நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மதீனாவில் மூன்று பிரிவினர்

விக்கிமூலம் இலிருந்து

69. மதீனாவில் மூன்று பிரிவினர்

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்த பொழுது, அங்கே மக்கள் மூன்று பிரிவினராக இருந்தனர்.

1.அன்சாரிகள் 2. முனாபிக்குகள் 3. யூதர்கள் ஆகியவர்களே மேற்படி மூன்று பிரிவினர்கள்.

1. அன்சாரிகள்: இவர்கள் ஒளஸ், கஸ்ரஜ் என்னும் இரண்டு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் முஸ்லிம்களாகி, இரண்டு கோத்திரத்தினரும் ஒற்றுமையானார்கள்.

2. முனாபிக்குகள்: (நயவஞ்சகர்கள் என்று பொருள்) இவர்கள் வெளியே இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களாக நடித்துக் கொண்டு, உள்ளுர முஸ்லிம்களுக்கு விரோதிகளாக இருந்து வந்தனர். இக்குழுவினருக்கு அப்துல்லாஹ் இப்னு உபை என்பவர் தலைவராக இருந்தார். இவர் மதீனாவில் செல்வந்தராகவும், செல்வாக்கு உள்ளவராகவும் இருந்து வந்தார்.

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன், அவருடைய ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. மதீனாவின் ஆட்சியே அவருடைய கைக்கு வரக் கூடிய நிலையில் காணப்பட்டது. ஆனால், பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்ததும், நகரத்தின் நிலைமை மாறியது. அன்சாரிகளுடைய தன்னலமற்ற ஊக்கமும், நகர மக்களின் விழிப்பு உணர்ச்சியும் இப்னு உபையின் எண்ணம் நிறைவேற இயலாமல் செய்து விட்டது. ஆகையால், அவர் தம் வஞ்சகமான எண்ணத்தை மறைத்துக் கொண்டு, தம் கூட்டத்தாருடன் வெளிப் பார்வைக்கு முஸ்லிம் ஆகி விட்டார். அவர் உயிரோடு இருந்த வரை, முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தீங்குகள் செய்து வந்தார். 3. யூதர்கள்: மதீனாவில் இருந்த யூதர்களில், மூன்று கோத்திரத்தினர் மட்டுமே செல்வாக்குள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் 1. பனூ கைனுகா 2. பனூ நுலைர் 3. பனூ குறைலா இம்முன்று கோத்திரத்தினரும் மதீனாவின் சுற்றுப்புறங்களில் பெரிய பெரிய உறுதியான கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

பெருமானார் அவர்களிடத்தில், யூதர்களுக்கும் பகைமை இருந்து வந்தது. அதற்கு முக்கியக் காரணம் : முதலாவது, மதீனாவாசிகள் முஸ்லிமானது. இரண்டாவது : யூதர்களின் பகைவர்களான ஒளஸ், கஸ்ரஜ் குடும்பத்தாரிடையே ஓயாமல் சச்சரவு நிகழ்ந்து, நலிந்து போயிருந்தார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு விடாதபடி, யூதர்கள் முயன்று வந்தார்கள்.

பெருமானார் அவர்கள் மதீனா வந்த பின்னர், முஸ்லிம்களான ஒளஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினரும் மிகுந்த ஒற்றுமையாகி, பெருமானார் அவர்களுக்கு உண்மை ஊழியர்களானது யூதர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால்,அந்த வருத்தத்தையோ, விரோதத்தையோ அவர்கள் வெளியே காட்டிக் கொள்ளாமல், பெருமானார் அவர்களுடன் சமாதானமாக இருந்து முஸ்லிம்களைத் தாக்குவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.