ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இந்திரா காந்தியின் சாம்பல் (அஸ்தி)

விக்கிமூலம் இலிருந்து
இந்திரா காந்தியின் சாம்பல்(அஸ்தி) மற்றப் பொருள்களின் சாம்பலைப் போன்றதே!

றிவியலின் முன் அதற்கென்று தனிச்சிறப்போ, பெருமையோ, தனிக் குணநலன்களோ இல்லை!

அரசு இந்துமத அடிப்படையில் அதை ஊர்ஊராக எடுத்துச்சென்று, மக்களின் வணக்கத்திற்கு வைத்து மக்களின் ஏராளமான வரிப்பணத்தை வீணாக்கியது தவறு!

அறியாமையும் மூடநம்பிக்கையும் ஏழைமையும் நிறைந்த நாட்டில் அரசே இப்படிச் செய்வது பொதுமக்களை ஏமாற்றுவதாகும்! ஆளும் கட்சிக்கு வலிவு தேடுவதாகும்!

இக்கொடுமைச் செயலை அறமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும்!

நடுவண், மாநில அரசுகளை எதிர்த்துச் சென்னை உயர்நெறி மன்றத்தில் பாவலரேறு முறைவழக்குத்(ரிட்) தொடுத்தார்!

வரலாற்றிலேயே முதல் முறையாக உயர்நெறிமன்றத்தில் இனிய, தூய தமிழில் தாமே வழக்காடினார் பாவலரேறு! இந்திய அரசுக்கு வரிசெலுத்தும் குடிமகன் ஒருவன் என்னும் வகையில், இந்திய அரசும், தமிழக அரசும், மறைந்த இந்தியத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தியின் சாம்பலை அஸ்தி’ என்னும் பெயரில், பொதுமக்களின் வழிபாட்டிற்கும் வணக்கத்திற்குமாக, ஊர்ஊராக, நகரம் நகரமாகத் தனி ஏற்பாட்டுத் தொடர்வண்டிகள், வானூர்திகள், வழியாக, ஏராளமான பொருட்செலவில் கொண்டுசெல்லப் பட்டதைக் கண்டித்தும் எதிர்த்தும், இவ் வறிவியல் பொருத்த மல்லாத இந்து மத மூடநம்பிக்கை நிறைந்த செயலை உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், உலகத் தமிழின முன்னேற்றக் கழக முதல்வர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் கடந்த 9.11.84-ஆம் நாள், ஒரு முறைவழக்கை(ரிட்) சென்னை உயர்நெறி மன்றத்தில் தொடுத்தார்.

இவ்வழக்கு உயர்நெறி மன்ற நடுவர் எசு. நடராசன் முன்னர் வந்தது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், இவ்வழக்குத் தொடர்பாகத் தம் முறையீட்டை, நடுவர்முன், தாமே எடுத்துரைத்தார். அவர் வழக்காடும் பொழுது ஏராளமான வழக்கறிஞர்களும் பார்வையாளர்களும் பொதுமக்களும், செய்தியாளர்களும் உயர்நெறி மன்ற வழக்கறையில் நெருக்கியடித்துக்கொண்டு, கூட்டமாகக் குழுமியிருந்தனர். வழக்கு மன்றத்தையே ஒரு பரபரப்புக்கும், வியப்புக்கு அதிர்ச்சிக்கும் உள்ளாக்கிய இவ்வழக்கில், பாவலரேறு அவர்கள் தாமே நடுவர்முன் நேர்நின்று உரத்த குரலில் வழக்காடியது, பார்வையாளர்களுக்குப் பெரும் புதுமையாகவும் உணர்வூட்டுவதாகவும் இருந்தது.

உயர்நெறி மன்ற வரலாற்றிலேயே இந்நிகழ்ச்சி ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இருந்தது என்று அவ் வழக்கைக் கேட்டிருந்த அனைவரும் வியந்து கூறினர்.

தந்தை பெரியார் அவர்கள்தாம் இவ்வாறு உயர்நெறி வழக்கு மன்றத்தில் தமிழில் தம் முறையீட்டை எடுத்துச் சொன்னவர். ஆனால், அதற்குப் பின்னர் பாவலரேறு அவர்களே முதன்முறையாகத் தம் வழக்கைத் தூய இனிய தமிழில் எடுத்துச் சொன்னவர் ஆகிறார். அவரின் இந்தச் செயலை ஆங்கில இதழான ‘இந்தியன் எக்சுபிரசு’ கீழ்வருமாறு எழுதியிருந்தது.

“Petitioner Perunchithiranar, a Tamil Scholar, President of Ulaga Thamizhina Munnetra Kazhagam” and editor of ‘Thenmozhi’ appeared in person and argued in chaste Tamil before the judge”.

தி.மு.க. இதழான முரசொலி இவ்வாறு கூறியது: “தமிழறிஞரான பெருஞ்சித்திரனார் நீதிமன்றத்தில் ஆஜராகி, தமது வழக்கைத் தெள்ளிய தமிழில் தாமே எடுத்துரைத்தார்.”

பெருஞ்சித்திரனார் உயர்நெறி வழக்குமன்றத்தில் நடுவர் முன் தம் முறையீட்டை எடுத்துவைத்து உரையாற்றிய விளக்கம் வருமாறு:

“பெருமை மிகு தமிழ்நாட்டின், சிறப்புடைய உயர்நெறி மன்றத்தின் மாண்புமிகு நடுவர் அவர்களே!

அறிவியலும் மாந்த உரிமைகளும் வளர்ந்து வருகின்ற முன்னேற்றமான ஒரு காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இப்பொழுது, தங்கள் முன்னிலையில் நான் கொணர்ந்திருக்கும் வழக்கு யாரும் சற்றும் எதிர்பாராத, எல்லாரும் அதிர்ச்சியடையத் தக்க, சிலர் வருந்துவதற்குரிய, ஆனால், கட்டாயம் ஆராயத் தகுந்த தேவையான ஒரு வழக்காகும்.

அண்மையில் காலஞ் சென்ற மதிப்பிற்குரிய இந்தியாவின் தலைமையமைச்சர் திருவாட்டி இந்திரா காந்தி அவர்களின் 'அஸ்தி' எனப்படும் உடலெலும்புச் சாம்பலைப் பற்றியதாகும் இவ் வழக்கு.

அவரின் சாம்பல் பற்றிய வழக்கு இதுவென்பதால், அவருக்குரிய பெருமையைத் தாழ்த்தியோ, இழித்தோ கூறுவதாக யாரும் பொருள் கொண்டுவிடத் தேவையில்லை. அவர் இந் நாட்டின் தலைமையமைச்சர் என்பதிலும், பொறுப்புவாய்ந்த ஒரு பணியை ஆற்றி மறைந்துபோயிருக்கிறார் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதற்குரிய வகையில் அவருக்கென்று சில பெருமைகள் ஆண்டு.

ஆனால் அவரின் 'அஸ்தி என்று கூறப்படும் உடலெலும்புச் சாம்பல், அறிவியல் தகுதியில் மற்றப் பொருள்களின் சாம்பலைப் போன்றதே ஆகும். அதற்கு ஏதேனும் தனிச்சிறப்போ, தனிக் குணநலன்களோ, பெருமைக்குரிய தன்மைகளே இருப்பதாக, அறிவியல் முறையில் எந்த ஒர் அறிவியல் அறிஞரும் (விஞ்ஞானியும்) ஆராய்ந்து கூறிவிட முடியாது.

வெறும் மத நம்பிக்கையில், பொதுமக்கள் கருதுமாறு, ஓர் உயர்ந்த மாந்தரின் சாம்பல் அ'து என்கிற பெருமை தவிர, அதற்கென்று தனிப்பெருமை வேறு இருப்பதாக யாரும் கூற இயலாது.

ஆனால், நம் இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று கூறிக் கொண்டு, இந்துமதத்தினர் மட்டுமே, பெருமையாக ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் கருதிக்கொண்டிருக்கும் ஒரு மத நம்பிக்கைச் செயலுக்கு இவ்வளவு பெருமையும் மதிப்புரவும் (மரியாதையும்), இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், ஒரு தெய்வத்தன்மையும் கூறி, அதற்குப் பாதுகாவல் முறையில், ஏராளமான காவலர்களையும், படைத்துறையினரையும் கொண்டு, மக்களின் வரிப்பணத்தைச் செலவழிப்பதும், பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கையை வரவழைத்து, அவர்களை மத மூடநம்பிக்கையில் ஆழ்த்துவதும், இந்தியா போலும் ஏழைமையும் கல்லாமையும் அறியாமையும் மூடநம்பிக்கையும் நிறைந்திருக்கும் ஒரு நாட்டிற்கும், அந்த நாட்டை ஆளுகின்ற அரசுக்கும் உகந்த செயல்கள் அல்ல.

இதுபோன்ற செயல்களால், அரசியல் அதிகாரம் பெற்ற ஆளுங்கட்சிக்குத்தான், அரசியல் முறையில், பொதுமக்களிடம் விளம்பரம் பெறுகின்ற வகையில், ஊதியமே தவிர, பொதுமக்களுக்கு இதனால் எந்த வகையான ஊதியமோ நலமோ துளியும் இல்லை.

இதுபோன்ற செயல்கள் மதவாதிகளுக்கும், மத நம்பிக்கையின் அடிப்படையில், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் போலி மடத்தலைவர்களுக்கும், ‘சந்நியாசி’களுக்கும், மத நிறுவனங்களுக்கும் பொருந்தலாமே தவிர, 70 கோடி மக்களை ஆள்கின்ற இந்திய அரசுக்கோ, 5 கோடி மக்களை ஆளும் தமிழக அரசுக்கோ உகந்ததன்று; செய்யக்கூடிய செயலும் அன்று.

மேலும், இந்திராகாந்தியின்மேல் மக்கள் பேரன்புகொண்ட காரணத்தால், அரசே முன்னின்று செய்யும் இது போன்ற மூடநம்பிக்கை நிறைந்த ஏமாற்றுச் செயலுக்கு, மக்கள் ஆதரவு தரவே செய்வர். கவர்ச்சியான, மத அடிப்படையில் செய்யும் எந்தச் செயலுக்கும் மக்கள் வரவேற்பு இருக்கவே செய்யும்.

ஆனால், மக்கள் விரும்புகிறார்கள், அல்லது வரவேற்கிறார்கள் அல்லது மிகுந்த அளவில் ஆதரிக்கிறார்கள் என்பதாலோ, ஒரு செயலைச் செய்யக்கூடியதாக, சரியானதாக, மக்களுக்கு நலம் விளைவிப்பதாக, அவர்களுக்குத் தேவையானதாக, அறிவியல் சார்ந்ததாக அரசு கருதிவிடக்கூடாது. மூடநம்பிக்கைகளை அரசு ஊக்கக்கூடாது. அவ்வாறு அரசு செய்யுமானால், அதை அறமன்றந் தான் தடுத்து நிறுத்தவேண்டும்.”

இவ்விடத்தில் நடுவர் மாண்புமிகு நடராசன் அவர்கள் குறுக்கிட்டுப் பெருஞ்சித்திரனார் அவர்களை, ‘இதை எந்த அடிப்படைச் சட்டத்தின்கீழ்க் கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அவர், “நான் இந்த நாட்டின் குடிமகன். அரசுக்கு மற்றவர்களைப் போலவே வரி செலுத்துகின்றேன். இந்திய அரசின் அமைப்பியல் சட்டத்தில் 51(அ) பிரிவு, குடிமக்களின் உரிமைகளைக் கூறிக் கடமைகளை வலியுறுத்துகிறது. அந்தப் பிரிவில், இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், அறிவியல் முறையான அணுகுமுறை, மாந்தநேயத் தன்மை மற்றும் ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் காப்பதற்கும் ஆவன செய்வதைத்தன் கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறுகிறது. எனவே அச்சட்டப் பிரிவு கொடுத்த உரிமையில் நான் அரசின் செயலை அறிவியலுணர்வுடன் அணுகித் தவறென்று கூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

அதற்கு நடுவர், “அறமன்றம் பொதுமக்களின் மூட நம்பிககைளைத் தடுத்து நிறுத்த முடியாதே! அதை வழக்காளர் போன்ற பொதுநலம் நாடுபவர்கள்தாம் பொதுமக்களிடம் சென்று அறிவுக்கருத்துகளைப் பரப்ப வேண்டும்” என்றார்.

அதற்கு விடையாக, பாவலரேறு, “அந்த வேலையை நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அரசே இத்தகைய மூடநம்பிக்கைகளை வளர்க்கின்ற செயல்களில் ஈடுபட்டால், நாங்கள் என்ன செய்வது? ஆகவேதான், வேறுவழியில்லாமல் அறமன்றங்களின் உதவியை நாங்கள் நாடவேண்டியுள்ளது” என்று கூறி, மேலும் தொடர்ந்து தம் வழக்குத் தொடர்பான உட்கூறுகளைக் கீழ்வருமாறு எடுத்துரைத்தார்:

“இந்திரா காந்தியின்மேல், மக்கள் பேரன்புகொண்ட காரணத்தால், அந்த அன்பை, இரக்கத்தைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அரசு தானே முன்வந்து, திட்டமிட்டு, மக்களின் வரிப் பணத்தில், ஏராளமான பொருட்செலவில் செய்யும் தேவையற்ற, இது போன்ற மூட நம்பிக்கை நிறைந்த ஏமாற்றுச் செயலுக்கு, மக்களும் ஆதரவு தரவே செய்வர். அ'து ஒன்றும் வியப்பில்லை. இப்படி நம்பிக்கை கொண்ட மக்களை மேலும் மதத்தின் அடிப்படையில் ஏமாற்றுவது எளிது. ஆனால் இவ்வாறு எளிதாக மக்களின் மதவுணர்வுகளைப் பயன்படுத்தி, ஏமாற்றும்படியான செயலை அரசே செய்யக்கூடாது என்பதுதான் நம் கருத்து.

மேலும், இந்தச் சாம்பலை, அதைச் சார்ந்தவர்களோ, அல்லது தொடர்பான ஒரு மதநிறுவனமோ தங்கள் செலவில், ஊர்ஊராக எடுத்துச்சென்று, மக்களின் பார்வைக்கோ, வழிபாட்டுக்கோ வைப்பதானால் நமக்குத் தடையோ, வருத்தமோ இல்லை. ஆனால் அரசே இச் செயலை மக்களின் வரிப்பணத்தில் செய்யக்கூடாது என்பதாலேயே, அறமன்றத்தை நாம் இதைத் தடுத்துநிறுத்தக் கோருகிறோம்.

மதச்செயல்களை அதிகார முறையில், அல்லது அதிகாரத்தின் பாதுகாப்பில் செய்யும்பொழுது, அவற்றால் மக்கள் ஏமாறவே செய்வர். இதனால், மக்களின் அன்றாட வேலைகளுக்குத் தடை நேர்கின்றன. அவர்களின் வரிப்பணம் பாழாகிறது. மேலும் ஏற்கனவே பல மூடநம்பிக்கைகள் நிறைந்த நாட்டில் மலும் இதுபோலும் புதிய மூடத்தனங்கள் வளர்வதற்கும் அவற்றால் மக்களை ஏமாற்றுவதற்கும் இது ஒரு வழியாகவும் மக்களில் சிலரால், பின்பற்றப்படக்கூடும் என்றும் அஞ்சுகிறோம்.

மேலும் இதுபோலும் முறைகளை, இனிவரும் காலத்தில் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் கடைப்பிடித்து மக்களை மேலும் மேலும் மூட நம்பிக்கைகளில் ஆழ்த்தவும் ஏமாற்றவுமே செய்வர். அதற்கு இது ஒரு தவறான எடுத்துக்காட்டாகவும் ஆகிவிடலாம் என்றும் கருதுகிறோம்.

எனவே, இச்செயலை உடனடியாக அறமன்றம் தடுத்து நிறுத்தி, மக்களுக்கு நலம் ஏற்படுமாறு செய்யக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி முடித்தார்கள்.

- தமிழ்ச்சிட்டு, இதழ் எண் : 48, 1984