பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளியிட்டார். தமிழில் புத்தக வடிவில் வெளிவந்த லெனி னது முதல் நூல் இதுதான் என்பதைக் குறிப்பிட வேண்டும் . சிங்காரவேலரும் மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த சோஷலிசக் கருத்துக்களைக் கொண்ட இளைஞர்கள் சிலரும் குடியரசுப் பத்திரிகையில் ஆரம்ப முதற்கொண்டே சோஷலிசத்தைப் பற்றி எழுதிவரத் தொடங்கினர். அந்த இளைஞர்களில் ஒருவரே ப. ஜீவானந்தம்.

ஜீவானந்தம்

ஈ.வே.ரா. வுடன் இருந்து, பின்னால் கம்யூனிஸ்டுகளாக மாறியவர்களில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்டியமைத்த மூத்த தலைவர்களில் ஒருவரும், ‘ஜீவா’ என்று தமிழக மக்களால் அன்போடும் அருமையோடும் குறிப்பிடப்பட்டவருமான ஜீவானந்தம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்.

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த காரணத்தால், முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஜீவானந்தம் திருச்சி சிறையில் அரசியல் கைதியாக இருந்து வந்தார். அந்தச் சிறைவாசத்தின் போது, பூதகேஸ்வர தத், ஆச்சார்யா போன்ற சில இந்தியப் புரட்சிவாதிகள் லாகூர் சிறையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டனர். இது அவர்களுக்கு எதிர்பாராமல் கிட்டிய நல்ல வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் திருச்சி சிறையிலிருந்த அரசியல் கைதிகளுக்கு மார்க்சையும் லெனினையும் பற்றி, கம்யூனிஸ்டுக் கோட்பாடுகளைப் பற்றி வகுப்புக்கள் நடத்தினர். மேலும், அந்தப் புரட்சிவாதிகள் சிறைக்குள் எப்படியோ கடத்திக் கொண்டு வந்திருந்த மார்க்சிய நூல்கள் சிலவற்றைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பும் திருச்சி சிறையிலிருந்த அரசியல் கைதிகளுக்குக் கிட்டியது, இந்த அரசியல் கைதிகள் பின்னர் விடுதலையான போது, சிறையில் அந்தப் புரட்சிவாதிகள் நடத்திய அரசியல் வகுப்புகளின் போது தாம் எடுத்த குறிப்புகள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்தனர். அவற்றின் அடிப்படையில் அவர்கள் குடியரசுப்

35