வெற்றி முழக்கம்/80. வேகவதியின் காதல்

விக்கிமூலம் இலிருந்து

80. வேகவதியின் காதல்

தன மஞ்சிகையைத் தூக்கிச் சென்ற மானசவேகன் வித்தியாதரர் உலகத்திலுள்ள தன் தலைநகர் சென்று தனது அரண்மனையில் உள்ள ஓர் அழகிய மஞ்சத்தில் அவளைத் துயில வைத்தான். ‘துயில் நீங்கி உணர்வு பெற்று அவள் தானாக எழுந்த பின்புதான் அவளுக்குமுன் தான் தோன்ற வேண்டும். தோன்றித் தன் ஆசையை வெளியிட வேண்டும்’ என்றெண்ணிக் கொண்டு மானசவேகன் அப்பாற் சென்றான். இரண்டோர் நாழிகைகளில் மதன மஞ்சிகை துயிலுணர்ந்து எழுந்தாள். தன் அருகில் ஆருயிர்க் கொழுநன் நரவாண தத்தன் தென்படாமலிருப்பதையும், தான் இருக்கும் பகுதி அதுவரைதான் கண்டிராத முற்றிலும் புதியதொரு இடமாக இருப்பதையும் கண்டு திகைத்துத் துணுக்குற்றாள். ‘இந்தப் புதிய இடத்திற்கு எப்போது, எப்படி, யாரால் கொண்டுவரப் பட்டோம்?’ என்று மனம் குழம்பும்படி சிந்தித்துப் பார்த்தாலும் அவளுக்குத் தெளிவாக ஒன்றும் புலப்படவில்லை.

அவள் இவ்வாறு மயங்கி இருந்த நிலையில் மானசவேகனே அங்கு வந்து சேர்ந்தான். தான் அதுவரை கண்டிராத பழக்கமற்ற புதிய ஆடவன் ஒருவனைத் திடீரென்று அங்கே காண நேர்ந்ததும் மதனமஞ்சிகை திடுக்கிட்டாள். ஆனால் மானசவேகனோ, தான் கோசாம்பி நகரத்துச் சோலையிலிருந்து அவளைத் தூக்கிக்கொண்டு வந்தது முதலிய செய்திகளை அவளிடம் இனிய மொழிகளாற் கூறித் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இணங்குமாறும் வேண்டினான். அவனுடைய மொழிகளில் ஆவல் வெறியும் கெஞ்சுகின்ற பாவனையும் இருந்தன. மதனமஞ்சிகை தனக்கு விஞ்சையனால் நிகழ்ந்த வஞ்சகத்தை உணர்ந்தாள். தான் நரவாணனிட மிருந்து வலுவில் திருடிக் கொண்டு வரப் பெற்றதற்கும் அதுவே காரணம் என்றும் அவளுக்குப் புரிந்தது. தீயை மிதித்தவள் போலானாள் மதனமஞ்சிகை. பெண் புலியாக மாறினாள். மானசவேகனைக் காறித் துப்பிச் சீறினாள். அவளுடைய சினத்தையும் அளவற்ற ஆத்திரத்தையும் கண்டு மானசவேகனே பயந்து போனான்.

தன்னால் அவள் மனத்தை மாற்ற முடியாதென்றுணர்ந்த அவன், அழகும் சாமர்த்தியமான பேச்சுத் திறனும் வாய்ந்தவளாகிய தன் தங்கை வேகவதி என்பவளை அழைத்து, “மதனமஞ்சிகையை எப்படியாவது மனம் மாறும்படி முயன்று என் விருப்பத்திற்கு இணங்கச் செய்வது உன்பொறுப்பு” என்று கூறி அவளிடம் அனுப்பினான். வேகவதியின் திறமையில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவளும் அதற்குச் சம்மதித்து மதனமஞ்சிகையின் மனத்தை மாற்றுவதற்காக அவளிருந்த இடத்திற்குச் சென்றாள். வேகவதி மதனமஞ்சிகையை அடைந்து, அவளிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள். தன் பேச்சுத் திறமையை எல்லாம் பயன்படுத்தி, அவள் மனத்தை மாற்றுவதற்கு முயன்றாள். மானசவேகனுடையும் அழகையும் சிறப்பையும் வானளாவ வருணித்து, “இப்படிப்பட்ட கந்தர்வ வேந்தன் ஒருவனுடைய காதல் உனக்கு எளிமையாகக் கிடைக்கிறது என்றால் அதை ஏன் நீ கை நழுவ விடுகின்றாய்?” என்று தந்திரமாக ஆவலைக் கிளப்பிப் பார்த்தாள். ஆனால் எந்த ஒரு முயற்சியும் மதனமஞ்சிகையின் திடத்தை அசைக்க முடியவில்லை.

மதனமஞ்சிகை அணுக முடியாத நெருப்பாயிருந்தாள். அவள் மனத்தில் நரவாண தத்தனைப் பற்றிய ஒரே நினைவுதான் இருந்தது. வேகவதியின் முயற்சிகள் அவளிடம் சிறிதளவுகூடப் பலிக்கவே இல்லை. அம்முயற்சிகள் அவளுடைய கோபத்தை வளர்க்கவே பயன்பட்டன. “என் காதலர் நரவாண தத்தரைப்போல அழகிற் சிறந்தவர்கள் இந்த உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! அவருடைய கல்விக்கும் ஆண்மைக்கும் ஈடு இணை ஏது? என் உள்ளம் அவர் ஒருவருக்கே உரியது. அவரும் நானும் பூண்டிருக்கும் தெய்வ சாட்சியான இந்த அன்புரிமையை எங்களிடமிருந்து எவரும் பறிக்க முடியாது. பறிக்கவிட மாட்டேன். அதை மீறி வன்முறைகளால் பறிக்க முயன்றால் என் உயிரையாவது கொடுப்பதற்கு முயல்வேனே ஒழிய, அன்புரிமை களங்கமடையும்படி விடமாட்டேன்” என்று இப்படி மதன மஞ்சிகை உறுதியாகக் கூறியபோது, உண்மையில் வேகவதிக்கே மலைப்பு ஏற்பட்டுவிட்டது. அதோடு, ‘காதலுக்குரிய அழகு என்பது என்ன!’ என்று காணத் துடிதுடிக்கும் பருவம் அவளுக்கு. வேகவதி, நரவாண தத்தனைப் பற்றிக் கேள்விப்பட்ட இனிய செய்திகள், கன்னி கையான அவள் மனத்தில் இன்பத் தென்றலை வீசியது.

‘மானிடர்களில் மெய்யாகவே நரவாணனைப் போன்ற ஓர் அழகன் இருக்க முடியுமா? இருந்தால் நல்லதுதான்! அவனை என் போன்ற தேவகன்னிகள் அநுபவிக்கக் கொடுத்து வைத்திருக்குமானால் அது எங்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியம்?’ என்று இத்தகைய இன்ப நினைவுகளால் நரவாணனைச் சென்று காணவேண்டும் என்ற ஆவல் வெள்ளம்போற் பெருகியது வேகவதியின் உள்ளத்தில். தேவ கன்னிகையான வேகவதி, தன்னை மறந்தாள். தான் தன்னுடைய தமையனிடம் ஒப்புக்கொண்டு வந்திருந்த செயலையும் மறந்துவிட்டாள். அதுவரை கண்டிராத நரவாண தத்தன் என்னும் மண்ணுலகத்து அழகரசன்மேல் மட்டுமே இலயித்து விட்டது அவள் உள்ளம். மதன மஞ்சிகை, தன் தமையனான மானசவேகன், ஆகியோர் எக்கேடு கேட்டால் என்ன? தான் நேரே கோசாம்பி நகரத்திற்குச் சென்று ‘தன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட அந்த நரவாண தத்தனை ஒருமுறை ஆசைதிரத் தழுவினால் ஒழிய, தன் உள்ளத்து வெறி ஓயாது’ என்று அவளுக்குத் தோன்றியது. வேகவதி கோசாம்பி நகருக்குப் புறப்பட்டுச் சென்றாள். போகும் போதே அவள், தன்னை மதனமஞ்சிகையின் தோற்றமுடையவளாக மாற்றிக் கொண்டாள்.

அது அவ்வாறிருக்க இங்கே கோசாம்பி நகரத்துச் சோலையில் தூக்கத்தினின்று விழித்த நரவாணன் அருகில் தன்னோடு துயின்று கொண்டிருந்த மதனமஞ்சிகையைக் காணாமல் திடுக்கிட்டான். கலங்கிய உள்ளத்தோடு அந்தச் சோலையில் ஒவ்வொரு பகுதிகளிலும் தேடத் தொடங்கினான். அலமந்த மனத்துடன் நரவாணன் இவ்வாறு சோலையில் சுற்றிக் கொண்டிருந்தபோதுதான், விஞ்சையர் உலகிலிருந்து வேகவதி மதனமஞ்சிகையின் உருவத்தோடு அந்தச் சோலையில் வந்து இறங்கினாள். மன்மதன் போன்ற நரவாண தத்தனின் தோற்றம் அவளைப் பித்துற்று மயங்கும்படி செய்தது. நரவாணன் தன்னை மதனமஞ்சிகை என்றே எண்ணிக் கொள்ளும்படியாக, அவளுருவத்துடனேயே அவனருகே சென்றாள் வேகவதி. அவளைக் கண்ட நரவாணன், அவளை மதனமஞ்சிகை என்றே எண்ணிக் கொண்டு, “மதன மஞ்சிகையே! இவ்வளவு நேரம் நீ எங்கே சென்றிருந்தாய்” என்று கேட்டவாறே ஓடிவந்து அவளைத் தழுவிக் கொண்டான்.

வேகவதி அவனுடைய அந்த மோகனமான தழுவலில் மதுவுண்டு களித்த வண்டுபோல மயங்கி நின்றாள். அவளுக்குச் சற்றே நாணமும் ஏற்பட்டது. அவள்தான் இதழ்களில் நாணம் நிறைந்த புன்னகையோடே தரையை நோக்கினாள். அவளுடைய அந்த நாணத்தைக் கண்ட நரவாணனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ‘இவள் என்னோடு நன்கு பழகிய மதன மஞ்சிகையானால் திடீரென இன்று புதுமையாக இவ்வளவு நாணம் கொள்ள மாட்டாளே!’ என்ற சந்தேகத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தான் நரவாணன், வேகவதிக்கு அந்தக் கம்பீரமான பார்வையின் பொருள் புரிந்துவிட்டது. அவள் நரவாணனிடம் ஓர் உண்மையை ஒப்புக்கொண்டு தான் யார் என்பதையும் கூறிவிட்டாள். ஆனால் மதனமஞ்சிகையைப் பற்றியோ அவளைத் தன் தமையன் மானசவேகன் தூக்கி வந்திருப்பதைப் பற்றியோ, அவள் அப்போது தன் தமையனிடம் இருப்பதைப் பற்றியோ எதுவுமே அவனிடம் கூறவில்லை.

நரவாணனும் அப்போது காமப்பரவசனான நிலையில் இருந்ததனால், மதனமஞ்சிகையைப் பற்றி விசாரிக்கவே தோன்றவில்லை அவனுக்கு! வேகவதியின் அழகும் புதுமை தவழும் கன்னிமை கனிந்த உடலும் சந்தேகத்தையும் மீறிய காமுகனாக அப்போது அவனை மாற்றிவிட்டன. அவன், அவள் வசத்தினனாய் மாறி அவளுடன் சரசமாடுவதே தன் செயலாக இருக்கலாயினான். வேகவதியும் அவன் இன்பத்தில் மிக்க விருப்பமுற்று, அவனுடனேயே கோசாம்பியில் தங்கியிருக்க முற்பட்டுவிட்டாள். முதலில் தோன்றிய சிறிது சந்தேகமும் இப்போது இல்லாமல் வேகவதியோடு நெருங்கிப் பழகத் தொடங்கி விட்டான் நரவாண தத்தன்.

வித்தியாதர லோகத்தில் மானசவேகன் தான் மதன மஞ்சிகையிடம் அனுப்பிய தன் தங்கை வேகவதியைக் காணாமல் சந்தேகங்கொண்டு தன்னுடைய மந்திர வலிமையினால், ‘அவள் அப்போது எங்கே இருக்கின்றள்’ என்பதை ஆராய்ந்து பார்த்தான். அவள் இருக்குமிடத்தைப் பற்றிய உண்மை அவனுக்குத் தெரியவந்தது. தான் கூறிய காரியத்தையும் தன்னையும் மறந்து வேகவதி கோசாம்பி நகரத்தில் நரவாண தத்தனுடனே இன்ப விளையாடல்களைப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்தபோது, அவள்மேல் அவனுக்குப் பெருங்கோபம் எழுந்தது. அடக்கமுடியாத அந்தக் கோபத்தில் தனக்கு மதனமஞ்சிகையின் மேலிருந்த ஆசையையும் மறந்து, தங்கையின்மேல் ஆத்திரத்தோடு கோசாம்பி நகரத்துக்குப் புறப்பட்டான் அவன்.

கோசாம்பிக்கு வந்து சோலையில் அவர்களைக் கண்ட அவன் மனம் பற்றி எரிந்தது. நரவாணனும் வேகவதியும் அப்போது இருந்த நிலையே அவன் மனத்தைக் கொதிக்கும் படி செய்தது. சோலையில் இருந்த வேகவதியையும் நரவாணனையும் அப்படியே சிறைசெய்து கட்டி வலியப் பற்றி இழுத்துக்கொண்டு வான்வழியாக மேலே கிளம்பினான் மானசவேகன். அவர்களிருவரையும் சரியானபடி தண்டிக்க வேண்டும் என்பது அவன் ஆத்திரமுற்ற நெஞ்சத்தின் தீர்மானம். வானத்தின்மேல் சென்று கொண்டிருக்கும் போதே இடைவழியில், திடீரென்று நரவாணனைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டான். தனக்கு இன்பமளித்த தன் காதலனைத் தன் தமையன் இவ்வாறு தள்ளியதைக் கண்டு தன் மந்திர வலிமையால் அவன் யாதொரு துன்பமும் அடையாமல் உயிரோடு பூமியைச் சென்றடைவதற்கு ஏற்பாடு செய்தாள் வேகவதி.

வேகவதியினது ஏற்பாட்டின்படி நரவாணன் ஒரு துன்பமுமின்றி ஓர் ஆசிரமத்தில், காட்டுநதி ஒன்றின் கரைப் புறமாகப் பூமியில் வந்து இறங்கினான். அந்த ஆசிரமத்தில் உள்ள முனிவரைச் சந்தித்துத் தனக்கு நேர்ந்த துன்பங்களைக் கூறி, அவற்றைத் தவிர்க்க வழியும் கேட்கலாம் என்றெண்ணினான் நரவாண தத்தன். உதயணனுக்குத் தந்தையும் தனக்குத் தாத்தாவுமாகிய சதானிக முனிவருடைய ஆசிரமம்தான் அது என்றறிந்தபோது நரவாணனின் வியப்பு இன்னும் பன்மடங்காகப் பெருகிற்று.