விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/மறவர் சீமை

விக்கிமூலம் இலிருந்து
மறவர் சீமை

மறவர்

பாண்டிய நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் நெய்தலும் பாலையுமாக அமைந்திருந்த பகுதியில் இயல்பாகவே கடின வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்கள் மறவர்கள். அவர்கள் வாழ்ந்த மண்ணிலே பயிர்தரும் விளைச்சல் இல்லை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் உயிர் வளர்க்கும் வீரம் இருந்தது. புகழ் இருந்தது. பெருமை தரும் போர் ஆற்றலும் நிறைந்து இருந்தது. மான உணர்வும் அஞ்சாமையும் விஞ்சிய இந்த மக்கள், பாண்டியர்களது மாசு துடைக்கும் தூசுப் படையாக இருந்தனர். பகைவரைப் பொருதி பொன்றாத வெற்றியையும் புகழையும் சேர்த்தனர்.

'அமரர் தம் உலகொடு, இவ்வுலகு கைப்படும் எனினும் அது ஒழிபவர், உயிரை விற்று உறுபுகழ் கொள உழல் பவர்' ஆக இருந்தனர் என ஜெயங்கொண்டார் அவர்களைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[1] இதன் பொருட்டு போர் எனில் புகழும் புனைகழல் மறவர்' என புறப்பாட்டும்[2] 'பகை எனில் கூற்றம் வரினும் தொலையான்' என கலித்தொகையும்[3] அவர்களுக்குக் கட்டியம் கூறுகின்றன.

ஏழாவது நூற்றாண்டில் இருந்த அய்யனாரிதனார் என்ற தமிழ்ப் புலவர், மறவர்களது புகழ் வாழ்க்கையை மறப்பண்புகளின் இலக்கணமாக புறப்பொருள் வெண்பாமாலை என யாத்துள்ளார். 

வில்வேர் உழவரான இநத வீர மறவர்கள, பானடியப் பேரரசில், மழவராயர், வில்லவராயர், நாடாள்வார், முத்தரையர். முனையதரையர், காங்கேயர் என்ற வீர விருதுகளுடன் சிறப்பான அரசியல் தலைவர்களாக விளங்கி வந்தனர்.[4] பின்னர் சோழ பாண்டியர்கள் ஆட்சியிலும், விஜயநகர நாய்க்கர்களின் ஆதிக்கத்தின் பொழுதும் அவர்களது அரசியல் பாதுகாவலராக இருந்து வந்தனர். வெள்ளாற்றிற்கும் வேம்பாற்றிற்கும் இடைப் பட்ட பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் பன்னிரண்டாவது நூற்றாண்டில், தெற்கேயுள்ள நெல்லை மாவட்டத்துக்கு குடி பெயர்ந்ததாகத் தெரிகின்றது.[5] இவர்களில், தெற்குப் பகுதியில் இருந்தவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு அடங்கிய குறு நிலக்கிழார் (பாளையக்காரர்) களாக இருந்து வந்தனர். இவர்களில் சிவகிரி, சேத்துார், சிங்கம்பட்டி, சொக்கம்பட்டி, ஊத்து மலை, ஊர்க்காடு, கடம்பூர், காடல்குடி, குளத்துார், சுரண்டை , தலைவன் கோட்டை , நெல் கட்டும் செவ்வல், வடகரை பாளையக்காரர்கள் முக்கியமானவர்கள். ஆனால் கிழக்குப் பகுதியில் உள்ள மறக்குடி மக்கள் நாயக்கர்களுக்கும் கட்டுப்படாமல் அவர்களது மேல் ஆதிக்கத்தை மதித்தவர்களாக தன்னரசினராக இருந்தனர். அவர்களது தனிப்பெரும் தலைவர் தான் சேதுபதி மன்னர்.

சேதுபதி மன்னர்கள்

மறவர் மக்களுக்கிடையில் பொதுவாக எழு கிளைகள் உள்ளன.[6] அவைகளுள் செம்பி நாட்டு மறவர் கிளையைச் சேர்ந்தவர்கள் இராமநாதபுரம் அரசர்கள். இந்தக் கிளையினர், இந்து வைதீக நெறியை தீவிரமாகப் பின்பற்றியதால் பிறப்பு, இறப்பு, பூப்பு, திருமணம் போன்ற சமூகப் பழக்க வழக்கங்களில் ஏனைய ஆறு கிளைகளுக்கும் இவர்களுக்கும் இடையில் மிகுந்த வேறுபாடுகள் இருந்தன. இவர்களது விதவைகள் மறுமணம் செய்வது கிடையாது மாறாக, அவர்கள் மாய்ந்த கணவனுடன் தீக்குளிக்கும் கொடிய பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.[7] மறவர் மக்களிடம் அவர்களது ஒப்பற்ற ஒரே தலைவர் என்ற முறையில் சேதுபதி மன்னரிடம் அவர்களுக்கு மட்டற்ற மரியாதையும் அன்பும் இருந்தன.

புதுக்கோட்டை தொண்டைமானும், தஞ்சாவூர் சீமையில் பதினெட்டுப் பாளையக்காரர்களும், மன்னரது சமூகத்தில் கை கூப்பிய வண்ணம் பணிவுடன் நின்றனர்.

பாஞ்சாலங்குறிச்சி கெட்டி பொம்மூவும், காடல்குடி நாயக்கரும், தொக்கலை தொட்டியனும் இதர ஜாதி பாளையக்காரர்களும் மன்னரைச் சந்திக்கும் பொழுது அவர் முன்னர் வீழ்ந்து சாஸ்டாங்கம் செய்யும் வழக்கம் இருந்தது.

ஆனால் எட்டையாபுரம், ஊத்து மலை, சுரண்டை, சிவகிரி, சேத்துார், தலைவன் கோட்டை பாளையக்காரர்கள், இத்தகைய பாவனைகள் எதுவுமின்றி சேதுபதி முன்னர் பணிவுடன் நின்று வந்தனர்.

இந்த சேதுபதி மன்னர்களது ஆட்சித் துவக்கம், அவர்களது முன்னோர் மரபு பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் இதுவரை கிடைக்கவில்லை. புராணங்களும், பிற்கால இலக்கியங்களும் இந்த மன்னர்களை இராமாயண இதிகாசத்துடன் தொடர்புபடுத்திப் பேசுகின்றன. இராமபிரான் சீதையை மீட்டுத் திரும்பும் பொழுது, இராமேசுவரத்தில் இராமலிங்க பிரதிஷ்டை செய்து அந்த லிங்கத்தையும் சேது அணையையும் காத்து வருவதற்கு நியமிக்கப்பட்ட மறவர் தலைவரது வழித் தோன்றல் இவர்கள் என பழங்கதை ஒன்று தெரிவிக்கின்றது.

இன்னொரு ஆவணத்தின்படி தங்களது அரசர்களாக இருந்த பாண்டியர்கள் வலுவிழந்த பிறகு அவர்களை வென்று, மதுரையையும் தஞ்சையையும் கொண்ட பரந்த பகுதியை மறவர்கள் ஆட்சி செய்தனர் என்றும், விஜய நகர நாயக்கர்கள் தமிழகத்தைக் கைப்பற்றும் வரை மறவரது இந்த தன்னரசு நீடித்தது என்றும் தெரிகின்றது.[8] இதனைப் போன்று இன்னும் சில வரலாற்றுக் குறிப்புகளும் சேதுபதி மன்னர்களது தொன்மைச் செய்திகளும் இராமநாதபுரம் மானுவலில் வரையப்பட்டுள்ளன.[9]

மற்றும், சேதுபதி அரச வழியினர், பதினோராம் நூற்றாண்டில் பாண்டி மண்டலத்தைக் கைக்கொண்டு, ஈழத்தையும் வெற்றிக்கொண்ட ராஜராஜ சோழதேவன் இராமேசுவரம் கடற் பாதையைக் கண்காணிப்பதற்கு நியமித்த மறவர் தலைவரது வழியினர் என்றும், பாண்டிய நாட்டை கி.பி. 1170-ல் கைப்பற்றி இராமேசுவரம் கோவிலின் ஒரு பகுதியை நிர்மாணித்த இலங்கை தண்டநாயகனால் நியமனம் செய்யப்பட்ட பிரதிநிதியின் பரம்பரை என்றும் ஆசிரியர் தர்ஸ்டன் குறித்துள்ளார்.[10] சேது சமஸ்தான மகாவித்வானாக விளங்கிய திரு. ரா. ராகவையங்கார், குலோத்துங்க சோழனது காலத்தில் தஞ்சையிலிருந்து பாண்டி நாடு புகுந்த சோழரது தானைத் தலைவர்களாக இருந்து, நாளடைவில் தன்னாட்சி பெற்றவர்கள் சேது மன்னர்கள் என பல ஆதாரங்களை அளித்துள்ளார்.[11]

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்துராசக் கவிராயர் புனைந்துள்ள கைலாய மாலையில், யாழ்ப்பாண நல்லூர் கோயிலை அமைத்த ஆரியச் சக்கரவர்த்தி, இராமநாதபுரம் சேதுபதி மன்னரது உதவியுடன் இராமேசுவரத்திலிருந்த அந்தணர்களை அங்கு வரவழைத்து அந்தக் கோயிலின் குருக்களாக நியமித்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது.[12]

இங்ங்னம் சேதுபதி மன்னர்கள் பற்றிய செய்திகள் பல தரப்பட்டதாயினும், இந்தச் செய்திகள் சுட்டுகின்ற முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. அதனை ஆசிரியர் நெல்சன், 'பல நூற்றாண்டு காலமாக மக்கள், கூட்டம் கூட்டமாக இராமேசுவரத்துக்கு தலயாத்திரை வந்து செல்வதால், இந்தப் பகுதி (மறவர் சீமை)யில் வலிமை பொருந்திய ஒரு தன்னரசு செயல்பட்டிருந்தாலொழிய இத்தகைய அமைதியான தலயாத்திரை சாத்தியமாக இருந்து வரமுடியாது. ஆதலால் முதலாவது சடைக்கன் சேதுபதி (1604-22)க்கும் முன்னர், இந்தப் பகுதியில் சேதுபதி மன்னர்கள் ஆட்சி, செழித்து வந்திருக்க வேண்டும்' என்ற உறுதியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.[13]

இந்த மன்னர்களது தொன்மை எத்தகையதாக இருப்பினும் அவர்கள் பாண்டிய மண்டலத்து நிலக் கூறுகளான கீட்செம்பி நாடு, வடதலைச் செம்பிநாடு, செவ்விருக்கை நாடு கைக்கி நாடு, பொலியூர் நாடு, களவழி நாடு, கானப்பேர்நாடு, தென்னாலை நாடு, இடையள நாடு ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் நிலப்பரப்பின் அதிபதியாக இருந்து வந்தனர் என்று தெரியவருகின்றது.

இந்த மன்னர்களது நாடு, புனிதமிக்க சேது அணையை அடுத்து இருந்ததால், இலக்கியங்கள் இதனை சேது நாடு என சிறப்பித்து வழங்கின. இந்த நாட்டின் கிழக்கு எல்லை வங்கக்கடலாகவும், மேற்கு எல்லை மதுரைச் சீமையின் கிழக்கு எல்லையாகவும், வடக்கு எல்லை பாம்பாற்றுக் கரையாகவும், தெற்கு எல்லை வேம்பாறு வைப்பாறாகவும் அமைந்திருந்தன. ரகுநாத திருமலை சேதுபதி காலத்திலும், கிழவன் சேதுபதி காலத்திலும் வடக்கு எல்லைகள் பரந்து விரிந்தன. இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும் பகுதி அப்பொழுதைய இராமநாதபுரம் அரசிற்கு உட்பட்டிருந்ததை அங்குள்ள கல்வெட்டுக்களும்[14] பட்டயங்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், இந்த மன்னர்களது காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த அரசர்களது ஆட்சியின் போதும் ஏற்பட்ட தஞ்சை மராத்தியரது படை எடுப்புகள் நாட்டுப் பிரிவினை ஆகிய காரணங்களினால் மீண்டும் இந்த நாட்டின் எல்லைகளில் மாற்றமும் மொத்தப் பரப்பில் சுருக்கமும் ஏற்பட்டன. மறவர்களது இந்த தன்னரசு பரப்பு ஆங்கிலேயரது ஆவணங்களில் மறவர் சீமை அல்லது பெரிய மறவர் (Great Marawa) என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேதுபதிகளும் தங்களை ஆளப்பிறந்த அரசர்கள் என எண்ணிக் கொள்ளாமல் இராமபிரானது அடிமைகளாகவே தங்களைக் கருதி ஆட்சி செலுத்தி வந்தனர். இராமேசுவரத்தில் உள்ள இராமநாத சுவாமிக்கு தொண்டு செய்து வாழ்வதை, தங்களது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு தங்களது ஆட்சியை இராமநாத சகாயம்' என வழங்கி வந்தனர். தங்கள் ஆட்சியின் பொழுது இராமநாதசுவாமிக்கு அன்றாட பூஜை, மற்றும் ஆண்டுத் திருவிழாவுக்கென ஏராளமான கிராமங்களை சர்வமான்யமாக அளித்ததுடன், பொன்னையும், பொருளையும் அன்பளிப்பாக வாரி வாரி வழங்கினர். இவைகளினால் திருப்தி அடையாத இந்த மன்னர்கள் கோவிலில் நடக்கும் அர்த்த சாம பூஜையில் கலந்துகொண்டு, முடிவில் அவர்களே தீவட்டி ஏந்தி சுவாமியை வழிநடத்தி பள்ளியறையில் சேர்ப்பிக்கும் பணியையும் அண்மைக்காலம் வரை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். இந்த மன்னர்கள் ஆண்டு முழுவதும் சேதுயாத்திரையாக இராமேசுவரம் வருகின்ற ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சேது பாதை நெடுகிலும் ஆங்காங்கு உணவும், உறையுளும் அளிப்பதற்கு பல அன்னச் சத்திரங்களை அமைத்து பராமரித்து வந்தனர். இந்த சத்திரங்களின் இடிபாடுகளை, இன்னும் சேது பாதையில், தொடர்ச்சியாக பல இடங்களில் காணலாம்


கிடைத்துள்ள வரலாற்றுச் செய்திகளின்படி, கி.பி. 1434ல் உடையான் சேதுபதி என்பவர் ராமேசுவரம் மேலக் கோபுரம், திருமதில் திருப்பணியை மேற்கொண்டதாலும்[15] கி.பி. 1559-ல் ராமேசுவரம் சாலையில் உள்ள வேதானை கிராமத்தில் கோட்டையையும், அகழியையும் அமைத்து இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்கு பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்திய போர்த்துக்கீஸிய பரங்கியரை விரட்டியடிக்க சேதுபதி ஒருவர் மதுரையில் ஆளுநரான விசுவநாதநாயக்கரிடம் இராணுவ உதவி பெற்றதாலும்[16] கீழைக் கடற்கரைப் பகுதியில் சேதுபதிகள், பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் நிலைத்திருந்த விவரம் அறிய முடிகிறது. ஆனால் கி.பி. 1605 முதல் இராமநாதபுரம் மன்னர்களைப் பற்றிய தெளிவான செய்திகள் உள்ளன.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மன்னார் வளைகுடாவில் போர்த்துக்கீஸியரின் நடமாட்டமும் ஆதிக்கமும் அதிகரித்து வந்தன. அப்பொழுது அவர்களைச் சமாளிக்க மதுரை நாயக்க மன்னரிடம் கடற்படை எதுவும் இல்லை. அத்துடன் அவர்களை கடற்கரைப் பகுதியில் பொருதி அழிப்பதற்குத் தகுந்த தரைப்படையும் அவர்களிடம் இல்லை. இந்த அவல நிலையைச் சமாளித்து தமக்கு உதவுவதற்காக கி.பி. 1605-ல் மதுரை மன்னரான முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் புகலூரில் இருந்த முதலாவது சடைக்கன் சேதுபதியை அந்தப் பகுதியின் மன்னராக அங்கீகரித்து, அரசு மரியாதைகளை அளித்தார்.[17] அது முதல் சேது மன்னர்கள் மதுரை நாயக்கர்களது மேலாதிக்கத்தை மதித்து ஏற்றுக்கொண்டவர்களாக இருந்து வந்தனர். இதனால் அவர் களுக்கு தளவாய்[18] என்ற சிறப்புப் பெயரும் இருந்துவந்தது. திருமலை மன்னரது ஆட்சித் துவக்கத்தின்பொழுது தோன்றிய பிணக்குகளின் காரணமாக, நாயக்கரது பெரும் படை சேதுபதி சீமையில் கி.பி. 1639-ல் நுழைந்தது. பல போர்களுக்குப் பிறகு இராமேசுவரம் போர்க்களத்தில் தோல்வியுற்ற இரண்டாவது சடைக்கன் சேதுபதி சிறை பிடிக்கப்பட்டார். தொடர்ந்த குழப்பங்களைச் சமாளிக்க முடியாத திருமலை மன்னர் சேதுபதியை விடுதலை செய்து, சேது நாட்டை அவர் மீண்டும் ஆளுமாறு செய்தார்.[19]

அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை ரகுநாத சேதுபதி, திருமலை மன்னருக்கு பக்கபலமாக இருந்து, அவரது 72 பாளையக்காரர்களுக்கும் தலைமை ஏற்கும் தகுதியுடையவராக இருந்தார். நெல்லைப் பகுதியில் எட்டையபுரம் பாளையக்காரரும், இன்னும் சிலரும் திருமலை மன்னருக்கு எதிராக சினந்து எழுந்த போது, இராமநாதபுரம் மன்னர் மறவர் படையுடன் சென்று எட்டையபுரம் பாளையக்காரரைக் கொன்று ஒழித்து, கிளர்ச்சியை அடக்கி திரும்பினார். மனம் மகிழ்ந்த திருமலை மன்னரும் மறவர் தலைவருக்கு பல சிறப்புக்களைச் செய்து பாராட்டினார்.[20] அந்த வீர நிகழ்ச்சியை நினைவுறுத்தும் வண்ணம் சேதுபதியும் அன்று முதல் தனது இடது காலில் எட்டப்பனது தலை உருவம் கொண்ட வீரக் கழலை அணிந்து வரலானார். அதனை,

கானில் வன்கல்லை பெண்ணாக்கிய காலில்,
எட்டன் தலையார் விஜயரகுநாத சேது தளசிங்கமே”

என பாவலரும் பாராட்டிப் பாடினர்.[21]

கி.பி. 1659-ல் திருமலை நாயக்கர் நோயுற்று நலிந்த நிலையில் இருந்த பொழுது, மைசூர் படைகள் மதுரையை நோக்கி படையெடுத்து வந்தன. இந்த இக்கட்டான நிலையை அறிந்த திருமலை சேதுபதி இருபதினாயிரம் மறவர்களைத் திரட்டி மதுரை சென்றார் மைசூர் படைகளைப் பொருதி அழித்ததுடன் எஞ்சியவர்களைக் கொங்கு நாட்டின் எல்லைவரை துரத்தியடித்து விட்டு வந்தார். மதுரை மண்ணுக்கும் நாயக்க ஆட்சிக்கு நைரவிருந்த, மாபெரும் பழியையும், இழப்பையும் நீக்கிய சேதுபதி மன்னரை பல வழிகளிலும் பாராட்டி சிறப்புக்களை வழங்கினார் திருமலை நாயக்கர் அவைகளில் நாயக்க

அரசுக்கு சேதுபதி மன்னர் ஆண்டுதோறும் அளிக்கும் திறைப் பணத்தை செலுத்த தேவையில்லை என்பதும் ஒன்று[22] அவரைத் தொடர்ந்து இராமநாதபுரம் அரசு கட்டிலுக்கு வந்த பன்னிரண்டு சேதுபதிகளும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தன்னாசாக இருந்து வந்ததை வரலாறு விளம்புகிறது.

அவர்களின் பட்டியலில், இறுதியாக இடம் பெறுபவர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி என்பவர். அதுவரை எந்த சேதுபதி மன்னரும் சந்தித்திராத பிரச்சினைகளையும், அனுபவித்தறியாத அல்லல்களையும் இந்த மன்னர் அணுக வேண்டியிருந்தது. அந்த ஆபத்தான கொடிய சோதனையில், தமது பரம்பரையின் ஆளும் உரிமையை மட்டும் அல்லாமல் தமது இனிய உயிரையே அர்ப்பணித்தார்.

தன்மான உணர்வினுக்கும் தன்னரசுப் போக்கிற்கும் அத்தகைய உயர்ந்த விலையை-தியாகத்தை-அளித்த அந்த மன்னரது வாழ்க்கையை வரலாற்றுப் பார்வையில் ஆய்வு செய்வது இந்த முயற்சி.


  1. ஜெயங்கொண்டார், கலிங்கத்துப் பரணி, பாடல் எண்.354
  2. கோவூர் கிழார், புறநானூறு, பாடல் எண் 31
  3. கலித்தொகை
  4. நீலகண்ட சாஸ்திரி K. A., Ceylon Historical Journal, Vol. IV. pp. 1-4.
  5. கதிர்வேல் Dr. S., History of Marava (1977), pp. 8 & 9.
  6. Rajaram Row T. Ramnad Manual (1891), p. 33.
  7. Edgar Thurston, Caste and Tribes of South India 19 09, Vol. 5 pp.
  8. Mahalingam, T. V., Mackenzie Mss. pp. 200-212. (1975), Vol. I
  9. Rajaram Row, T., Ramnad Manual (1891), pp. 204, 205
  10. Edgar Thurston, Castes and Tribes of South India, Vol. V. pp. 25, 26.
  11. ரா. ராகவ ஐயங்கார், மகாவித்வான், சேது நாடும் தமிழும் (1932).
  12. Seshadri. Dr. Sethupathis of Ramnad (1972), Thesis, р. 62.
  13. Nelson, Manual of Madura Country (1868), Part 111 pp. 11-12,
  14. Pudukkottai - State Inscriptions, Mahalingam, T.V., Mackenzie Ms. – No 36. (1974), pp. 200, 202. Rajaram Row, T., Ramnad Manual (1891), pp.
  15. R. Srinivasa Iyor, Brios notes on the History and Traditions of Ramoswaram Temple, (1914), p. 4.
  16. Fr. Heras, Aravidu Dynasty p 1 56
  17. Taylor, Old Historical Manuscripts, Vol. II
  18. தளவாய் தளபதி பதவியை ஒத்த அரசுப் பணி, தெலுங்கு மொழிச் சொல்.
  19. Sathianatha Iyer, Thamilaham In 17th Century (1956)
  20. Rajaram Raw, Ramnad Manual (1891). P. 22-1.
  21. மிதிலைப்பட்டி அழபிய சிற்றம்பலக் கவிராயர், தளசிங்க மாலை; செந்தமிழ் தொகுதி 6, பக். 44-50.
  22. Sathiyanatha Iyer, History of Madurai Nayaks (1924), p. 136.