அறிவுக் கதைகள்/குரங்கும் குருவியும்

விக்கிமூலம் இலிருந்து

63. குரங்கும் குருவியும்

மழைக்காகப் பயந்து மரத்தடியில் ஒதுங்கி நின்றது ஒரு குரங்கு.

அப்போது அம் மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்துவரும் தூக்கணாங் குருவி, குரங்கைப் பார்த்து, “அண்ணே, நீ உருவத்தில் மனிதனைப் போலவே இருக்கிறாயே, உன் கை கால்களை உபயோகித்து ஒறு நல்ல குடிசை உனக்காகக் கட்டிக் கொள்ளலாமே! அதைவிட்டு நீ ஏன் இப்படி மழையில் நனையவேண்டும்?” என்று கேட்டது.

அதைக் கேட்ட குரங்கு, உடனே ஆத்திரமடைந்து, குருவிக் கூண்டைப் பிய்த்து எறிந்து நாசமாக்கியது.

அதனால் வருந்திய குருவி, அரசனிடம் சென்று முறையிட்டு, தனக்கு நீதி வழங்கும்படி கேட்டது.

அரசனும் விசாரணைக்காக குரங்கை அரண்மனைக்கு அழைத்தான். குரங்கும் ஒரு பெரிய பலாப்பழத்தைத் தன் தலையில் தூக்கி வந்து, யாருக்கும் தெரியாமல் அரசனுக்குப் பின்னால் வைத்துவிட்டு, எதிரில் வந்து நின்றுகொண்டது.

மிகவும் பயபக்தியுடன் தன்னை வணங்கி நின்ற குரங்கைப் பார்த்து அரசன், “ஏ அற்பக் குரங்கே உனக்கு எவ்வளவு திமிர்! ஒரு சிறு பிராணி உனக்கு நல்ல புத்திமதி சொன்னால், அதற்காக இப்படியா பழி வாங்குவது?” என்று கேட்டான்.

அதற்குக் குரங்கு, “மகாராஜா முன்னே பின்னே பார்த்துப் பேசுங்கள்” என்றது. அரசனும் திரும்பிப் பின்னால் பலாப்பழம் இருப்பதைக் கண்டான்.

உடனே அரசன் குருவியைப் பார்த்து. “ஏ அற்பக் குருவியே! உனக்கு என்ன திமிர் இருந்தால் குரங்குக்குப் போய் புத்தி சொல்வாய்? உன்னுடைய முட்டாள்தனத்திற்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். சரி, தொலையட்டும். இத்தோடு நீ ஒடிப்போ” என்று கூறி, குருவியை விரட்டிவிட்டான்.

எப்படி பலாப்பழம் செய்த வினை.