அறிவுக் கதைகள்/நமக்கு நாமே எதிரி

விக்கிமூலம் இலிருந்து
35. நமக்கு நாமே எதிரி!

காட்டிலே ஒரு சிங்கம் மற்ற மிருகங்களைத் துன்புறுத்தி அடித்துத் தின்று கொண்டிருந்தது. இதனால் பிற வனவிலங்குகள் யாவும் கூடி ஒரு முடிவுக்கு வந்தன. சிங்கத்திடம் சென்று. “இன்று முதல் எங்களை அடித்துத் துன்புறுத்தாதீர்கள். நாங்களே முறைவைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக உங்களிடம் வந்து சேர்கிறோம்” என்று, அவை யாவும் விண்ணப்பித்துக் கொண்டன.

அதற்கு மிருகேந்திரனும் சம்மதிக்க, அவ்வாறே நடந்து வந்தது. ஒருநாள் முயலின் முறை வந்தது. அது சிங்கத்தைக் கொல்லத் திட்டுமிட்டுத் தாமதமாகவே சென்றது. சிங்கம் காரணம் கேட்க, ‘இக்காட்டில் வேறு ஒரு சிங்கம் என்னைத் தின்ன வந்தது. நான் ஒடிப்போய் அதனிடமிருந்து தப்பிவரத் தாமதமாயிற்று’ என்று விளக்கியது.

அதைக் கேட்ட சிங்கம் வெகுண்டு, ‘அச்சிங்கத்தைக் காட்டு’ என முயல் பின் தொடர்ந்து சென்றது. முயல் ஒரு கிணற்றைக் காட்டி, ‘இதற்குள் ஒளிந்திருக்கிறது’ என்றதும், சிங்கம் எட்டிப் பார்த்தது. சிங்கத்தின் நிழல் பாழுங்கிணற்று நீரில் தெரியவே, அதுவே தன் எதிரி என எண்ணிக் கிணற்றுக்குள் பாய்ந்து உயிர் நீத்தது.

இது ஒரு நீதிக் கதை. இந்தக் கதை எல்லோர்க்கும் தெரியும் ஆனால் நம்மில் பலர் இக் கதையின் நீதியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ‘தனக்குத்தானே எதிரி’ என்பதை சிங்கம் உணராததால் அழிந்தது. மனிதரில் பலர், ‘நமக்கு நாமே எதிரி’ என்பதை இன்னும் உணரவில்லை.

சிங்கம் தண்ணிரில் தன் உருவத்தைப் பார்த்து எதிரி என்று பாய்ந்து இறந்தது. மனிதர்களும் தினமும் கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு நாமே எதிரியாக இருக்கிறோம் என்று உணர வேண்டும்.

அப்படி உணராததால்தான், பலரை வைது, நாம் வையப் பெறுகிறோம்; சிலரை அடித்து நாம் அடிவாங்குகிறோம்; பலரை ஏமாற்றி நாம் ஏமாற்றம் அடைகிறோம்: பிறரைக் கெடுத்து, நாம் கெட்டுப்போகிறோம்.

இப்படிப் பார்க்கும்போது, ‘நமக்கு நாமே எதிரி’ என்ற உண்மையை மக்கள் என்று உணர்ந்து கொள்ளப் போகிறார்களோ அன்றுதான் அவர்களின் வாழ்வில் ஒரு நல்ல திருப்பமும் ஒளியும் உண்டாகும்’ என்பது தெளிவாகிறது.