விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/புரட்சிப் பாதையில்

விக்கிமூலம் இலிருந்து

10
புரட்சிப் பாதையில்

மறவர் சீமையில், மன்னர் இல்லாத, கும்பெனியாரது ஆட்சி நடைபெற்று வந்தது. சேதுபதி மன்னரை சிறையில் அடைத்து விட்டதால், நாட்டின் நலிவுகள் அனைத்தும் நீங்கிவிட்டது போன்ற நாடகம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு வறட்சியின் பொழுது பஞ்சம் பிழைக்க தஞ்சை சென்ற மக்கள் அனைவரும் திரும்பி வந்து விட்டதாகவும் சம்பிரதிகளும், மணியக்காரர்களும் தங்களது கடமையை மிகுந்த விசுவாசத்துடன் நிறைவேற்றி வருவதாகவும் இவை எல்லாம் மகத்தான கும்பெனியாரது ஆட்சியில் ஏற்பட்ட அற்புதங்கள் என தளபதி மார்ட்டின்ஸ் பாராட்ட கலெக்டர் அவைகளைத் தமது அறிக்கையின் மூலமாக கவர்னருக்கு அனுப்பி வைத்தார். சீமை பேஷ்கார் முத்திருளப்ப பிள்ளை கும்பெனியாரது அடியார்க்கும் அடியாராக பணியாற்றி வந்தார். கும்பெனியாருக்கு வரவேண்டிய வரிபாக்கிகள் அனைத்தையும் மிகுந்த திறமையுடன் வசூலித்து வந்தார். மூன்று ஆண்டுகள் ஒடிவிட்டன.

கி.பி. 1797-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதி வாரம், மறவர் சீமையின் தெற்குப் பகுதியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வரவிருக்கும் சூறாவளி ஒன்றின் முன் அறிவிப்பு போல குடிமக்கள் கிளர்ந்து எழுந்தனர். வரி செலுத்துவதற்கு மறுத்து வந்தனர்.[1] பாஞ்சைப் பகுதியின் பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மு இந்தக் கிளர்ச்சியை ஊக்குவித்து வந்தார். இன்னும் சில பாளையக்காரர்களும் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவளித்து கும்பெனியாரது பொறுப்பில் இருந்து வந்த சர்க்கார் கிராமங்களைக் கொள்ளையிட்டு வந்தனர். ஆனால் புதிதாகப் பதவி ஏற்ற கலெக்டர் ஜாக்சன் கிளர்ச்சியை மேலும் பரவவிடாமல் ஒடுக்கினார்.[2] நாளடைவில் ஜாக்சனின் நிர்வாகம் ஒருபுறம் மக்களிடத்தில் இருந்தும் மற்றொருபுறம் அரசாங்கத்திடமிருந்தும் வெறுப்பையும் பழியையும் பெற்றது. வீரபாண்டிய கட்டபொம்முவை இராமநாதபுரம் அரண்மனையில் அவர் நடத்தியவிதம்,[3] தஞ்சைச் சீமை தானியங்களை மறவர் சீமையில் இறக்குமதி செய்ய மறுத்து, பரங்கியரின் வியாபாரத்துக்கு ஒத்துழைக்கத் தவறியது.[4] கும்பெனியாருக்கு கிஸ்தியாக வசூலித்த தானியங்களை அவரும் அவரது துபாஷ் ரெங்கப்பிள்ளையும் சேர்ந்து விற்று பல ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கையாடல் செய்த ஊழல்,[5] ஆகிய காரணங்களினால் ஜாக்சன் பதவி விலகிச் சென்றார். அவரைத் தொடர்ந்து லூவிங்டன் பதவி ஏற்றார்.[6]

இதற்கிடையில் மறவர் சீமையை தமது உடைமையாக மாற்றிய பிறகு, கும்பெனியார் தென்பகுதியில் உள்ள எந்தப் பகுதியையும் பற்றி அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களது உள்ளத்தில் நிறைந்துவிட்ட ஆதிக்க வெறியை கி. பி. 1794-க்கும் கி. பி. 1795-க்கும் இடைப்பட்ட காலநடவடிக்கைகள் பிரதிபலித்தன. மணப்பாறை, திண்டுக்கல் பகுதிகளில் அவர்களது அட்டகாசம் முதலில் துவங்கியது. லெட்சுமி நாயக்கர் என்ற மனப்பாறை பாளையக்காரரது பரம்பரை உரிமையை ஒழித்தனர்.[7] புனிதத்தலமாகிய பழனிக்கோயிலின் பரம்பரை அறங்காவலரும் பழனி பாளையத்தின் தலைவருமான பாளையக்காரரை திண்டுக்கல் கோட்டைச் சிறையில் தள்ளியதுடன் அவரது பதவியையும் பறித்தனர்.[8] எர்ரமக்கோட்டை பாளையக்காரரை அவர்கள் பயமுறுத்தியதில் அவருக்கு பைத்தியமே பிடித்து விட்டது. அந்த பாளையமும் கும்பெனியாரது சொத்தாகியது. இதனைத் தொடர்ந்து மாம்பாறை பாளையத்துக்கும் குமாரவாடி பாளையத்துக்கும் இதே கதி ஏற்பட்டன.[9]

திண்டுக்கல் சீமையில் உள்ள எப்ரவாடு, சங்கம்பட்டி, மாத்துர் பாளையங்களும் கி.பி. 1796-ல் பறிக்கப்பட்டு கும்பெனியாரது உடமையாக்கப்பட்டன.[10] மதுரைச் சீமையில் உள்ள சாப்டுர் பாளையக்காரர் காமைய நாயக்கரும், செந்நெல்குடி பாளையக்காரர்களும், தங்கள் பாளையங்களை இழந்தனர்.[11] அடுத்த இரண்டு ஆண்டுகளில் நெல்லைச் சீமையில் உள்ள பாஞ்சை, காடல்குடி, குளத்துர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை ஆகிய பாளையங்களும், கும்பெனியாருக்குச் சொந்த மாக்கப்பட்டன.[12] தமிழகத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரம், கன்னடம், கேரளம் ஆகிய பகுதிகளிலும் இத்தகைய நிலையை கும்பெனியார் பின்பற்றி வந்ததை வரலாறு சொல்லுகின்றன. பாளையக்காரர்களது பாளையங்களைப் பிடுங்கி, தலைமுறை தலைமுறையாக அவர்கள் பேணிவந்த பதவிகளைப் பறித்து, அவர்களது கோட்டைகளையும் தரைமட்டமாக்கினர். சொந்தப் பாதுகாப்புக்கு அவர்கள் படை வீரர்களை வைத்துக் கொள்வதைக்கூட தடை செய்தனர்.[13] அவர்களுக்கு ஆண்டுதோறும் குடிகள் செலுத்திவந்த தேச காவல் காணிக்கைகளையும் பெற்றுக் கொள்ள இயலாது செய்து விட்டனர்.[14] குடிமக்கள் பாளையக்காரர்களுக்கும், நாட்டாண்மைக்காரர்களுக்கும் தாமாகவே உழைத்துக் கொடுக்கும் முறையையும் ஒழித்தனர்.

கி.பி. 1799-ல் கும்பெனியார் வெளியிட்ட உத்தரவில் பொதுமக்கள் ஆண்டுதோறும் பாளையக்காரர்களுக்கு அளித்து,வந்த தேசகாவல் தொகையை நேரடியாக கும்பெனியாரது அலுவலர்களிடம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.[15] இதனை நடைமுறைப்படுத்த தங்களது ஆயுத பலத்தைக் காண்பித்து பயமுறுத்தி வந்தார்.[16] அடுத்து தீர்வை வசூலிப்பதிலும் தங்களது கைவரிசையைக் காட்டி வந்தனர். மைசூர் ராஜ்யத்தில் திப்பு சுல்தானும் மறவர் சீமையில் முத்துராமலிங்க சேதுபதியும் முன்னர் குடிகளைக் கொடுமைப்படுத்தி வரி வசூலித்ததாக பறைசாற்றினர். ஆனால் அவர்கள் அந்தப் பகுதிகளை தமது உடைமையாக்கிய பிறகு மைசூர், சேலம் பகுதிகளில் திப்பு சுல்தான் விதித்த தீர்வையை விட 93 சதவீதம் கூடுதலாகவும் கோவையில் 118 சதவீதம் கூடுதலாகவும் தீர்வை விதித்து வசூலித்தனர். இத்தகைய இரக்கமற்ற முறையில் குடிகளை கசக்கிப் பிழிந்து கொடிய வரிவசூல் செய்த கலெக்டர் மன்றோவையும், கலெக்டர் மக்லாய்டையும் கும்பெனியாரது வருமானத்தைப் பெருக்கியதற்காக கும்பெனி கவர்னர் பாராட்டுகள் தெரிவித்தார்.[17] அவர்களது முன் மாதிரியைப் பின்பற்றி திண்டுக்கல் சீமை கலெக்டர் குர்திஷ், கம்பம், கூடலூர், பழனிப் பகுதிகளில் வரிகளை உயர்த்தி வசூலித்தார்.[18] கூடலூரில் மட்டும் விதிப்பு 96 சதவீதம் உயர்வு பெற்றது. நெல்லைச் சீமை கலெக்டர் பாளையக்காரர்களிடமிருந்து பறித்துச் சேர்த்த பாளையங்களில் பாளையக்காரர்கள் வசூலித்த தொகையைவிட 117 சதவீதம் கூடுதலாக வரி வசூலித்தார்.[19]

மறவர் சீமையில் 739 கிராமங்களின் மகசூல் விளைச்சல் கி.பி. 1797-98ல் ஸ்டார்பக்கோடா 53,500 என மதிப்பிடப்பட்டது. ஆனால் அந்த கிராமங்களுக்கு வரியாக ஸ்டார் பக்கோடா 71,629 என விதிக்கப்பட்டது. இதனால் குடிகள் விளைவித்த மகசூல் அனைத்தையும், கும்பெனியார் வசூலித்ததுடன் எஞ்சிய வரித்தொகையை எவ்விதம் வசூலிப்பது என்ற சிந்தனையில் முனைந்தனர். உழவு மாடுகள், தட்டுமுட்டுச் சாமான்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. உயிர் வாழ்வதற்குத் தேவையான விளைச்சலில் ஒரு மணிகூட உழவர்களுக்குக் கிடைக்கவில்லை. பசிக்கொடுமையால் மிகுதியான மக்கள் மடிந்தனர். பலர் அந்நியப் பகுதிகளுக்கு ஓடி உயிர் பிழைத்தனர்.[20]

வெயிலையும் குளிரையும் தாங்கி விவசாயம் செய்த விவசாயிகளின் இந்த அவல நிலையைவிட, நெசவாளர்களின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. கெடுபிடி வசூல், குழப்பம், கிளர்ச்சி ஆகிய காரணங்களினால் நெசவு உற்பத்தியும், விற்பனையும் பாதிக்கப்பட்டன. கும்பெனியார் பல ஊர்களில் நெசவாளிகளை பலவந்தப்படுத்தி, அவர்கள் உற்பத்தி செய்த துணிகளை மிகக் குறைந்த விலைக்கு எடுத்துக் கொண்டனர். இன்னும் சில ஊர்களில் உற்பத்தி செய்த துணி மடி ஒவ்வொன்றிலும் தங்களது முத்திரையைப் பதிவு செய்து அதற்கான தீர்வை ஒன்றையும் கும்பெனியார் வசூல் செய்தனர். இந்த முத்திரை வரியைச் செலுத்தினால்தான் நெசவாளிகள் தங்களது துணியை விற்கலாமென்ற நிலை ஏற்பட்டது. உற்பத்தி செய்த எல்லா மடிகளுக்கும் தீர்வை செலுத்தியதைத் தெரிந்து கொள்வதற்காக ஆங்காங்கு உள்ள நெசவாளர்களது இல்லங்களில் திடீரென நுழைந்து அவர்களது துணிகளைக் கைப்பற்றினார்.[21] இத்தகைய காரணங்களினால் நெசவுத்தொழில் நசித்ததுடன் வெளியே விற்பனை செய்ய முடியாத தேக்க நிலையும் தோன்றி யது.[22] கும்பெனியாரைத் தவிர துணிகளைப் பெருமளவில் வாங்குவதற்கு தனியார்யாரும் அப்பொழுது தயாராக இல்லை. துணி வியாபாரிகள் தொடர்ந்து தொழில் நடத்தத் தயங்கினர்.[23]

மேலும் மன்னர்களது செங்கோலுக்குச் சான்றாக விளங்கி, மாதம் மும்மாரி பெய்த வானம் கி. பி. 1798-ல் பொய்த்தது. நெடுங்கடலும் நீர் சுருங்கிய கொடும் வறட்சி. பசுமை என்ற வண்ண ஆடையை பூமித்தாய் களைந்து எறிந்து விட்டது போன்று கண்ணைக் கெடுக்கும் காட்சி.[24]

பஞ்சம் பிழைப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக தஞ்சைத் தரணிக்கு விரைந்தனர். வான் பொய்ப்பினும் தான் பொய்க்காதே காவேரிப் படுகையிலும் தானியங்கள் மறைந்து போயின.[25] இத்தகைய கடுமையான பஞ்ச காலத்தில் பொதுமக்களைப் பற்றிய கவலை சிறிது கூட இல்லாமல் ஆளவந்தார்களான கும்பெனி நிர்வாகம் செயல்பட்டது. தங்களது படை அணிகளுக்கு தேவையான தானியங்களை மட்டும் வட மாநிலங்களிலிருந்து பெற்று இருப்பு வைத்துக்கொண்டனர்.[26] ஏற்கெனவே கும்பெனியாரும் இதர வெளிநாட்டாரும் குடிகளிடம் வரியாக அல்லது கிரையமாகப் பெற்று ஆங்காங்கு இருப்பு வைத்திருந்த தானியங்களை மிகவும் கூடுதலான விலைக்கு விற்று, கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இந்தக் காரணத்தினால் பக்கத்து பகுதியிலிருந்து தானியங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தனர். இதனையும் மீறி தலைச் சுமை யாக சொந்த உபயோகத்துக்கு வாங்கி வந்த தானியப் பொதிகளை பறிமுதல் செய்தனர். அல்லது அவைகளுக்கு மிகுந்த வரி விதித்தனர்.[27]

மற்றும் சில வியாபாரிகள் தஞ்சை, புதுவை, இலங்கை போன்ற கடற்கரைப் பகுதியிலிருந்து தோணிகள் மூலம் மறவர் சீமைக்குள் தானியங்களை இறக்குமதி செய்வதை கும்பெனிக் கலெக்டர்கள் பவுனியும், ஜாக்சனும் தடுத்தனர். பரங்கியரது சேமிப்புக் கிடங்குகளில் பல ஆண்டுகளாக இருப்பில் இருந்து உளுத்துப்போன தானியங்களுக்கு கிராக்கியும், கூடுதல் விலையும் கிடைப்பதற்காக.[28] அத்துடன் விவசாயத் தொழிலுக்கு மூலதனமான காளை மாடுகள் அனைத்தையும் கைப்பற்றி மைசூர்ப்போரில் பாரவண்டிகள் இழுவைக்காக அனுப்பினர்.[29] மழை பெய்தால் கூட விவசாயம் செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்தனர்.

இங்ங்னம் மறவர் சீமையின் கிராமப் பொருளாதாரத்தை அழித்து, வளமையாகப் பின்பற்றப்பட்ட மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் ஒழித்து, மேனாட்டு தண்டனை அடிப்படையிலான சமூக நியதிகளை நிறுவ முயன்றனர். இத்தகைய செயல்களை ஏற்கெனவே கும்பெனித் தளபதி புல்லர்ட்டன் கடுமையாக விமர்சித்திருந்தபொழுதும்[30] அந்தக் கொள்கையை மாற்றம் இல்லாமல் அப்படியே கடைப்பிடித்து வந்தனர். அதனால் விளையும் எத்தகைய பிரதிபலிப்புகளையும் சமாளித்துவிடலா மென்பது அவர்களது தீர்க்கமான முடிவாக இருந்து வந்தது. பஞ்சத்தாலும் பசியாலும் பரிதவித்துக் கொண்டிருந்த மக்கள் கும்பெனியாருக்கு எதிரான மனிதாபிமான உணர்வுகளால் உந்தப்பட்டு எழுச்சிபெறும் நிலை அப்பொழுது உருவாகிக் கொண்டிருந்தது.

கி.பி. 1799-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி காலை, அமைதியைக் குலைத்து முதுகுளத்துாரில் துப்பாக்கிகள் படபடக்கும் முசை கேட்டது. சர்க்கார் கச்சேரி முன்னர் வேலும் வாளும் நாட்டுத் துப்பாக்கிகளும் பிடித்த மறவர் கூட்டம் ஒன்று திரண்டு நின்றது. கச்சேரிக்குள்ளிருந்த அமில்தார் அடித்து இழுத்து வரப்பட்டார். அங்கு காவலில் இருந்த கும்பெனி சிப்பாய்களது துப்பாக்கிகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. மறுத்த சிப்பாய்களுக்கு உதை விழுந்தது. அடுத்து அபிராமம் கச்சேரியைத் நாக்கி அங்கும் ஆயுதங்களைக் கைப்பற்றினர். அமில்தாரை அழைத்துச் சென்று கும்பெனியாரது துணிக் கிடங்கை திறந்து விடுமாறு பலவந்தப் படுத்தினர். கூடி நின்ற மக்கள் சர்க்கார்த் துணிகளை கொள்ளையிட்டு அள்ளிச் சென்றனர். இதனைப் போன்றே கமுதிக் கச்சேரியிலும் ஆயுதங்களும் தானியக்கிடங்கும் கைபபறறபபடடன.[31]

பொது மக்கள் கும்பெனியாருக்கும் எதிராக கிளர்ந்து எழுந்து வன்முறையில் ஈடுபட்ட இத்தகைய நிகழ்ச்சி, அன்று முதுகுளத்துார் தொடங்கி அபிராமம், கமுதி ஆகிய ஊர்களில் தொடர்ந்து நடைபெற்றன. இந்தக் கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர், மயிலப்பன் என்ற குடிமகன் ஆவார்.

அவரது அறிவுரைப்படி குடிமக்கள் கும்பெனியாருக்கு செலுத்த வேண்டிய தீர்வைப் பணத்தைச் செலுத்த மறுத்தனர். இந்த நிகழ்ச்சி ஒரு பெரும் இயக்கமாக மறவர் சீமையில் உருவெடுத்தது. எண்ணற்ற கிராம மக்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.[32] மேலும் அவர்களது காணிகளை மேனாட்டு முறைப்படி அளவிடுவதற்கு (சர்வே) ஈடுபட்டுள்ள கும்பெனியார் ஊழியர்கள் அவர்களது கடமைகளைச் செய்யவொட்டாமல் தடுத்தனர். அவர்களுக்கு இடைஞ் சல்களை ஏற்படுத்தினர்.[33]

இந்தக் கிளர்ச்சிகளின் பாதிப்புபற்றி மதுரைச் சீமை வரலாற்றில் இவ்விதம் குறிப்பிடப் பட்டுள்ளது.[34]

"...மறவர் சீமையின் வருமானம் பெருத்த அளவு குறைந்தது. கி.பி. 1795-96-ம் ஆண்டில் ரூ. 1,31,207 ஆகவும், கி.பி. 1796-97-ம் ஆண்டில் ரூ.1,33,391 ஆகவும் இருந்த வருமானம், கி.பி. 1797-98-ல் ரூ. 94882/-ஆகவும் 1798-99-ல் ரூ. 65,127/ஆகவும் குறைந்துவிட்டது. சிறையில் உள்ள சேதுபதி மன்னரை மீண்டும் பதவியில் இருத்த வேண்டும் என்ற இலட்சியத்தில், 23-4-1797 ல் துவக்கப்பட்டது போன்ற புதிய கிளர்ச்சியொன்று கும்பெனியாருக்கு எதிராக உருப்பெறுவது போல தோன்றியது. பக்கத்துச் சீமைகளிலும் பெரும் குழப்பம் நிலவின. பொதுவாக, தென்னகத்தில் அப்பொழுது ஏற்பட்டு இருந்த பாளையக்காரர்களது கிளர்ச்சியின் வாடை, இராமநாதபுரம் சீமையைப் பாதித்துள்ளது...'

மயிலப்பன் ஏற்கெனவே இராமனாதபுரம் அரசில் சேர்வைக்காரராக இருந்தவர். முதுகுளத்துரை அடுத்த சித்திரங் குடியில் பிறந்த விவசாயி. அன்று இந்த சிற்றுார் வீரத்தின் விளைநிலமாக விளங்கி வந்தது. கி.பி. 1772-ல் கும்பெனியாரும் நவாப்பும் கூட்டாக இராமனாதபுரத்தைப் பிடித்த பொழுது நிகழ்ந்த போரிலும், கி.பி. 1781-ல் மாப்பிள்ளைத் தேவன் தலைமையில் ஆன புரட்சி அணியுடன் இளைஞர் முத்துராமலிங்கம் போரிட்ட_ பொழுதும், தங்கள் உயிரை காணிக்கையாகத் தந்து, மறவர் சீமையின் மாண்பை உயர்த்யவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இந்த சித்திரங்குடி ஊரினர். இந்தக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியாக காடல்குடி பாளையக்காரரும் தளபதி மயிலப்பனது உதவிக்கு முன்னுறு வீரர்களை அனுப்பி வைத்ததுடன், சர்க்கார் சீமைக் கிராமங்களில் தமது ஆட்களுடன் அவர் கொள்கைகளை மேற்கொண்டார்.[35][36] 'பாஞ்சைப் பாளையக்காரரது ஆட்கள் கீழக்கரை வட்டத்தில் புகுந்து பயங்கரமான அட்டுழியங்களை நடத்தினர்.[37] நாகலாபுரம், எட்டையாபுரம் பாளையக்காரர்களும், இந்தக் கிளர்ச்சியில் பங்கு கொண்டனர் என்பதை தளபதி டிக்போரினது கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. நாகலாபுரம், பாளையக்காரரது தம்பி சின்ன நாயக்கன், முன்னுாறு வீரருடன் பள்ளி மடம் பகுதிக்குள் நுழைந்து அருப்புக்கோட்டையைக் கொள்ளையிட்டார். அவரிடம் இருந்த ஜிங்கால் என்ற பீரங்கியின் தாக்குதல் பலமான சேதத்தை ஏற்படுத்தியது.[38] சாத்துார் பாளையக்காரரது சிப்பந்தி வீரர்கள் சாத்துார் தாசில்தாரைத் தாக்கினர்.[39] பாஞ்சை, நாகலாபுரம், வீரர்கள் சிவகிரியிலிருந்து இராமனாதபுரம் கோட்டைக்கு சென்று கொண்டிருந்த கிஸ்திப் பண வண்டி பாதுகாப்பு அணியைத் தாக்கி, சர்க்கார் பணப்பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சித்தனர்.[40] மறவர் சீமையின் தெற்குப் பகுதியின் நிலைமை இவ்விதம் மிகுந்த சீர்கேடு அடைந்திருந்தது.

அங்குள்ள கும்பெனியாருக்கு எவ்விதம் உதவி அனுப்புவது என்பது புரியாமல், கலெக்டர் லூவிங்டன் தவித்துக் கொண்டிருந்தார். அனுப்பப்படும் வெடிமருந்து பொதிகளும் ஆயுதங்களும், கிளர்ச்சிக்காரர்கள் கையில் கிடைத்து விட்டால் எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் சேர்ந்தது போலல்லவா ஆகிவிடும்? கிளர்ச்சிக்காரர்கள் கை ஓங்கியிருந்தது. இதனைச் சமாளிக்க சிவகெங்கையிலிருந்து மருது சகோதரர்களின் வீரர்களை வரவழைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் கலெக்டர் பயன்படுத்தினார். மேலும், கூடுதலாக உதவி தேவைப்பட்டதால், இராணுவ அணி ஒன்றையும், நூறு குதிரை வீரர்களையும் அனுப்பி வைக்குமாறு கலெக்டர் மேலிடத்திற்கு அவசர அறிக்கை அனுப்பி வைத்தார்.[41] இதற்கிடையில் கிளர்ச்சிக் காரர்கள் இன்னொரு துணிகரமான முயற்சி ஒன்றை மேற்கொண்டனர். இராமனாதபுரத்தில் கலெக்டர் தங்கி இருந்த வீட்டின் மீது தாக்குதல் தொடுத்தனர். தற்செயலாக அவர் உயிர் தப்பினார்.[42] இந்தக் கிளர்ச்சியின் விவரம் பற்றி கலெக்டர் லூவிங்டன் பாளையங்கோட்டையிலுள்ள தளபதி பானர் மேனுக்கு தகவல் அனுப்பியதுடன் இராணுவ உதவி அனுப்புமாறு கோரினார்.[43] மேலும் கிளர்ச்சி பற்றிய விவரங்களை விளக்கமான அறிக்கை ஒன்றில் சென்னையில் உள்ள கவர்னருக்கு தெரிவித்தார்.[44]

இராமனாதபுரத்தில் உள்ள தமது இல்லத்தின் மீதும் நெல்லைச் சீமையிலிருந்து இராமனாதபுரம் கோட்டைக்கு வந்து கொண்டிருந்த பொக்கிஷ வண்டிக்கு பாதுகாப்பாக வந்த படை வீரர்கள் மீதும், மறவர் சீமை கிளர்ச்சிக்காரர்கள் தொடுத்த தாக்குதல்கள் பற்றிய முழு விவரங்களையும் கலெக்டர் லூவிங்டன் கும்பெனி கவர்னருக்கு அறிக்கை செய்தார். அத்துடன் தமது உதவிக்குப் பெரும் படையினை சிவகெங்கைப் பிரதானிகள் அனுப்பி வைத்து இருப்பதையும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருந்தார்.[45] அத்துடன் மறவர் சிமைக் கிளர்ச்சியினால் குடிகள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், கிளர்ச்சியின் பொழுது கும்பெனி வீரர்களது ஆயுதங்களைப் பறிப்பதில் கிளர்ச்சிக்காரர்கள் காட்டியுள்ள அக்கறையில் இருந்து, இந்தக் கிளர்ச்சிகள். சிறிய கொள்ளைகளை நடத்துவதைவிட உயர்ந்த குறிக்கோள் ஒன்றை, கோடிட்டுக் காட்டுவதாகவும் தெளிவு படுத்தி இருந்தார்.

அந்தக் கிளர்ச்சி ஒரு முக்கியமான குறிக்கோளுடன், சிறையில் உள்ள சேதுபதி மன்னரை விடுவிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது என்றும் அதனை கும்பெனி தளபதி மார்ட்டின் சின் விசாரணைகள் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். சேதுபதி மன்னரிடம் சேர்வைக்க்காரராக பணியாற்றிய மயிலப்பன் என்பவர் அந்தக் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி வருவதாகவும் அவர் அண்மையில் திருச்சி கோட்டைக்குச்சென்று சேதுபதி மன்னரை சந்தித்து திரும்பிய பிறகு கிளர்ச்சியை முடுக்கிவிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

சேதுபதி மன்னரிடம் பணியாற்றிய பல அலுவலர்கள் தொடர்ந்து திருச்சியில் உள்ள சேதுபதி மன்னருடன் தொடர்பு கொண்டு இருப்பதால் மயிலப்பனது முயற்சிக்கு சேதுபதியின் ஆதரவு இருந்து வருவது நம்பத்தக்கதாக உள்ளது. அதன் காரணமாக மறவர் சீமையில் உள்ள நாட்டுத் தலைவர்கள் பலருக்கும் மயிலப்பன் ஒலைகள் அனுப்பி, சேதுபதி மன்னருக்கு ஏற்பட்டுள்ள சிறுமையைக் களையவும். கும்பெனியாரிடம் இருந்து மறவர் சீமையை விடுவிக்கவும் குடிகள் அனைவரும் கிளர்ந்து எழுமாறு கோரிக்கை விடுத்து இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆகையால் இந்தக் கிளர்ச்சி நடவடிக்கைகளை முழுமையாகத் தடுத்து நிறுத்த தவறினால் விபரீதமான விளைவுகள் எதிர்கொள்ள இருக்கின்றன என்று அச்சுறுத்தி இருந்தார். சேதுபதி மன்னர் திருச்சிக் கோட்டையில் இருந்து தப்பிச் செல்ல இயலாத முறையில் பாதுகாப்பு, நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும், இயலுமானால் சேதுபதி மன்னரை நெடுந்தொலைவில் உள்ள நெல்லூர் இராணுவ தளத்திற்கு அனுப்பி வைத்து பாதுகாவலில் வைக்குமாறும் யோசனை தெரிவித்து இருந்தார்.[46]

இதற்கிடையில் மக்களின் கிளர்ச்சி பங்குனி மாத பகற்பொழுதுபோன்று கடுமையாகிக் கொண்டு வந்தது. கும்பெனியாரது கூலிப்பட்டாளத்திடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றுவது, அவர்களது இருப்புக் கிடங்குகளில் உள்ள துணிகள், தானியங்களை சூறையாடி பேரிழப்பு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மட்டும் கிளர்ச்சிக்காரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அபிராமத்திலும், கமுதியிலும் தவிர்க்க முடியாத நிலையில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர வெறுக்கத்தக்க போக்கு வேறு எதுவும் கிளர்ச்சியில் காணப்படவில்லை. என்றாலும் கிளர்ச்சி வேகமாகப் பரவியது. பாப்பான்குளம், பள்ளிமடம் ஆகிய பகுதிகளில் கிளர்ச்சிக்காரர்கள் முனைந்து நின்றனர். பொதுவாக வைகைப் பகுதிக்கும், குண்டாற்றுக்கும் இடைப்பட்ட நீண்ட பகுதியில் கிளர்ச்சி உச்சநிலையில் இருந்தது. அதனைக் கிளர்ச்சித் தலைவர் மயிலப்பனின் சொற்களில் சொல்ல வேண்டுமானால், 'இந்த இயக்கம் காட்டாற்று வெள்ளம் போல பரந்து பரவிக் காணப்பட்டது. பன்னிரண்டாயிரம் மக்கள் அதில் பங்கு கொண்டனர்.[47]

கிளர்ச்சியின் போக்கு பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்ள கலெக்டர் லூவிங்டன் இராமனாதபுரத்தில் இருந்து தமது சேவகர்களை முதுகுளத்துார் அமில்தாரிடம் அனுப்பி வைத்தார். அவர்களில் ஒருவன் கிளர்ச்சிக்காரர்களிடம் அகப்பட்டு கலெக்டரது கடிதத்துடன் சரணடைந்ததுடன் தமது உடைகளையும் இழந்து அவமானப்பட்டு வந்த வழியிலே இராமனாதபுரத்திற்கு திரும்பிவந்தான் . அடுத்து, நான்கு கள்ளர்களை முதுகுளத்துார் பகுதிக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார். அவர்கள் கிளர்ச்சிக்காரர்களது ஆதரவாளர்கள் போல நடித்து கிளர்ச்சி பற்றிய விவரங்களை கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.[48] அவைகளில் இருந்து கிளர்ச்சியின் போக்கு, தாக்கம், கிளர்ச்சிக்காரர்களது எண்ணிக்கை, இயல்பு ஆகியயவைகளை நன்கு புரிந்து கொண்டு கிளர்ச்சிப் பகுதிகளுக்கு கும்பெனி பட்டாளத்தை அனுப்பிவைக்க கலெக்டர் ஏற்பாடுகள் செய்தார்.

கும்பெனியாரது முதல் அணி முதுகுளத்துருக்கு இராமனாதபுரம் கோட்டையிலிருந்து தளபதி மார்ட்டின்ஸ் தலைமையில் புறப்பட்டது. வழியில் அந்த அணி மறைந்து இருந்த கிளர்ச்சிக்காரர்களால் பலமாகத் தாக்கப்பட்டது. கும்பெனிப் பட்டாளத்தில் ஐவர் மடிந்தனர். மார்ட்டின்ஸ் மேலும் முன் னேறிச் செல்ல இயலாது இராமனாதபுரம் கோட்டைக்குத் திரும்பினார்.[49] இன்னொரு அணி மேஜர் கிரீம்ஸ் தலைமையில் 100 பேர்களுடன் 50 துப்பாக்கிகளுடனும் 200 ஈட்டிக்காரர்களுடனும் மற்றொரு வழியாக மேற்கே காமன் கோட்டை பாதையில், தெற்கே முதுகுளத்துருக்குப் புறப்பட்டது. ஆனால் இந்தக் குழுவினரும் தங்களது திட்டப்படி முதுகுளத்துாரை அடைய முடியவில்லை.[50]

மிகவும் பீதியடைந்த கலெக்டர் லூவிங்டன், பாளையங்கோட்டையுடன் தொடர்பு கொண்டு மேஜர் பானர்மேனைப் புறப்பட்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.[51] அவரும் மூன்று பவுண்டர் பீரங்கி அணியுடன் புறப்பட்டு 26-5.1799-ல் பள்ளிமடம் வந்து சேர்ந்தார். மதுரையிலிருந்து மேஜர் டிக்பர்ன் தலைமையில் இன்னொரு சிறிய அணியும் பள்ளிமடம் வந்து மேஜர் பானர்மேனுடன் சேர்ந்து கொண்டது. பிறகு கமுதியை நோக்கி ஒரு அணியும் ஆப்பனுாரை நோக்கி இன்னொரு அணியுமாகப் புறப்பட்டன. மற்றொரு சிறிய அணி தளபதி கிரிப்பிஸ் தலைமையில், குமாரகுறிச்சிக்கு சென்றது. இதிலிருந்து பிரிந்த இன்னொரு சிறிய அணி காக்கூர், சாமிப்பேட்டை வழியாக குமாரகுறிச்சிக்கு சென்றது. சேதுபதி மன்னரது முன்னாள் பிரதானியான முத்தையாபிள்ளையின் சகோதரர் முத்துக்கருப்ப பிள்ளையின் தலைமையில் கிளர்ச்சிக்காரர்கள் கிடாத்திருக்கை அருகே பரங்கிப் பட்டாளத்தை ஆவேசத்துடன் எதிர்த்தனர்.[52]

நானூறு பேர்கள் கொண்ட அந்த அணியில் அத்தனைபேரும் ஆயுதங்களைத் தாங்கியவர்களாக இருந்தனர். ஒரு சிலரிடம் துப்பாக்கிகளும் 'மாட்ச்லாக்கும்' இருந்தன. ஊருக்கு அரை மைல் தொலைவில் இருந்த வெளியில், பட்டப்பகலில் தங்களது தாக்குதலை பயமின்றித் தொடுத்தனர். இராமனாதபுரம் அரசரது முன்னாள் பிரதானியாக இருந்த முத்துக்கருப்ப பிள்ளை, ஒரு கருப்புக்குடையை பிடித்துக் கொண்டு கிளர்ச்சிக் காரர்களுக்கு அப்பொழுதைக்கப்பொழுது கட்டளைகளை பிறப்பித்தும், போராட ஊக்குவித்தும் வந்தார். போரின் பொழுது முதுகுளத்தூர் அமில்தார், ஆப்பனுார் சேர்வைக்காரர்கள் கும்பெனிப்படைக்கு அளித்து வந்த உதவிகள் காரணமாக கிளர்ச்சிக்காரர்கள் பலத்த காயங்களுடன் பக்கத்தில் இருந்த காட்டிற்குள் பின்வாங்கினர்.[53] சேதுபதி மன்னருக்கு பரம வைரியான அபிராமம் வீசுகொண்டத் தேவர் என்ற துரோகியினாலும் கிளர்ச்சிக்காரர்களுக்கு மிகுந்த இழப்புகள் ஏற்பட்டன.[54]

அன்றைய கிளர்ச்சியின் முக்கிய தலமாக கமுதிக்கோட்டை விளங்கியது. முழுவதும் கல்லினாலாகிய இந்த வலிமையான அரணை பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு அமைத்தவர் விஜயரகுநாத சேதுபதி மன்னர் (கி.பி. 1711-21). அதனுடைய முக்கியத்துவம் எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கிளர்ச்சியின் பொழுதுதான் இருதரப்பினராலும் உணரப்பட்டது. ஒன்பது கொத்தளங்களுடன் அமைந்து இருந்த இந்தக் கோட்டையிலிருந்து வெடிகுண்டு போய்விழும் தொலைவு வரை நெருக்கமான காடு சூழ்ந்து இருந்தது.[55] கோட்டை இருப்பதையே மறைத்துக் கொண்டு இருந்தது. இதனை தங்களுக்கு மிகவும் சாதகமான பாதுகாப்பு இடமாக கிளர்ச்சிக்காரர்கள் பயன்படுத்தி வந்தனர். கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்களான சிங்கன்செட்டி, பட்டுர், மயிலப்பன் ஆகியோர்களது நடமாட்டமும் அங்கு மிகுந்து இருந்தது. கும்பெனிப் படைக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இங்கு பயங்கர மோதல்கள் பல ஏற்பட்டன. மறவர்களிடையே விர சாகலங்கள் மிகுந்து இருந்த பொழுதும் கும்பெனியாரது சக்தி வாய்ந்த வெடிமருந்துத் திறனுடன் இயங்கிய பீரங்கிகளுக்கு முன்னர், கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் பயனற்றுப் போயின. அந்த வீர மரணப் போரில் தங்களது தோழர்கள் பலரை கள பலியாகக் கொடுத்துவிட்டு கிளர்ச்சிக்காரர்கள் வட திசையில் நழுவினர். அவர்களைப் பின் தொடர்ந்த சுபேதார் ஷேக் மீரானும், அவனது அணியும் கிளர்ச்சிக்காரர்களை வீர சோழன், அபிராமம் ஆகிய பகுதிகளில் இருந்து விரட்டி இராமனாதபுரத்தின் தெற்குப் பகுதிக்கு பின்னடையுமாறு நிர்ப்பந்தம் செய்தனர்.[56] மயிலப்பனும் அவரைச் சூழ்ந்து நின்ற நானுறுக்கும் அதிகமான மறவர்களும் கீழ்க்குளம் காட்டிற்குள் நுழைந்தனர்.[57]

அதே சமயத்தில் இராமனாதபுரத்திலிருந்து கலெக்டர் லூவிங்டன், சிவகங்கை சேர்வைக்காரர்களிடமிருந்து பெற்ற கூலிப்படையின் பாதுகாப்பில் கமுதி கோட்டைக்கு வந்து சேர்ந்தார்.[58] பெரும்பாலும் அவர் மானாமதுரையிலிருந்து திருச்சுழி வழியாக கமுதிக்கு வந்து இருக்க வேண்டும். கிளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள அழிமானம் மிகவும் பரந்த அளவில் இருப்பதாக லூவிங்டன் அறிக்கையொன்றில் தெரிவித்து உள்ளார்.[59] கிளர்ச்சியை ஒடுக்கும் பணியில் அவர் தீவிரமாக முனைந்தார். இப்பொழுது அவர் கையாண்ட தந்திரம் இராமனாதபுரம் சீமை மறவர்களது எழுச்சியை அடக்க சிவகங்கை சிமை சேர்வைக்காரர்களது படையை பயன்படுத்துவது, நமது கைவிரலை எடுத்து நமது கண்ணைக் குத்துவது அவரது திட்டம்.

கீழ்க்குளம் காட்டில் சண்டை தொடர்ந்தது. கிளர்ச்சிக்காரர்கள் வீரப் போரிட்டு முப்பது மறவர்களை இழந்தன. ஐம்பது பேருக்கு படுகாயம், நாற்பத்தின்மர் சிறைபிடிக்கபட்டனர்; எஞ்சியவர்கள் வெள்ளக்குளம் சென்றனர். கும்பெனிப் படையினருடன் இங்கு சிவகங்கையாரது அணியில் சேர்ந்து கொண்டு கிளர்ச்சிக்காரர்களை நெருக்கி வளைத்தன.[60] சிங்கன் செட்டியும் இன்னும் சிலரும் அங்கு நடந்த போராட்டத்தில் தியாகிகள் ஆயினர். கிளர்ச்சிக்காரர்களான தேவர்களும், சேர்வைக்காரர்களும் சிதறியோடினர். மயிலப்பனும் அவருடன் நின்று போரிட்ட முப்பது பேர்களைக் கொண்ட அணி கிழக்கில் காக்கூரை நோக்கி பின்வாங்கியது, இந்தப் போரில் கும்பெனியாருக்கு பக்கபலமாக பெரிய மருதுவின் மகன் தலைமையில் போரிட்ட சிவகங்கை அணியை கும்பெனியார் பிறகு பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கினர்.

மறவர் சீமையில் சேதுபதி மன்னருக்கு இழைக்கப்பட்ட கும்பெனியாரது கொடுமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள் எழுச்சி நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்து வரலாறு படைத்தது. சொக்கப்பனை போல் சுடர்விட்டு எரிந்த மக்களது ஆவேசம், மோசமான அடக்கு முறையினாலும் சிவகங்கை சீமை சேர்வைக்காரர் துரோகத்தினாலும் ஒடுக்கப்பட்டு ஓய்ந்தது. போரில் கொல்லப்பட்ட கிளர்ச்சிக்காரர்கள் சிலரது தலைகளை கும்பெனியார் நீண்ட ஈட்டி நுனிகளில் சொருகி பல கிராமங்களில் ஆங்காங்கு நட்டுவைத்து தங்களது நாகரீக ஆட்சியை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி யாகச் செய்தனர்.[61]

ஏற்கெனவே கிளர்ச்சியின் ஈடுபாடு காரணமாக பலவித இழப்புகளுக்கு ஆளாகிய குடிமக்கள், இந்தக் கொடுர நடவடிக்கைகளினால் பெரும் பீதியடைந்தனர். இறந்தவர்களுக்கு மன முவந்து மிக்க மரியாதை செய்யும் இந்த புனித பூமியில், அவர்களது சடலங்களை இங்ங்னம் இழிவுபடுத்துவதை அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாததொன்றாக இருந்தது.

அப்பொழுது மறவர் சீமை எங்கும் இராமனாதபுரம் கலெக்டர் பகிரங்கப்படுத்திய பொது மன்னிப்பு விளம்பரத்தையும், வேண்டுகோளையும்[62] தொடர்ந்து குடிகள் வீடுகளுக்குத் திரும்பினர். ஆனால் இந்த மன்னிப்பு கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்திய மயிலப்பனுக்கும், முத்துமருப்பபிள்ளை ஆகிய இருவருக்கு மட்டும் பொருந்தாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களை உயிரோடு பிடிப்பதற்கு திட்டமிட்டனர். அவர்கள் தலைக்கு விலையாக பரிசுகளும் ஏற்படுத்தி இருந்தனர். மயிலப்பன் கடலாடி வழியாக காடல்குடிக்கும் பின்னர் பிள்ளையார் குளம், வில்லார் கோயில் ஆகிய ஊர்களுக்கும் சென்று சில நாட்களைக் கழித்த பிறகு கமுதிக்குள் நுழையாமல் மண்டல மாணிக்கத்திற்கு வந்தார். அங்குள்ள நிலவரங்களை நன்கு புரிந்து கொண்டு மாறு உடையில் தஞ்சைப் பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு சிலகாலம் விவசாயக் கூலியாக தலைமறைவு வாழ்க்கை நடத்தியதாகவும் தெரிகிறது.[63]

மக்களது ஆவேசம், நியாய உணர்வுகள் இவைகளின் உந்துதல்கள் அலைகடலைவிட வேகமாக விரைவாக பொங்கிப் பொருமி வீரமரணப் போராட்டமாக பரிணமித்து பெரும் புயலாக மாறுகிறது. ஆனால் இடைப்படுகின்ற சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் அந்த சண்ட மாருதத்தையும் சாந்தமடையச் செய்து விடுகின்றன. விண்ணை நொறுக்கி விடுவதுபோல வெடி முழக்கம் செய்கின்ற பேரிடி பூமியில் விழுந்தவுடன் நொடி நேரத்தில் மறைந்து விடுவதைப் போல் தயக்கமும் தளர்ச்சியும் இல்லாமல் தாய்நாட்டிற்காக, தன்னரசு ஆட்சிக்காக, தங்களது அரிய உயிரையும் உதவ ஓடோடி வந்தவர்கள், இழப்புகளைக் கருதாமல் இலட்சியத்தை நோக்கி ஓடியவர்கள், போராட்டத்தின் இறுதியில் இவ்வாறாக மாறிவிட்டனரே ஏன்? அநாகரிகமான முறையில் அவர்கள் மீது அவிழ்த்து விடப்படுகின்ற அடக்குமுறைக் கொடுமைகள், அவைகளை எதிர்த்து மேலும் முன்னேற இயலாத மனப்பக்குவம் காரணமா? அல்லது கிளர்ச்சியின் விளைவுகள் எதிர்பார்த்த அளவிற்கு எய்தப் பெறவில்லையே என்ற ஏமாற்றமா?

ஜூன் மாதம். இரண்டாவது வாரம், மறவர் சீமை முழுவதும் அமைதி நிலவியது. வேகமாக வெடித்துப் பரவி, பின்னர் நொடித்துவிட்ட மக்களின் கிளர்ச்சிக்குப் பிறகு இத்தகையதொரு மயான அமைதி நிலவியது, வியப்பான சம்பவமாக தோன்றியது. மற்றுமொரு ஆயுதப் புரட்சிக்கு தயாராக மக்கள் எடுத்துக் கொண்ட அவகாசமாக இருக்குமோ என கும்பெனியார் அஞ்சினர். அதனால் சீமை முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் பரங்கிகள் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் இந்தக் கிளர்ச்சியின் தொடர்ச்சி நெல்லை சீமையிலும், மதுரை, திண்டுக்கல் சீமைகளில் மட்டுமே எதிரொலித்தன. தொடர்ந்து நீடித்தன.


  1. குரு. குகதாஸப்பிள்ளை, திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம் (1928), பக். 214
  2. Revenue Consultations, Vol. 89, 15-10-1798, pp. 3869-70
  3. Revenue Despatches to England, Vol. 26, 9-8-1797, pp. 367-412
  4. Revenue Despatches to England, Vol. 6, 15-10-1799, pp. 186-189
  5. Revenue Consultations, Vol. 95, 13-4-1799, pp. 881-88
  6. குரு. குகதாஸ்ப்பிள்ளை, திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (1928), பக். 214
  7. Board of Revenue General Report, Vol. II, 31–8–1795, pp. 74
  8. Ibid., p. 95
  9. Ibid., pp. 165-69
  10. Madurai District Records, Vol. 1236, 4-8-1796, pp. 45-48
  11. Board of Revenue proceedings, Vol. 292, 12-10-1801. p. 12844
  12. Ibid., Vol. 178, 1-6-1797, p. 3057
  13. Ibid., Vol. 299, 12-10-1801, pp. 12344-46
  14. Revenue Despatches to England, Vol. VII, 22-1-1800, р. 21
  15. Board of Revenue proceedings Vol. 239, 18-11-1799
  16. Revenue Despatches to England; Vol. VII. 22-1-1800, pp. 18-19
  17. Ibid., pp. 78-79
  18. Board of Revenue General Report, Vol. Il D, 1-10-1797, part II, p. 13
  19. Madura District Records, vol. 1179 D, 1-8-1800, p. 193
  20. Revenue Consultations, Vol. 91, 14-12-1798, pp. 4440-45
  21. Public Consultations, Vol. 244, 9-5-1800, pp. 1415-21
  22. Commercial Despatches to England, Vol. XIV, pp. 31–32
  23. Military Country Correspondence, Vol. 49, 13-10-1789, p. 354
  24. Revenue Consultations, Vol. 91 D, 14-12-1798, pp. 4191-96
  25. Military consultations, Vol. 256, 6-8-1799, p. 4613
  26. Political Despatches to England Vol. V. D, 13-3-1709. p. 323
  27. Military Consultations, Vol. 256, 6–8-1799, p. 478 | -88
  28. Board of Revenue Proceedings, Vol. 192 D, 26-1-1798 р. 505. Revenue Despatches to England, Vol. v D, 15-10-1798, pp. 300-302.
  29. Military Con sultations, VoI. 251, 27–3–1799, p. 1445
  30. Military Sundries, Vol. 66 D, 13-8-1784, pp. 241-250
  31. Madurai Collectorate Records, Vol. 1139, 24–4–1799. pp. 45-50
  32. Board of Revenue Proceedings, Vol. 226, 2–5–1799. pp. 3782-86
  33. do 26-4-1799, pp. 3815-16
  34. Alexander Nelson, Madurai Dist. Manual (1868), Part IV, Chap. VII, p. 155
  35. Madurai collectorate Records, Vol. 1157, 6-5-1799
  36. Ibid., 29-4-1799
  37. Ibid., Vol. 1122, 11–5–1799
  38. Revenue consultations, Vol. 95 A, 9–5–1799 and 16-5-1799, pp. 998-1014
  39. Madurai Collectorate, Vol. 1122, 22-5-1799
  40. Ibid., 25–5–1799
  41. Revenue consultations, Vol. 95 A. 20-5-1799, pp. 1998
  42. Madurai collectorate, Vol. 1122, 25–5–1799
  43. Madurai collectorate Records, Vol. 1157, 24-4-1799, р. 69
  44. Ibid., 25-4-1799, p. 71
  45. Madurai Collectorate Records, Vol. 1122, 25-5-1799
  46. Military Consultations, Vol. 105 A, 4-9-1800, р. 2611
  47. Madurai Collectorate Records. Vol. 1139 (1802)
  48. Ibid., Vol. 1157, 30-4-1799.
  49. Madurai Collectorate Records, Vol. 1157, 2-5-1799
  50. Ibid., 27-4-1799.
  51. Military consultations, Vol. 253 A, 17-5-1799, р. 2972.
  52. Revenue consultations. Vol. 92 (A). 9-5-1799. pp. 998-1000.
  53. Revenue consultations, Vol. 95 A, 15-5–1799, p. 1007.
  54. Revenue consultations. Vol. 95 A, 15-5-1799 pp. 1007-21.
  55. Military country correspondence, Vol. 2 1 (1772), pp. 159-65
  56. Military country correspondence, Vol. 253 A (179 pp. 3031, 3146-49.
  57. Madurai collectorate Records Vol. 1139, p. 45.
  58. Revenue consultations, 22.9, 30-5-1799, p. 48.
  59. Madurai collectorate Records. Vol. 1157, 25-4-1799 pp. 70-71.
  60. Ibid., 29.5.1799, pp. 3246-48.
  61. Revenue Cousulations, Vol. 229, 29.5.1799, p. 4849.
  62. Proclamation dated 24-5-1799, and Madurai Collectorate Records, Vol. 1139, pp. 45-49.
  63. Madurai District Collectorate, Vol. 1139, p. 45.