நித்திலவல்லி/முதல் பாகம்/39. மூன்று எதிரிகள்

விக்கிமூலம் இலிருந்து

39. மூன்று எதிரிகள்

இளையநம்பி தன்னை அழைத்துச் சென்ற பணிப் பெண்ணுடன் கணிகை மாளிகையின் முன் வாயிற் பக்கம் சென்றபோது ஏற்கெனவே அங்கே அழகன் பெருமாள் பதற்றத்தோடு, கைகளைப் பிசைந்த வாறு நின்று கொண்டிருந்தான். வெளிப்புறம் யாராலோ கதவுகள் பலமாகத் தட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இரத்தினமாலையும் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தாள்.

“வெளிப்புறம் வந்து நின்று கதவைத் தட்டுவது யார்? நீ ஏன் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறாய்?"-என்று அழகன்பெருமாளை வினவினான் இளையநம்பி.

உடனே அழகன் பெருமாள் பிரம்மாண்டமான அந்த நிலைக் கதவில் இருந்த சிறிய துவாரம் ஒன்றைச் சுட்டிக் காண்பித்து. “நீங்களே பாருங்கள்; வந்திருப்பது யார் என்பது புரியும்” என்றான். கதவைத் திறப்பதற்கு முன் வெளியே வந்திருப்பவர்களைக் காண்பதற்காக ஓர் மானின் கண் அளவிற்கு அங்கே கதவில் துளை இருந்தது.

இளையநம்பி இரத்தினமாலையின் முகத்தைப் பார்த்தான்.

“நான் பார்த்தாயிற்று! நீங்கள் பார்த்தால்தான் உங்களால் நிலைமையின் அபாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்” -- என்றாள் அவள். கதவை நெருங்கித் தன் வலது கண்ணைத் துளையருகே அணுகச் செய்து பதித்தாற்போல ஆவலையும் பரபரப்பையும் தவிர்க்க முடியாமல் வெளியே பார்த்தான் இளையநம்பி.

பூதபயங்கரப் படைவீரர் மூவர் உருவிய வாளும் கையுமாக வாயிற்படிகளில் நின்று கொண்டிருந்தனர். வெளிப்படையாக நன்கு தெரியும் பூத பயங்கரப் படையின் தோற்றத்திலேயே அவர்கள் வந்து அந்த மாளிகை வாயிற்படியில் நின்று கதவைத் தட்டுவதிலிருந்து ஏதோ தீர்மானமுற்றுச் சந்தேகத்துடனேயே அவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

‘பார்த்தாயிற்று! இனி நாம் செய்யவேண்டியது என்ன?’ என்று இரத்தினமாலையும் அழகன்பெருமாளையும் வினவுகின்ற முகபாவனையோடு திரும்பிப் பார்த்தான் இளையநம்பி.

“கதவைத் திறப்பது தாமதமாகத் தாமதமாக, வெளியே அவர்களுடைய சந்தேகமும், சினமும் அதிகமாகும். விரைந்து முடிவு செய்து, செயற்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம்"-என்றாள் இரத்தினமாலை. அழகன்பெருமாள் இதையே வேறுவிதமாகக் கூறினான்:-

“இரண்டே இரண்டு வழிகள்தான் நாம் நம்புவதற்கு மீதமிருக்கின்றன. கதவைத் திறப்பதற்குக் கால தாமதம் செய்யுமாறு இரத்தினமாலையிடம் சொல்லிவிட்டு, அவள் அப்படிக் காலதாமதம் செய்யும் அதே நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நலிந்த நிலையில் படுத்திருக்கும் தேனூர் மாந்திரீகன் உட்பட நாமனைவரும் நிலவறை வழியே இங்கிருந்து தப்பி வெளியேறிவிட வேண்டும். அல்லது கதவை உடனே திறந்து, அவர்களை உள்ளே விட்டபின் தந்திரமாக நாமனைவரும் சேர்ந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு, வந்திருக்கும் மூவரையும் எதிர்த்து அழிக்க வேண்டும்.”

“அப்படியே அவர்களை அழித்துவிட்டாலும், நாம் உடனே இங்கிருந்து வெறியேறித் தப்ப வேண்டுமே தவிர தொடர்ந்து இங்கே தங்கியிருக்க முடியாது. வந்திருக்கும் மூவரைக் கொன்றுவிடுவதால், தொடர்ந்து நூற்றுக்கணக்கான பூதபயங்கரப்படை வீரர்கள் வந்து இந்த மாளிகையை முற்றுகையிட்டு வளைக்கமாட்டார்கள் என்பது என்ன உறுதி? அப்படியே கதவைத் திறப்பதற்குக் காலதாமதம் செய்து விட்டுத் தப்புவதானால், இரத்தினமாலை, அவள் பணிப் பெண்கள் நீங்கலாக நாமனைவரும் தப்பலாம். பூத பயங்கரப் படை வீரர்கள் மூவரையும் தந்திரமாக உள்ளே விட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு அவர்களை அழித்த பின் தப்புவதானால், இரத்தினமாலையும், அவளைச் சேர்ந்தவர்களும் கூட நம்மோடு தப்பி வெளியேறத்தான் வேண்டியிருக்கும். பூதபயங்கரப் படைவீரர்கள் இந்த மாளிகை எல்லைக்குள் வைத்துக் கொல்லப்பட்ட பின்னர், இங்கே இரத்தினமாலை தங்கினாலும் அவளுக்கு அபாயம்தான். களப்பிரர்கள் இரத்தினமாலையை ஐயுறுவதற்கும், தொடர்ந்து சித்திரவதை செய்வதற்கும் அதுவே காரணமாகிவிடும். ஆகவே நாம் மட்டும் தப்புவதானால், எதிரிகள் மூவரும் உள்ளே வருவதற்கு முன்பே தப்பிவிடலாம். ஆனால் எதிரிகளை உள்ளே வரவழைத்து அழித்த பின் தப்புவதானால், வெறும் மாளிகையை மட்டுமே விடுவித்து எல்லாரும் தப்பிவிட வேண்டியதுதான் அழகன்பெருமாள்!” -என்றான் இளையநம்பி.

அழகன் பெருமாள் இதைக் கேட்டு எதற்கோ தயங்கிச் சிந்தித்தான்.

“இவர் சொல்லுவதுதான் முற்றிலும் பொருத்தமான முடிவு! வந்திருப்பவர்கள் இங்கே வைத்துக் கொல்லப்பட்டு விட்டபின், அதற்கு மேலும் களப்பிரர்களின் நம்பிக்கைக்கு உரியவளாக, இந்த நகரிலோ, இந்த மாளிகையிலோ, நானும் என்னைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து ஒற்றறிவது என்பது சாத்தியமில்லை"-என்றாள் இரத்தினமாலை.

வெளிப்புறம் கதவைத் தட்டுவது இடையறாது தொடர்ந்தது. நல்ல வைரம் பாய்ந்த கருமரத்தினால் செதுக்கி இழைத்து உருவாக்கப்பட்ட அந்தப் பூதாகாரமான கதவுகளை அவ்வளவு எளிமையாக வெளியே இருப்பவர்கள் உடைத்து விட முடியாது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது.

சிந்தனையில் நேரம் கடந்து கொண்டே இருந்ததனால் விரைந்து முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையில் இளையநம்பியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அழகன் பெருமாளும், இரத்தினமாலையும் உடன்பட்டனர். இளையநம்பி தன் மனத்தில் அப்போது தோன்றிய முடிவைச் சொன்னான்:

“எப்போது இந்த மாளிகையையும் இதில் தங்கியிருப்ப வர்களையும் சந்தேகப்பட்டுச் சோதனையிடுவதற்குப் பூத பயங்கரப் படைவீரர்கள் முன் வந்து விட்டார்களோ அதற்கப்புறம் இனிமேல் இரத்தினமாலை இதில் தங்கினாலும் ஆபத்து வராமலிருக்க முடியாது. ஆகவே நீ, நான், குறளன், திருமோகூரிலிருந்து வந்திருக்கும் கொல்லன் ஆகிய நால்வரும் கதவருகே அணிவகுத்து நின்று வெளியேயிருந்து உள்ளே வருகிறவர்களை எதிர்க்க வேண்டும் அழகன் பெருமாள்! உள்ளே வருகிறவர்களை நமனுலகுக்கு அனுப்பி விட்டுப் பின்னர் எல்லோருமே இங்கிருந்து தப்பி விடலாம் என்பது என் கருத்து. கொல்லனையும், குறளனையும் உடனே கூப்பிடுவதுடன் நம் நால்வருக்கும் நான்கு வாள்களும் வேண்டும் அழகன் பெருமாள்!”

“இந்த மாளிகையில் படைக்கலங்களை இரகசியமாக மறைத்து வைத்திருக்கும் இடம் எனக்கு மட்டுமே தெரியும். வாள்களை நான் கொண்டு வருகிறேன்"-என்று இரத்தின மாலை விரைந்தாள். குறளனையும் திருமோகூர்க் கொல்லனையும் அழைத்து வர அழகன் பெருமாள் ஓடினான். இயல்பை மீறிய பரபரப்பும் வேகமும் அப்போது அங்கே வந்து சூழ்ந்தன. ஒவ்வொரு விநாடியும் விரைவாகவும் அர்த்தத்தோடும் நகர்வது போலிருந்தது.

ஒளி மின்னும் கூரிய வாள்கள் வந்தன. கொல்லனும், குறளனும் வந்தார்கள். அழகன் பெருமாள், இளைய நம்பி, கொல்லன், குறளன் ஆகிய நால்வரும் உருவிய வாள்களுடன் நின்று கொண்டனர். கதவை இரத்தினமாலை திறக்க வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தான் இளையநம்பி.

அவள் கதவைத் திறக்கு முன் கொல்லன் மூலம் வந்து சேர்ந்திருந்த பெரியவரின் ஓலையை, ‘அழகன்பெருமாள் வாசித்து முடித்த பின் அவள் வாசித்தாளா' என்பதைக் கேட்டு ‘வாசித்தேன்’... என்பதற்கு அடையாளமாக அவள் தலையசைத்த பின் ஒரு வியூகமாக அவர்கள் நால்வரும் நின்று கொண்டார்கள். அவள் திறக்கப் போகிற கதவுகளின் உட்புற மறைவில் நின்று வெளியே இருக்கும் பூதபயங்கரப்படை வீரர்கள் உள்ளே காலடி வைத்ததும், நால்வருமாகப் பாய்ந்து ஒரே சமயத்தில் தாக்குவது என்று அவர்கள் நினைத்திருந்தனர். கதவைத் திறக்கிறவள் பெண்ணாயிருப்பதைக் கண்டு, வெளியே இருந்து உள்ளே புகுகின்றவர்கள் அலட்சியமாகவும், எச்சரிக்கை உணர்வு அற்றவர்களாகவும் இருக்கும்போது, திடுமெனத் தாக்க வேண்டுமென்பதை அவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இரத்தினமாலை மாளிகையின் உள்ளே ஏதோ காரியமாக இருந்தவள்-அப்போதுதான் கதவைத் தட்டும் ஓசை கேட்கத் திறப்பது போல் மெல்ல வாயிற் கதவைத் திறந்தாள். பக்கத்துக்கு இருவராகப் பிரிந்து உருவிய வாளுடன் நின்ற இளையநம்பி முதலியவர்கள் திறக்கப்படும் கதவின் பின்புறமாக மறைவிடம் தேடினர்.

அப்போதிருந்த மனநிலையில் திறக்கப்படுகிற கதவு கிறீச்சிடும் மர்மச் சப்தம் கூட உள்ளே நுழைகிற மூவரின் மரண ஓலத்துக்கு முன்னடையாளம் போல் இரத்தினமாலைக்குக் கேட்டது. முகத்தில் மலர்ச்சியுடனும், முறுவலுடனும் ஒரு வேறுபாடும் காட்டாமல், சுபாவமாக வரவேற்கிறவள் போல் அந்த முன்று பூதபயங்கரப் படைவீரர்களையும் அவள் எதிர் கொண்டாள்.

வந்தவர்கள் மூவரும் கடுமையான கேள்விகள் எதையும் தன்னிடம் கேட்காமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்த விதம் அவளுக்கு வியப்பை அளித்தது. ‘உருவிய வாளுக்கும், பூதபயங்கரப் படையின் உடைக்கும் தகுந்த மிடுக்கோ, சினமோ, இன்றி உள்ளே வரும் அவர்கள், ஒருவேளை இந்தக் கணிகை மாளிகையில் ஆடல் காணலாம், பாடல் கேட்கலாம் என வருகிறார்களோ’ என்று சந்தேகப் பட்டாள் அவள். அவர்கள் மூவரும் நிலைப்படியைக் கடந்து இரண்டுபாக தூரம்கூட உள்ளே வந்திருக்க மாட்டார்கள். திறக்கப்பட்ட கதவுகளின் பின் மறைவிலிருந்து இளையநம்பி முதலிய நால்வரும் உருவிய வாளோடு அவர்கள் மேல் பாயவும், இரத்தினமாலைதான் திறந்த கதவுகளையே மீண்டும் அவசர அவசரமாக அடைக்க முற்பட்டாள்.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. உள்ளே வந்த மூவரும் ‘கயல்’-என்று நல்லடையாளச் சொல்லைச் சற்றே உரத்த குரலில் கூறவும், உருவிய வாளுடன் பாய்ந்த நால்வரும் ஒன்றும் புரியாமல் தயங்கிப் பின்வாங்கினர்.

அடுத்த கணம் விரைந்து பூதபயங்கரப் படை வேடத்தைக் கலைத்துவிட்டுக் காரி, கழற்சிங்கன், சாத்தன் ஆகிய உபவனத்து நண்பர்கள் மூவரும் எதிரே நிற்பதைக் கண்டதும், அழகன்பெருமாள் முதலியவர்கள் வாளைக் கீழே எறிந்துவிட்டு ஓடிவந்து அவர்களைத் தழுவிக் கொண்டனர்.

“எங்களையே ஏமாற்றி வீட்டீர்களே? மெய்யாகவே பூதபயங்கரப் படையினர் மூவர் இங்கு சோதனைக்காகத் தேடி வந்திருக்கிறீர்களோ என்று அஞ்சி நாங்களே ஏமாறும் அளவு நடித்து விட்டீர்கள் நண்பர்களே!”-என்றான் இளையநம்பி.

“இவ்வளவு செம்மையாகவும் திறமையாகவும் நடிக்கா விட்டால் வெளியே நாங்கள் உயிர் பிழைத்துத் தப்பி வந்திருக்கவே முடியாது ஐயா!” என்றான் கழற்சிங்கன். எதிர்பாராத இந்தப் புதிய திருப்பத்தைக் கண்டதும், ‘காப்பாற்றப்பட வேண்டியவர்கள் தாங்கள் மட்டுமில்லை வந்திருப்பவர்களும் கூடத்தான்’-என்று புரிந்து கொண்டு, அடைத்த கதவையே நன்றாக அழுத்தித் தாழிட்டாள் இரத்தினமாலை.