பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கியத்தின் வல்லமை

விக்கிமூலம் இலிருந்து

இலக்கியத்தின் வல்லமை.

பொதுவாக, வாழ்வினைச் செம்மை செய்யும் வல்லமை பெற்றது இலக்கியம். சிறப்பாகத் தமிழ் இலக்கியம் அக வாழ்வு, புறவாழ்வு என்னும் வாழ்வியற் சட்டகத்தைக் கொண்டெழுந்த வளமார் பெட்டகம். ஒரு பெரும் குமுகாயமான தமிழ்க்குமுகாயத்திற்கு இறவா வாழ்வளித்து வருவன தமிழ் இலக்கியங்கள். இவ்வுண்மை பாரதியாரின் உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்தது. தமிழால்-தமிழ் இலக்கியங்களால்-அவற்றினும் சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம் என்னும் மூன்று செம்மாந்த இலக்கியங்களின் துணை வலியால் தமிழர் வாழ்வு செழித்திருந்தது-செழிக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு பாரதிபால் பளிச்சிடுகிறது.

தமிழ்க்குமுகாயத்திற்குச் இறவாவாழ்வளிக்கும் வல்லமை சிலப்பதிகாரச் செய்யுளுக்கு உண்டென்று பாரதி திண்ணங்கொண்டிருந்தார். திருக்குறள் அதற்கேற்ற உறுதியையும் தெளிவையும்; கொண்டிருப்பதை உணர்ந்தார். திருக்குறளின் பொருளாழமும், விரிவும், கருத்தழகும் தமிழ்க்குமுகாயத்தின் ஊட்டச்சத்துகள் என்று உறுதி கொண்டிருந்தார். தமிழ்ச் சாதியின் மேம்பாட்டிற்குக் கம்பன் தனியொரு புதுமுயற்சி செய்துள்ளான் என்று நம்பினார். இத்திண்ணத்தையும். உறுதியையும், நம்பிக்கையையும் ஒன்று கூட்டிச் செம்மைக் குரலெடுத்து.

சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
எல்லையொன் றின்மை எனும்பொரு ளதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்ததென்
றுறுதி கொண் டிருந்தேன்.”

-என்று தமிழச் சாதி எனுந் தலைப்பில் பாடினார். பாடும் போக்கில்,

“உறுதிகொண்டிருந்தேன்”
-என்று இறந்த

காலத்திற் கூறும் போக்கில் இன்றையத் தமிழ்ச் சமுதாய இழப்பை மின்னலிட்டுக் காட்டுகின்றார். இவ்விறந்தகாலத் குறிப்பால் அவரது குரல் உள்ளிழுக்கப்பட்டாலும் இலக்கியம் பற்றி தாம் கொண்ட உறுதிப்பாட்டைத் தளர்த்திக் கொண்டார் அல்லர்.

இடைக்காலத்தே தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பகைப்படலத்தை எண்ணுகிறார். தமிழச் சாதியைப் பிடித் தாட்டிய பகைகள் பதினாயிரம். அவற்றில் தமிழச்சாதி சிக்கியதும் உண்டு. ஆயினும், அசைந்து கொடுக்கவில்லை. தளராமல், தடுமாறாமல் ஊக்கங்கொண்டு உழைத்தது தமிழச்சாதி. அது பகைகளுக்கிடையே வகுத்துக் கொண்ட நெறி செந்நெறி, வெல்வெறி என்பதை உன்னி உன்னி உணர்ந்தார். அவ்வுணர்வை மீட்டிப் பாடுகிறார் :


“.............ஒருபதி னாயிரம்

சனிவாய்ப் பட்டும், தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்”

-என்பதன் வாயிலாகத் தன் உள்ளக்கிடக்கையை அறிவித்ததோடு தமிழச் சாதியின்மேல் தனக்கிருக்கும் பெருங்கவனத்தையும் புலப்படுத்தியுள்ளார்.

இலக்கியத்தின் இத்தகைய வல்லமையை அறியாதார் பலர்; நம்பாதார் பலர். அன்னார் ‘இலக்கியம் ஒரு பொழுது போக்குத் துணைக்கருவி; புலவர்களது பிழைப்பு மூட்டை’ என்றனர். இவ்வாறு ஓர் எண்ணம் முளைத்த நாள் முதலே இலக்கியப் பயிற்சி குறைந்தது. குறையவே தமிழர் தம் வாழ்வின் நெறி பிறழ்ந்தது. சோலை சூழ்ந்து, தண்ணென்னும் நன்னீர் நிறைந்து தாமரை மலர்ந்து மணங் கமழ, வண்டிசைத்து வண்ணம் பொழியும் நீர்க்குளமாய் இலங்க வேண்டிய தமிழச் சாதி நோய்க்களம் ஆனது.

இதனை ஓர்ந்து உணர்ந்த பாரதி தமிழ்ச் சாதிக்காகக் கவன்றார். ‘இஃதும் விதியின் விளையாட்டோ’ என்று வெதும்பினார். விதியை விளித்து ஓலமிட்டார்:

“ நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயனீர் இலதாய்
நோய்க்கன மாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செய நினைத்தாய்? எனக்குரை யாயோ? ”

-என்னும் அவரது ஓலத்தில் அவர் தமிழச் சாதியின்பால் கொண்டிருந்த பரிவும், கவற்சியும் பின்னிப் பின்னித் தோன்றுகின்றன.

தமிழ்ப் பண்பாடும், அதை யொட்டிய பெருந்தகவும் தமிழரிடையே நாளுக்கு நாள் அருகின; அவற்றிற்கும் தமிழர்க்கும் இயல்பாய் அமைந்திருந்த தொடர்பு காலத்திற்குக் காலம் நெகிழ்ந்தது. அந்நெகிழ்ச்சி காலஞ் செல்லச் செல்ல நெக்குவிட்டது. போகப் போக விரிந்தது; இடைவெளி உண்டாயிற்று. இடையே இடையீடுகள் புகுந்தன. இவ்விடையீடுகள் பலப்பலவாய் விரியினும், யாவற்றையும் வகையுள் அடக்கி அவ்வகைகளையும் சுருக்கித் தொகுத்தால் ஒரு சிலவாகவே அமையும். அவற்றுள் ஒன்று இலக்கியப் பயிற்சி அருகியமை எனத் தெளிவாகக் கூறலாம். அவ்விலக்கியப் பயிற்சி அருகியதற்கும் பல்வகை. இடையீடுகள் உண்டு. அவற்றுள் ஒன்றைப் பாரதியார் தெளிவாக்கினார்.

இந்தியப் பெருநாட்டில் இடம் பிடித்த வெள்ளையர் ஆட்சி இந்நாட்டுத் தகவுகளை இந்நாட்டவரே அறியவும் கைக்கொள்ளவும் இயலாமல் தடை செய்தது. இதனைத் தேர்ந்து தெளிந்த பாரதியார் வெள்ளையர் ஆளுகையில் அமைந்த கல்வி முறையை உற்று நோக்கினார். வேற்றார்தம் மொழியாம் ஆங்கிலத்திற்கும், அவர்தம் நெறிக்கும் அமைக்கப் பட்ட ஏற்றத்தை நோக்கினார். அதனால் தத்தம் பெருநாட்டின் பெருமைகளும் நற்குறிக்கோள்களும் நேரிய வழி காட்டிகளும் அவற்றைப் படைத்தோரும் கல்வித் துறைகளினின்றும் ஒதுக்கப் பட்டிருந்ததையும் நோக்கினார். இது பாரதியாரின் உள்ளத்தே ஊசி முனையாய்க் குத்தியது. ‘ஆங்கிலம் பயிலும் பள்ளியில் போகுநர் நம்பெருமைகளையும் அவற்றை விளைவித்த சான்றோர்களையும் அறிந்திலரே’ என்று கவன்றார்.

அவ்வாறு அறியப்படாது விடுபட்டோரெல்லாரும் நம் நாட்டின் ஏற்றத்திற்கு நல்லடிப்படை அமைத்தவர்கள் என்பதை உணர்ந்தார்.

அன்னாரை யெல்லாம் பட்டியலிடத் தொடங்கினார். அப்பட்டியலில் தமிழகத்துத் தலையாய இலக்கியங்களைப் படைத்துத் தன்னுள்ளங் கவர்ந்த மூவரையும் குறித்தார். அத்துடன் அவர்க்கெல்லாம் முதுகெலும்பாய் உதவிய தமிழ் மன்னர்களையும் குறித்தார்.

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”

என்று தொடங்கி, இடையே, காளிதாசன், பாஃச்கரன், பாணினி, சங்கரன் ஆகியோரைச் சுட்டிக் காட்டி,

“கோன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான் மறை செய்ததும்”
-என்று தொடர்ந்து
“அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர்”

-என்று முடிவு கூற எண்ணியவர் உள்ளம் எரிகிறார். ‘இவையாவும் அறியாது பேடிக் கல்வி பயின்று உழல் பித்தர்கள்’ என்று மக்களைச்சாடிவிட்டு,

“என்ன கூறி மற் றெங்கன் உணர்த்துவேன்;
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே."

என்று நொந்து கொள்கிறார்,

இக்கருத்துகளைப் பாரதியார் தமது வரலாறு கூறும் ‘சுயசரிதை’ப் பகுதியில் வெளிப்படுத்தியுள்ளதை நினைக்குங்கால் தமிழரது வாழ்வைத் தம் வாழ்வுடன் எவ்வாறு இயைத்துள்ளார் என்பது புலனாகின்றது.

இப்புலப்பாட்டுடன் தாம் தேர்ந்தெடுத்த முப்புலவரது தன்மைகளையும், அவர்தம் இலக்கியங்களின் இயல்புகளையும், வாய்ப்பு நேரும் போதெல்லாம் முறையாகப் பதித்துள்ளார் என்பதும் வெளிப்படுகின்றது.

ஆம், ‘முறையாகப் பதித்துள்ளார்’ என்றே அதனைக் குறிக்க வேண்டும். ‘மறவாமல் மேற்கோள் காட்டியுள்ளார்’ என்று அதனைக் குறித்தல் கூடாது. ஏனெனில், பாரதி தமிழ் இலக்கியங்களை நோக்கிய நோக்கு மேற்கோள் நோக்கு அன்று; உட்கோள் நோக்கு. ஒவ்வோர் இலக்கியத்திற்கும் ஒவ்வோர் உள்ளீடு உண்டு. அவ்வுள்ளீடு அந்நூல்முழுமையும் இழையோட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும். பாரதியார் தாம் குறித்த இலக்கியங்களில் அவ்வுள்ளீடுகளைத் தொட்டு உணர்ந்தவராய்ப் பேசியுள்ளார்.