இந்தியப் பெருங்கடல்/பருவக்காற்று ஆராய்ச்சி

விக்கிமூலம் இலிருந்து



8. பருவக்காற்று ஆராய்ச்சி

பகலவன் விளைவினால், பருவக்காற்று மழைகளை உண்டாக்குவது இந்தியப் பெருங்கடல் ஆகும். பருவக்காற்றுகளை ஆராயும் முயற்சியே பருவக்காற்று ஆய்வு (Monsoon Experiment) ஆகும் . இதனைச் சுருக்கமாக மோனக்ஸ் (Monex) எனலாம்.

வரலாறு

மோனக்ஸ்-79 என்பது உண்மையில் முதல் தடவையாக நடைபெறும் திட்டமன்று. கடந்த 15 ஆண்டுகளாக, அதாவது 1964-ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பாகத் தொடக்க நிலை ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

1963-65-இல் நடந்த அனைத்துலகக் கடல் ஆராய்ச்சிப் பயணம் (IIOE), 1973-இல் முடிந்த இந்திய சோவியத்து வானியல் ஆய்வு (ISMEX), இந்தியக் கப்பல்களும், சோவியத்துக் கப்பல்களும் கலந்து கொண்டு 1977-ஆம் ஆண்டு மே 23-முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற்ற சிறு மோனக்ஸ் ஆகியவை எல்லாம் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோனக்ஸ்-79-இன் முன்னோடிகளாகும.

இந்திய உற்றுநோக்கு ஆராய்ச்சி நிலையங்களின் பொது இயக்குநர் அவர்கள் மாரிப் பருவக்காற்றுகள், கோடைப் பருவக்காற்று ஆகியவற்றின் தேசியப் பொருளாதாரச் சிறப்பை உணர்ந்ததாலும், 1970-இல் பிரசல்சில் நடைபெற்ற உலகத் திட்ட மாநாட்டின் (Global Planning Conference) பேராளராக இருந்ததாலும், அம்மாநாட்டில் தெற்கு ஆசியப் பகுதிக்குப் பருவக்காற்று ஆய்வு (MONEX) ஒன்றினை நடத்த முன்மொழிந்தார். பின், இது ஜெனிவாவில் கடந்த உலக வானிலை ஆராய்ச்சி நிலையக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று செயற்படுகிறது.

நோக்கங்கள்

இத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் பின்வருமாறு: -

1) நாட்டின் வேறுபட்ட தட்ப வெப்பநிலைப் பகுதிகளில் பருவக்காற்று அடிக்கத் தொடங்கும் நாட்களைத் தோராயமாக அறிதல்.
2) 90 நாள் கொண்ட பருவக்காற்றுக் காலத்தில் பெறப்படும் மழையின் முழு அளவை மதிப்பிடல்.
3) நாட்டின் வேறுபட்ட பகுதிகளில் 5-7 நாட்கள் கொண்ட காலத்தில் அதிகமாகவும், குறைவாகவும் ஏற்படும் மழையினை அறிதல், சுருங்கக்கூறின் பருவக்காற்றினைத் தெளிவாக அறிவதே நோக்கமாகும்.

காரணிகள்

பகலவன் கதிர்வீச்சு, புவிக் கதிர்வீச்சு, பெருங்கடல்களின் இயக்கம், நிலம், கடல் ஆகியவற்றின் உராய்வு விளைவுகள், மலைகள் முதலியவை பருவ மழைக்குரிய காரணிகளாகும். இதில் முக்கிய பங்குபெறுவது இமாலயப் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் இல்லை எனில் உண்மைப் பருவக் காற்றும் இல்லை. பருவக்காற்றுச் சுழற்சியில் இமாலயப் பகுதிகளின் வெப்ப விளைவுகளும், இயக்க விளைவுகளும் சிறந்த இடத்தைப் பெறுகின்றன. இவ்விரு உண்மைகளை இதுகாறும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

பருவக்காற்று முன்னரே உண்டாவது கோடையில் திபேத்தியச் சமவெளி வெப்பமடைவதால் என்பதும் மற்றும் ஒரு காரணியாகும்.

பங்குபெறும் நாடுகளும் நிறுவனங்களும்

இத்திட்டத்திற்காக இந்திய அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி வரலாற்றில் இது பெரிய ஆய்வு ஆகும். இதனை இந்தியா, உருசியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்துகின்றன.

இத்திட்டத்தில் கலந்துகொள்ளும் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் பின்வருமாறு. பம்பாய் பாபா அணு ஆராய்ச்சி மையம், பம்பாய் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம், ஹைதராபாத் தொலையிட அறிநிலையம்.

நடைபெறும் முறை

சோவியத்துக் கப்பல்கள் கடல் உற்று நோக்கல்கள், வானிலை உற்று நோக்கல்கள் முதலியவற்றை நடத்தும். இவை தம் பணியைத் தொடங்கி உள்ளன. தென்மேற்குப் பருவக்காற்றை உருவாக்குவதில் ஆற்றல்வாய்ந்த சோமலி நீரோட்டத்திற்குப் பங்குண்டு என்னும் ஒரு நம்பிக்கையுள்ளது. இதனை ஆராய இக்கப்பல்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரை நெடுக உற்று நோக்கல்களை எடுத்த வண்ணம் உள்ளன.

இந்நீரோட்டத்தை ஆராய்ந்தபின், இக்கப்பல்கள் அரபிக்கடல், வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள இந்தியக் கப்பல்களோடு சேர்ந்து, தெற்கு அல்லது வடக்காகப் பல்கோணத் தோற்றத்தை (Polygonal configuration) எடுக்கும்.”

அமெரிக்கா, தற்கால அறிவியல் கருவிகள் நிறைந்த வான ஊர்தியினை வழங்கும். காட்டின் குறுக்காக வட-தென் திசைகளிலும் கிழக்கு மேற்குத் திசைகளிலும் இவ்வூர்தி இயங்கி, வேண்டிய வானொலி அளவீடுகளை எடுக்கும்.

இத்திட்டத்தில் நான்கு இந்தியக் கப்பல்களும் பங்குகொள்ளும். இவற்றில் குறிப்பிடத்தக்க அளவீடுகளை எடுக்கப் போதிய கருவிகள் உள்ளன.

அடுக்கு வெளியில் உள்ள காற்றுகள், நிலவும் வெப்பநிலை ஆகியவற்றின் அளவீடுகளை மூன்று நிலையங்களிலுள்ள ஏவுகணைகளால் எடுக்கப்படும். அவை தும்பா (7° வ), ஸ்ரீகரிகோட்டா (16° வ), பாலசோர் (22° வ) ஆகும். இந்த உற்று நோக்கல்கள் உருசியக் கப்பல்கள் எடுக்கும் ஏவுகணை உற்று நோக்கல்களோடு ஒப்பிடப்படும். இந்தியக் கப்பல் வானிலை மிதப்புகளைப் பல இடங்களில் விட்டு, மிதப்பு உற்று நோக்கல்களை எடுக்கும்.

கோஸ்-10 என்பது அமெரிக்க நிலையான நில நிலா ஆகும். இது புவியின் சுழற்சியோடு சேர்ந்து சுற்றுவதால் பார்ப்பதற்கு நிலையாக இருப்பது போல் தெரியும். நில நடுக்கோட்டில் இது 60°, கிழக்கு நீள் கோட்டில் வலம் வரும். இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகியவற்றின் பகுதிகளை இது வட்டமிடும்.

தெரியும் பகுதியில் தோராயமாக 3 - 5 கிலோ மீட்டர் பகுப்பும், அகச்சிவப்புப் பகுதியில் 7 கிலோ மீட்டர் பகுப்புமுள்ள மேகப்படங்களை இது அனுப்பும். இவை மீடியோஸ்டாட்-1 என்னும் நிலாவினால் ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் பம்பாய்க்கு அஞ்சல் செய்யப்படும். இந்நிலா ஐரோப்பிய வானவெளி நிலையத்தின் நிலையாகவுள்ள நில நிலாவாகும். இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்ற நிலையங்களுக்கு இப்படங்கள், பம்பாயிலிருந்து மீண்டும் அனுப்பப்படும். தவிர, நிலையான அடிப்படையில தாமாகப் படம் எடுக்கும் கருவிகள் ஏழு இந்தியாவிடம் உள்ளது. நன்கு திட்டமிடப்பட்டிருப்பதால், இந்த ஆராய்ச்சியினால் பல நன்மைகள் உண்டாக நல்வாய்ப்புள்ளது.