5. வடமொழிப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

பேரகத்தியம்[தொகு]

ஆசிரியர்: அகத்தியனார்[தொகு]

உரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்[தொகு]

முதலாவது எழுத்திலக்கணக் காண்டம்[தொகு]

5. வடமொழிப் படலம்[தொகு]

அஃதாவது - வடமொழிகளும் வடமொழி புணரும் வகையும் உணர்த்தும் படலம்.


141. சநுக்கிரகஞ் சங்கத மவப்பிரபஞ்சநம் பாகதம் () சநுக்கிரகம் சங்கதம் அவப் பிரபஞ்சநம், பாகதம்

மொழிநான் கென்றே மொழியப் படுமே. (01) () மொழி நான்கு என்றே மொழியப் படும் ஏ.
பவாநந்தர் உரை
இஃது வடசொல்லானது நால்வகையாம் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
மொழி = சொல்லானது,
சநுக்கிரகம் = சநுக்கிரகமும்,
சங்கதம் = சங்கதமும்,
அவப்பிரபஞ்சநம் = அவப்பிரஞ்சநமும்,
பாகதம் = பாகதமும் ஆகிய,
நான்கு என்று = நால்வகையாம் என்று,
மொழியப்படும் = சொல்லப்படும்.
பொழிப்புரை
சொல்லானது சநுக்கிரகமும் சங்கதமும் அவப்பிரபஞ்சநமும் பாகதமும் ஆகிய நான்குவகையாம் என்று சொல்லப்படும்.
சநுக்கிரகம் முதலிய நான்கும் வடசொற்கள்.


142. சநுக்கிரகஞ் சங்கதந் தேவர்மொழி யென்ப. (02) () சநுக்கிரகம் சங்கதம் தேவர் மொழி என்ப.

பவாநந்தர் உரை
இஃது மேற்கூறப்பட்ட நான்கனுள் சநுக்கிரகம், சங்கதம் என்னும் இரண்டும் இன்னார்க்கு ஆகும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
சநுக்கிரகம் சங்கதம் = சநுக்கிரகம், சங்கதம் என்னும் இரண்டும்,
தேவர் மொழி என்ப = தேவர்மொழிகளாம் என்று சொல்லுவர் புலவர்.
பொழிப்புரை
சநுக்கிரகம் சங்கதம் என்னும் இவ்விரண்டும் தேவர்மொழிகளாம் என்று சொல்லுவர் புலவர்.


143. அவப்பிரஞ் சநமொழி யசேதனர்க் காகும். (03) () அவப்பிரஞ்சநம் மொழி அசேதனர்க்கு ஆகும்.

பவாநந்தர் உரை
இஃது அவப்பிரஞ்சநமொழி இன்னார்க்கு ஆகும் என்பது உணர்த்துகின்றது
பதவுரை
அவப்பிரஞ்சநமொழி = அவப்பிரஞ்சநமொழியானது,
அசேதனர்க்கு ஆகும் = இழிசாதியார்க்கு உரியதாகும்.
பொழிப்புரை
அவப்பிரஞ்சந மொழியானது இழிசாதியார்க்கு உரியதாகும்.
அசேதனர் - அறிவிலார் (சேதனம்=அறிவு). இழிஜனங்கள் அறிவிலிகள் ஆதலால் அவர்களை அசேதனர் என்றார்.


144. எல்லா நாட்டிலு மியல்வது பாகதம். (04) ()எல்லா நாட்டிலும் இயல்வது பாகதம்.

பவாநந்தர் உரை
இஃது பாகதம் ஆமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
எல்லா நாட்டிலும் = எல்லாத் தேயத்திலும்,
இயல்வது = வழங்குவது,
பாகதம் = பாகதமொழி எனப்படும்.
பொழிப்புரை
எல்லாத் தேயத்திலும் வழங்குவது பாகதமொழி எனப்படும். பாகதம் பிராகிர்தம் என்னும் வடமொழிச்சொல்.
இயலல் = வழங்கல்.

145. பாகதம், () பாகதம்,

தற்பவந் தற்சமந் தேசிய மெனப்படும் (05) () தற்பவம் தற்சமம் தேசியம் எனப்படும்.
பவாநந்தர் உரை
இஃது பாகதத்தின் வகையினை உணர்த்துகின்றது.
பதவுரை
பாகதம் = பாகதமானது,
தற்பவம் = தற்பவம் என்றும்,
தற்சமம் = தற்சமம் என்றும்,
தேசியம் = தேசியம் என்றும்,
எனப்படும் = மூவகையாகச் சொல்லப்படும்.
பொழிப்புரை
பாகதமானது தற்பவம், தற்சமம், தேசியம் என மூவகையாகச் சொல்லப்படும்.


தற்பவம்

146. ஆரியச் சிறப்பெழுத் தாற்பொதுச் சிறப்பா () ஆரியச் சிறப்பு எழுத்தால் பொது சிறப்பால்

லானவீ ரெழுத்தா லமைவது தற்பவம். (06) () ஆன ஈர் எழுத்தால் அமைவது தற்பவம்.
பவாநந்தர் உரை
இஃது தற்பவத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது.
பதவுரை
ஆரியச் சிறப்பெழுத்தால் = ஆரியச் சிறப்பு எழுத்தாலும்,
பொது சிறப்பால் ஆன ஈர் எழுத்தால் = பொதுவும் சிறப்புமாகிய இரண்டெழுத்தாலும்,
அமைவது= தமிழிற் சிதைந்து வந்து அமைந்திருப்பது,
தற்பவம் = தற்பவம் எனப்படும்.
பொழிப்புரை
ஆரியச் சிறப்பெழுத்தாலும், பொதுவும் சிறப்பும் ஆகிய இரண்டெழுத்தாலும் தமிழிற் சிதைந்துவந்து அமைந்திருப்பது தற்பவம் எனப்படும்.

உதாரணம்: சுகி, போகி - இவை சிறப்பு. அரன், அரி - இவை பொது.

ஆர்யம்-வடசொல். ஆரியச் சிறப்பெழுத்து - வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்து. பொதுச் சிறப்பு- வடமொழிக்கும் தென்மொழிக்கும் பொதுவும், வடமொழிக்குச் சிறப்பும் ஆகிய இருவகை எழுத்து.

தற்சமம்

147. ஆரியந் தமிழ்ப்பொது வாமொழி தற்சமம். (07) () ஆரியம் தமிழ் பொது ஆம் மொழி தற்சமம்.

பவாநந்தர் உரை
இஃது தற்சமத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது.
பதவுரை
ஆரியம் = ஆரியத்திற்கும்,
தமிழ் = தமிழிற்கும்,
பொது ஆம் = பொது எழுத்தால் ஆகிய,
மொழி = மொழிகள்,
தற்சமம் = தற்சமம் எனப்படும்.
பொழிப்புரை
ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவெழுத்தால் ஆகிய மொழகள் தற்சமம் எனப்படும்.

உதாரணம்: அமலம், காரணம் - இவை பொது.


தேசியம்

148. தேசியந் திசைச்சொ லென்று செப்புக. (08) () தேசியம் திசைச் சொல் என்று செப்புக.

பவாநந்தர் உரை
இஃது தேசியத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது.
பதவுரை
தேசியம் = தேசியம் என்பது,
திசைச்சொல் என்று செப்புக = திசைச்சொல் என்று சொல்லுக.
பொழிப்புரை
தேசியம் என்பது திசைச்சொல் என்று சொல்லுக.

உதாரணம்: ஆய், அச்சன் என வரும். இவை முறையே தாய், தந்தை என்னும் பொருளன.

பிறநாட்டு மொழிகளினின்று தமிழ்நாட்டில் வந்து வழங்கும் சொல். இச்சூத்திரத்தில் ‘செப்புக’ என்பதும் திசைச் சொல்லாதல் காண்க.


வடமொழிச் சந்தி

149. தீர்க்கங் குணம்விருத்தி சந்திமூ வகையாம். (09) ()தீர்க்கம் குணம் விருத்தி சந்தி மூ வகை ஆம்.

பவாநந்தர் உரை
இஃது சந்தியின் வகையை உணர்த்துகின்றது.
பதவுரை
தீர்க்கம் = தீர்க்கசந்தி என்றும்,
குணம் = குணசந்தி என்றும்,
விருத்தி = விருத்திசந்தி என்றும்
சந்தி மூவகை ஆம் = சந்தியானது மூவகைப்படும்.
பொழிப்புரை
தீர்க்கசந்தி என்றும் குணசந்தி என்றும் விருத்திசந்தி என்றும் சந்தியானது மூன்று வகைப்படும்.


தீர்க்க சந்தி

150. அ ஆமுன் அ ஆவரி லிரண்டுங் கெட்டாவாம். (10) () அ ஆ முன் அ ஆ வரில் இரண்டும் கெட்டு ஆ ஆம்.

பவாநந்தர் உரை
இஃது அகர ஆகார ஈற்றின்முன் அ ஆ வந்து புணருமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
அ ஆ முன் = வடமொழி அகர ஆகார ஈற்றின் முன்,
அ ஆ வரில் = அகர ஆகாரங்கள் வந்தால்,
இரண்டும் கெட்டு ஆ ஆம் = நிலைமொழி ஈறும் வருமொழி முதலுமாகிய இரண்டும் கெட,
ஆ ஆம் = ஆகாரம் வரும்.
பொழிப்புரை
வடமொழி அகர ஆகார ஈற்றின்முன் அகர ஆகாரங்கள் வந்தால் நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் ஆகிய இரண்டும் கெட ஆகாரம் வரும்.

உதாரணம்: பாத அம்புஜம்-பாதாம்புஜம். சிவ ஆலயம் - சிவாலயம். சேநா அதிபதி - சேநாதிபதி, சதா ஆநந்தம் - சதாநந்தம்


151. இ ஈமுன் இ ஈவரி லிரண்டுங்கெட் டீயாம். (11) () இ ஈ முன் இ ஈ வரில் இரண்டும் கெட்டு ஈ ஆம்.

பவாநந்தர் உரை
இஃது இகர ஈகாரத்தின்முன் இ ஈ வந்து புணருமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
இ ஈ முன் = இகர ஈகார ஈற்றின்முன்,
இ ஈ வரில் = இகர ஈகாரங்கள் வந்தால்,
இரண்டும் கெட்டு = ஈறும் முதலும் ஆகிய இரண்டும் கெட,
ஈ ஆம் = ஈகாரம் வரும்.
பொழிப்புரை
இகர ஈகார ஈற்றின்முன் இகர ஈகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஈகாரம் வரும்.

உதாரணம்: கிரி இந்திரன்- கிரீந்திரன், கிரி ஈசன் - கிரீசன்.

மகீ இந்திரன்- மகீந்திரன், மகீ ஈசன் - மகேசன்.


152. உ ஊமுன் உ ஊவரி லிரண்டுங்கெட் டூவாம். (12) () உ ஊ முன் உ ஊ வரில் இரண்டும் கெட்டு ஊ ஆம்.

பவாநந்தர் உரை
இஃது உகர ஊகாரத்தின்முன் உ ஊ வருமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
உ ஊ முன் = உகர ஊகார ஈற்றின்முன்,
உ ஊ வரில் = உகர ஊகாரங்கள் வந்தால்,
இரண்டும் கெட்டு = ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட,
ஊ ஆம் = ஊகாரம் வரும்.
பொழிப்புரை
உகர ஊகார ஈற்றின்முன் உகர ஊகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஊகாரம் வரும்.

உதாரணம்: குரு உபதேசம் - குரூபதேசம், சிந்து ஊர்மி - சீந்தூர்மி.

சுயம்பூ உபதேசம் - சுயம்பூபதேசம், வதூ ஊரு - வதூரு.
குணசந்தி

153. அ ஆ முன் இ ஈவரி லிரண்டுங்கெட் டேயாம். (13) () அ ஆ முன் இ ஈ வரில் இரண்டும் கெட்டு ஏ ஆம்.

பவாநந்தர் உரை
இஃது அகர ஆகாரங்களின்முன் இ ஈ வருமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
அ ஆ முன் = அகர ஆகார ஈற்றின்முன்,
இ ஈ வரில் = இகர ஈகாரங்கள் வந்தால்,
இரண்டும் கெட்டு = ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட,
ஏ ஆம் = ஏகாரம் வரும்.
பொழிப்புரை
அகர ஆகார ஈற்றின்முன் இகர ஈகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஏகாரம் வரும்.

உதாரணம்: நர இந்திரன்- நரேந்திரன், தேவ ஈசன்- தேவேசன், தரா இந்திரன் - தரேந்திரன், உமா ஈசன் - உமேசன்.


154. அ ஆ முன் உ ஊவரி லிரண்டுங்கெட் டோவாம். (14) ()அ ஆ முன் உ ஊ வரில் இரண்டும் கெட்டு ஓ ஆம்.

பவாநந்தர் உரை
இஃது அ ஆ முன் உ ஊ வருமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
அ ஆ முன் = அகர ஆகார ஈற்றின்முன்,
உ ஊ வரில் = உகர ஊகாரங்கள் வந்தால்,
இரண்டும் கெட்டு = ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட்டு,
ஓ ஆம் = ஓகாரம் வரும்.
பொழிப்புரை
அகர ஆகார ஈற்றின்முன் உகர ஊகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஓகாரம் வரும்.

உதாரணம்: சூர்ய உதயம் - சூர்யோதயம், ஞான ஊர்ச்சிதன் - ஞானோர்ச்சிதன், கங்கா உற்பத்தி - கங்கோற்பத்தி, தயா ஊர்ச்சிதன் - தயோர்ச்சிதன்.


விருத்திசந்தி

155. அ ஆமுன் ஏ ஐவரி லிரண்டுங்கெட் டையாம். (15) () அ ஆ முன் ஏ ஐ வரில் இரண்டும் கெட்டு ஐ ஆம்.

பவாநந்தர் உரை
இஃது அகர ஆகாரத்தின்முன் ஏ ஐ வருமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
அ ஆ முன் = அகர ஆகார ஈற்றின் முன்,
ஏ ஐ வரில் = ஏகார ஐகாரங்கள் வந்தால்,
இரண்டும் கெட்டு = ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட,
ஐ ஆம் = ஐகாரம் வரும்.
பொழிப்புரை
அகர ஆகார ஈற்றின்முன் ஏகார ஐகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஐகாரம் வரும்.

உதாரணம்: பரம ஏகாந்தி - பரமைகாந்தி, சிவ ஐக்யம் - சிவைக்யம், தரா ஏகவிரன் - தரைகவீரன், தேவதா ஐக்யம் - தேவதைக்யம்.


156. அ ஆமுன் ஓ ஔவரி லிரண்டுங்கெட் டௌவாம். (16) () அ ஆ முன் ஓ ஔ வரில் இரண்டும் கெட்டு ஔ ஆம்.

பவாநந்தர் உரை
இஃது அ ஆ முன் ஓ ஔ வருமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
அ ஆ முன் = அகர ஆகார ஈற்றின் முன்,
ஓ ஔ வரில் = ஓகார ஔகாரங்கள் வந்தால்,
இரண்டும் கெட்டு = ஈறும் முதலும் ஆகிய இரண்டும் கெட,
ஔ ஆம் = ஔகாரம் வரும்.
பொழிப்புரை
அகர ஆகார ஈற்றின் முன் ஓகார ஔகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஔகாரம் வரும்.

உதாரணம்:கலச ஓதநம்- கலசௌதநம், திவ்ய ஔஷதம் - திவ்யௌஷதம், மகா ஓஷதி - மகௌஷதி, மகா ஔதார்யம் - மகௌதார்யம்.


ஆதிவிருத்தி சந்தி

157. இகர ஏகார முதற்கை யாகும். (17) () இகர ஏகார முதற்கு ஐ ஆகும்.

பவாநந்தர் உரை
இது மொழிமுதல் இகர எகரங்கள் திரியுமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
முதற்கு = மொழி முதலில் உள்ள,
இகர ஏகாரம் = இகர ஏகாரங்கள் இரண்டும்,
ஐ ஆகும் = ஐகாரம் ஆகும்.
பொழிப்புரை
மொழி முதலில் உள்ள இகர ஏகாரங்கள் இரண்டும் ஐகாரம் ஆகும்.

உதாரணம்: கிரியில் உள்ளன - கைரிகம். வேதசம்பந்தம் - வைதிகம்.


158. உ ஊ ஓ முத லௌவா கும்மே. (18) ()உ ஊ ஓ முதல் ஔ ஆகும்மே.

பவாநந்தர் உரை
இது மொழி முதல் உகர ஊகார ஓகாரங்கள் திரியுமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
முதல் = மொழிக்கு முதலில் உள்ள,
உ ஊ ஓ = உகர ஊகார ஓகாரங்கள்,
ஔ ஆகும் = ஔகாரம் ஆகும்.
பொழிப்புரை
மொழிக்கு முதலில் உள்ள உகர ஊகார ஓகாரங்கள் ஔகாரம் ஆகும்.

உதாரணம்: குருகுலத்தார் - கௌரவர், சோமன் மகன் - சௌம்யன், சூரன் மகன் - சௌரி.


159. மொழிமுத லகரம் ஆவா கும்மே. (19) () மொழி முதல் அகரம் ஆ ஆகும்மே.

பவாநந்தர் உரை
இது மொழி முதல் அகரம் ஆகாரம் ஆமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
மொழி முதல் அகரம் = மொழிக்கு முதலில் உள்ள அகரமானது,
ஆ ஆகும் = ஆகாரம் ஆகும்.
பொழிப்புரை
மொழிக்கு முதலில் உள்ள அகரமானது ஆகாரம் ஆகும்.

உதாரணம்: தசரதன் மகன் - தாசரதி, ஜநகன் மகள் - ஜாநகி.


வடமொழி எதிர்மறை

160. எதிர்மறை வடசொற் கியைந்த மொழிமுதல் () எதிர் மறை வட சொற்கு இயைந்த மொழி முதல்

உயிர்வரி லந்நு மொற்றுறி லவ்வுமாம். (20) () உயிர் வரில் அந்நும் ஒற்று உறில் அவ்வும் ஆம்.
பவாநந்தர் உரை
இஃது எதிர்மறை வருமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
வடசொல் எதிர்மறைக்கு = வடமொழி எதிர்மறைக்கு,
இயைந்த = பொருந்தின,
மொழி முதல் உயிர் வரின் = மொழி முதல் உயிர் வந்தால்,
அந்நும் = அந்நும்,
ஒற்று உறில் = மொழி முதல் மெய் வந்தால்,
அவ்வும் = அவ்வும்,
ஆம் = வரும்.
பொழிப்புரை
வடமொழி எதிர்மறைக்குப் பொருந்தின மொழிமுதல் உயிர் வந்தால் அந்நும் மொழிமுதல் மெய் வந்தால் அவ்வும் வரும்.

உதாரணம்: ந+ஆசாரம் = அநாசாரம் (ஆசாரம் இன்மை), ந+ஆதி = அநாதி (ஆதியின்மை), ந+களங்கம் = அகளங்கம் (களங்கம் இன்மை), ந+யோக்கியம் = அயோக்கியம் (யோக்கியம் இன்மை).


161. நிர் துர் நி கு வி பொருளின்மை நிகழ்த்தும். (21) ()நிர் துர் நி கு வி பொருள் இன்மை நிகழ்த்தும்.

பவாநந்தர் உரை
சிறிய எழுத்துக்கள்இது நிர் முதலியன இன்மைப் பொருளில் வரும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
நிர் துர் நி கு வி = நிர், துர், நி, கு, வி ஆகிய இவ்வைந்தும்,
பொருள் இன்மை நிகழ்த்தும் = இன்மைப் பொருளை உணர்த்தும்.
பொழிப்புரை
நிர் துர் நி கு வி ஆகிய இவ்வைந்தும் இன்மைப் பொருளை உணர்த்தும்.

உதாரணம்: நிர்+நாமன் = நிர்நாமன் (நாமம் இல்லான்). துர்+பலம்= துர்ப்பலம் (பலமின்மை). நி+மலம் = நிமலம் (மலமின்மை), கு+தர்க்கம்=குதர்க்கம் (தர்க்கமின்மை). வி+குலம்= விகுலம் (குலமின்மை).


ஒழிபு

162. வடமொழி யுயிர்முன் வன்கண மியல்பாம். (22) () வட மொழி உயிர் முன் வன் கணம் இயல்பு ஆம்.

பவாநந்தர் உரை
இது வடமொழி உயிர்முன் வன்கணம் இயல்பாமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
வடமொழி உயிர் முன் = உயிரீற்று வடமொழிகளின்முன் வருகிற,
வன்கணம் = வல்லெழுத்துக்கள்,
இயல்பு ஆம் = இயல்பாகும்.
பொழிப்புரை
உயிரீற்று வடசொற்களின் முன் வருகிற வல்லெழுத்துக்கள் இயல்பாகும்.

உதாரணம்: ஆதிபகவன், அளிகுலம்.


163. ஏயன் விகுதி யெய்தும் பிள்ளைக்கே. (23) () ஏயன் விகுதி எய்தும் பிள்ளைக்கு ஏ.

பவாநந்தர் உரை
இஃது ஏயன் விகுதி பிள்ளைப் பொருளில் வருமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
ஏயன் விகுதி = ஏயன் என்னும் விகுதி,
பிள்ளைக்கு = பிள்ளைப் பொருளில்,
எய்தும் = வரும்.
பொழிப்புரை
ஏயன் என்னும் விகுதி பிள்ளைப் பொருளில் வரும்.

உதாரணம்: கிருத்திகையின் மகன் - கார்த்திகேயன், கங்கையின் மகன் - காங்கேயன்.


164. ஆ ஐ ஔ முத லாகமந் திரிபாம். (24) (01) ஆ ஐ ஔ முதல் ஆகமம் திரிபு ஆம்.

பவாநந்தர் உரை
இஃது ஆகார ஐகார ஔகாரங்கள் மொழிமுதலில் தோன்றலும் திரிபுமாம் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஆ ஐ ஔ = ஆகார ஐகார ஔகாரங்கள்,
முதல் = மொழி முதலில்,
ஆகமம் திரிபு ஆம் = தோன்றலும் திரிபும் ஆகும்.
பொழிப்புரை
ஆகார ஐகார ஔகாரங்கள் மொழி முதலில் தோன்றலும் திரிபும் ஆகும்.

உதாரணம்: வ்யாகரணம் உணர்ந்தோன் = வையாகரணன். த்வாரங் காப்பவன் = தௌவாரிகன்- இவை ஆகமம்.

த்வாதசி = த்வி+தச, இது திரிபு. திரிபு எனினும் ஆதேசம் எனினும் ஒக்கும்.


அகத்தியம் எழுத்திலக்கணக் காண்டம் ஐந்தாவது வடமொழிப் படலம் முற்றிற்று

உரை நூல்களிற் கண்ட பேரகத்திய மேற்கோட் சூத்திரங்கள்[தொகு]

ஆசிரியர்: அகத்தியனார்[தொகு]

உரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்[தொகு]

1. இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே () இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே ()எள் இன்று ஆகில் எண்ணெயும் இன்றே
எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல () எள்ளினின்று எள் நெய் எடுப்பது போல
இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம். () இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம்.
பதவுரை
இலக்கியம் இன்றி = இலக்கியம் இல்லாமல்,
இலக்கணம் இன்று = இலக்கணமில்லை,
எள் இன்று ஆகில் = எள் இல்லையாயின்,
எண்ணெயும் இன்று = எண்ணெயும் இல்லை,
எள்ளில் நின்று = எள்ளில் இருந்து,
எண்ணெய் எடுப்பது போல = எண்ணெயை எடுப்பது போல,
இலக்கியத்தில் நின்று இலக்கணம் எடுபடும் = இலக்கியத்திலிருந்து இலக்கணம் சொல்லப்படும் என்றவாறு.


2. நெடிலு நெடுமையுந் தீர்க்கமு நெடிற்பெயர். () நெடிலும் நெடுமையும் தீர்க்கமும் நெடில் பெயர்.

பதவுரை
நெடிலும் = நெடில் என்பதும்,
நெடுமையும் = நெடுமை என்பதும்,
தீர்க்கமும் = தீர்க்கம் என்பதும்,
நெடில் பெயர் = நெட்டெழுத்துக்களுக்குப் பெயர்களாம் (எ-று).

3. அவையே, ()அவையே,

அகம்புறம் அண்மை செய்மை பொதுமைக்கணாம். () அகம் புறம் அண்மை சேய்மை பொதுமைக் கண் ஆம்.
பதவுரை
அவையே = அந்தச் சுட்டுக்கள்,
அகம் புறம் = அகத்திலும் புறத்திலும்,
அண்மை சேய்மை பொதுமைக் கண் ஆம் = அண்மை சேய்மை பொதுமைகளில் வரும் (எ-று).


4. யாவென் வினாவே அஃறிணைப் பன்மை () யா என் வினாவே அஃறிணைப் பன்மை

விகுதி பெறுங்கால் ஐம்பாலினும் வினாவாம். () விகுதி பெறும்கால் ஐம்பாலினும் வினா ஆம்
பதவுரை
யா என் வினா = யாவென்னும் வினாவானது,
அஃறிணைப் பன்மை = அஃறிணைப் பன்மையாகும்,
விகுதி பெறுங்கால் = (அது) விகுதி பெறுமிடத்து,
ஐம்பாலினும் வினா ஆம் = ஐம்பாலிலும் வினாவாகும் (எ-று).

5. எழுவாய்ச் சந்தியின் இசைவலி யியல்பே. () எழுவாய்ச் சந்தியின் இசை வலி இயல்பு ஏ.

பதவுரை
எழுவாய்ச் சந்தியின் இசை = எழுவாய்ச் சந்தியில் வந்த,
வலி = வல்லெழுத்துக்கள்,
இயல்பே = இயல்பாய்ப் புணரும் (எ-று).


6. வியங்கோள் விகுதிமுன் வலிஇயல் பாகும். ()வியங்கோள் விகுதி முன் வலி இயல்பு ஆகும்.

பதவுரை
வியங்கோள் விகுதி முன் = வியங்கோள் விகுதிக்கு முன்னே வருகிற,
வலி = வல்லெழுத்துக்கள்,
இயல்பு ஆகும் = இயல்பாய்ப் புணரும் (எ-று).

7. இரண்டன் விபத்தி எஞ்சில் வலிஇயல்பாகும். () இரண்டன் விபத்தி எஞ்சில் வலி இயல்பு ஆகும்.

பதவுரை
இரண்டன் விபத்தி எஞ்சில் = இரண்டாம் வேற்றுமைத் தொகையில்,
வலி = வல்லெழுத்துக்கள்,
இயல்பு ஆகும் = இயல்பாய்ப் புணரும் (எ-று).

8. பெயரே அன்றிப் பிறவுரு பேலா. () பெயரே அன்றிப் பிற உருபு ஏலா.

பதவுரை
பெயரே அன்றி = பெயர்ச்சொல்லே அன்றி,
பிற = வேறு சொற்கள்,
உருபு ஏலா = வேற்றுமை உருபுகளை ஏற்க மாட்டா (எ-று).

9. அதுவும் ஆதுவும் அவ்வும் உடையவும் () அதுவும் ஆதுவும் அவ்வும் உடையவும்

ஆறன் உருபென் றறைதல் வேண்டும். ()ஆறன் உருபு என்று அறைதல் வேண்டும்.
பதவுரை
அதுவும் = அது என்பதும்,
ஆதுவும் = ஆது என்பதும்,
அவ்வும் = அ என்பதும்,
உடையவும் = உடைய என்பதும்,
ஆறன் உருபு என்று = ஆறாம் வேற்றுமை உருபு என்று,
அறைதல் வேண்டும் = சொல்ல வேண்டும் (எ-று).


10. கூறு படுத்தலாற் கூற்றெனப் படுமே. () கூறு படுத்தலால் கூற்று எனப்படும் ஏ.

பதவுரை
கூறுபடுத்தலால் = கூறுபடுத்துவதனால்,
கூற்று எனப்படும் = கூற்று என்று சொல்லப்படும் (எ-று).


11. இட்டுவிட் டிரண்டும் வினையிடைச் சொல்லே. () இட்டு விட்டு இரண்டும் வினை இடைச் சொல் ஏ.

பதவுரை
இட்டு விட்டு இரண்டும் = இட்டு விட்டு என்கிற இரண்டும்,
வினை இடைச் சொல் = வினையிடைச் சொற்களாம் (எ-று).

12. பலவி னியைந்தவு மொன்றெனப் படுமே () பலவின் இயைந்தவும் ஒன்று எனப்படும் ஏ

யடிசில் புத்தகஞ் சேனை யமைந்த ()அடிசில் புத்தகம் சேனை அமைந்த
கதவ மாலை கம்பல மனைய. () கதவம் மாலை கம்பலம் அனைய.
பதவுரை
பலவின் = பல பொருள்களால்,
இயைந்தவும் = அமைந்தனவும்,
ஒன்று எனப்படும் = ஒன்று என்றே சொல்லப்படும்.
அடிசில் = சோறு,
புத்தகம் = நூல்,
சேனை = படை,
கதவம் = கதவு,
மாலை = ஆரம்,
கம்பலம் = கம்பளம் என இவை,
அனைய = அவ்விலக்கணத்தைப் பொருந்துவன (எ-று).
அமைந்த என்பதனை அடிசில் முதலிய எல்லாப் பொருள்களோடும் கூட்டி அவ்வவற்றிற்கு ஏற்பப் பல பொருள்களான் இயன்றவென்க. இவை உதாரணங்கள்.

13. வயிர வூசியு மயன்வினை யிரும்புஞ் () வயிர ஊசியும் மயன் வினை இரும்பும்

செயிரறு பொன்னைச் செம்மைசெய் யாணியுந் () செயிர் அறு பொன்னைச் செம்மை செய் ஆணியும்
தமக்கமை கருவியுந் தாமா மவைபோ () தமக்கு அமை கருவியும் தாம் அவை போல்
லுரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே. ()உரைத் திறம் உணர்த்தலும் உரையது தொழில் ஏ.
பதவுரை
வயிர ஊசியும் = வயிரத்தான் இயன்ற ஊசியும்,
மயன் வினை = கம்மாளனது,
வினை இரும்பும் = தொழில் செய்யும் இரும்பும்,
செயிர் அறு பொன்னை = குற்றமற்ற பொன்னை,
செம்மை செய் ஆணியும் = செம்மைப் படுத்துகிற ஆணியும்,
தமக்கு அமை கருவியும் = தமக்கு அமைந்திருக்கும் கருவிகளும்,
தாம் ஆம் = தாமேயாகும்;
அவை போல் = அவற்றைப்போலவே,
உரைத்திறம் உணர்த்தலும் = உரையின் பாகுபாட்டினை உணர்த்தலும்,
உரையது தொழிலே = உரையது தொழிலேயாம் (எ-று).


14. ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை () ஏழ் இயல் முறையது எதிர் முக வேற்றுமை

வேறென விளம்பான் பெயரது விகாரமென் () வேறு என விளம்பான் பெயரது விகாரம் என்று
றோதிய புலவனு முளனொரு வகையா () ஓதிய புலவனும் உளன் ஒரு வகையான்
B>னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன். ()இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்.
பதவுரை
ஏழ் இயல் முறையது = வேற்றுமை ஏழாக நடைபெறும் முறையினை உடையது,
எதிர் முக வேற்றுமை = விளி வேற்றுமை என்று,
வேறு விளம்பான் = வேறொன்று சொல்லாமல் (அது),
பெயரது விகாரம் என்று = பெயரின் விகாரமே என்று,
ஓதிய = சொன்ன,
புலவனும் = புலவனானவனும்,
உளன் = இருக்கிறான்;
இந்திரன் = இந்தரனானவன்,
ஒரு வகையால் = ஒருவிதத்தால்,
வேற்றுமை = வேற்றுமைகள்,
எட்டு ஆம் என்றனன் = எட்டாம் என்று சொல்லினன் (எ-று).
ஓதிய புலவன் வடமொழி பாணினி பகவான்.


15. ஆற னுருபே யதுவா தவ்வும் () ஆறன் உருபே அது ஆது அவ்வும்

வேறொன் றுடையதைத் தனக்குரி யதையென () வேறு ஒன்று உடையதைத் தனக்கு உரியதை என
விருபாற் கிழமையின் மருவுற வருமே. () இரு பால் கிழமையின் மருவு உற வருமே.
பதவுரை
ஆறன் உருபு = ஆறாம் வேற்றுமை உருபு,
அது = அதுவும்,
ஆது = ஆதுவும்,
அவ்வும் = அகரமும் (ஆகும்),
வேறு ஒன்று உடையது என = வேறொன்றனை உடையது என்றும்,
தனக்கு உரியது என = தனக்குரியது என்றும்,
இருபால் கிழமையின் = இரு பகுதியவாகிய கிழமையினும்,
மருவுற வரும் = பொருந்தவரும் (எ-று).
கிழமை இரண்டு, தற்கிழமை பிறிதின் கிழமை. செய்யுட்கிழமையும் ஆம்.


16. மற்றுச்சொன் னோக்கா மரபி னனைத்து ()மற்றுச் சொல் நோக்கா மரபின் அனைத்தும்

முற்றி நிற்பது முற்றியன் மொழியே. () முற்றி நிற்பது முற்று இயல் மொழி ஏ.
பதவுரை
மற்றுச்சொல் நோக்கா = வேறு சொல்லை நோக்காத,
மரபின் = மரபோடு,
அனைத்தும் = எல்லாம்,
முற்றி நிற்பது = நிறைந்திருப்பது,
முற்றியல் மொழி = வினைமுற்றுச் சொல்லாம் (எ-று).

17. காலமொடு கருத வரினு மாரை (01) காலமொடு கருத வரினும் ஆரை

மேலைக் கிளவியொடு வேறுபா டின்றே. () மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்று ஏ.
பதவுரை
காலமொடு கருத வரினும் = காலத்தோடு கூடி வருவதாய் எண்ணவந்தாலும்,
ஆரை = ஆர் விகுதி,
மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்று = முன்னர்க் கிளந்த விகுதிச் சொல்லோடு வேறுபடுதல் இல்லை (எ-று).


18. காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது ()காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது

பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே. () பெயர் கொள்ளும் அது பெயர் எச்சம் ஏ.
பதவுரை
காலமும் வினையும் தோன்றி = காலமும் வினையும் வெளிப்பட்டு நிற்க,
பால் தோன்றாது = பால் ஒன்றும் வெளிப்படாமல்,
பெயர் கொள்ளும் அது = பெயரைக்கொண்டு முடிவது,
பெயர் எச்சம் = பெயரெச்சம் ஆகும் (எ-று).


19. காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது () காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது

வினைகொள் ளும்மது வினையெச் சம்மே. () வினை கொள்ளும் அது வினை எச்சம் ஏ.
பதவுரை
காலமும் வினையும் தோன்றி = காலமும் வினையும் வெளிப்பட்டு நிற்க,
பால் தோன்றாது = பால் ஒன்றும் வெளிப்படாமல்,
வினை கொள்ளும் அது = வினையைக் கொண்டு முடிவது,
வினை எச்சம் - வினையெச்சம் ஆம் (எ-று).
முடிந்தது


பார்க்க[தொகு]

பேரகத்தியத்திரட்டு

பேரகத்தியச் சூத்திரம்

1. எழுத்துப் படலம்

2. எழுத்துற்பத்திப் படலம்

3. எழுத்து வரன்முறைப் படலம்

4. பன்மொழியாக்கப் படலம்

பேரிசைச் சூத்திரம்மூலமும் உரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=5._வடமொழிப்_படலம்&oldid=1035383" இலிருந்து மீள்விக்கப்பட்டது