள், இவற்றை வீசுவது இராமன் கண்ணில் பட்டது. “அவ்வரக்கர்களைச் சுட்டிக் காட்டி இரக்கம் சிறிதும் காட்டாமல் வீழ்த்துக” என்று இலக்கு வனுக்கு அறிவித்தான். இலக்குவன் அவர்கள் மீது அம்பு செலுத்தி, அலற வைத் தான். இராமன் சரக்கூடம் அமைத்து, வேள்விச் சாலையை அவர்கள் தாக்குதலினின்று தடுத்துக் காத்தருளினான்.

அரக்கர்களின் ஆரவாரத்தைக் கண்டு, அருந்தவ முனிவர் அஞ்சி, இராமனை அணுகி முறையிட்டனர்.

“அவர்கள் குறைகளைத் தீர்த்து அருள்வதாக அபயம் அளித்தான்; “'அஞ்சற்க” என்று கூறி அரக்கர் களைத் துஞ்ச வைத்தற்கு அம்புகளைச் செலுத்தினான். எதிர்க்க வந்த மாரீசன் அதிர்ச்சி அடைந்து, உயிர் தப்பி ஓடி விட்டான். சுபாகு என்பவன் மரணப் பிடியில் அகப்பட்டு அதிலிருந்த தப்ப முடியாமல் மடிந்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டான். “அரக்கர் தலைவர் இருவரும் களம் விட்டு மறையவே, மற்றவர் எதிர்த்துப் பயனில்லை” என்பதால் உயிர்மேல் விருப்புக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஒட்டம் பிடித்தனர். செத்தவர் சிலர்; சிதைந்தவர் பலர் ஆயினர்.

அரக்கர்களின் கூட்டு எதிர்ப்பு வரட்டுக் கூச்சலாய் எழுந்து, ஓங்கி, அடங்கிவிட்டது. விசுவாமித்திரர் தம் யாக வேள்வியை இனிது முடித்து மன நிறைவு கண்டார். மற்றைய முனிவர்களும் பனிப்படலம் நீங்கியது போல மன ஆறுதல் பெற்றுத் தத்தம் வேள்விப் பணிகளைச் செய்து முடித்தனர். அரக்கர்களின் அரட்டலும் மருட்டலும் அதோடு முடிந்தன. இராமன் விசுவாமித்திரருக்குத் துணையாய் இருந்து அவர் இட்ட பணிகளை இனிது முடித்துத் தந்து, அவர்தம் நன்மதிப்பைப் பெற்றான்.

மிதிலை ஏகல்

கடமையை முடித்துக் கவலை நீங்கி இருந்தனர். ‘அடுத்துச் செய்யத்தக்கது யாது?’ என்று முனிவன் கட்டளையை எதிர்நோக்கி நின்றனர்.

“அடுத்த பயணம் எங்கே”என்று இராமன் நயனம் வினவியது.

“சனகன் என்ற பெயருடைய மாமன்னன் ஒரு பெரு வேள்வி நடத்த இருக்கிறான்; வேள்வி காண அவன் ஊராகிய மிதிலைக்குச் செல்கிறோம். அங்கு உனக்கு ஒரு வீர விளையாட்டுக் காத்துக் கிடக்கிறது”.

“மேரு போன்ற வில் ஒன்று வளைப்பார் அற்று வாளாக் கிடக்கிறது; அதனை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, உன் வீரத்தைக் காட்டு; நீ மாவீரன் என்பதற்கு அஃது ஒர் எடுத்துக்காட்டு; அதனை வெளிப்படுத்த இவ்வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன” என்று கூறினார்.

எடுத்த கருமம் முடித்துக் கொடுத்தமையின் அவனைச் “சான்றோன்” என்று உலகம் புகழ்ந்தது. முனிவர்கள் அவன் ஆற்றிய பணியையும், அதனால், தாம் அடைந்த பயனையும் சொல்லிப் பாராட்டி நன்றி நவின்றனர். “இவனை மாவீரன் என்று கேட்கும் தசரதன் உவகை உறுவது உறுதி” என்றனர்.

அங்கே அந்த வனத்தில் வாழும் முனிவர் வாயிலாய் அவன் முன்னோர்களின் வரலாறுகளைக் கேட்டு மகிழ்வும் பெருமையும் கொண்டனர். முந்தையோர் வீரச் செயல்களைக் கேட்கும் தோறும் அவர்கள் நெஞ்சம் இறும்பூது எய்தியது. தேன் மழையில் தாம் நனைவது போல அக்கதைகள் அவர்களுக்கு இனித்தன. தாய் பாடும் தாலாட்டுப் போல அவர்கள் நெஞ்சில் பதிந்தன; அவர்களுக்கு ஊக்கம் அளித்தன.

பகீரதன் கதை

விசுவாமித்திரர்பால் கேட்ட கதைகளுள் பகீரதன் கதையும் ஒன்றாகும்.

“கங்கை நதிக்குப் பாகீரதி என்ற பெயர் வரக் காரணம் யாது” என்று முனிவரைக் கேட்டு அறிந்தனர்.

பகீரதனின் முயற்சியால் வான் உலகில் பாய்ந்து கிடந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வந்தமையால் அதற்குப் பாகீரதி’ என்ற பெயர் உண்டாயிற்று என்று விளக்கம் தந்தார்.

“மலையரசனாகிய பருவதராசனுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர்; இவர்களின் தாய் பெயர் “மனோரமை”. மூத்தவள் ‘கங்கை’; இளையவள் ‘பார்வதி’; சிவனார் பார்வதியை இடப்பக்கத்தில் வைத்துச் சரிபாதி இடம் கொடுத்தார். பெண்ணுக்குச் சரி உரிமை தந்த முதற்கடவுள் சிவனார்; சக்தியும் சிவனுமாய் அவர்களை மாந்தர் வழிபடுகின்றனர்.

கங்கை வானவர்க்கு அமுதமாக விளங்கிப் பரலோகவாசியாய் இருந்தாள். அவள் தேவர்களுக்கு நீராடும் புனலாக நிலவினாள்.

‘சகரன்’ என்ற பெயருடன் சூரிய குலத்து அரசன் ஒருவன், தன் புகழை எட்டுத்திக்கும் பரப்பி, ஏற்றமுடன் ஆட்சி செய்து வந்தான். தன்னிகரில்லாத வேந்தனாய் அவன் விளங்கினான்; தன் மாட்சியை உலகுக்கு அறிவிக்க அக்கால வழக்கப்படி அசுவமேத யாகம் ஒன்று நடத்தினான். அவன் அனுப்பி வைத்த குதிரை எட்டுத்திக்கும் சென்றும் அடக்குவார் இன்றிப் பாதாள உலகம் சென்றது. அங்குத் தவத்திற் சிறந்த முனிவர் ‘கபிலர்’ என்பார். அதைக் கட்டி வைத்தார். அது மேலே எழும்பி வாராமல் அங்கே அகப்பட்டுக் கொண்டது.

சனகனின் புதல்வர் பதினாறாயிரவர் மண்ணைத் தோண்டி அந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். சகரர் தோண்டிய இடம் கடலாக ஆனமையின் அதற்குச் சாகரம் என்ற பெயரும் வழங்குகிறது. வேல் ஏந்திய மன்னரை எதிர்க்கச் சென்றவர், நூல் அணிந்த மார்பன் ஆகிய முனிவரைச் சந்தித்தனர்; நொய்ந்த அவர் உடம்பைக் கண்டு அவர் ஆற்றலைக் குறைவாக மதிப்பிட்டனர். அனுமதி கேட்டு கட்டு அவிழ்க்க வேண்டியவர் அவரசப்பட்டுக் குதிரையை மீட்டனர்; அதற்குக் கிடைத்த வெகுமதி அவர் இட்ட சாபம்; வந்தவர் அனைவரும் சாபத்தால் வெந்து சாம்பல் ஆயினர்.

பிற்காலத்தில் சகரனின் சந்ததியார்களுள் ஒருவனான பகீரதன் என்பான் முந்தையோர் கதைகளைக் கேட்டு வேதனை அடைந்தான். ஈமக்கடனும் செய்ய முடியாமையால் அவர்கள் நாமமும் மறைந்து சாம்பலாய் மாறி அவர்கள் சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது. அவர்கள் சாம்பலை ஒருங்கு திரட்டிப் புண்ணிய நதியின் தீர்த்தத்தை அவற்றின் மீது தெளித்து, அவர்கள் வானுலகு நண்ண அவன் முயற்சி எடுத்துக் கொண்டான். “கங்கை நீர்தான் புனிதம் மிக்கது” என்று சாத்திரம் அறிந்தவர் சாற்றினர்; ஆனால், அது மண்ணுலகில் பாய்வதில்லை; விண்ணவரின் உடைமையாக இருக்கிறது என்பதைப் பகீரதன் அறிந்தான்.

“செத்தவர்களுக்குச் சிவலோகம் தருதற்கு மட்டும் அன்றிப் பாரத நாட்டுக்கு வளமும் வாழ்வும் தர, அந் நதி தேவை” என்பதைச் சிந்தித்து உணர்ந்தான். ‘மேலவர் என்று சொல்லும் தேவர்கள் தம் உடைமை என்று மதித்த அந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வர முடிவு செய்தான்.

படைப்புகளுக்கு எல்லாம் காரணம் பிரமன் என்பதால் அவனை அணுகினான்; பிரமன் சகல சாத்திரங் களையும் அறிந்தவன்; அவன் சட்ட நுணுக்கங்களை உணர்ந்தவன்; நதியை எந்த ஒரு மாநிலமும் உரிமை கொள்ள முடியாது. அது பாயும் இடம் எல்லாம் அதற்கு வழிவிட வேண்டும் என்பதை அறிந்தவனாய் இருந்தான்.

கங்கை நதி, மேலிடத்தில் வாழ்ந்த தேவர்களுக்கு மட்டும் நீராடவும், விளையாடவும் பயன்பட்டு வந்தது. பிரமன் அதனை நோக்கி, ‘நீ மானுடர்க்கும் பயன்படுக; மண்ணுலகில் மாந்தர் உம்மை எதிர்பார்க்கின்றனர்; சற்றுக் கீழேயும் பார்’ என்று ஆணையிட்டான். நிலைகுலைந்து பொங்கிய அலைகளுடன் கங்கை மண்நோக்கிப் பாய்ந்தது. “அணைக்கட்டுக்களைச் சரியாய் அமைக்காத நிலத்தவர் எப்படித் தக்கபடி பயன்படுத்த இயலும்? ஒருகை பார்த்துவிடுவது” என்று வேகமாய்ப் பாய்ந்தது.

இந்த மண்ணுலகம் அதனைத் தாங்காது என்பதை அறிந்த தேவர் சிவபெருமானிடம் சென்று முறை யிட்டனர்; “மழை பெய்யாமலும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும் என்பது உலகு அறிந்த ஒன்று; சில பகுதிகளில் மழையே பெய்வது இல்லை; அங்கே பசியும் பஞ்சமும் விஞ்சி நிற்கின்றன. சில இடங்களில் மழை மிகுதியாய்ப் பெய்து வெள்ளப் பெருக்கை விளைவித்து, ஊர்களை அழித்து விடுகிறது. அழிக்கும் ஆற்றல் நெருப்புக்கு மட்டும் இல்லை; நீருக்கும் உண்டு, “அதனை அடக்கி வேகத்தைக் குறைத்துப் பூமிக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் தம் சடையை விரித்து, அதன் வழியை மறைத்தார். பெட்டிப் பாம்பு போல அந்த நதி அவர் சடையில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது; ஒரு சொட்டு நீர்கூடப் பூமியில் விழவில்லை.

என் செய்வது? பகீரதன் முயற்சி வெற்றிபெற வில்லை; பிரமணிடம் கேட்டுப் பெற்ற வரம் செயல் பட்டும் அது பாதி வழியில் தடைப்பட்டு விட்டது. பரம சிவனை அண்டிக் “கருணை காட்ட வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். அவர், தம் விரிசடையால் அதன் வேகத்தைத் தடுத்து, மெதுவாய்த் தம் தலைமுடியில் இருந்து தரையில் விழுமாறு அனுப்பினார். “மங்கையை பாகத்தில் வைத்த பரமன், கங்கைக்குத் தன் சிரசை இடமாகக் கொடுத்தான்” என்று உலகம் பாராட்டியது.

எடுத்த முயற்சிக்கு மற்றோர் இடையூறு அடுத்தது; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டி வைத்தால், அவள் முரண்டு பீடிப்பதைப் போலக் கங்கையும், வேகம் தணியாமல் ஆணவத்தோடு பாய, உலகுக்கு அழிவு நேர இருந்தது. முரட்டுக்காளை எதையும் முட்டித் தள்ளுவது போலச் சந்நு முனிவர் அமைத்து வைத்த யாக வேள்வியைக் குலைத்து அழித்தது. இதைக் கண்டு கோபம் கொண்ட அம் முனிவர் விழுந்த நீர் முழுவதையும் வாய் வைத்துக் குடித்து வயிற்றில் அடக்கி வைத்தார். முடக்கி விட்ட நீரால் பகீரதன் முயற்சியும் அடக்கி வைக்கப் பட்டது.

பகீரதன் அம் முனிவரை அடைந்து “அதை வெளியே விடுக” என்று கேட்டுக் கொள்ள, அவர் நீரைச் செவி வழியாய் வெளியே விட்டார். அது கடலில் சேர்ந்து, அதன் அடியில் பாதளத்தில் பாய்ந்து, எரிந்தவரின் சாம்பலைப் புனிதப்படுத்தியது. அவர்கள் ஆன்மா சாந்தி அடைந்தது. அவர்கள் உயிர் துறக்கத்தை அடைந்தது. உலகம் நன்மை பெற்றது.

முந்தையோர் பெருமைகளைக் கூறிக்கொண்டு வந்த விசுவாமித்திரர், அவற்றுள் ஒன்றாக இந்தப் பகீரதனின் கதையையும் கூறினார். இக் கதைகளைச் சொல்லி அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தனர். மறுநாள் மிதிலை நோக்கிப் புறப்பட்டனர்.

அகலிகை கதை

இராமன் கைவண்ணத்தைத் தாடகை வதத்தில் அவன் வில் திறமையில் காண முடிந்தது. அவன் கால் வண்ணத்தைக் காணும் வாய்ப்பு இவனுக்காகக் காத்துக் கிடந்தது.

அகலிகை கதை, பெண்ணின் விமோசனத்தைப் பேசும் கதையாகும். அது தனிப்பட்ட ஒரு தவ முனிவன் பத்தினி கதை மட்டுமன்று; “தவறு செய்துவிட்டால் அதனை வைத்து அவதூறு செய்வது கூடாது” என்ற பாடத்தையும் கற்பிப்பது.

கற்பு என்பதற்கு அற்புதமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. “அவர்கள் பிறர் நெஞ்சில் புக மாட்டார்கள்’ என்று பேசப்படுகிறது. அவர்களுக்குக் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டு இருந்தன.

எப்படியோ இவள், மற்றொருவன் நெஞ்சில் புகுந்து இடம் பெறாவிட்டாள். ஆசை அவன் நெஞ்சில் பஞ்சினைப்போல் பற்றிக் கொண்டது. இந்திரனுக்கு ‘போகி’ என்ற பெயரும் உண்டு. அழகியர் பலர் இருந்தும் அவன் நெஞ்சு, இவள்பால் இளகிவிட்டது. உயர்ந்த பதவியில் இருப்பவன் உடனே தாழ்ந்து போக முடியாது; வலியப் பற்றி அவளை வம்புக்கு இழுத்து இருக்கலாம்; அகலிகை கவுதமர் மனைவி; அவர் பார்வையில் பட்டால் எரிந்து சாம்பல் ஆக வேண்டுவதுதான்; முனிவருக்குத் தெரியாமல் தனிமையில் அவளை எப்படிச் சந்திப்பது? சாத்திரத்தில் சம்பிரதாயத்தில் உருண்டு புரண்டு எழுந்தவள். அவன் பேரழகனாய் இருக்கலாம்; செல்வச் சிறப்பில் அவன் மிதக்கலாம். மன்மதனே வந்து மயக்கினாலும் அவள் ‘சம்மதம்’ என்று சொல்ல மாட்டாள். கட்டுப்பாட்டில் வாழும் அவள், தன் நெறியில் தட்டுப்பாடு காட்டமாட்டாள். என் செய்வது? அவளை ஏமாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. மலரினும் மெல்லிய காதல் இன்பத்தை அவன் வலியப் பெற விழைந்தான். இதனைப் பெருந்திணை என்று பெரியோர் பேசுவர்.

“இருட்டிலே அவளை மருட்டி உறவு கொள்வது” என்று உறுதி கொண்டான். கவுதமர் எப்பொழுது வீட்டை விட்டு வெளியேறுவார்? பொழுது புலர்ந்தால்தான் கங்கைக்கு நீராடச் செல்வார்; அதற்கு முன் உள்ளே சென்றால் அவன் கள்ளத்தன்மை வெளிப்பட்டு விடும்.

பின்னிரவுப் பொழுதில் கோழி கூவுவதைப் போல இவன் குரல் கொடுத்தான். “பொழுது விடிந்து விட்டது” என்று அவர் இறைவனைத் தொழுது வழிபட உறக்கத்தினின்று எழுந்தார். தூங்குபவளைத் தட்டி எழுப்பாமல் உறங்கட்டும் என்று அவளை விட்டுவிட்டு இவர் மட்டும் கங்கைக் கரை நோக்கி அக் கங்குற் பொழுதில் நடந்தார்.

‘எப்பொழுது இந்தத் தவமுனிவர் போவாரோ’ என்று காத்திருந்த கயவன். அம் முனிவர் வேடம் கொண்டு அவள் பக்கத்தில் சென்று படுத்தான்; கரம் தொட்டான்; வண்டு தேன் உண்ண மலர் தன் இதழ்களை விரித்தது. அவள் அவனிடம் புதியதோர் இன்பம் கண்டாள். மது உண்ட நிலையில் அவள் மயங்கிவிட்டாள்.

கங்கையில் நீராடச் சென்றவர், அவர் காலடி பட்டதும் நித்திரையில் சலனமற்று இருந்து ஆறு, “என்னை ஏன் எழுப்புகிறாய்?” என்று கேட்டது. தாம் விடியும் முன் வந்துவிட்டதை அறிந்து கொண்டார் முனிவர். “கோழி கூவியது சூழ்ச்சி” என்று தெரிந்து கொண்டார். ஞானப் பார்வையால் நடப்பது என்ன? என்பதைத் தெரிந்து கொண்டு வேகமாய் வீடு திரும்பினார்.

குடிசைக்குள் ஏற்பட்ட சலசலப்பும், முனிவர் வேகமாகச் சென்ற பரபரப்பும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டன.

கலவியில் மயங்கிக் கிடந்த காரிகை விடுதல் அறியா விருப்பில் அகப்பட்டுக் கொண்டாள். அவள் ஏமாந்து விட்டாள்” என்று கூற முடியாது. தூண்டிலில் அகப்பட்ட மீன் ஆகிவிட்டாள்.

முனிவர் விழிகள் அழலைப் பொழிந்தன. “கல்லாகுக” என்று சொல்லாடினார்; அவனையும் எரித்து இருக்கலாம்; இந்திரன், தேவர்களின் தலைவன்; அவனைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. “நீ பெண் ஆகுக” என்று சபித்தார். “மற்றவர் கண்களுக்கு நீ உன் சொந்த உருவில் காட்சி அளிப்பாய்; உனக்கு மட்டும் நீ பெண்ணாகத்தான் தோன்றுவாய்” என்று சாபம் இட்டார். இருட்டிலே நடந்தது வெளிச்சத்துக்கு வரவே இல்லை. உலகத்துக்கு அவள் ஒரு பாடமாக விளங்கினாள்.

கல்லாகி விட்டவளுக்குப் பாவ விமோசனமே கிடையாதா? ஆண்கள் தவறு செய்தால் மன்னிக்கப் படுகின்றனர். பெண்கள் மட்டும் ஏன் ஒறுக்கப்பட வேண்டும். நெஞ்சு உரம் கொண்டவள்தான்; என்றாலும், அவள் அவனோடு மஞ்சத்தில் மெழுகுவர்த்தியாகி விட்டாள். அவள் காலம் காலமாகக் கல்லாகிக் கிடந்தாள். அந்தக் கல் இராமன் வழியில் தட்டுப்பட்டது. இராமன் திருவடி பட்டதும் அவள் உயிர் பெற்று எழுந்தாள். கல்லையும் காரிகையாக்கும் கலை, அவன் காலுக்கு இருந்தது. அவள் சாப விமோசனம் பெற்றாள்.

ஆத்திரத்தில் முனிவர் மிகைப்பட நடந்து கொண்டார். அவரே அவளை மன்னித்து இருக்கலாம்; அத்தகைய மனநிலை அவருக்கு அப்பொழுது அமைய வில்லை. இராமனைக் கண்டதும் அவர் மனம் மாறியது; விசுவாமித்திரர் வேறு அறிவுரை கூறினார். “பொறுப்பது கடன்” என்று எடுத்துக் கூறினார்; அவளை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டினார். கவுதமர் மறுபடியும் தம் தவ வாழ்க்கையில் ஈடுபடலாயினார். அகலிகையும் முனிபத்தினியாய் இருந்து அவருக்குப் பணிவிடை செய்தாள்; அவள் கூந்தல் மலர் மணம் பெற்றது; கல்லைப் பெண்ணாக்கிய காகுத்தன் பெருமையைப் பாராட்டினார் விசுவா மித்திரர். “தாடகை அழிவு பெற்றாள்; அகலிகை வாழ்வு பெற்றாள்; அவன் கைவண்ணம் அங்குப் புலப் பட்டது. கால்வண்ணம் இங்கே தெரிய வந்தது'என்று விசுவாமித்திரர் பாராட்டினார். “கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன்” என்பது அவர் சொல்.

மிதிலையில் சானகி

கருகிய மொட்டு ஆகாமல் ஒரு பெண்ணுக்கு வாழ்வளித்த இராமன், மற்றோர் பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக ஏற்கும் சூழ்நிலை அவனை எதிர்நோக்கி நின்றது. காடும் மேடும் கடந்தவர் நகரச் சூழலை அடைந்தனர்; மிதிலையின் மதிலையும், அகழியையும், சோலைகளையும் கடந்து நகருக்குள் புகுந்தனர்; அந்நகரத்துப் பெருவீதிகளையும், கடை வீதிகளையும், அரச வீதிகளையும் கடந்து கன்னி மாடம் இருந்த தெரு வழியே நடந்து சென்றனர். அந்தத் தெருவில் கன்னி மாடத்து மாளிகையில் எழில்மிக்க நங்கை ஒருத்தி நின்று கொண்டு, அம் மாளிகையின் கீழே முற்றத்தில் அன்னமும் அதன் துணைப் பெடையும் அன்புடன் களித்து ஆடும் அழகைக் கண்ட வண்ணம் இருந்தாள்.

முனிவர் பின் சென்ற இராமன், மாடத்துப் புறாவைக் கண்டு வியந்தாள். பொன்னை ஒத்து ஒளி பொருந்திய மேனியும், மலர்க் கூந்தலும், கண்ணைக் கவரும் அழகும் அவனைக் கவர்ந்தன. அக் கோதையாள் சனகன் மகள் சீதை என்பது அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் அவ் விளைஞன் யார்? என்பதும் தெரியாது; “அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்; இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்”. மாடத்தில் இருந்தவள் அவன் நெஞ்சில் குடி புகுந்தாள். முற்றத்தில் நடந்த இளைஞன் அவள் நெஞ்சில் குடி புகுந்துவிட்டாள். அவள் அவனுக்குச் செஞ்சொற்கவி இன்பமாக விளங்கினாள்.

சந்திப்பு

முனிவர், முன்னே நடந்தார். அவர்பின் இராமன் தொடர்ந்தான். திட்டமிட்டபடி மூவரும் சனகன் அரண்மனையை அடைந்தனர். அவன் விருந்தாளி களாய் மூவரும் அங்குத் தங்கினர். இராமன் நெஞ்சில் சீதையைச் சுமந்து அவள் நினைவாகவே இருந்தான்; அவளும் இராமன் நினைவே நிறைந்தவளாய் இருந்தாள். புதிய வேட்கையில் அவர்கள் நெஞ்சங்கள் பதிந்து கிடந்தன.

சனகன் ஒரு பெரு வேள்வி நடத்தினான். அதில் பங்கு கொள்ள முனிவர்களும் அந்தணர்களும் வந்து சேர்ந்தனர். மாமன்னைனை மறையோர்கள் வாழ்த்தினர். அரண்மனையில் அகலமான ஒரு பெரிய கூடத்தில் சனகன் வந்து அமர்ந்தான்; குழுமி இருந்த விழுமிய முனிவர்களோடு அளவளாவி அவர்கள் நல்லாசியைப் பெற்றான்.

விசுவாமித்திரரோடு வந்திருந்த அரசிளங்குமரர் களான இராம இலக்குவரை சனகன் கவனித்தான். பெண்ணைப் பெற்றவன் ஆயிற்றே அதனால், அவன் கண்கள் தன் மகளுக்குத் தக்க மணாளனைத் தேடியது. “முருகனைப் போன்ற அழகன் தன் மருகனாக மாட்டானா”? என்று ஏங்கினான்.

“யார் இந்தக் காளையர்? அம் முனிவரோடு ஏன் வந்தனர்?” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள விழைந்தான் சனகன். ஏன் அவர்களைப் பற்றி இவன் விசாரிக்க வேண்டும்? மகளைத் தருவதற்கு அவன் அடி போடுகிறான் என்பதை அறிந்து கொண்டார் விசுவா மித்திரர். இராமன் குலப் பெருமையையும், அவன் நலங்களையும் விவரித்தார். “அவர்கள் கோசல நாட்டு மன்னன் தசரதன் அரும் புதல்வர்கள்” என்று தொடங்கி அவர்கள் தமக்காக வனத்துக்கு வந்து அரக்கர்களை விரட்டியதையும், செய்த வீரச் செயல்களையும் விளக்கமாக உரைத்தார்.

திருமணம்

“குலமும் நலமும் பேரழகும் ஆற்றலும் மிக்க இராமன், சீதையை மணக்கத் தக்கவன்” என்று சனகன் முடிவு செய்தான். எனினும், அவளை மணக்க அவனே வைத்த தேர்வு அவனுக்குக் குறுக்கே நின்றது; மூலையில் மலைபோல் வில் ஒன்று கிடப்பது நினைவுக்கு வந்தது. அது ஒரு தடைக்கல் ஆக இருக்குமோ? என்று கவலையுற்றான்; அவனே சீதையைச் சுற்றி ஒரு முள்வேலியை அமைத்து விட்டான். அதனை அவனே எப்படி அகற்ற முடியும்?

“வில்லை வளைத்தே இராமன் அவளை மணக்க வேண்டும்” என்று முடிவு செய்தான். அதற்கு முன்னர்ச் சீதையின் பிறப்பு. அவள் வளர்ப்பு இவற்றைப் பற்றி அறிவிக்க விரும்பினான். அந்த வில்லின் வரலாற்றையும் தெரிவிக்க விரும்பினான். அவன் குறிப்பறிந்து செயல்படும் அவைக் களத்தில் இருந்த முனிவர் சதானந்தர், சீதை சனகனுக்குக் கிடைத்த ஆதி நிகழ்ச்சியையும், வில்லை முறிக்க வேண்டிய தேவையையும் உரைத்தார்.

சீதை சனகன் வளர்ப்பு மகள்; அவன் மன்னனாக இருந்தும் உழவர்களைப் போலத் தானே சென்று நிலத்தை உழுது வந்தான். “அவன் கலப் பையின் கொழு முனையில் தட்டுப்பட்ட செல்வக் கொழுந்து சீதை” என்பதைத் தெரிவித்தார். அவள் மண்மகள் தந்த அரிய செல்வம்; அவளைச் சனகன், ‘தன் மகள்’ என்றே வளர்த்து வந்தான். அவள் பேரழகைக் கண்டு அரசர் போர் எழுப்பித் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். அவனாக விரும்பி, அவளை யாருக்கும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அமைச்சர்களுடன் கலந்து, அடுத்துச் செய்வது யாது? என்று ஆலோசித்தான்; தன்னிடம் ஒரு காலத்தில் ஒப்படைக்கப்பட்ட சிவதனுசு ஒன்று, எடுப்பார் அற்று முடங்கிக் கிடந்தது. “அந்த வில்லை எடுத்து, அதனை வளைத்து, நாண் ஏற்றி, அம்பு செலுத்தக்கூடிய ஆடவனே அவளை மணக்கத் தக்கவன்” என்று அறிவித்தான்.

கனியைப் பறிக்கக் கல் தேவைப்பட்டது. கல்லை எடுத்தால்தான் அதைக் கொண்டு கனியை வீழ்த்த முடியும். அதே நிலைமைதான் இங்கு உருவாயிற்று. “வில்லை வளைத்தால்தான் அவளை அடைய முடியும்” என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தேசத்து அரசர்கள் பலர் சீதைபால் நேசம் கொண்டு வில்லைத் துக்கிப் பார்த்தார்கள்: அது தந்த தொல்லையைக் கண்டு தோல்வியைத் தாங்கிய வராய் அவ்வேல் விழியாளை மறந்தனர். இம்முயற்சியைத் துறந்தனர். சீதையைத் தொடுதவதற்கு முன் இந்த வில்லின் நாணைத் தொட நேர்ந்தது. அதனால், பல்லை இழந் தவர் பலர். அந்த முல்லைக் கொடி யாளை அடைய முடியாமல் துயருற்றுத் திரும்பியவர் பலர்; சீதையின் கன்னிமைக்கு அந்த வில்லின் வல்லமை காப்பாக இருந்தது.

வில் முறிவு

சிவதனுசு சீதையைப் போலவே தக்க வீரனின் கை படாமல் காத்துக் கிடந்தது. வில்லை முறிக்கும் விழாவைக் காண நாட்டவர் வந்து குழுமினர். “புதியவன் ஒருவன் வருகை தந்திருக்கிறான்” என்ற செய்தி எங்கும் பரவியது. “இந்த முற்றிய வில்லால் கன்னியும் முதிர்ந்து போக வேண்டிய நிலை ஏற்படுமோ?” என்று பலரும் அஞ்சினர்.

‘இந்த வில்லை முறிப்பவர் முல்லைக் கொடியாளை மணக்கலாம்’ என்று முன்னுரை கூறினான் சனகன். வாய்ப்புக்காகக் காத்திருந்த வாலிபன் முனிவரைப் பார்த்தான்; அவர் இவனைப் பார்த்தார்; விழியால் குறிப்புக் காட்டி ‘அதை முறிக்க’ என அறிவிப்புச் செய்தார். அவன் வில்லை எடுக்கச் செல்பவனைப் போல அதை நோக்கி நடந்தான். “இந்த வில்லை இவன் எடுப்பானா; எடுத்தால் இதை முறிப்பானா?” என்று எதிர்பார்த்திருந்த, அவையோர் வைத்த விழி வாங்காமல் அவனையே பார்த்து இருந்தனர். “இவன் எப்படி எடுப்பான்?” எடுத்தால் வில் முறியுமா அவன் இடுப்பு முறியுமா” என்று பார்க்கக் காத்துக் கிடந்தனர். அவன் சென்ற வேகம், எடுத்த விரைவு, அதை முறித்த ஒசை எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்கு முன் தொடர் நிகழ்ச்சிகள் ஆயின. எடுத்தது கண்டவர் இற்றது கேட்டனர். ஒசைதான் முடிவை அவர்களுக்கு அறிவித்தது. அவன் வில்லை வளைத் ததையும், நாண் பூட்டியதையும், அவர்கள் காணவே இல்லை. முறிந்த ஒசையை மட்டும் கேட்டுச் செய்தி அறிந்தனர்.

அது வளைக்கும் போதே இரண்டாக முறிந்து விட்டது. அப்பேரொலி திக்கெட்டும் எட்டியது. சீதையின் செவிகளையும் எட்டியது. அவளுக்கு அது மனமுரசாக இரட்டியது. நீலமாலை என்னும் பெயருடைய பேரழகி அவள் தோழி சீதையிடம் செய்தி சொல்ல ஒடோடிச் சென்றாள்.

மக்கள் மகிழ்ச்சி

“கோமுனிவனுடன் வந்த கோமகன்; நீல நிறத்தவன்; தாமரைக்கண்ணன்; அவன்தான் அந்த வில்லை முறித்தான் என்று நீலமாலை சொல்ல அதைக் கேட்ட சானகி, அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்னும்படி ஆகியது.

தான் உப்பரிகையில் இருந்து கண்டவனே கொண்டவனாக வரப் போகிறான் என்பதில் அவள் கொண்ட மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது. அவள் பன்மடங்கு பொலிந்த முகத்தினன் ஆயினள்.

நாட்டு மக்கள் இராமன் நலம் கண்டு வியந்தனர்.

“நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்” என்று பாராட்டினர். “சீதையும் இராமனுக் கேற்ற துணைவி” என்று அவள் மாட்சிகளைப் பேசினர்.

இராமன் தம்பி இலக்குவனைக் கண்டு வியந்து பேசினர்; “தம்பியைப் பாருங்கள்” என்று சுட்டிக் காட்டினர்; அந்த நகருக்கு இவர்களை அழைத்து வந்த அருந்தவ முனிவராகிய விசுவாமித்திரருக்கு நன்றி நவின்றனர்.

திருமணம் உறுதி செய்யப்பட்டது. தசரதனுக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது. இராமன் வில்லை முறித்த வெற்றிச் செய்தியையும், அவன் வேல் விழியாளை மணக்க இருக்கும் மங்கலச் செய்தியையும் கேட்டுத் தசரதனே பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டான்; நாற்பெருஞ்சேனையும், அரும்பெரும் சுற்றமும், தம் அன்பு மனைவியரும், இராமன் பின்பிறந்த தம்பியரும் அறிவுடை அமைச்சர்களும், ஆன்றமைந்த சான்றோன் ஆகிய வசிட்டரும் புடைசூழ மிதிலை மாநகரை வந்து அடைந்தான்.

மன்னர் வீற்றிருந்த மணி மண்டபத்தில் மடமயிலை மகளாய்ப் பெற்ற மாமன்னன் சனகன் வந்து அமர்ந்தான்; கோல அழகியாகிய கோமகளை அழைத்துவரச் சேடியரை அனுப்பினான். மணக் கோலத்தில் வந்த மாணலம் மிக்க பேரழகி தந்தையின் அருகில் அமர்ந்து, அம் மண்டபத்திற்குப் பெருமை சேர்த்தாள்.

சீதையைப் பாராட்டினர்

பொன்னின் ஒளியும், பூவின் பொலிவும், தேனின் சுவையும், சந்தனத்தின் குளிர்ச்சியும், தென்றலின் மென்மையும், நிலவின் ஒளியும் ஒருங்கு பெற்ற அவள், அன்னநடையைத் தன் நடையில் காட்டினாள்; மின்னல் போல் ஒளி வீசி அவ் அரங்கினை அலங்கரித்தாள். அமுதம் போன்ற இனிமையையும் குமுதம் போன்ற இதழ்களை யும் உடைய அவ் ஆரணங்கு, அங்கிருந்தவர் கண்ணை யும் கருத்தையும் ஒருங்கு கவர்ந்தாள்.

மாடத்தில் இருந்து தான் கண்ட மாணிக்கத்தை மறுபடியும் காணும் வாய்ப்பைப் பெற அவள் விரும் பினாள். நேரில் காண அவள் நாணம் போரிட்டது; தலை நிமிர்த்திக் காண்பதைத் தவிர்த்துத் தன் கை வளையல் களைத் திருத்துவதுபோல அக் கார்வண்ணனைக் கடைக் கண்ணால் கண்டு அவன் அழகைப் பருகினாள்; மனம் உருகினாள் தன் உள்ளத்தை ஈர்த்த அத் தூயவனே அவன் என்பதை உணர்ந்தாள், “ஒவியத்தில் எழுத ஒண்ணாப் பேரழகு உடைய காவிய நாயகன் இராமன்தான் அவன்” என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். “நேர்மை தவறிய இடம் இது ஒன்றுதான் என்பதைஎண்ண” அவள் நாணம் அடைந்தாள். நாகரிகமாக அந்த நளினி நடந்து கொண்டதை அங்கிருந்த நங்கையர் பாராட்டினார்.

மணக்கோலத்தில் சீதையைக் கண்ட மாண்புமிக்க வசிட்டர், அங்கு சனகன் மகளைக் காணவில்லை; “திருமகள் தசரதன் மருமகள் ஆகிறாள்” என்பதை உணர்ந்தார். “தாமரை மலரில் உறையும் கமலச் செல்வியே அவள்” என்று அந்த முனிவர் பாராட்டினார்.

தசரதன் வரப்போகும் தன் மருமகளைக் கண்டதும் “அவள் தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம்” என்றே கருதினான். எத்தனையோ செல்வங்கள் பெற்றிருந்தும் அவை அவனுக்கு மன நிறைவைத் தர வில்லை; அவை செல்வமாகப் படவில்லை; அவளை மருமகளாக அடைந்ததையே அருந்தவம் என்று கருதினான்; “இதுவே திரு” என்று எண்ணினான். “திரு என்பதற்கு உரு” இது என்பதை அறிந்தான்.

அவைக் கண் வந்திருந்த நவையில் தவசிகளைச் சீதை முதற்கண் வணங்கினாள்; இராமனைப் பெற்ற பெரியோன் என்பதால் தசரதன் திருவடிகளைத் தொட்டு ஆசி பெற்றாள்; பின் தன் தந்தை சனகன் அருகில் வந்து, அவள் பக்கத்தில் இருந்தாள்; அங்குக் குழுமியிருந்த விழுமியோர் ஆகிய நகர மாந்தரும் நன்கலமாதரும் அவளைத் தெய்வம் என மதித்துப் போற்றினார்.

முனிவர் பாராட்டுரை

ஆசானாய் வந்த விசுவாமித்திரர், பொன்னொளிர் மகளைக் கண்டதும் பொலிவுபெற்ற மனத்தினர் ஆயினர். மேனகையைக் கண்டு அவள் அழகிற்குக் குழைந்து அவர் தம் தவத்தையே பரிசாகத் தந்தவர். மேனகையைக் கண்டது காதற்பார்வை; அழகு ரசனை அவரை விட வில்லை. “நச்சுடை வடிக்கண் மலர் நங்கை இவள் என்றால், இச் சிலை கிடக்கட்டும்; ஏழுமலையாயினும் இவளுக்காக இருக்கலாம்” என்று பாராட்டினார். “காதற் பெண் கடைப் பார்வையில் விண்ணையும் சாடலாம்” என்ற பாரதியின் வாசகம் இந்த மாமுனிவர் பேச்சில் வெளிப்பட்டது.

நாள் தள்ளிப்போட அவர்களால் முடியவில்லை. ‘அடுத்த நாளே மணநாள் என்று முடிவு செய்யப்பட்டது. இடையிட்ட அந்த ஒர் இரவும் காதலர் இருவர்களுக்கும் ஒருயுகமாகக் கழிந்தது. நாளும் கிழமையும் காட்டி, இளையவரைச் சேராதபடி தடுக்கும் முதியவர் செயலைச் சாடினர். மறுநாள் வருக்ைககாக எதிர்பார்த்து வாடினார்.

மண விழா

வசிட்டர் தலைமையில் திருமணம் நடந்தேறியது. மணத் தவிசில் மங்கை இள நங்கை சீதையும் அடல் ஏறுபோன்ற விடலையாகிய இராமனும் இருந்த காட்சியைக் கண்டவர் மனம் குளிர்ந்தது. தன் மகளை மருமகன் கையில் சனகன் ஒப்புவித்தான்; ஆசிகள் நல்கினான்.

“நீவிர் இருவீரும் வீரனும் வாளும் போலவும், கண்ணும் இமையும் போலவும், கரும்பும் சாறும் போலவும், பூவும் மணமும் போலவும், நிலவும் வானும் போலவும், அறிவும் அறமும் போலவும் இணைந்து வாழ்விராக” என வாழ்த்தினான். அவள் மெல்லிய கரங்களைப் பிடித்து இராமன் கைகளில் தந்து, சடங்கின்படி அவளை ஒப்புவித்தான். அவள் மலர்க் கரங்களைப் பற்றி இராமன் அன்றுமுதல் அவள் இன்னுயிர்த் துணைவன் ஆயினான்.

அந்தணர் ஆசி கூறினர்; சுமங்கலிகள் மங்கல வாழ்த்துப் பாடினர்; நகர மாந்தர் பூவும் அரிசியும் தூவி ஆசி கூறினர்; விண்ணவர் மலர்மாரி பொழிந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்; சங்குகள் முழங்கின; முழவுகள் தழங்கின; பேரரசர் பொன்மழை பொழிந்தனர்; முத்தும் மணியும் எங்கும் இறைக்கப்பட்டன; கத்தும் குழலோசை காதிற் பட்டது; மணமிக்க மலர்கள் எங்கும் மணந்தன; புலவர்கள் பாக்கள் வாழ்த்துச் செய்திகளை யாத்து அளித்தன.

வேள்வித் தீயின்முன் செய்ய வேண்டிய சடங்குகளைச் செம்மையாய்ச் செய்தனர்; மணத் தவிசில் இருந்து பின் எழுந்து அம்மேடையை வலம் வந்தனர்; அவள் அவனோடு ஒட்டிக் கொண்டு உறவாடிப் பின் தொடர்ந்தாள். அவள் மெல்லிய கரங்களைப் பற்றிக் கொண்டு அம் மேடையைச் சுற்றி வந்தான் இராமன்; அம்மி மிதித்து அருந்ததியை அவளுக்குக் காட்ட, அவள் வணங்கினாள்; வேதங்கள் ஒலித்தன; கீதங்கள் வாழ்த்தொலி பெருக்கின; பேதங்கள் நீங்கி இருவர் மனமும் ஒன்று பட்டன.

வாழ்த்துப் பெற்றனர்

மணம் முடித்துக் கொண்ட அவர்கள், பெரியோர்களை வணங்கி வாழ்த்துரைகள் பெற்றனர்; முதற்கண் கேகயன் மக. கைகேயியை வணங்கினர்; பெற்ற தாயைவிடப் பாசம்மிக்க தாய் அவள் ஆதலின், அவளுக்கு முதன்மை தந்தான் இராமன்; அடுத்துப் பெற்ற தாய் கோசலையையும், தான் மதித்துப் போற்றிய சிற்றன்னையாகிய சுமத்திரையை யும் வணங்கினான். மாமியர் மூவரும் மருமகளை மனமார வாழ்த்தினர். அவள் பேரழகும் பெரு வனப்பும் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. அவள் மாமியர் மெச்சும் மருமகள் ஆயினள், “வீட்டுக்கு வந்த திருமகள்” எனப் பாராட்டிப் பேசினார். “இராமன் கண்டெடுத்த அரிய அணிகலன் அவள்” என ஆராதித்தனர்.

தம்பியருக்கு மணம்

இராமன் தானே தேடி அவளைக் கண்டான்; மனம் ஒத்த காதல் அவர்களைப் பிணைத்தது; “அவன் தேர்வு மெச்சத்தக்கது” என உச்சியில் வைத்துப் புகழ்ந்தனர்; “இவளைத் தவிர இராமனுக்கு வேறு யாரும் மனைவியாக முடியாது” என்று அவள் தகுதியை மிகுதிப்படுத்திப் பேசினர்; “'செல்வமும் சிறப்பும் பெற்று நீடித்து வாழ்க” எனக் கோடித்து வாழ்த்தினர்.

சீதை மண்ணில் கிடைத்த மாணிக்கம்; பூமகள் தந்த புனை கோதை, அவள் சனகன் வளர்ப்பு மகள். மற்றொருத்தி பிறப்பு மகளாக அவளுக்கு வாய்த்தாள்; அவள் பெயர் ‘ஊர்மிளை’ என்பது; இலக்குவனை அவள் தன் இலக்காகக் கொண்டாள். சனகன் தம்பி மகளிர் இருவரை முறையே பரதனுக்கும் அவன் தம்பி சத்துருக் கனனுக்கும் மணம் முடித்தனர்.

மிதிலையில் பெண்தேடு படலமும், மணம் முடிக்கும் படலமும் முடிந்தன. இவற்றைப் பெரியவர்கள் முன்னிட்டுப் பின்னிட்டதால் கவிதைகளும் காவியங்களும் விவரித்துப் பேசவில்லை; சாதாரண நிகழ்ச்சிகளாய் நடந்து முடிந்தன; ஆரவாரம் இன்றி, அமைதியாய் நிகழ்ந்தன. பெண் எடுத்த இடம் ஒரே இடமாய் இருந்ததால் அதனையே மடம் ஆகக் கொண்டு சனகன் விருந்தினராய்த் தங்கினர்; உணவும் களியாட்டமும் கொண்டனர். மன்னர் தம் சுற்றமும் படைகளின் ஆட்களும் உண்டாட்டுப் படலத்தில் உறங்கி மகிழ்ந்தனர்.

நாட்கள் சில நகர்ந்தன; வந்தவர் அனைவரும் தத்தம் நாடு நோக்கித் திரும்பினர். மிதிலை மகளின் மதிலைக் கடப்பதற்குத் துணையாக இருந்த தவ முனிவர் விசுவாமித்திரரும் தம் கடமை முடிந்துவிட்டது என்று கூறி விடை பெற்று நடைகட்டினார், வடபுலத்து இருந்த இமயம் நோக்கி; இமயமலைச் சாரல் அவர் தங்கித் தவம் செய்யும் தவப் பள்ளியாயிற்று. எல்லாம் இனிமையாய் முடிந்தன.

பரசுராமர் வருகை

பண்புமிக்க பாரத நாட்டில் துன்பம் இழைக்கும் சாதிப் பிரிவுகள் இல்லாமல் இல்லை. அந்தணர் ஞானத்திலும், வேத சாத்திரம் கற்பதிலும் விற்பன்னராய்த் திகழ்ந்தனர். நூல்கள் பல கற்றதோடு நுண்ணறிவு மிக்கவராக இவர்கள் விளங்கினர். தவசிகள் என்போர் பெரும்பாலும் அந்தணரே. இவர்கள் ஞானத் தலைவர்களாய் மதிக்கப்பட்டனர்.

அரசர்கள் நாட்டு ஆட்சித் தலைவர்களாய் இருந்தனர்; இவர்களைச் சத்திரியர் என்றனர். இவர்கள் போர் செய்து, பகைவர் தொல்லைகளிலிருந்து நாட்டு எல்லைகளைக் காத்தனர். அமைதியான வாழ்வுக்கு அரணாய் விளங்கினர். வலிமை மிக்கவர்களாய் விளங்கியதால் இவர்களை மக்கள், தலைவர்களாய் ஏற்றுக் கொண்டனர். தவசிகளை ஞானத்தலைவர் என மதித்தனர். அவர்களுள்ளும் ஒரு சிலர் மாவீரர்களாய்த் திகழ்ந்தனர். அவர்களுள் ஒருவன் பரசுராமன் என்பவன்.

அவன் சமதக்கனி முனிவர் மகன்; அம் முனிவரைக் காத்த வீரியார்ச்சுனன் என்ற அரசன் கொன்றுவிட்டான். தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்க, அந்த அரசனை மட்டும் அன்றி அவன் வாரிசுகளையும் தீர்த்துக் கட்டினான் பரசுராமன். மன்னரே அவனுக்கு நேர் எதிரிகனாய் மாறினர். தனிப்பட்ட பகை, சாதிப் பகையாய் உருக் கொண்டது. இருபத்தொரு தலைமுறைகளாய் அவன் மன்னன் இளைஞர்களைக்களை அறுத்து வந்தான்; அவர்கள் சிந்தும் குருதியைக் குளமாக்கி, அதில் நீராடித் தந்தைக்கு ஈமக்கடன் செய்து, அவருக்கு ஏம நெறி வகுத்துத் தந்தான்; ஒருவாறு சினம் அடங்கித் தவத்தில் கருத்தைச் செலுத்தினான்; வல்லவனுக்கு வல்லவன் தோன்றாமல் இருப்பது இல்லை.

தேவர் திருமாலுக்கும் சிவனுக்கும் பகையை மூட்டி விட்டு, யார் பெரியவர்? என்று குரல் எழுப்பினர். ஆரம்பத்தில் புகழ்மொழிக்குச் செவி சாய்த்துத் தம் நிலை மறந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். “இவர்கள் வில்களில் எது ஆற்றல் உடையது?” என்று வினா எழுப்பினர். தங்களைத் துண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்” என்பதை அறிந்து கொண்டு அவர்கள் தம் கேளிக்கையை நிறுத்திக் கொண்டனர். போரைத் தவிர்த்து அமைதி காட்டினர்.

சிவதனுசு கைமாறி இறுதியில் சனகன் வசம் வந்து சேர்ந்தது; மாலின் வில் சமதக்கினி முனிவரிடம் ஒப்புவிக்கப்பட்டது; பின்பு அவர் மகன் பரசுராமன் அதற்கு வாரிசு ஆயினான். மாலின் வில் தன்னிடம் இருப்பதால் அவன் தருக்கித் திரிந்தான்.

பரசுராமன் பல மன்னர்களைப் புறமுதுகிடச் செய்தவன்; மூத்தவன்; தவத்தில் தலை சிறந்தவன்; ஆணவம் மிக்கவன்; அவன் பெயரைச் சொன்னாலே அரசர் நடுங்கினர்; அவன் முன் வராமல் ஒடுங்கினர். இராமன் வில்லை முறித்த ஒலி விண்வரை எங்கும் அதிர்ந்து சென்றது. இப்பேரொலியைக் கேட்டுப் பரசுராமன் கிளர்ந்து எழுந்தான்; சிவதனுசினை, முறித்து இராமன் அங்கு இருப்பதை உணர்ந்தான்; ‘அவனை வழியில் மடக்கி இடக்கு செய்வது, என்று முடிவுக்கு வந்தான். மணம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில் அவனை நிறுத்தித் தன்னோடு போருக்கு அழைப்பது என்று முடிவெடுத்தான்.

மழுப்படை ஏந்திய இராமன் பரசுராமன்; விற்படை ஏந்தியவன் கோதண்டராமன்; படைக் கருவிகளால் இவர்கள் வேறுபடுத்தி உணரப்பட்டனர். இராமன் அயோத்தி திரும்பினான். சுற்றமும் படைகளும் சூழத் தேர் ஏறி வந்து கொண்டிருந்தான், மழுப் படை ஏந்திய இராமன் வழிபறிக் கொள்ளையன் போல் குறுக்கே வந்து நின்றான்.

“இவன் யார்? ஏன் இங்கு வந்தான்?” என்பது இராமனுக்கு விளங்கவில்லை. தசரதன் முதியோன் ஆதலின், அவன் சரிதம் அறிந்தவனாய் இருந்தான். அவன் கூடித்திரியர் பகைவன்; அவர்களை வேர் அறுத்துப் போர் செய்தவன் என்பதை அறிந்தன். “அடப்பாவி! நீயா?” என்று குரல் கொடுத்து அலறிவிட்டான்; அவன்முன் தான் நிற்க முடியாது என்பதால் அலறி விழுந்தான்; நாப்புலர உயிர்ப்பிச்சை கேட்டான்.

இந்தக் கிழவனைப் பரசுராமன் ஒர் எதிரியாக ஏற்கவில்லை; மறுபடியும் சாதிவெறி அவனைத் தலைக் கொள்ளவில்லை. மதவெறி அவனை மடுத்தது; சிவதனுசா? மாலின் வில்லா? எது உய்ர்ந்தது? என்பது தலைக் கொண்டது; அற்பச் சிறுவன் சொற்பவில்லை சொகுசாக வளைத்துவிட்டான். மாலின் வில்லைக் கண்டு அவன் மலைவது உறுதி” என்று நம்பினான்.

தசரதனுக்குப் பரசுராமனை எதிர்க்கத் துணிவு இல்லை. எங்கே தன் மகனைப் பகையாக்கித் தம் வாழ்வை நகையாக்கி விடுவானோ? என்று திகைத் தான்; செயல் மறந்து நினைவு இழந்து மயக்கமுற்றுத் தரையில் விழுந்து விட்டான். இராமனைச் சந்தித்துப் பரசுராமன் தன் கை வில்லைக் காட்டி, இதை வளைப்பது இருக்கட்டும்; முறிப்பது கிடக்கட்டும், எடுத்துத் துக்க முடியுமா?” என்று கூறி அவன் வீரத்தைத் துண்டி ஊக்குவித்தான்.

“துக்கவும் முடியும்; அதைக் கொண்டு தாக்கவும் முடியும்” என்றான் இராமன்.

“முதலில் இதனைத் தூக்கி வளை” என்று அந்த இளைஞனை அழைத்தான் பரசுராமன்.

இராமன் அந்த வில்லைத் தன்கையில் வாங்கி, வளைத்துக் காட்டி, அதன் நாணையும் ஏற்றி, அம்பும் குறி வைத்தான்.

“இதற்கு இலக்கு யாது?” என்று கேட்டான்.

“வல்லவன் என்று செருக்கித் திரிந்த புல்லன் யான்; என்னை இலக்கு ஆக்குக” என்றான் பரசுராமன்.

“பகையற்ற உன்மீது மிகை அற்ற நான், அம்பு ஏவமாட்டேன்” என்றான் இராமன்.

“வம்புக்கு இழுத்தேன்; அதற்குரிய விலை தந்துதான் ஆகவேண்டும்” என்றான் பரசுராமன்.

அவன் விட்ட அம்பு அவன் ஈட்டிய தவத்தை வாரிக் கொண்டு இராமனிடம் சேர்ந்தது. முனிவன் தன் தவமும் வல்லமையும் இழந்து, அடங்கிச் சினமும் ஆணவமும் நீங்கித் திருந்தி அமைந்தான்.

பரசுராமன் அரசுராமனிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு கால் சென்றவழித் தவம் செய்ய இமயமலைச் சாரலை நோக்கிச் சென்றான். இராமன் எனறால் கோதண்டராமன்தான் எனறு உலகம் பேசும்படி அவன் புகழ் பன்மடங்காகியது.

தவமுனரிவனிடம் வென்று பெற்ற வில் அப்பொழுது தேவைப்படவில்லை; அதனை வருணனி டம் தந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி இராமன் ஆணையிட்டான் அது பிற்காலத்தில் கரனோடு போர் செய்யும்போது பயன்பட்டது; அவன் சிரம் நீக்க இந்த வில்லைக் கேட்டுப் பெற்றான்; தக்க சமயத்தில் உதவியது; பரசுராமனிடம் பெற்ற பரிசு இந்த வகையில் அவனுக்குப் பயன்பட்டது. பரசுராமன் வடக்கு நோக்கி விடை பெற்றதும் அடக்கமாகத் தந்தையை அணுகித் தன் வெற்றியை விளம்பினான் இராமன். அச்சம் நீங்கித் தசரதன், நல்லுணர்வு பெற்றுக் களிப்பு என்னும் கடலுள் ஆழ்ந்தான். தீமை விலகிற்று என்பது ஒன்று; இராமன் வெற்றி பெற்றான் என்ற சிறப்பு மற்றொன்று.

துயரமும் அபூர்வும் நீங்கி அனைவரும் இனிமை யாய் அயோத்தி அடைந்தனர். மாற்றம் அல்லது ஏற்றம் ஏதுவும் இல்லாமல் தசரதன் வாழ்க்கை சென்றது. மணம் செய்து கொண்டு வந்த பரதனை அவன் பாட்டனார் அழைத்து, விருந்து வைப்பதற்கு அழைப்பு அனுப்பினார். கேகய மன்னன்விடுத்த செய்தியை இராமனின் அடுத்த தம்பியாகிய பரதனிடம் தசரதன் எடுத்துக் கூறினான்; “நீ சில நாள் சென்று தங்கிவருக” என்று சொல்லி அனுப்பனான்.

பரதனும் தசரதனிடம் விடை பெற்றுக்கொண்டு இராமனை வணங்கிப் பிரிய மனமில்லாமல் அரிதிற் பிரிந்தான். இராமனை அவன், தன் உயிரையும்விட மிக்கு நேசித்தவன் ஆதலின், பிரிவிற்கு மிகவும் வருந்தினான். செல்லும் இடம் அவனுக்குத் தேனிலவாக இல்லை; நிலவு இல்லாதவானாக இருந்தது.

இவனை அழைத்துச் செல்லத் தாய் மாமன் உதயசித்து வந்திருந்தான். அவன் ஒட்டிய தேரில் கேகய நாட்டை நோக்கிச் சென்றான். அவனோடு இளயவனான சத்துருக்கனனும் சென்றான். நாள்கள் ஏழு அவன் ஊர் செல்வதற்கு இடையிட்டன. ஏழாம் நாள் அவர்கள், தம் தாய் பிறந்த நாட்டை அடைந்தனர். தசரதனும் ஆட்சிப் பீடத்தில் தொடர்ந்து அமர்ந்து மக்களுக்குக் காட்சி தந்து தனக்கு உரிய கடமைகளைச் செம்மையாய் ஆற்றிக் கொணடிருந்தான். புயலுக்கு முன் அமைதி, அது அவன் மன நிறைவுக்குத் துணை செய்தது. எதுவுமே நிலைப்பது இல்லை; மாற்றங்கள் வரக் காத்துக் கொண்டிருந்தன.