ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இந்து மதம், இந்தி, இந்தியா, இந்திரா

விக்கிமூலம் இலிருந்து

இந்த மதம், இந்தி, இந்தியா, இந்திரா!

‘வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்’ என்னும் ஒரு பழமொழி உண்டு. இந்தியாவின் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் திருவாட்டி இந்திரா காந்தி அம்மையாரின் நடவடிக்கையில் இந்தப் பழமொழி மிகவும் நன்றாகப் பொருந்துகிறது. அவரின் அண்மைக்காலச் செயற்பாடுகளில் அவரின் உண்மை உருவம் நன்றாக வெளிப்பட்டிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். தமக்குப் பிடிக்காத மாநில முதலமைச்சர்களை அப்புறப்படுத்துதல், எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கமளித்து, மறைமுக ஆதரவுகாட்டி, மாநில அமைச்சரவைகளைச் சீர்குலைத்தல், எவ்வளவு பெரிய அரசியல் அறிஞர்களாயினும் (தேசாய், சந்திரசேகர், வாச்சுபாயி, சரண்சிங், செகசீவன்ராம் முதலியோர்) தம்மொடு ஒத்துப் போகாதவரைத் தனிப்படுத்தி அழித்தல் முதலிய அரசியல் நடவடிக்கைகளுடன், மக்களிடம் தமக்கு நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு தேடித் தமக்குள்ள சாய்காலைப் பெருக்கிக் கொள்ளுதல், தேசிய ஒருமைப்பாடு, இந்திய ஒற்றுமை என்னும் பெயரால் தேவையற்ற இந்துமத உணர்வுகளைப் பரப்புதல், இந்திமொழியை மீண்டும் பரவலாக்குவதற்கான முயற்சிகளில் துணிந்து ஈடுபடுதல் போன்ற குமுகாய நடவடிக்கைகளையும் அவர் மிகவும் தந்திரமாகச் செயல்படுத்தி வருகிறார்.

இந்திய நாட்டுப் பொதும்ககளும் குறிப்பாக இளைஞர்களும் அரசியல் அறிவு பெறமுடியாத வண்ணம், அவர்களின் மனங்களை

விளையாட்டுப் போட்டிகளிலும், தேவையற்ற மதவிழாக்களிலும், திரைப்படப் பொழுதுபோக்குகளிலும் திசை திரும்புமாறு, அத்தகைய செயல்களுக்கு அளவிறந்து ஊக்கமளிக்கும் போக்கு அண்மைக் காலங்களில் மிகுதியாக ஏற்பட்டு வருகிறது. இதை இந்திரா காந்தியே திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகிறார். தம் கருத்துகளும், உருவமும் மக்களிடையே நன்கு விளம்பரமாகும்படி, வானொலி பரப்புதல்களை நேரம் மிகுவித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கூடுதலாக்கியும் மிகத் தந்திரமாகச் செயற்பட்டு வருகிறார். தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் மளமளவென்று பேரூர்களிலெல்லாம் அமைக்கப் பெற்றும் விரிவாக்கப் பெற்றும் வருவதை மக்கள் உணர்வர். இந்த நிலைகளெல்லாம் அவரின் மக்கள் சாய்காலை மிகுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளே! பொதுமக்களின் நன்மை கருதியே இத்தகைய செயற்பாடுகள் நடந்துவருகின்றன என்பதெல்லாம் ஒரு போலியான விளம்பரமே!

இந்துமதம் கடந்த காலங்களில் மக்களிடையில் எவ்வளவு முன்னேற்றத் தடையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைச் சிறிதே வரலாற்றறிவும் நடுநிலையுமுள்ள எவரும் தெளிவாக உணர்வர். அம்மதத்திற்கே வலிவான அடித்தளங்களாக அமைந்துள்ள புராணங்கள், இதிகாசங்கள் முதலிய மூடநம்பிக்கைகள் மிகுதியும் உள்ள கதைகள் யாவும் பல கோணங்களில் எழுதப்பெறுவதும், நாட்டியம், நாடகம், இசை என்னும் கலைகளில் அவை ஊடுருவி அளாவி நிற்கும் நிகழ்ச்சிகளை, வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றுள் அளவிறந்து புகுத்திப் பொதுமக்களின் மனங்களை அவை தம்வயப்படுத்திக் கொள்ளும்படி செய்வதும், அவர்களின் சிந்தனைகளை நாட்டில் நடைபெறும் அரசியல், பொருளியல் வீழ்ச்சிகளிலும், சூழ்ச்சிகளிலும் ஈடுபடாதபடி திசைதிருப்பம் பண்ணுவதும், கூர்ந்து நோக்கும் திறனுள்ள நாட்டுநலன் கருதும் நல்லவர்களுக்கு விளங்காமற் போகா.

முன்னைவிட, இந்துமத விழாக்களுக்கு இப்பொழுது பெரிதும் விளம்பரங்கள் அளவிறந்து கொடுக்கப்பெறுகின்றன். விநாயக சதுர்த்தி, இராம நவமி, கிருட்டிண செயந்தி, விசயதசமி போலும் கடவுளர் விழாக்கள் முன்பு அவ்வளவாகக் கொண்டாடப் பெற்றதில்லை. இக்கால் அவற்றிற்குத் தேசிய மதிப்புக் கொடுக்கப் பெறுவதும், வானொலி, தொலைக்காட்சிகளில் அவற்றின் நேர்முக வண்ணனைகளும், காட்சிகளும் இடம்பெறுவதும் கொடுமையிலும் கொடுமை! ஒருபுறம் அறிவியல் வளர்ச்சியிலும், விண்வெளி

ஆராய்ச்சியிலும் ஊக்கமும் ஆக்கமும் காட்டுவதாகக் கூறி விளம்பரப்படுத்திக் கொண்டு, மக்களின் அறிவு வளர்ச்சியில் தமக்கு ஏதோ அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் இந்திரா அரசு, மறுபுறம் இது போலும் மூடநம்பிக்கைகளும் அறியாமையும் நிறைந்து, மக்களை முன்னேற்றப் பாதையிலிருந்து அடியகற்றும் இந்துமதக் கூத்தாட்டங்களுக்குப் பெரிதும் துணைபோவதும் ஊக்கமளிப்பதும் எத்துணைத் தந்திரமான அரசியல் சூழ்ச்சி என்பதை ஏழைப் பொதுமக்கள் அறவே உணர்ந்துகொள்ளல் இயலாது.

இந்திராவின் ஆரியத்தனமான அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பெரிதும் கைகொடுத்து உதவும் கருவியாக இந்துமதம் இக்கால் வலிவுபடுத்தப்பட்டு வருகிறது. மக்களை மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தினால்தான், தம் அரசியல் சூழ்ச்சிகளை அவர்கள் உணர முடியாது என்பது இந்திராவின் சாணக்கியக் கொள்கை. இந்தக் கொள்கையையும், இந்திமொழியையும் கருவிகளாக வைத்தே, தேசிய ஒருமைப்பாட்டை நன்கு வேர் ஊன்ற வைத்துவிடமுடியும் என்று தவறாகக் கணக்குப் போடுகிறார், இந்திரா!

அண்மையில் அவர், இந்தியில் உருவாக்கப் பெற்ற ஒர் அறிவியல் அகராதியைப் புதுதில்லியில் வெளியிட்டுப் பேசுகையில், இந்திமேல் கொண்ட அவரின் தணியாத பற்று நன்கு வெளிப்பட்டு இருக்கிறது. “நாட்டில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த இந்தியை இணைப்பு மொழியாக ஏற்பது இன்றியமையாதது. இந்திமொழியைக் கற்பதில் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் அனைவரும் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளார்கள். ஆனால் அரசியல் ஊதியத்துக்காக, இதைத் தடுக்கத் தென்மாநிலங்களில் உள்ள சிலர் முயல்கின்றனர்” என்று இந்திரா காந்தி கூறியுள்ளார். அவர் தென்மாநிலங்கள் என்று கூறியிருந்தாலும், தமிழகத்தையே அவ்வாறு குறிப்பிடுகிறார் என்று கொள்ள வேண்டும். ஏனெனில், வேறு தென்மாநிலங்கள் எதிலும் இந்தியை ஏற்றுக்கொள்ள எவரும் தயங்கியதில்லை. அங்கெல்லாம் மும்மொழித் திட்டமே நடைமுறையில் உள்ளது.

எனவே, இந்தக் கூற்றில் அவரின் இரண்டு உள்நோக்கங்கள் தெளிவாகப் புரிகின்றன. ஒன்று, இந்திமொழியை எப்படியாவது முழுமையாக இணைப்பு மொழி ஆக்கிவிடுவது. இரண்டு, இதற்குத் தடையாக உள்ள தமிழகத்தை எவ்வாறேனும் முறியடிப்பது; அல்லது கீழ்ப்படியச் செய்வது. முன்பெல்லாம் இந்தியைத் தெற்கே

உள்ளவர்கள், தாமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வரை, ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கும் என்னும் தம் தந்தை நேரு கொடுத்த உறுதிமொழி என்றும் மீறப்படாது என்று கூறிவந்தவர், இக்கால், அதன் பரவுதலை மிகவும் வலியுறுத்திப் பேசுவதும், அவரின் பேச்சுக்கு இயைப, இந்திமொழி ஆணைக்குழு, அதன் பலவகையான செயற்பாட்டை வலியுறுத்திச் செயல்கள் ஆற்றிக்கொண்டு வருவதும், இந்திமொழி இந்தியாவின் முழுமையான இணைப்பு மொழியாக விரைவில் ஆக்கப்பட்டுவிடும் என்பதை மேன்மேலும் உறுதிப்படுத்துகின்றன.

எப்படியோ, இந்துமதத்தையும் இந்தியையும் பயன்படுத்தி, இந்தியாவை இந்திராவின் வல்லதிகாரத்துக்கே கொண்டுவந்துவிட வேண்டும் என்பது அவரின் தலையாய நோக்கம் என்பது வலுப்பட்டு வருகிறது. இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா என்பதே, இந்திராவின் அரசியல் கொள்கை பொருளியல் கொள்கை குமுகாயக் கொள்கை மதக் கொள்கை ! மொழிக்கொள்கை என்று ஆகிவிட்டது! அதை நிறைவேற்றிக் கொள்ளத் தமக்குண்டான பலவழிகளிலும் இந்திராகாந்தி முயன்று வருகிறார். அவ்வாறு முயல்கின்ற வகைக்கு மக்கள் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே, இந்துமதத்தையும், இந்தியையும் அவர் கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார். தேசிய ஒருமைப்பாடு என்னும் வண்ணக் குடை பிடிக்கிறார்; மத விழாக்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார்; மக்களை மூடநம்பிக்கைகளில் ஆழ்த்த முனைந்து நிற்கிறார். இந்திமொழி வெறியர்களுக்குச் ‘சூ’ காட்டுகிறார்.

இனி, இன்னொன்றையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். இந்துமதத்தை மக்களின் அறிவு மழுக்கக் கருவியாகவும், இந்தியை உணர்வு மழுக்கக் கருவியாகவும் பயன்படுத்திவரும் இந்திராகாந்தி, அளவிறந்த பணக்கவர்ச்சியால் வேறு மக்களைத் தம்வயப்படுத்தப் பார்க்கிறார். குறிப்பாகத் தம்மை அஃதாவது தம் கட்சியை வரவேற்காத மாநிலங்களில் உள்ள மக்களைத் தம் பணவலிவால் இழுத்துத் தமக்கு ஆதரவு சேர்த்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். எடுத்துக்காட்டாகப் புதுவையில் தமக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதாலேயே, குடியரசுத் தலைவர் ஆட்சியை இன்னும் அங்கு வைத்திருக்கும் அதே வேளையில், அங்குள்ள மக்களைத் தமக்கு ஆதரவாகத் தம் கட்சியில் சேர்க்கும் முயற்சியை மிகவும் விரைவாகவும் முடுக்கமாகவும் செய்து வருகிறார். அண்மையில் புதுச்சேரியில் நடந்து அரசியல் குத்துவெட்டுகளுளக்கு

அதுவே காரணம் என்றும், அங்கு இந்திராப் பேராயத்தில் (கட்சியில் மட்டுமே) சேர்பவர்களுக்கு உரு. 5,000/- (கவனிக்கவும், ஓர் உறுப்பினர் கட்சியில் சேர உருபா ஐயாயிரம்) வரை தரப்படுகிறது என்றும் பரவலாகப் பேசப்பெறுகின்றன. அங்கு உள்ளூரில் உள்ள இந்திரா பேராயக் குட்டி அரசியல் தலைவர்கள், அக்கட்சியில் சேரும் வேண்டுகை(விண்ணப்ப)ப் படிவத்தை மட்டும் ஒன்று 100 உருபா விலைக்கு விற்கிறார்களாம்! எப்படி இருக்கிறது இந்திராவின் அரசியல் சாணக்கியம்.

இப்படிச் சாமம், (அமைவாகப் பேசி உடன்பாட்டுக்குக் கொணர்வது), பேதம் (எதிர்க்கட்சியில் உள்ள மக்களை வேறு பிரிப்பது), தானம் (உறுப்பினர்களுக்குக் கொடை தருவது), தண்டம் (முடியாவிட்டால் படைத் துறையையும் காவலர்களையும் விட்டுக் கொடுமைப்படுத்தச் செய்வது) ஆகிய நான்கு அரசியல் தந்திரங்களைக் கொண்டும் இந்திரா ஆட்சி நடத்தி வருவது இந்திய குடியரசுக் கொள்கையையே குழிதோண்டிப் புதைப்பதாகும்.

இந்த இடத்தில், பொதுவாக மக்கள், சிறப்பாகத் திராவிடர், குறிப்பாகத் தமிழர் - ஒன்றை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்! இந்திரா என்றால் இந்தியா - என்னும் பொருள் எவ்வாறு அரசியல் கொடுமை வாய்ந்ததோ, அதைவிடக் கொடுமை வாய்ந்தது இந்திரா என்றால் ஆரியம் - பார்ப்பனீயம் - பார்ப்பனீய முதலாளியம் (Baniya - Brahminism) - என்னும் பொருள்! அந்த இடைக்காலப் பொருள், நிலையான பொருளாகி விடாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய கடமை! நம்மவர் கடமை என்று உணர்ந்து கொள்க:

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். — 558
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்ல
இல்லை நிலக்குப் பொறை – 570
- தென்மொழி, சுவடி : 20, ஓலை : 12, 1984