ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/கன்னியாகுமரி மாவட்டத்தில் 500
ஆர்.எசு.எசு., விசுவ இந்து பரீட்சத் இவற்றின் செயல்திட்டங்கள்!
சமசுக்கிருத வளர்ச்சி, இந்துமதப் பரப்புதல் -
இரண்டுமே அவர்கள் கொள்கை !
தமிழர்களுக்குத் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழின முன்னேற்றம்
பற்றி அக்கறை வரவேண்டும்!
பார்ப்பனியத்திற்கும் பிற இந்துமதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முழுக் கவலை என்னவென்றால், இந்தியாவில் முசுலீம் மதத்தையும், கிறித்தவ மதத்தையும், வேரில்லாமல் செய்துவிடவேண்டும் என்பது தான். இரண்டும் இந்தியாவிற்குச் சொந்தமில்லாத வேற்று நாட்டு மதங்கள் என்பது அவர்கள் கருத்து. இந்து என்னும் பார்ப்பனிய மதம் ஒன்று மட்டுமே இந்நாட்டுக்குரிய உள்நாட்டு மதமாம். எனவே, இந்துமதம் பற்றிய அனைத்து முயற்சிகளையும் ஒரு புற முயற்சியாகவும், அதற்குத் துணையான சமசுக்கிருத வளர்ச்சியை ஓர் அக முயற்சியாகவும் அவர்கள் ஒரே பொழுது செய்து வருகிறார்கள். சமசுக்கிருதத்தைத் தவிர்த்து இந்துமதத்தை நிலைப்படுத்துதல் இயலாது இந்துமதத்தின் உயிரே சமசுக்கிருதத்தில் தான் இருக்கிறது.
சமசுக்கிருதத்தை அவர்கள் தேவமொழி என்று சொல்வது நிலைபெற்ற கருத்தாக இருந்தால்தான், ஆரியப் பார்ப்பனர்களுக்கும் தங்களைத் தேவர்கள் என்று கூறிக்கொள்ள முடியும். அவர்கள் தேவர்கள் அல்லது பூதேவர்கள் என்பது நிலைப்பாடு பெற்றால்தான் இந்து மதத்திற்குக் காவலர்களாகவும் அதிகாரிகளாகவும் அவர்கள் இருக்க முடியும். அப்பொழுதுதான் இந்துமதமும் இந்நாட்டில் நிலையாக இருக்க முடியும். இதைக் கீழ்வரும் ஒரு பழைய சமசுக்கிருதச் சொலவகம் நன்றாக எடுத்துக்காட்டுகிறது.
- ‘தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்
- மந்த்ரா தீனந்து தைவதம்
- தன் மந்த்ரம் ப்ராஹ்மணா தீனம்
- ப்ராஹ்மனா மம தைவதம்’
(இதன் பொருள் : உலகம் தெய்வத்தின் ஆளுமையுள் (ஆதிக்கத்தில்) உள்ளது; தெய்வம் மந்திரத்தின் ஆளுமையுள் இருக்கிறது; அந்த மந்திரம் பிராமணர்களின் ஆளுமையுள் இருக்கிறது; எனவே, பிராமணரே நம் தெய்வம்.) ஆகவே, இந்து மத வளர்ச்சிக்குச் சமசுக்கிருதமே அடிப்படையாக இருக்கிறது. சமசுக்கிருதமோ பிராமணர்களுக்குத் தேவையான இந்துமத மூலப்பொருளாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா அஃதாவது பாரத நாடு சமசுக்கிருதத்தையும், சமசுக்கிருதம் பிராமணர்களையும் தவிர்த்து வாழ முடியாது! சமசுக்கிருதம் தவிர்க்கப்பட்டால் பிராமணியமும் தகர்ந்து போகும். இந்தக் கருத்துகளை உள்ளடக்கி நாம் இப்படியொரு சொலவகத்தைப் புதியதாக அமைக்கலாம்.
- ‘ப்ராஹ்மணா தினம் சமஸ்கிருதம்;
- சம்ஸ்கிருதா தீனந்து ஹிந்துமதம்:
- தன்மதம் ப்ராஹ்மணா தீனம்
- ப்ராஹ்மணா மம பாரதம்.’
எனவேதான் சமசுக்கிருத வளர்ச்சியில் பார்ப்பணியம் தன் ஆளுமைக்கு உரிய நிலமாக நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், இந்துமதத்தை அது நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்துமதம் இந்தியாவை விட்டு உலக நாடுகள் எதிலும் கால்கொள்ள முடியாது. ஏனெனில் அஃது அறிவியலுக்கு மாறுபட்ட ஒரு மதம். எனவே அறிவியலுக்கு மாறுபட்ட, மூடநம்பிக்கைகளையே அடிப்படையாகக் கொண்ட, ஓரினம் மட்டுமே பிழைப்பதற்குக் கருவியாக உள்ள இந்துமதம், இந்தியாவில் நிலைப்பட வேண்டுமானால், அஃது இரண்டு அடிப்படையான வேலைகளைச் செய்துகொள்ள வேண்டும். ஒன்று, அம்மதக் கருத்துகளுக்கு அடிப்படையான சமசுக்கிருத மொழியை அது வளரச் செய்ய வேண்டும்; அல்லது மறைந்துபோகாமல் காத்துக்கொள்ள வேண்டும். இரண்டு, இந்துமதக் கொள்கைகளை அடியோடு ஒழித்துக்கட்ட வல்லனவும், மக்களைச் சமமாக மதிக்கின்ற கொள்கைகள் கொண்டனவுமான, அஃதாவது வருணாசிரமத்திற்கு மாறுபட்டனவுமான கிறித்தவம், இசுலாமியம் போன்ற புற மதங்கள் இந்தியாவில் பரவுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும். இந்த இரண்டு கொள்கைகளும் அவற்றை நோக்கிய செயற்பாடுகளும் வலிந்த முறையில் பரவினால்தான், பிராமணியம் அஃதாவது ஆரியப் பார்ப்பனியம் இந்த நாட்டை முழுவதுமாக கவர்ந்து (ஆக்கிரமித்துக்) கொள்ள முடியும். எனவே, அத்தகைய முயற்சிகளைத்தாம் பார்ப்பனிய இயக்கங்கள் அனைத்தும், குறிப்பாக ஆர்.எசு.எசும், விசுவ இந்து பரீட்சத்தும், அரவிந்த ஆசிரமத்துப் பணத்தை வைத்துக் கொண்டு செய்ய முயற்சி செய்கின்றன.
அரவிந்த ஆசிரமம் சமசுக்கிருதத்தை உலகமொழி யாக்குவதற்கு ஒதுக்கிய 800 கோடி உருபாவுக்கு மேலும் அவ் வியக்கங்கள் ஆரியத்திற்குத் துணையான செல்வர்களிடமிருந்து நிறையப் பணத்தைத் திரட்டத் திட்டமிட்டிருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் இலக்கக் கணக்கான பணம் திரளுகிறது. குறிப்பாக, பார்ப்பனிய அடிமைகளாக உள்ள முத்தையா மகாலிங்கங்கள் போன்ற தமிழினச் செல்வர்களே, இந்து மதத்தின் மேலும் சமசுக்கிருதத்தின் மேலும் கொண்ட அறியாமை வெறியினால், அவர்களின் முயற்சிக்குத் துணைபோவது, அவர்களுக்குப் பெரிய ஆக்கமாக இருக்கிறது.
நம் தமிழக அரசும், பார்ப்பனர் மனம் புண்படக்கூடாதே என்ற வகையில், அவர்களின் முயற்சிக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபோவது தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாக, ஆர்.எசு.எசின் முயற்சியால் வடநாட்டுப் பெண் முதலையாகிய பிர்லா மட்டும் தம் பணத்தில், மதமாற்றங்கள் பெரிதாக நிகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், 500 இந்து மதக் கோவில்களைக் கட்டித் தர ஒப்புக் கொண்டிருப்பதாகக் கேள்விப்படுகிறோம். இவரன்றி டாட்டாவும் இப் பார்ப்பனிய முயற்சிகளுக்குத் துணைபோக முன் வந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. இன்னும், தென்னாட்டிலும் உள்ள பெரிய பெரிய பார்ப்பன நிறுவனங்களும், ‘சற்சூத்திரா’ நிறுவனங்களும் இவ்வகையில் அவர்களின் முயற்சிகளுக்கு உதவ முன்வந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. போதிய வரலாற்றறிவில்லாமலும், தமிழினப் பற்றில்லாமலும் நம் தமிழினப் பணக்காரக் கொள்ளையர்களும், தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளும் இப்படித் துணை போகலாம் என்று கருதுகிறோம்.
இனி, ஆர்.எசு.எசும்., விசுவ இந்து பரீட்சித்தும் வகுத்துள்ள திட்டங்களையும் நாம் கவனித்தல் வேண்டும். முதல் கட்டமாக, இந்தியாவில், சில தகுதிகள் அடிப்படையில் மாவட்டத்திற்கு இருவர் மேனி 1000 பேர்களைக் கட்டுப்பாடு மிக்க முழுநேரத் தொண்டர்களாகப் பொறுக்கியெடுக்க அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 500 உருபா மேனிச் சம்பளம் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான ஆறு மாதப் பயிற்சியைத், தென்னிந்தியாவில் சிறீசைலத்திலும், வடஇந்தியாவில் காசி, ரிசிகேசம் கோரக்பூர் (சிறீ சைதன்யர் பிறந்த இடம்) ஆகியவற்றிலும் கொடுக்க விருக்கிறார்களாம். மாவட்டத்திற்கு இருவராகப் பொறுக்கப் பட்டவருள், ஒருவர்க்கு, மதமாற்றங்கள் நிகழ்கின்ற இடத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களில், முசுலீம், கிறித்தவ மதங்களுக்குச் செல்ல விரும்புவர்களோடு, நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்களை அம்மதங்களுக்குச் செல்ல விடாமல் எவ்வகையிலானும் தடுப்பதும், இந்துமதத்திலேயே இருக்கச் செய்வதும் என்ற முறையில் பயிற்சி தருவார்களாம். பயிற்சிபெற்ற ஆயிரத்துள் 500 பேர் இந்த முயற்சியைச் செய்கையில், மீதமுள்ள 500 பேர்கள், ஏற்கனவே முசுலீம், கிறித்துவ மதங்களில் உள்ளவர்களை இந்து மதத்திற்கு மாறச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இந்த வகையில் இவர்களுக்குப் பயிற்சி யளிக்கப்படும். அதுவன்றி, பிர்லாவின் முயற்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில், கட்டப்பெற விருக்கும் 500 கோயில்களிலும், முழுக்க முழுக்கப் பார்ப்பனப் பூசார்த்தி(அருச்சகர்)களையே அமர்த்துதலும் அவர்களின் திட்டமாகும்.
இதற்கடுத்து, இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 5000 பேர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முறையான சமசுக்கிருத மொழிப் பயிற்சி கொடுத்து, அவர்களைக்கொண்டு உலக முழுவதும் சமசுக்கிருதப் பள்ளிகளைத் தோற்றுவிப்பது அவர்கள் திட்டமாகும். இவ்விரண்டு திட்டங்களும் 1983 இறுதிக்குள் செயற்படுத்தப் பெறுதல் வேண்டும் என்னும் பெருமுயற்சியில் அவர்கள் முனைந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தமிழர்கள் ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனர்கள், அவர்களின், மொழி வளர்ச்சிக்கும் இன முன்னேற்றத்திற்கும் திட்டமிட்டுச் செயற்படுவதும், பணம் திரட்டுவதும் நமக்கு எரிச்சலையும், கொதிப்பையும் ஏற்படுத்துவதை விட, ஒர் உண்மையை உணர்த்துகிறது. அவர்கள் இனத்திற்கு அவர்கள் பாடுபடுவதில் தவறென்ன? ஆனால், நாம் எப்படி யிருக்கிறோம்? நம்மிடம் தமிழ்ப் பற்று உண்டா ? தமிழ் வளர்ச்சிக்கான திட்டம் உண்டா? நம்மிடத்தில் உள்ள செல்வர்கள் நாம் அந்த முயற்சியை செய்வதற்கு உதவுகிறார்களா? நம் தலைவர்களும் இவற்றைப் பற்றிக் கவலை கொள்கிறார்களா? சிந்திக்க வேண்டும், நாம்!
- தமிழ்நிலம், இதழ் எண் : 11, 1983