இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் பெற்றோர்

விக்கிமூலம் இலிருந்து

பெரியாரின் பெற்றோர்

பெரியார் இராமசாமி 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் பிறந்தார். அவருடைய ஊர் ஈரோடு. அவருடைய தந்தையார் பெயர் வெங்கட்டர். தாயார் பெயர் சின்னத் தாயம்மாள். சின்னத் தாயம்மாளை அவருடைய பெற்றோர்கள் அன்பாக முத்தம்மா என்று அழைப்பார்கள்.

வெங்கட்டர் ஏழைக் குடியில் பிறந்தார். அவர் இளம் வயதில் தந்தையை இழந்தார். தாயாரும் சிறிது காலம் சென்றதும் இறந்து போனார். அவருக்குப் பனிரெண்டு வயது நடக்கும் போதே கூலி வேலை செய்து பிழைத்தார். வெங்கட்டருக்கு 18 வயது ஆகும் போது திருமணம் நடந்தது. சின்னத்தாயம்மாள் ஒரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவரும் குடும்பச் செலவுக்காக கூலி வேலைகள் செய்தார். இருவருக்கும் கிடைத்த மிகச் சிறிய வருவாயில் மிச்சம் பிடித்து வெங்கட்டர் வண்டியும் மாடுகளும் வாங்கினார். பிறகு ஒரு சிறிய மளிகைக் கடை வைத்தார். அவருடைய ஒயாத உழைப்பினாலும், சின்னத் தாயம்மாள் உதவியாலும் மளிகைக்கடை சில ஆண்டுகளில் மண்டிக்கடை ஆயிற்று. மிகப் பெரிய செல்வர் ஆகிவிட்டார்.

ஒரு மரம் பழுத்து விட்டால் காக்கைகளும், குருவிகளும், அணிலும், வெளவாலும் வந்து சேரும். அதுபோல வெங்கட்டர் பணக்காரர் ஆனவுடன் பண்டிதர்களும், பாகவதர்களும், பக்தர்களும் அவரைத் தேடி வந்தார்கள்.

உழைப்பினால் வந்த பணத்தை கடவுள் அருளால் வந்ததென்று அவர்கள் கூறினார்கள். மேலும் கோயில் திருவிழா என்று தருமம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்றார்கள். வெங்கட்டருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போயின. தொடர்ந்து பத்து ஆண்டுகள் பிள்ளை பிறக்கவில்லை. இதனால் அவர்கள் பக்தியுடன் பிள்ளை வரம் கேட்டு விரதம் இருந்தனர்.

பத்து ஆண்டுகள் கழித்து முதல் பிள்ளையாக கிருஷ்ணசாமி பிறந்தார் அதன்பின் இரண்டாண்டுகள் கழித்து இராமசாமி பிறந்தார்.