கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/மூன்று குற்றங்கள் மீது சிதம்பரனார், சிவா கைது!

விக்கிமூலம் இலிருந்து
7. மூன்று குற்றங்கள் மீது
சிதம்பரனார், சிவா கைது

சிதம்பரனார், சிவா என்ற இருபெரும் தேசபக்தர்களின் செல்வாக்கும் மக்கள் இடையே நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி, ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்குகிறது என்ற அச்சத்தால் அவர்களை எப்படியும் கைது செய்வது என்ற முடிவுக்கு பிரிட்டிஷ் அரசு வந்தது.

இந்த இருவரையும் தூத்துக்குடி நகரத்தில் கைது செய்தால், கலவரமும் கலகமும் அங்கே பரவிவிடும்; அதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு மக்கள் இடையே தேசிய புரட்சிக்கு பலம் உருவாகிவிடும் என்று வெள்ளையர்கள் பயந்தார்கள். அதனால், சிதம்பரனாரையும், சிவாவையும் திருநெல்வேலிக்கு வருமாறு மாவட்டக் கலெக்டர் விஞ்ச் உத்தரவிட்டார்.

திருநெல்வேலிக்கு சிதம்பரனார் புறப்பட்டபோது அவரது நண்பர்கள் போக வேண்டாம் என்று அவரைத் தடுத்தார்கள். ஏனென்றால், கலெக்டர் விஞ்ச் எப்படியும் சிதம்பரனாரைக் கைது செய்து விடுவார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனை சிதம்பரம் பிள்ளையும் அறிவார். இருந்தாலும், கலெக்டர் அழைத்த பின்பு உடனடியாகச் செல்லாவிட்டால், பின் விளைவுகளும், மேலும் தொல்லைகளும் அதிகமாக ஆகிவிடுமே. அதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிதம்பரம், சிவாவுடன் திருநெல்வேலி வந்தார். மார்ச் 12- ஆம் தேதி சிதம்பரமும் - சிவாவும் விஞ்ச் துரையைப் பேட்டி கண்டனர். இருவரையும் நேரில் கண்ட கலெக்டர், சிதம்பரம் நீங்கள் கப்பலோட்டியது முதல் குற்றம்; அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டியது இரண்டாவது குற்றம்; பாமர மக்களை ‘வந்தே மாதரம்’ என்று கோஷம் போடுமாறு தூண்டிவிட்டது மூன்றாவது குற்றம் என்று இருவர் மீதும் இந்த மூன்று குற்றங்களையும் கலெக்டர் விஞ்ச் சுமத்தினார்.

எங்களது நாட்டில் பொதுமக்களோடு நாங்கள் கூடிப் பேசியது குற்றமா? அதற்கு உங்களுடைய அனுமதி எங்களுக்கா வேண்டும்? எங்களது தாய்நாடு இந்தியா. அது நாங்கள் பிறந்த மண்! அந்த பூமியை வாழ்க என்று நாங்கள் கோஷிப்பது எப்படி குற்றமாகும்? எங்களது வாணிபம் வளர, எங்களுடைய பொருளாதாரத்தைக் கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, நாங்கள் சொந்தமாக, எங்களுடைய பணத்தில் கப்பல்கள் வாங்கி வளம் பல பெருக கப்பல் ஒட்டுவது எப்படிக் குற்றமாகும்? எங்களுடைய சதைகளைத் துண்டு துண்டாக வெட்டி எடுத்து வேதனைப்படுத்தினாலும், நாங்கள் எங்கள் மக்களுக்காகப் பணியாற்றுவதை ஒரு போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம். எங்களது இதயத்திலே இருந்து பொங்கி எழும் சுதந்திர உணர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. இது உறுதி! என்று விஞ்ச் துரை புகார்களுக்கு சிதம்பரம் பதில் கூறினார். பதிலைக் கேட்ட கலெக்டர், ‘அப்படியானால், நீர் திருநெல்வேலி நகரை விட்டு உடனே வெளியேற வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அரசியல் கிளர்ச்சிகளில் இனிமேல் ஈடுபடமாட்டேன் என்று நன்னடத்தை ஜாமீன் தர வேண்டும் என்றும் அவர் கோபாவேசமாக எச்சரித்தார்.

‘திருநெல்வேலி மாவட்டம் நான் பிறந்த மண், ஒருபோதும் அதைவிட்டு வெளியேற மாட்டேன். வேண்டுமானால் என்னைக் கைது செய்து கொள்க’ என்று சிதம்பரனாரும் கோபமுடன் பதிலளித்தார்.

உடனே, அந்த இடத்திலேயே, சிதம்பரனாரையும், சிவாவையும் கலெக்டர் உத்தரவால் கைது செய்தார்கள். சிதம்பரனார் வீட்டைச் சோதனை போடுமாறு போலீசாருக்கு கலெக்டர் ஆணையிட்டார்.

மாவீரன் சிதம்பரனாரும், சிவாவும் கைதான செய்தி மாவட்டம் முழுவதும் காட்டுத் தீ போலப் பரவியது. வர்த்தகர்கள் கடைகளை அடைத்தார்கள். மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத்தார்கள். தேசாபிமானிகளும் பொதுமக்களும் கலெக்டர் பங்களாவைச் சுற்றி வளைத்துக் கொண்டு எதிர்ப்புக் கோஷமிட்டார்கள். பொதுக் கூட்டங்களைக் கூட்டி கலெக்டரின் ஆணவப் போக்கை எதிர்த்துக் கண்டனம் செய்து முழக்கமிட்டார்கள். நெல்லை நகர் முழுவதும் ஒரே கலவரமும் - குழப்பமுமாகக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

நகரிலே அமைதியை ஏற்படுத்த போலீஸ்படை குவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் நகர் பகுதி முழுவதிலும் கூடி சிதம்பரனாரையும், சிவாவையும் விடுதலை செய், வெள்ளையர் ஆட்சி ஒழிக. என்ற முழக்கங்களை வீராவேசமாக எழுப்பிக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள்.

நெல்லை நகராட்சி மண்ணெண்ணெய் கிடங்குக்கு தீ வைத்தார்கள். அந்த கிடங்குகள் பெருநெருப்பிலே எரிந்து ஜூவாலைகளை எழுப்பின. ஆங்கிலேயர் அலுவலகங்கள் எல்லாம் தீக்கிரை ஆயின.

பொதுமக்கள் நெல்லை நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேசைகள் நாற்காலிகள், மற்ற பொருட்களை எல்லாம் தவிடு பொடியாக்கினார்கள். அவைகட்குத் தீயிட்டார்கள்.

சர்ச் மிஷன் என்ற கல்லூரியிலே புகுந்து அங்கே இருந்த பொருட்களை எல்லாம் உடைத்து வீதியிலே தூக்கி எறிந்தார்கள். அந்தக் கல்லூரியும் தீக்கு இரையானது. போலீஸ் ஸ்டேஷன் உள்ளே புகுந்த பொது மக்கள் அங்கிருந்த துப்பாக்கிகள், லட்டிகள், வேறு சாமான்களை எல்லாம் நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். போலீஸ் ஸ்டேஷனும் தீயிலே எரிந்தது.

பொதுமக்களின் இந்தக் கோபாவேஷ அழிப்புச் சக்திகளைக் கேள்விப்பட்டக் கலெக்டர் விஞ்சும், போலீஸ் சூப்பிரண்டுகளும், போலீசாரும் அங்கங்கே ஓடிக் கலகத்தை அடக்க முயன்றார்கள். போலீசார் பொதுமக்களை விரட்டுவதும், பொதுமக்கள் போலீசாரைத் துரத்தி துரத்தி அடிப்பதும் பெரும் கலவர பூமியாக நெல்லை நகர் காணப்படுவதும் கண்டு ஊர் மக்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டு வீதிகள் தோறும் ஆரவாரமிட்டபடியே இருந்தார்கள். இக்காட்சிகளை நேரில் கண்ட டிப்டிக் கலெக்டர் ஆஷ் துரை, தனது கைத் துப்பாக்கியால் பொதுமக்களைச் சுட்டார். இதனால் நான்கு பேர் நடுரோட்டிலேயே பிணமானார்கள். மூன்று பேர் படுகாயம் அடைந்தார்கள். இவர்களுள் மூன்று பேர் இந்துக்கள் ஒரு முஸ்லீம் மற்றவர் ஆதி திராவிடர். இறந்தவர்களது பிணங்கள் அவரவர் உறவினர் வரும் வரை ரோட்டிலேயே கிடந்தன.

துப்பாக்கியில் குண்டுள்ள வரை சுட்ட ஆஷ் துரை, குண்டுகள் தீர்ந்ததும் அங்கிருந்து தனது காரிலே ஏறி ஓடினார். அவரைப் பொதுமக்கள் விடாமல் பின்னாலேயே துரத்திக் கொண்டே ஓடினார்கள். ஆஷ்துரை நல்லகாலமாகத் தப்பித்து ஓடிவிட்டார்.

பொதுமக்களும், தேசாபிமானிகளும் போலீஸ்கார்கள் மீது சரமாரியாகக் கற்களை எறிந்து வெள்ளை அதிகாரிகளை விரட்டியபடியே இருந்தார்கள். அதனால், ஓர் இன்ஸ்பெக்டருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

கலெக்டர் விஞ்ச் ரத்தம் சொட்டச் சொட்டப் பலத்த காயமடைந்தார். இந்தக் கலவரம் அன்று ஒரு நாளல்ல, மூன்று நாட்களாகத் தொடர்ந்து இரவு பகலென்று பாராமல் நடந்து கொண்டே இருந்ததைக் கண்ட விஞ்ச், நெல்லை நகர சாதாரண போலீசாரால் அதை அடக்க முடியாது என்பதை உணர்ந்து, சென்னையிலே உள்ள பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு செய்தியைத் தெரிவித்தார்!

உடனே சென்னையிலே உள்ள ஆங்கிலேயே அதிகாரிகள் ஆயுதம் தாங்கிய போலீஸ் படைகளைத் திருநெல்வேலிக்கும், தூத்துக்குடிக்கும், தச்சநல்லூருக்கும் அனுப்பி வைத்தார்கள். திடீர் திடீரென்று தூத்துக்குடி நகரமும் தீயிலே எரிவதைக் கண்ட போலீஸ் படைகள், அங்கேயும் விரைந்து சென்று கலகத்தை அடக்க முயன்றார்கள்.

இவ்வளவு போலீஸ் படைகளைக் கலவர இடங்களுக்கு அனுப்பி வைத்த வெள்ளையராட்சி, அதற்கான எல்லா செலவுகளையும் பொதுமக்களிடமே வசூலிக்குமாறு உத்தரவிட்டார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கெங்கு வெள்ளையர்கள் குடியிருந்தார்களோ, அங்கே எல்லாம் போலீஸ் படைகளும், ராணுவப் படைகளும் இரவு பகலாகக் காவல்கள் இருந்தார்கள்.

ஆங்கிலேயரின் இந்த அராஜகங்களைக் கண்ட குருசாமி ஐயரும், மற்றும் இரண்டு பிரமுகர்களும் சென்னை சென்று, ஆயுதங்களை ஏந்தி அலையும் ராணுவப் படைகளையும், போலீஸ் படைகளையும் உடனே திரும்பப் பெற வேண்டினார்கள். ஆனால், அவர்களது வேண்டுகோளை வெள்ளையராட்சி நிராகரித்து விட்டது.

இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக, நெல்லை நகரப் போலீசார், திருநெல்வேலி, தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலே உள்ள பொதுமக்கள் 80 பேர்களைக் கைது செய்தனர். அவர்களுள் ஒரே ஒருவர்தான் விடுதலையானார். மற்ற 79 பேர்களும் பலவிதப் பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டு, பலவித தண்டனைகள் வழங்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.