மகாபாரதம்-அறத்தின் குரல்/6. அர்ச்சுனன் சபதம்

விக்கிமூலம் இலிருந்து

6. அர்ச்சுனன் சபதம்

அர்ச்சுனனுடைய சபதம் வெற்றி பெறுவதற்கான செயல்களைத்தான் செய்வதாகக் கண்ண பிரானே முன்வந்ததைக் கண்டு தருமர் பெருமகிழ்ச்சி அடைந்தார். தனது இதயம் நிறைந்த நன்றியைக் கண்ணனுக்கு அப்பொழுதே தெரிவித்தார். “தருமா! சயத்திரதனைக் கொல்ல வேண்டுமென்று அர்ச்சுனன் செய்துள்ள சபதத்தை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு என் ஒருவனுடைய துணை மட்டும் போதாது. இப்போது நானும் அர்ச்சுனனும் இரவோடிரவாகத் திருக்கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானின் அனுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டு திரும்ப வேண்டும். எப்படியும் நாளை உதயத்திற்குள் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினான் கண்ணன். ‘சரி! அவசியமானால் செல்லத்தானே வேண்டும்? சென்று வாருங்கள்” என்று விடை கொடுத்து அனுப்பினார் தருமர். கண்ணனும் அர்ச்சுனனும் திருக்கயிலையை நோக்கிப் புறப்பட்டார்கள். சிறிது தொலைவு நடப்பதற்குள்ளேயே அர்ச்சுனனுக்குக் கைகால்கள் எல்லாம் சோர்ந்து களைப்பாக வந்தது. அவன் வாய் திறந்து சொல்வதற்கு முன்பே அந்தக் களைப்பை உணர்ந்து கொண்டான் கண்ணன்.

“அர்ச்சுனா! அருமைப் புதல்வனைப் பறிகொடுத்த துயரத்தினால் உன் உடலும் மனமும் சோர்வடைந்திருக்கின்றன. இன்று நீ உணவும் உண்ணவில்லை. நடப்பது சிரமமாகத்தான் இருக்கும். என்ன செய்வது? பொறுத்துக் கொள். மனித உடல் நிலையாதது. மூப்பு, பிணி, சாவுகளுக்கு உட்பட்டது; பிறவியும் சாவும் எங்கும் எப்போதுமே இயற்கை நியதிகள், என்று எத்தனை எத்தனை நல்லறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்? அவ்வுரைகளையெல்லாம் மறந்து இவ்வாறு கலங்குதல் பொருந்துமா? நீ உணவு உண்ணாமல் இருப்பதனால் இறந்து போன அபிமன்னனுக்கு உயிர் வந்து விடுமோ? கவலையைக் கைவிடு. நான் சொல்வதைக் கேள். இதோ இந்த வழியிலுள்ள அரிய தோட்டங்களில் எண்ணற்ற பழமரங்களும் நீர் நிறைந்த பொய்கைகளும் உள்ளன. மா, பலா, வாழை ஆகிய கனிகளை உண்டு நீர் பருகலாம். நடப்பதற்கும் தெம்பு உண்டாகும்” என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு ஆறுதல் கூறினான்.

“கண்ணா! ஒவ்வொரு நாளும் சிவபெருமானை வழிபாடு செய்த பிறகுதான் நான் உண்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா? இன்று இன்னும் நாம் சிவபூஜையே செய்யவில்லையே? எப்படி உண்பது? அதனால்தான் தயங்குகிறேன்”

“நீ தயங்கவேண்டாம்! உன் பூசையையும் இப்போது இங்கேயே முடித்துக் கொள்கிறதற்கு வழி சொல்லுகிறேன். அன்பர்கள் எந்தெந்த வடிவத்தை நினைத்துப் பூஜை செய்கிறார்களோ அந்த வடிவங்களிளெல்லாம் சிவபெருமான் குடி கொண்டிருக்கிறான். நீ இங்கே மலர்ந்துள்ள மலர்களைக் கொய்து இந்தக் குளத்தில் நீராடு. என்னையே சிவபெருமானாக எண்ணிக் கொண்டு எனக்குப் பூஜை செய். இவ்வாறு செய்தால் உன் குறை தீரும். சிவபெருமானும் நானும் ஒரே அம்சத்தின் இருவேறு பகுதிகள் என்பதைக் கயிலையை அடைந்ததும் நீயாகவே தெரிந்து கொள்வாய்.”

அர்ச்சுனன் மறுக்காமல் கண்ணன் கூறியபடியே நீராடி மலர்களைக் கொண்டு அவனையே சிவபெருமானாகக் கருதிப் பூஜை செய்தான். பூஜை முடிந்ததும் அந்த வளமான சோலையிலிருந்த மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் முதலிய பழங்களை உண்டு மகிழ்ந்தான். தன்னுடைய வாகனமாகிய கருடனை அப்போது உடனே அங்கே வருமாறு மனத்தில் தியானித்தான் கண்ணன். நினைத்த அளவில் கருடவாகனம் அங்கே வந்து சேர்ந்தது.

“கருடா! என்னையும் அர்ச்சுனனையும் விரைவாகச் சுமந்து கொண்டு சென்று கயிலையில் சேர்க்க வேண்டும்” என்றான் கண்ணன். கருடன் களிப்புடன் அதற்குச் சம்மதித்தான். கண்ணனைத் தனது தோள் மேலும் அர்ச்சுனனைக் கையின் மேலுமாக ஏற்றிக் கொண்டு கருடன் வாயு வேகம் மனோவேகமாகப் பறந்தான். அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக விரைவிலேயே கருடன் அவர்களைத் திருக்கயிலாயத்தில் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டான். வெள்ளிப் பனி மலையின் நெடிதுயர்ந்த சிகரத்தில் ஜோதிப் பிழம்பாக வீற்றிருந்த சிவபெருமானைக் கண்டு இருவரும் முகமும் அகமும் ஒருங்கு மலர வணங்கினார்கள். சிவபெருமான் புன்னகை பூத்த முகமண்டலத்துடன் அர்ச்சுனனை ஆசி கூறி வரவேற்றார். அப்போது அங்கே, அந்தப் பெருமானிடம் அவனுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. வருகிற வழியில் ஒரு தோட்டத்தில் கண்ணனையே சிவபெருமானாக எண்ணிக் கொண்டு அர்ச்சுனன் சிவபூஜை செய்தானல்லவா? அப்போது அவன் என்னென்ன மலர்களைக் கண்ணன் மேல் அர்ச்சித்திருந்தானோ அதே மலர்கள் சிவபெருமானின் திருவடிகளில் இலங்கின. “ஆகா! ‘நானும் சிவபெருமானும் ஒரே அம்சத்தின் இருவேறு பகுதிகள்’ என்று கண்ணன் கூறியது எவ்வளவு பெரிய உண்மை?” என்று அர்ச்சுனன் வியந்து கொண்டே கண்ணன் நின்ற பக்கமாகத் திரும்பினான். கண்ணனுடைய உதடுகளில் குறும்புத்தனமான சிரிப்பு நெளிந்து விளையாடிக் கொண்டிருந்தது. பின்பு அர்ச்சுனன் மனம், மொழி, மெய் மூன்றையும் ஒரு முகப்படுத்தித் திரிகரணசுத்தியோடு சிவபெருமானைப் புகழ்ந்து போற்றித் தியானித்தான்.

அர்ச்சுனனுடைய தியானத்துக்கு மனம் இரங்கிய சிவபெருமான் கண்ணனையும் அவனையும் அன்போடு நோக்கி, “நீங்கள் என்னிடம் ஏதோ காரியமாக வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது ‘என்ன காரியமாக வந்துள்ளீர்கள்?’ என்பதைக் கூறினால் என்னாலானதைச் செய்வேன்” என்று கேட்டார்.

“மகாப்பிரபு! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. வலிமையான எங்கள் பகைவர்களை அழிப்பதற்குச் சில விசேஷ அஸ்திரங்கள் வேண்டும். அவற்றைப் பெற்றுக் கொண்டு போவதற்கே வந்தோம்” என்று கூறினர் அர்ச்சுனனும் கண்ணனும். உடனே சிவபெருமான் அங்கிருந்த ஒரு பொய்கையை அர்ச்சுனனுக்குச் சுட்டிக் காட்டி அதில் நீராடுமாறு கூறினார். அர்ச்சுனன் அவர் கட்டளைப்படியே அந்தப் பொய்கையில் இறங்கி மூழ்கி எழுந்தான். அவன் மூழ்கி எழுந்த அளவில் அவனோடு ஒரு பெரிய பாம்பும் எழுந்தது. பிரம்மாண்டமான அந்தப் பாம்பின் அங்காந்த வாயிலிருந்து ஒரு முனிவர் தோன்றி வெளி வந்தார். அந்த முனிவர் பொய்கைக்குள் மூழ்கி ஒரு வில்லையும் சில அஸ்திரங்களையும் நீருக்குள்ளிருந்து எடுத்துக் கொண்டு வந்து அர்ச்சுனனிடம் கொடுத்தார். பின்பு அந்த முனிவரே அஸ்திரங்களைப் பிரயோகிக்கும் விதத்தையும் வேறு சில போர்த்திரங்களையும் அர்ச்சுனனுக்குக் கற்றுக் கொடுத்தார். அஸ்திரப் பிரயோகத்திற்குரிய மந்திர தந்திர இரகசியங்களையும் அவரிடமே தெரிந்து கொண்டான் அர்ச்சுனன். இறுதியில் கண்ணனும் அர்ச்சுனனும் சிவபெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கயிலையை விட்டுக் கிளம்பினார்கள். புறப்படும் போது சிவபெருமான் கண்ணனைப் பார்த்து, “நீ பூவுலகில் மக்கட் சுமையைக் குறைத்துப் பூமிதேவிக்கு ஓய்வளிக்கச் சென்றிருக்கிறாய். அந்தச் செயலில் பூரண வெற்றி பெற்றுத் திரும்பி வா...” என்று கூறினார்.

திருக்கயிலையை நோக்கிச் சென்றவர்களின் நிலை இவ்வாறிருக்க, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனிப்போம். தருமர், அர்ச்சுனன் கயிலைக்குச் சென்றிருக்கும் செய்தியைத் துரியோதனனுக்கும் தெரிவித்து விடுவதுதான் போர் அறம் என்று எண்ணினான். அதனால் உடனே விமன் மகனான கடோற்கசனை அழைத்துச் சத்திரதனைக் கொல்வதாக அர்ச்சுனன் சபதம் செய்திருப்பதையும், அதற்கான அஸ்திரங்களைப் பெற்று வருவதற்காகக் கயிலைக்குச் சென்றிருப்பதையும் துரியோதனனிடம் போய்ச் சொல்லி விட்டு வந்து விடுமாறு அனுப்பினான். தருமன் கூறியவைகளை உரைப்பதற்காகத் துரியோதனனிடம் தூது சென்றான் கடோற்கசன். அவ்வாறு செல்வதற்கு முன்னால், “நமது மறைமுகமான ஏற்பாடுகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமென்ன? அபிமன்னனை வஞ்சகமாகக் கொலை செய்த அந்தப் பாவிகள், இப்போது இதை முறியடிக்கவும் முன்கூட்டியே ஏதாவது சூழ்ச்சி செய்வார்களே?” என்று தருமனிடம் அதை வற்புறுத்திக் கூறிப் பார்த்தான்.

“எப்படியாயினும் சரி! நாம் நமது ஏற்பாடுகளைத் தெரிவித்து விடுவதே தருமம். நீ போய்த் தெரிவித்து விட்டு வா..” என்று தருமன் மீண்டும் வற்புறுத்திய பின்புதான் அவன் புறப்பட்டான். கடோற்கசன் துரியோதனாதியர்களுடைய பாசறையில் நுழைந்தபோது அங்கே துரியோதனன் மட்டுமின்றி மற்றவர்களும் கூடியிருந்தனர். பகைவர் படையைச் சேர்ந்தவனான கடோற்கசனை அந்த நேரத்தில் அங்கு வரக் கண்டது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. கடோற்க்சன் அவர்களை மதித்து மரியாதை செய்யவுமில்லை; வணங்கவுமில்லை. அலட்சியமாகத் தான் கூற வேண்டியவற்றைக் கூறி முடித்தான். கடோற்கசன் அர்ச்சுனன் மறுநாள் மாலைக்குள் சயத்திரதனைக் கொல்வதற்காகச் சபதம் செய்திருப்பதையும் அதற்கான அஸ்திரங்களைப் பெற்றுவரக் கயிலைக்குப் போயிருப்பதையும் பற்றிக் கூறியவுடன் துரியோதனனுக்குக் கோபம் வந்து விட்டது.

“இன்றைய போரில் உங்கள் தரப்பில் அபிமன்னன் ஒருவன் தான் இறந்திருக்கிறான். எங்கள் தரப்பிலோ எண்ணற்ற அரச குமாரர்களும், என் அருமை மகன் இலக்கணகுமாரனும் இறந்து போயிருக்கின்றனர். இத்தனை பேர்களைப் பறிக்கொடுத்து விட்டு நாங்கள் சும்மா யிருக்கையில் உங்கள் அர்ச்சுனன் மட்டும் பெரிய சபதம் செய்துவிட்டுக் கயிலைக்குப் போவது என்ன நியாயம்? யுத்தம் என்றால் அதில் மரணங்கள் ஏற்படுவது இயற்கைதான். அதைக் கண்டு ஆத்திரமடைவது பேதமை. எவ்வளவு சபதம் செய்தாலும் சரி, எத்தனை சிவபெருமான்களிடத்தில் போய் வரம் பெற்றாலும் சரி, எங்கள் சயத்திரதனை அர்ச்சுனன் கொல்ல முடியாது. நாளைப் போரில் முன்பு அபிமன்னனைக் கொன்றது போலவே அவனுடைய அப்பனான அர்ச்சுனனையும் கொன்று விடுவான் எங்கள் சயத்திரதன். சயத்திரதன் எப்படிப்பட்டவன் என்பதைப் பற்றி இன்று வரைக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாமலிருந்தால் நாளைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று துரியோதனன் கடோற்கசனை நோக்கி ஆத்திரத்தோடு கூறினான். கடோற்கசன் அங்கிருந்தவர்களை எல்லாம் கண்களாலேயே எரித்து விடுகிறவனைப் போல உருத்துப் பார்த்தான்.

“ஏ கடோற்கசா! நான் சொல்வதையும் கேட்டுக் கொள். நீ ஆத்திரப்படுவதில் அர்த்தமே இல்லை. அபிமன்னன் ஒருவன் செத்துத் தொலைந்ததனால் உங்கள் அர்ச்சுனனுக்கு இப்போது என்ன குடிமுழுகிப் போய்விட்டதாம்? ‘உலகாளப் பிறந்த ஒரே மகன் போய் விட்டானே?’ என்று வருத்தமோ? அர்ச்சுனன் ஒருவனுக்குத்தான் சபதம் செய்யத் தெரியுமா? எங்களுக்கெல்லாம் தெரியாதா? நாளைப் போரில் அர்ச்சுனன் சத்திரதனைக் கொல்லச் சபதம் செய்திருந்தால் நாங்கள் அர்ச்சுனனைக் கொல்ல சபதம் செய்கிறோம்” என்று கர்ணன் கூறினான். ஏற்கனவே துரியோதனனுடைய பேச்சைக் கேட்டு குமுறிப் போயிருந்த கடோற்கசன் கர்ணன் கூறியவற்றையும் கேட்டபின் ஆவேசம் கொண்டு விட்டான். அவன் வாயிலிருந்து சிங்கநாதம் கிளம்பியது.

“நீங்கள் எல்லோரும் அற்பர்கள், அறிவிலிகள்; உண்மையான வீரமில்லாதவர்கள். அதனால் உங்களுடைய பேச்சை நான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆயினும் ஒரே ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். இதோ இந்த விநாடியிலேயே எனக்கு வருகிற ஆத்திரத்தில் உங்கள் பாசறைகளையும் உங்களையுமாக அடித்து நொறுக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்து போகுமாறு செய்துவிடுவேன். கேவலம் உங்களைப் போன்றவர்களைக் கொல்வதற்காகவோ, எதிர்த்துப் போர் செய்வதற்காகவோ, அர்ச்சுனனும் வீமனும் முன் வர வேண்டியதில்லை. நான் ஒருவனே நினைத்தால் உங்களை துவம்சம் செய்துவிடுவேன். பொழுது விடிவதற்கு நீங்களும் உங்கள் பாசறைகளும் இருந்த இடம் சுடுகாடாக மாறிப் போகும். ஆனால் என் பெரியப்பனான தருமனுக்காக நான் பயப்படுகிறேன். இம்மாதிரி ஆவேசச் செயல்களை நான் செய்துவிட்டால் அது அவருடைய மனத்தை புண்படுத்துமே என்று தயங்குகிறேன். இதுவரை எந்த ஒரு காரியத்தையாவது நியாயத்துக்குப் பொருந்தும்படி செய்திருக்கிறீர்களா நீங்கள்? போரில் ஒருவனைக் கொல்ல வேண்டுமென்றால் அவனோடு எதிர் நின்று போர் செய்து கொல்வது தான் யுத்த தர்மம். ஆனால் அபிமன்னனை நீங்கள் அப்படிக் கொன்றீர்களா? பலர் சூழ்ந்து கொண்டு ஓர் இளைஞனைப் பின்புறமிருந்து கதாயுதத்தால் அடித்துக் கொல்வது போர் முறை ஆகுமா? நீங்கள் அபிமன்னனைக் கொல்வதற்காக மேற்கொண்ட சூழ்ச்சிகளை நினைத்தால் ஆண்பிள்ளைகள் வெட்கப்படுவார்கள். அவ்வளவு பெரிய பேடித்தனமான காரியத்தைச் செய்த நீங்கள் வீரம் பேசவோ, சபதம் செய்யவோ தகுதியற்றவர்கள்.” பேரிடிகள் முழங்கியது போலக் கடோற்கசன் பேசி நிறுத்தினான். ஒருகணம் அங்கு இருந்த யாவருக்குமே எதுவும் பதில் பேசத் தோன்றவில்லை. பேயறை பட்டவர்களைப் போல் திக்பிரமை பிடித்துப் போய் நின்றார்கள். முதல் முதலாகச் சமாளித்துக் கொண்டு பதில் பேசினவன் துரியோதனன்தான்.

“இந்தக் கடோற்கசன் ஒரு முரடன். அறிவும் நாகரிகமுமில்லாத அரக்கர்கள் குலத்தில் பிறந்தவன். இவனோடு பேசுவதனால் நமக்குத்தான் கேவலம் யாரும் இவனோடு பேச வேண்டாம்” -இவ்வாறு துரியோதனன் அரக்கர்கள் குலத்தையும் அதில் பிறந்த தன்னையும் இழிவு படுத்திப் பேசியதைக் கேட்டவுடன் கடோற்கசனுக்கு முன்னிலுமதிகமாகச் சினம் வந்து விட்டது. அவன் துரியோதனனை நோக்கி ஆத்திரத்தோடு பேசலானான்.

“நாங்கள் அரக்கர்கள்தான். ஆனால் எங்களுக்கு வஞ்சகம் செய்யத் தெரியாது. சகோதரர்களுக்கு நஞ்சு கொடுத்துக் கொல்லவோ, அரக்கு மாளிகையில் தீமூட்டிக் கொல்லவோ தெரியாது. நீராட அழைத்துப் போய்ச் சகோதரர்களைக் கழுக்கல் நட்டுக் கொல்வதற்கு முயல மாட்டோம். ஒருவர் செய்த நன்றியை எக்காலத்திலும் மறக்க மாட்டோம். நீதி நியாயங்களை மறந்து வஞ்சகமாகச் சூதாடி வேண்டியவர்களது உடைமைகளைப் பறித்துக் கொள்ள மாட்டோம். பிறன் மனைவியை அவை நடுவில் மானபங்கம் செய்யக் கனவிலும் நினைக்க மாட்டோம். வீரமில்லாத கோழைகளைப் போலப் போரில் புறமுதுகு காட்டி ஓடமாட்டோம். நான் மேலே கூறிய இந்தக் கொடுஞ்செயல்களெல்லாம் உனக்கே உரிமையுடையவை. நினைவு வைத்துக் கொள். நீயும் கர்ணனும் செய்திருக்கும் சபதங்கள் பயனற்றவை. அர்ச்சுனனை வெல்வதாக நீங்கள் எண்ணுவது வெறுங்கனவு. அந்த மகாவீரனை எதிர்த்துப் போர் செய்யக்கூடியவர்கள் இந்த விநாடி வரை பிறக்கவில்லை. மனிதர்களில் மட்டுமல்ல, தேவர்களிலும் பிறக்கவில்லை. நாளைப் போரில் உங்கள் சத்திரதன் அழிவது உறுதி. சந்தேகமிருந்தால் நாளைக்கு பாருங்கள்” என்று கூறி விட்டு அங்கிருந்த எவருடைய மறுமொழியையும் எதிர்ப்பார்க்காமல் கிளம்பினான் கடோற்கசன்.

அவன் சென்றபின் துரியோதனாதியர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். துரோணர், சகுனி, கர்ணன் முதலியவர்கள் துரியோதனனுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருந்தனர். துரியோதனன் அவர்களைப் பார்த்து, எப்பாடுபட்டாவது நாளைக்கு ஒருநாள் மட்டும் சயத்திரதனைப் பகைவர்கள் நெருங்கிவிடமுடியாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சயத்திரனைக் கொல்ல முடியாவிட்டால் அர்ச்சுனன், தான் செய்திருக்கும் சபதப்படியே தீயில் விழுந்து இறந்து போவான். அவன் தீயில் விழுந்து இறந்தால் மற்றவர்களாகிய தருமன் முதலியோர் அதைப் பொறுக்க மாட்டார்கள். வேதனை பொறுக்க முடியாமல் அவர்களும் தீயில் விழுந்து மாண்டு போவார்கள். இப்படியாக அவர்கள் ஐந்து பேரும் மாண்டு போய்விட்டால் பின்பு இவ்வுலகில் நம்மை எதிர்க்க எவருமே கிடையாது. நமது அரசுதான் இந்த உலகம் முழுவதும் நிகழும். ஆகவே என்ன முயற்சி செய்தாவது நாளைப் போரில் சயத்திரதனின் உயிருக்குத் துன்பம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியதவசியம்” என்று வேண்டிக் கொண்டான்.

“உன் வேண்டுகோளை நிறைவேற்ற எங்களால் இயன்ற மட்டும் முயன்று பார்க்கிறோம்” என்றார் துரோணர்.

“இயன்ற மட்டும் என்ன? கட்டாயமாக நிறைவேற்றியே தீருவேன் நான்” என்று அகந்தையால் வீம்பு பேசினான் கர்ணன்.

“நாளை ஒரு நாள் மட்டும் எப்படியாவது சயத்திரதனை காப்பாற்றி விடுகிறோம். பின்பு முடியாது” என்றான் துன்மருஷ்ணன் என்பவன். சயத்திரதனைக் காப்பாற்ற முடியும் என்பதில் அங்குள்ள மற்றொருவருக்கும் நம்பிக்கை இல்லை. அவர்கள் பேசாமல் மௌனம் சாதித்துவிட்டனர். ஒரு சிலர், “காக்க முடிந்தால் காக்கிறோம்” என்று சந்தேகத்தோடு பதில் கூறினார்கள். “காத்துவிடலாம்” என்று மனப்பால் குடித்தான் துரியோதனன். துரியோதனனின் பாசறை நிலை இவ்வாறிருக்கத் திருவும் அருளும் பெறக் கயிலை சென்றிருந்த கண்ணனும், அர்ச்சுனனும் திரும்பி வந்தனர். தருமன் அவர்களை அன்போடு தழுவி வரவேற்றான். கண்ணனும், அர்ச்சுனனும் கயிலையில் நிகழ்ந்தவற்றைத் தருமன் முதலியவர்களுக்கு விவரித்துரைத்தனர். அப்போது துரியோதனாதியரிடமிருந்து திரும்பிச் சென்றிருந்த கடோற்கசனும் அங்கே போய்ச் சேர்ந்தான். ஏறக்குறையப் பொழுது விடிந்து பதினான்காம் நாள் போர் தொடங்குவதற்குரிய நேரமும் வந்து விட்டது. போர் ஏற்பாடுகள் நிகழலாயின.