உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/தேசபக்தி

விக்கிமூலம் இலிருந்து
தேசபக்தி

எங்களுக்கெல்லாம் புதிய நாடகம் தயாரிக்க வேண்டு மென்ற ஒரே ஆவல். அப்போது மதுரகவி பாஸ்கரதாஸ் மதுரையில் ஒரு சிறந்த நாடகாசிரியராக இருந்தார். அந்த நாளில் அவருடைய பாடல்களைப் பாடாத ஸ்பெஷல் நடிகர்களே இல்லை யென்று சொல்லலாம். பாஸ்கரதாஸ் ஒரு தேசீயவாதி. இந்தியத் தேசீயத் தலைவர்களின் பேரிலெல்லாம் ஏராளமான பாடல்கள் புனைந்திருக்கிறார், பிச்சையெடுக்கும் சிறுவர்கள்கூடப் பாஸ்கர தாசின் தேசீயப் பாடல்களைப்பாடுவதை நான் கேட்டிருக்கிறேன். சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்து காலத்தோடு ஒத்திருந்த அவரது பாடல்கள் மிகப் பிரசித்தி பெற்று விளங்கின. பாஸ்கரதாஸ் எங்களுக்கு அறிமுகமானார். வெ. சாமிநாத சர்மா எழுதிய பாணபுரத்துவீசன் என்னும் ஒரு நாடகத்தின் அச்சுப் பிரதியை அவர் கொண்டு வந்தார். அதைப் படித்துப் பார்த்தோம். அப்போதிருந்த எங்கள் தேசீய உணர்ச்சிக்கு அந்த நாடகம் நிரம்பவும் பிடித்தது இடையிடையே சில புதியகாட்சிகளைச் சேர்த்து அவரே எழுதிக் கொடுத்தார். அப்போது பாண புரத்துவீரன் நாடகம் சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே அந்நாடகத்திற்குத் தேசபக்தி என்றுபெயர் வைத்தோம்.

தேசபக்தி

நாடகம் வேகமாகத் தயாராயிற்று. பாஸ்கரதாஸ் உணர்ச்சி மிகுந்த பாடல்களை இயற்றித் தந்தார். அத்தோடு மகாகவி பாரதியின் ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்’ ‘விடுதலை விடுதலை,’ ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ முதலிய பாடல்களையும் இடையிடையே சேர்த்துக் கொண்டோம். தேசபக்தி நாடகத்தில்தான் முதன் முதலாகப் பாரதியின் பாடல்கள் பாடப் பெற்றன. அந்த நாடகத்தில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென்று சின்னண்ணாவும், கலைவாணரும் யோசித்தார்கள். மகாத்மா காந்தியடிகளைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம் ஒன்று வாங்கி வந்தார்கள், காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டாகப் பாடலாமென முடிவு செய்யப்பட்டது. காந்தியடிகளின் பிறப்பு முதல் அவர் வட்டமேஜை மாநாட் டுக்குப் புறப்பட்டது வரை வில்லுப்பாட்டாக அமைக்கப்பட்டது. ஒரு நாள் இரவு உணவுக்கு மேல் நானும் கலைவாணரும் உட்கார்ந்து பாடல்களை எழுதி முடித்தோம். மறுநாள் ஒத்திகை ஆரம்பமாயிற்று. தயாரிப்பு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. தேசீய வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் புனிதமான கதரிலேயே உடைகள் தைக்கப்பட்டன. வாத்தியார் கம்பெனியை விட்டு விலகிய பதினேழாவது நாள் அவசர அவசரமாகத் தேசபக்தி அரங்கேறியது.

உணர்ச்சி வேகம்

1931 மே 19 ஆம் நாள். ஆம்; அன்றுதான் தேசபக்தி அரங்கேற்றம். அன்று எங்களுக்கு ஏற்பட்டிருந்த உணர்ச்சியை விவரிக்க இயலாது. ஏதோ ஒர் உணர்ச்சியும் எழுச்சியும் எல்லோருக் கும் இருந்தது. நாடெங்கும் கொந்தளிப்பு! விடுதலையுணர்ச்சி கொழுந்து விட்டு எரிந்த காலம்! பாரத வீரன் பகவத் சிங்கும் அவரது தோழர்கள் சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் தூக்கிலிடப்பட்டுச் சில நாட்களே ஆகியிருந்தன. அந்த நெஞ்சுருக்கும் செய்திகள் நாட்டு மக்கள் உள்ளத்தில் பெரும் ஆவேசத்தை ஊட்டியிருந்தன. நாட்டின் சூழ்நிலை, நடிகர்களாகிய எங்கள் உள்ளத்தை மட்டும் பாதிக்காதா, என்ன! நாங்களும் உணர்ச்சியில் திளைத்து நின்றோம்.

நாடகம் தொடங்கியது. முதற் காட்சி பொதுக்கூட்டம்.

தேச பக்தியே முக்தியாம்
தெய்வ சக்தியாம்

என்ற பாடலை நான் முதலில் பாடியதும் சபையோர் உணர்ச்சி வசப்பட்டு, மகாத்மா காந்திக்கு ஜே!” என்று கோஷமிட்டனார். பாட்டு முடிந்ததும் பாணபுரத்தின் தலைவர், வாலீசனாக நடித்தவர் பேசினார். அவரது பேச்சுத் தெளிவும், கெம்பீரமான குரலும், மெய்ப்பாட்டுணர்ச்சியும் சபையினருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் உணர்ச்சி ஊட்டுவனவாய் இருந்தன. பெருத்த கைத்தட்டலுடன் முதற்காட்சி முடிந்தது.

உயிரை ஊசலாட விட்டார்

இரண்டாவது காட்சி ஈசானபுர மன்னனின் விசாரணை மண்டபம். சுதந்திர வீரனை வாலீசனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மூன்றாவது காட்சி தூக்குமேடை, வாலீசன் தூக்கிலிடப்பட்டு மடிகிறான். அவனது மரணத்திற்குப் பின் புரேசன் என்ற தலைவன் பொறுப்பேற்றுப் போராடி, பாண புரத்தை அடிமைத் தளையிலிருந்து விடுவித்துச் சுதந்திர நாடாக்குகிறான். இது கதை......

தூக்குமேடைக் காட்சியைப் பல முறைகள் ஒத்திகைகள் பார்த்து, உண்மைபோல் தோற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன. வாலீசன் மேடைமீது ஏறியதும் சுருக்குக் கயிற்றைத் தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொள்கிறான். அதிகாரி கையசைக்கிறார். உள்ளே மணிச் சத்தம் கேட்கிறது. கீழே நிற்கும் காவலன் பலகையைத் தட்டி விடுகிறான். இவ்வாறு காட்சி நடை பெற வேண்டும்.

வாலீசனுக நடித்தவர் சுருக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளும்போதே அதனோடு இணைக்கப்பட்டிருந்த ஒரு இரும்புக் கொக்கியைத் தனது இடுப்பிலே கட்டப்பட்டிருந்த மற் றொரு கயிற்றில் மாட்டிக் கொள்ளவேண்டும். இப்படிச் செய்தால் அவர் தொங்கும்போது அவரது உடல் பாரத்தை இரும்புக் கொக்கி தாங்கிக் கொள்ளும். கழுத்துச் சுருக்கு இறுக்காது.

மூன்றாவது காட்சி தொடங்கும் போது வாலீசனுக நடித்தவர் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தார். துாக்கு மேடையில் ஏறி ஆவேசத்துடன் வீர முழக்கம் செய்துவிட்டுக் கயிற்றைக் கழுத்தில் போட்டுக் கொண்டார். ஆனால் இரும்புக் கொக்கியை ஒத்திகைப் படி மாட்டினார்களா என்பதைக் கவனிக்க மறந்து விட்டார்,

நாடகம் தொடங்கியது முதல் நெஞ்சு படபடக்கத் திரை மறைவில் நின்று கொண்டிருந்த எங்களில் எவருமே இதைக் கவ னிக்கவில்லை. தூக்குமேடைப் பலகையை இழுக்கும் காவலனாக நின்ற நடிகரும் இதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லே. சுருக்கைக் கழுத்தில் மாட்டினார் வாலீசர். வீர முழக்கமிட்டார். மணியடிக்கப்பட்டது. பலகை இழுக்கப்பட்டது. வாலீசன் அந் தரத்தில் தொங்கினார், மெய் மறந்திருந்த சபையோர், “பகவத் சிங்குக்கு ஜே” என்று பலமுறை கோஷமிட்டனார். நான் அடுத்த காட்சிக்காகத் திரை மறைவில் தூக்குமேடையருகே நின்று கொண்டிருந்தேன். வாலீசன் தொங்கியபோது கொடுத்த குரல் என்னவோ போலிருந்தது. அவரது முதுகுப்புறம் இரும்புக் கயிற்றில் கொக்கி மாட்டப்படாததை அப்போதுதான் உணர்ந்தேன். என்னைப்போலவே மற்றும் சிலர் இதைக் கவனித்தார்கள் போலிருக்கிறது. “திரை, திரை, படுதா படுதா” என்று பல குரல் கள் ஓலமிட்டன. அரை நிமிட நேரம் தொங்கிய பிறகே திரை விடவேண்டுமென ஒத்திகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. சபையோரின் ஜே கோஷத்தில் ஒலக் குரல்கள் உடனே கேட்கவில்லை. திரைவிடச் சில வினாடிகள் தாமதம் ஏற்பட்டது.

கடவுள் காப்பாற்றினார்

திரை விழுந்ததும் சிலர் ஓடிப்போய் வாலீசனாக நடித்தவரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இறுகிப்போயிருந்த கழுத்துச் சுருக்கை அவிழ்த்தார்கள். நடிகருக்குப் பிரக்ஞை இல்லை. சபையோருக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. உணர்ச்சி வசப்பட்ட அவர்கள் அடுத்தகாட்சி தொடங்கும் வரை “பகத்சிங்குக்கு ஜே! பகத்சிங்குக்கு ஜே!” என்று முழங்கிக்கொண்டே இருந்தார்கள்.

வாலீசனாக நடித்தவருக்குத் தன் நினைவுவர அரை மணி நேரமாயிற்று. அன்று வாலிசனாக நடித்து, உணர்ச்சிப் பிழம்பாக நின்று உயிரை ஊசலாடவிட்ட உண்மை நடிகர்தாம் நடிகமணி எஸ். வி. சகஸ்ரநாமம். அவரது கழுத்துச் சுருக்கைப்பற்றிக் கவலை கொள்ளாமல் காவலனாக நின்று பலகை இழுத்த புண்ணியவான் வேறு யாறாமல்ல. நமது நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதானு.

தேசபக்தி நாடகத்தில் நான் புரேசனாக நடித்தேன். சின்னண்ணா என் மனைவி சுதர்மா தேவியாக நடித்தார். ஈசான புரத்து மன்னன் அதிரதனாக புளி மூட்டை ராமசாமி நடித்தார். சேனதிபதி சேமவீரனாக நடித்தவர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் எம். ஆர். சாமினாதன். அவர் மிக அழகாகக் கத்திச் சண்டை போடுவார். நானும் அவரும் தேசபக்தியில் ஆவேசத்துடன் கத்திச் சண்டை போடுவோம். எம். ஆர். சாமிநாதன் தான் எனக்குக் கத்திச் சண்டை போடக் கற்றுக் கொடுத்தார். எந்த வேடத்தைப் போட்டாலும் திறமையாகச் செய்யக் கூடியவர் சாமிநாதன் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அல்லவா? தேசபக்தி நாடகத்தில் சாமினாதனை எல்லோரும் பாராட்டினார்கள். என். எஸ். கிருஷ்ணன் பல வேடங்கள் புனைந்து சபையோரைப் பரவசப் படுத்தினார். காந்தி மகான் வில்லுப் பாட்டுக்குப் பலமுறை கைதட்டல் கிடைத்தது. நாடகத்திற்குப் பிரமாதமான பேர். ஆனால் வசூல்தான் அதற்கேற்றபடி இல்லை.

தம்பி பகவதி

இந்த நாடகத்தில் தம்பி பகவதி மற்றொரு சுதந்திர வீரன் நாகநாதனாக நடித்தார். புரேசனும் சேமவீரனும் வாட்போர் புரியும் பொழுது, நாகநாதன் சேமவீரனோடு வந்த காவலர்களுடன் சண்டையிட்டு அவர்களை விரட்டவேண்டும். தம்பி பகவதிக்குக் கத்திச் சண்டைபோட அவ்வளவாக வராது; கட்டிப் புரண்டு மற்போர் புரிவதென்றால் நிரம்பப் பிடிக்கும். எனவே நாகநாதன் காவலர்களுடன் மற்போர் புரிந்து விரட்டுவதாக அமைத்துக் கொண்டோம். தம்பி பகவதிக்கு மற்போர் பிடிக்கும் என்று சொல்லும் இந்தச் சமயத்தில் மதுரையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. அப்போது கம்பெனியில் முதன்மையான பெண் வேடதாரிகளில் ஒருவராக இருந்தார் ஒரு நடிகர். அவரை ஊருக்கு அழைத்துப்போக அவரது மாமனரும் தமையனும் வந்திருந்தார்கள். தம்பியை ஜெகன்னாதய்யரின் கம்பெனியில் சேர்ப்பது தமையனின் திட்டம், பெரியண்ணா இதைப் புரிந்து கொண்டார். அந்த நடிகர் முக்கிய பாத்திரமாக நடிக்க வேண்டிய நாடகங்கள் நடக்க வேண்டியிருந் ததால், அந்நாடகங்கள் முடிந்த பிறகு அழைத்துப் போகும்படி கேட்டுக் கொண்டார். வந்தவர்களோ உடனடியாகப் போக வேண்டுமெனப் பிடிவாதம் பிடித்தார்கள். நடிகனும் அவர்களோடு போகத் துடித்தார். அன்றிரவு நாடகத்தில் நடிக்க அவரைத் தவிர வேறு ஆள் இல்லை. பெரியண்ணா நயமான முறையில் எவ்வளவோ எடுத்துச் சொன்னார். அலுவல் அறையில் நீண்டநேரம் நடந்து கொண்டிருந்த இந்த உரையாடலை நாங்கள் தலைமறைவாக நின்று கேட்டுக் கொண்டிருந்தோம். நடிகரின் தமையன் ஒரே கூச்சல் போட்டார். பெரியண்ணா காட்டிய பொறுமை எங்களுக்குப் பெரு வியப்பை அளித்தது. கூச்சல் போட்டவரின் ஆவேசம் உச்சநிலைக்குப் போய்க்கொண்டிருந்தது. கடைசியாகப் பெரியண்ணா சிறிது கோபத்தோடு, “நாடகம் முடிந்தபிறகுதான் அவனே அனுப்பமுடியும். எந்தக்காரணத்தைக் கொண்டும் இப்போது அனுப்ப இயலாது” என்று கூறினார். இது கேட்டதும் நடிகரின் தமையன் மேலும் ஆத்திரம் அடைந்தார். “அதெல்லாம் முடியாது. உங்கள் நாடகத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை; நாங்கள் இப்போதே புறப்படத்தான் போகிறோம்”, என்று சொல்லிவிட்டுத் தன் தம்பியைப் பார்த்து “எடுடா பெட்டி படுக்கையை” என்றார். அண்ணன் இப்படிச் சொல்லு முன்பே ஆயத்தமாக இருந்த நடிகத் தம்பி, உடனே பெட்டி படுக்கையோடு புறப்படச் சித்தமானார். தமையனும், மாமனும் முன்னை செல்லத் தம்பி அவர்களைப் பின் தொடர்ந்தார். மூவரும் அலுவல் அறையைத் தாண்டினார்கள்.

வெறி கொண்ட வேங்கை!

‘பளார்’ என்றாெரு சத்தம். அதைத்தொடர்ந்து “ஐயோ’’ என்ற அலறல்! எனக்கு ஒன்றும் புரியவில்லை. எட்டிப் பார்த்தேன். நடிகரின் தமையன் அடி பொறுக்க முடியாமல் கீழே கிடந்தான். அவன் எதிரே வெறி கொண்ட வேங்கை போல் ஒரு மனித உருவம் நின்று கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்து வார்த்தைகள் வேகமாக வந்தன. “இன்னக்கே புறப்படத்தான் போறயா! எங்கடா புறப்படு! நீ பொறப்பட்டுப் போறதை நான் பார்க்கிறேன்” என்ற வார்த்தைகளோடு கீழே கிடந்தவனுக்கு, மேலும் சில அடிகள் விழுந்தன. நடிகர் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு அலறிய வண்ணம் உள்ளே ஓடினார். மாமனார் செய்வதறியாது ஒரு மூலையில் ஒதுங்கினார். தமையன், “ஐயோ, கொல்றானே” என்று ஒலமிட்டார். பெரியண்ணா விரைந்து சென்று அந்த வேங்கையைப் பிடித்து அடக்கினார். மனித உருவில் நின்ற அந்த வேங்கைதான் தம்பி பகவதி. அப்போது தம்பி பகவதிக்கு வயது பதினான்கு-நடிகருக்கும் ஏறத்தாழ அதே வயதுதான் இருக்கும். அடிபட்ட தமையனருக்கு இருபத்தி ஐந்து வயதுக்குமேல் இருக்கலாம். எதற்காக இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன். தெரியுமா? பகவதியுடைய முரட்டுத்தனம், உடல் வலிமை, தீமையை எதிர்க்கும் போக்கு, இவற்றையெல்லாம் இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறதல்லவா? இதன் பிறகு அந்த நடிகர் மதுரை நாடகங்கள் முடியும் வரை கம்பெனியில் இருந்து விட்டுத்தான் போனார்; தேசபக்தியில் நாகநாதனின் காதலி சுந்தரியாகவும் அவர் நடித்தார்.

தேசீய நாடகத்திற்குத் தடை

தேசபக்தி நாடகத்தோடு மதுரை முகாம் முடிந்தது, திருநெல்வேலியில் நாடகம் துவக்கினோம். தேசபக்தி நாடகத்திற்குப் போலீஸ் அதிகாரிகள் வந்து குறிப்பெடுத்துக் கொண்டு போனார்கள். நாடகம் முடிந்த மறுநாள்காலை கம்பெனி வீட்டிற்கு இரண்டு போலீசார் வந்தார்கள். உரிமையாளரையும், நாடக ஆசிரியரையும் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும்படி இன்ஸ்பெக்டர் உத்திரவென்று கூறினார்கள். பெரியண்ணா வெளியூர் போயிருந்தார். சிற்றப்பா தம் மனைவியோடும் எங்கள் தங்கைகளோடும் மதுரையிலேயே இருந்தார். கம்பெனியின் பிரதிநிதிகளாக சின்னண்ணா டி. கே. முத்துசாமியும், என்.எஸ். கிருஷ்ணனும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். இன்ஸ்பெக்டர் அவ்விருவரிடமும் பல கேள்விகளைக் கேட்டார். கடைசியாகத் தேசபக்தி நாடகம் நடைபெற வேண்டுமானல் தாம் சொல்லும் திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இல்லையானால் நாடகம் தடை செய்யப்படுமென்றும் கண்டிப்பாகக் கூறினார் இன்ஸ்பெக்டர். அவருடைய ஆட்சேபனைகள் என்னவென்பது வாசகர்களுக்குச் சுவையாக இருக்கும்.

ஆட்சேபணைகள்

முதல் காட்சியில் நாங்கள் சொற்பொழிவு நிகழ்த்துவோம். என்.எஸ்.கிருஷ்ணன், சி. ஐ. டி.யாக வேடம் புனைந்து தோன்றுவார். எங்கள் பேச்சுக்களைக் குறிப்பெடுக்கும்போது அதற்கேற்றவாறு உணர்ச்சிகளைத் தம் முகத்திலே தோற்றுவிப்பார். நான் பேசும்போது, “இதோ எங்கள் சொற்பொழிவைக் குறிப்பெடுக்கிறாரே, இவரும் நம் நாட்டவர்தாம். நமது சகோதரரில் ஒருவர்தாம். ஆனால் இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டில் வளர்ந்து, இந்த நாட்டு உப்பையே தின்று கொண்டிருக்கும் இந்த மனித உருவம் தம் சொந்தச் சகோதரர்களையே அன்னிய நாட்டானுக்குக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலைச் செய்து கொண்டிருக்கிறது! பாவம். என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்பு!” என்றுகூறுவேன். உடனே என். எஸ். கிருஷ்ணன் கை கால்களெல்லாம் பதற்றத்தால் ஆடுவது போல நடிப்பார். சபையோர் கைதட்டிச் சிரிப்பார்கள். இன்ஸ்பெக்டர் இந்தக் காட்சியில் என். எஸ். கிருஷ்ணன் வரக்கூடாதென்று ஆட்சேபித்தார்.

இரண்டாவதாக, சுதந்திர வீரன் புரேசனும், ஒருமித வாதக் கனவானும் பேசிக் கொள்ளும் காட்சி. மிதவாதி சர்க்கார் கட்சியைத் தாங்கிப் பேசுவார். நீண்ட நேரம் வாதம் நடை பெறும். முடிவில் நான் ஆவேசத்துடன், “தாய்நாட்டை அன்னியருக்குக் காட்டிக் கொடுக்கும் சண்டாளர்கள், தம் தாயை மாற்றாரிடம் கூட்டிக் கொடுக்கும் கொடுமையைச் செய்கிறார்கள் என்று ஏன் சொல்லக் கூடாது?” என்று கேட்பேன். இந்தக் காட்சியிலும் என். எஸ். கே. தான் மிதவாதியாக வருவார். என் கேள்விக்கு விடையாக அவர் கொடுக்கும் முகபாவமும், ஆத்திரத் தோடு நடந்து கொள்ளும் நடிப்பும் சபையோரிடையே பெருங் கோஷத்தை எழுப்பும். இந்தக் கேள்வியையும் இன்ஸ்பெக்டர் ஆட்சேபித்தார்.

மூன்றாவதாக, நாடகத்தில் இறுதியாக வரும் சண்டைக் காட்சியில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தலைமையில் ஒரு தொண்டர் படை காட்சியளிக்கும். படையின் தளபதி கலைவாணர் பெரிய கைராட்டை ஒன்றைக் கையில் தாங்கிய வண்ணம் தோன்றுவார். இந்தக் காட்சியில் கொட்டகையே கலகலத்துப் போகும்படி சபையோர் கைதட்டுவார்கள். இந்தக் காட்சியையும் எடுத்துவிட வேண்டுமென்றார் இன்ஸ்பெக்டர்.

இன்னும் சில்லரை மாறுதல்கள் சிலவற்றைச் சொன்னார். இவற்றில் எதுவும் நாடகத்தைப் பாதிக்காதபடியால் இன்ஸ்பெக்டரின் ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்டு, அப்படியே திருத்தம் செய்வதாகக் கூறி, என். எஸ். கேயும் சின்னண்ணாவும் திரும்பி விட்டார்கள். மறுநாள் நாடகம் இன்ஸ்பெக்டர் சொன்ன மாறுதல்களுடன் நடத்தப் பெற்றது.

அந்த நாளில் எங்களுக்கிருந்த உணர்ச்சியில் இன்ஸ்பெக்டரின் இந்த ஆட்சேபனைகள் நிரந்தரமாக நீடித்து நிற்கவில்லை. மறு வாரம் மீண்டும் தேசபக்தி நடைபெற்றது. அன்று போலீஸார் யாரும் வரவில்லை. எனவே இன்ஸ்பெக்டர் ஆட்சேபித்த காட்சிகளையெல்லாம் முன்னிலும் பன்மடங்கு சிறப்பாக நடத்திக் காட்டினோம். சி. ஐ. டி.கள் யாரோ வந்திருந்தார்கள் என நினைக்கிறேன். நாடகம் அன்று பெரும் கோலாகலத்துடன் நடந்தது. மறுநாள் நாலே நாங்கள் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தோம். போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து ஏதோ கொடுத்துவிட்டுப் போனார். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தேசபக்தி நாடகம் தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள தடையுத்திரவு அது.

காங்கிரசுக்கு நன்கொடை

திருநெல்வேலியில் பட்டாபிக்ஷேகம் முடிந்த பிறகு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி நிதிக்காக ஒரு தேசபக்தி நாடகம் நடித்துக் கொடுத்தோம். திருமதி லட்சுமி சங்கரய்யர் தலைமை தாங்கினார். இதே போல் தொடர்ந்து பல ஊர்களில் காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தேசபக்தி நாடகத்தை எவ்வித ஊதியமும் பெறாமல் நடித்துக்கொடுத்திருக்கிறோம். எங்கள் கணக்குப்படி தமிழ்நாடு முழுவதிலும் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நூற்றி ஐம்பத்தி ஏழு நாடகங்கள் இதுவரை நன்கொடையாக கடத்திக் கொடுக்கப் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பழைய காங்கிரஸ் நண்பர்கள் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம்.

நிலத்தை அடமானம் வைத்தோம்

திருநெல்வேலி நாடகம் முடிந்தபின் ஸ்ரீவைகுண்டம், சாத்துார், விருதுநகர் ஆகிய ஊர்களுக்குச் சென்றோம். விருது நகரில் மானேஜர் காமேஸ்வர ஐயர் வந்து தமது பாக்கிப் பணத்திற்காக தொந்தரவு கொடுத்தார். ஏற்கனவே அவருடைய கடன் பாக்கிக்கு நோட்டு எழுதிக் கொடுத்திருந்தமையால் எவ்விதச்சமாதானமும் கூறமுடியாமல் பெரியண்ணா தயங்கினார். அப்போது எங்களுக்கிருந்த சொற்ப நிலத்தை அடமானம் எழுதிக் கொடுத்துப் பணம் வாங்க முடிவு செய்தார். இதற்காக நாங்கள் சகோதரர்கள் நால்வரும் நாகர்கோவிலுக்குப் போகவேண்டியதாக இருந்தது. ஒருநாள் நாடகம் முடிந்ததும், நால்வரும் புறப்பட்டு நாகர்கோவில் போய்ச்சேர்ந்தோம். அன்றே ஒருவரிடம் நிலத்தை அடமானப்படுத்தி இரண்டாயிரம் ரூபாய்கள் பெற்றோம். நெல்லேயில், இதற்காகத் தங்கியிருந்த காமேஸ்வர ஐயரிடம் அவருடைய பாக்கியைக் கொடுத்துத் தீர்த்துவிட்டு விருதுநகருக்கு ரயிலேறினோம். அந்த ரயில் எப்போதும் இரவு 10 மணிக்குத்தான் விருதுநகருக்கு வருவது வழக்கம். இரவு 9-30 மணிக்கு விருதுநகரில் மேனகா நாடகம் வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நண்பர் கிட்டுராஜூ அந்நாளில் ரயில்வே அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். எஞ்ஜின் டிரைவராக நின்று ரயிலை ஒட்டுவதற்கும் அவர் நன்றாகப் பழகியிருந்தார். மணியாச்சியில் அவர் எஞ்சினுக்குள் ஏறி டிரைவரை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டுத் தாமே ரயிலை, ஒட்டினார். பத்து மணிக்கு விருதுநகருக்கு வரவேண்டிய ரயில் இரவு 9 மணிக்கே வந்து சேர்ந்தது. இப்படி நடந்திருக்குமா என்று வாசகர்களில் சிலர் நம்புவதுகூட சிரமந்தான். ஆனால் இப்போது நான் சொல்லியவை அனைத்தும் உண்மையாக நடந்தவை.

மீண்டும் செட்டி நாடு

விருதுநகருக்குப்பின் மீண்டும் செட்டிநாட்டிற்குப் பயணம் தொடங்கினோம். இம்முறை காரைக்குடி கை கொடுக்கவில்லை. புதிய நாடகம் நடத்த எண்ணி ஸ்ரீ கிருஷ்ணலீலாவைத் தயாரித்தோம். அதற்காக இந்த நெருக்கடியான கட்டத்திலும் நகைகளை யெல்லாம் அடகு வைத்துச் சாமான்களைத் தயார் செய்தோம். எதிர்பாராதபடி அந்தச் சமயம் மற்றொரு கொட்டகையில் புளிய மாநகர் பாய்ஸ் கம்பெனி நாடகம் நடத்தி வந்தது. அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த பி. எஸ். கோவிந்தனுக்கு அபாரமான பேர். அவர்களுடைய நாடகங்களுக்கு நல்ல வசூலும் ஆயிற்று. புளியமாநகர் பாய்ஸ் கம்பெனியில் சிறந்த நடிகர்கள் இருந்தார்கள். பாய்ஸ் கம்பெனி என்ற பெயருக்கொப்ப எல்லோரும் சிறுவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் கம்பெனியின் பழைய நடிகர் கல்யாண வீரபத்திரன் தான், அங்கு வாத்தியாராக இருந்தார். அவர் தயாரித்த சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகத்தை நாங்களும் பார்த்தோம். பி. எஸ். கோவிந்தன் வீர அபிமன்யுவாக நானே வியக்கும் முறையில் நடித்தார். கடோற் கஜனக நடித்த காளீஸ்வரன், சுந்தரியாக நடித்த மயில்வாகனன் ஆகியோரும் மிக அருமையாக நடித்தார்கள். புதிய காட்சிகளைத் தயாரித்து ஸ்ரீகிருஷ்ணலீலாவை அமோகமாக நடத்தியும் எங்களுக்கு வசூல் இல்லை. விரைவில் நாடகத்தை முடித்துக் கொண்டு திருமயத்திற்குப் பயணமானோம்.

நாகர்கோவிலில் குடும்பம் நிலைத்தது

இந்தச் சமயங்களிலெல்லாம் சிற்றப்பாவின் குடும்பம் மதுரையிலேயே இருந்து வந்தது. இறுதியாகப் பெரியண்ணா ஒரு முடிவுக்கு வந்து, சிற்றப்பா, அவர் மனைவி, தங்கைமார்கள், பெரியண்ணாவின் மனைவி எல்லோரையும் நாகர்கோவிலில் ஒருவீடு பார்த்து, அங்கேயே நிரந்தரமாகத் தங்கச் செய்து விட்டு, திருமயம் திரும்பினார்.திருமயத்திலும் வசூல் இல்லை. எங்கள் பெரிய தகப்பனார் மகன் டி. எஸ். திரவியம் பிள்ளை நாகர்கோவிலில் இருந்தார். கம்பெனியின் நிருவாக வேலைகளைக் கவனிப்பதற்கு ஒருவர் தேவைப் பட்டது. அந்த வேலையைத் திரவியம்பிள்ளை அவர்களுக்குக் கொடுக்க எண்ணி, அவரையும் அழைத்து வந்தார் பெரியண்ணா. சில மாத காலம் திரவியம் பிள்ளையின் மேற்பார்வையில் கம்பெனி நடைபெற்றது. அவருடைய போக்கு, கம்பெனியிலிருந்த நடிகர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. என்றாலும் அதை வெளியே சொல்ல அஞ்சி, எல்லோரும் பேசாதிருந்தார்கள். இந்த நிலையில் கம்பெனி திண்டுக்கல் சென்றது.