சொன்னார்கள்/பக்கம் 21-30

விக்கிமூலம் இலிருந்து

என் பேரப்பிள்ளைகளைப் பார்க்கும் போதுதான், நான் கிழவனகிவிட்டதாகக் கருதுகிறேன், மற்ற சமயங்களில் எல்லாம் 21-வயதுடைய இளைஞனைப் போல் இருப்பதாகவே கருதுகிறேன்.

— வி.வி.கிரி (11-8-1962)

என்னைச் சிலப்பதிகாரத்துக்கு இழுத்தவர் பாரதியார். அதுபோலவே என்னைக் கீதைக்கு இழுத்தது காந்தியின் ‘அனாசக்தி யோகம’ என்ற புத்தகம்.

— ம. பொ. சி. (14-1-1962)

மனைவியையும் மைந்தனையும் பிரிந்து ஆயுள் முழுவதும் நான் சிறைவாசம் செய்ய நேரிட்டது. அப்படியிருந்தும் அவர்களைக் கண்டு பேசிய ஒருவரிடம் சிறிது நேரம் உரையாடவும் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. கொலைத் தொழில் புரிந்து மரணதண்டனை விதிக்கப் பெற்றவர்களும் கழுவேற்றப்படுமுன் தமது மனைவி மக்களுடன் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தாராள நோக்கமுடைய ஆங்கிலேயரது பிரதிநிதியாகிய லோ என்பவனது செய்கையோ அறநெறிக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது.

— நெப்போலியன் (20.12-1816)

அரசியலில் எனக்கு எந்தவிதமான ஆர்வமும் கிடையாது. மக்கள் குடியிருக்க வசதியான வீடுகளைப் பெற வேண்டும். மூன்று வேளைகளுக்கும் தேவையான அளவு உணவு அவர்களுக்குக் கிட்ட வேண்டும். நேர்த்தியான முறையில் அவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கக்கூடிய நிலைமை அடைய வேண்டும். இவற்றையே நான் பெரிதும் விரும்புகிறேன். நகைச்சுவைக்கென்றே நான் படங்களைத் தயாரிக்கின்றேன். நகைச்சுவை, மக்களைத் தொல்லைகளிலிருந்து விடுபட உதவுகிறது

—நடிகர் சார்லி சாப்ளின்

வியாபாரிகள், தொழிலதிபர்கள் அரசியலில் ஈடுபடும் போது, கலைஞர்கள் ஈடுபடுவதில் தவறு இல்லை என்பது என் கருத்து. ஆனால் அதே நேரத்தில் நடிகர்களை நம்பி மட்டுமே அரசியல் இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.

— நடிகர் ஜெய்சங்கர் (8.1-1975)

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா தன்னுடைய அன்பையும் அறிவையும் கொண்டு வந்து சீனாவின் வாயிலில் நின்றபோது, பெளத்த ஆசாரியார்கள் உங்களுடன் சகோதர முறையில் சேர வந்தார்கள். அந்தப் பிணைப்பு இன்னும் இருக்கிறது. ஆனால் இப்போது அது சீன மக்கள் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்புப் போல் இருக்கிறது. பல நூற்றாண்டுகளின் அலட்சியத்தாலும் அடிமைத்தனம் காரணமாகவும் அந்தத் தொடர்பு இப்போது காடு மண்டிய வழிபோல ஆகிவிட்டது. ஆனால் அந்த உறவின் அடையாளங்கள் இப்போதும் காணக் கிடைக்கும். அத்த உறவுப் பிணைப்பை உறுதிப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

—கவி ரவீந்திரநாத் தாகூர் (12-4-1924)
(சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில்)

நம் நாட்டில் ஒவ்வொரு லட்சம் ஜனத்தொகையில் 85 பேர்கள் புற்று நோயினல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென்னாட்டில் புற்று நோய் கண்டவர்களில் 40 சதவிகித்த்தினருக்கு அது உதடு, நாக்கு, கன்னங்களில் மட்டுமே உள்ளது. வெற்றிலைப் பாக்குடன் புகையிலையைச் சேர்த்து மெல்லும் பழக்கமே இதற்குப் பெரிதும் காரண மென வைத்திய நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவே அப்பழக்கத்தை அடியோடு நிறுத்த இயலாவிட்டாலும் குறைக்கும்படி வற்புறுத்த வேண்டும்.

— திருமதி ஜோதி வெங்கடாசலம் (13-1-1965)
(தமிழ்நாடு சுகாதார அமைச்சர்)

எனக்கென்று சொந்தமாக இப்பொழுது எதுவுமில்லை. ஒரு வீடு இருந்தது. அதையும் இப்பொழுது கொடுத்து விட்டேன்.

— பிரதமர் இந்திரா காந்தி

'நான் என்னை அழகி’ என்று நினைத்ததே இல்லை. என் மூக்கு ரொம்ப நீளம். ஒரு பல் உடைந்திருக்கிறது. என்உயரம் குறைவு. பருமனாகிக் கொண்டு வருகிறேன்.

— நடிகை சர்மிளா டாகூர்

சிவாஜி ஒரு சமயத்தில் ஒரு முகம்மதிய அரசரைத் தோற் கடித்தபோது, ஒரு இளம்பெண் கைதியாகப் பிடித்துக் கொண்டு வரப்பட்டாள். அப்போது அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி சிவாஜியிடம் கூறினர். அவரோ அவ்விதம் செய்வது ஒரு வீரனுக்கு அழகல்ல, ஆகவே, அவளை அவளது பெற்றேரிடம் கொண்டுபோய் ஒப்புவித்து விடுங்கள் என்றாராம். அவர் பிற பெண்களைத் தம் தாயைப்போல் பாவித்தவர். இந்த உத்தம எண்ணம் நம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும்.

—சர். ஏ. ராமசாமி முதலியார் (3-5-1927)
(சென்னையில், சிவாஜி 300-வது வருடக் கொண்டாட்ட விழாவில்)

ஒவ்வொருவரிடமும் மறைந்துள்ள திறமைகளையும், பண்புகளையும் வெளிக்கொணர்வதே கல்வியின் உயரிய லட்சியமாகும். கல்வி ஒருவருக்கு மறுபிறவி தருகிறது என்று இதனாலேயே இந்திய ஞானிகள் கூறியுள்ளனர். நாம் மறு பிறவி எடுத்தாக வேண்டும். இந்த மறுபிறவி எடுக்கவும், கிடைக்கும் திறமைகளை வெளிக்கொணரவும் ஒருவர் தன்னைப் பற்றியறிந்து கொள்ளவும் தற்சோதனை செய்து கொள்ளவும் வேண்டியது அவசியமாகும்.

—பிரமானந்த ரெட்டி (3-12-1976

ஆதாரக் கல்வி என்றால் எதோ நூல் நூற்பது, காய்கறித் தோட்டம் போடுவது என்று நினைக்க வேண்டாம். அவைகளெல்லாம் குழந்தைகளைத் தொழிலிலே பழக்குவதற்காக ஏற்பட்டவைகளே தவிர வேறில்லை.

—காமராசர்

சமுதாய மாற்றத்திற்கு எவை எவற்றை ஒழிக்க வேண்டும் என்று கருதி, யாரும் செய்யாத தொண்டை நான் மேற்கொண்டதற்குத் துணிவு மனப்பான்மையே காரணம். இந்தத் துணிவு எனக்கு மட்டும் எப்படி வந்தது? நான் சிறு வயதில் காலியாய்த் திரிந்தவன். என்னைப் பெற்றவர்கள் ஒரு விதவைக்கு என்னைத் தத்துக் கொடுத்து விட்டார்கள். அந்த அம்மையால் என்னை அடக்கி வளர்க்க முடியவில்லை. நான் வீதியில் கிடக்கும் எச்சில் இலைகளில் எது கிடந்தாலும் எடுத்துச் சாப்பிட்டு விடுவேன். சாக்கடையில் நெல்லிக்காய் கிடந்தாலும் எடுத்துத் துடைத்துவிட்டு வாயில் போட்டுக் கொள்வேன். இப்படியெல்லாம் ஏற்பட்ட துணிவும், ஏன் இப்படிச் செய்யக் கூடாது என்று கேட்கும் தன்மையுமே என்னை இந்த அளவிற்கு வளர்த்திருக்கின்றன.

—பெரியார்

என்னைச் சில சமயங்களில் தமிழ்நாட்டுச் ’சார்லி சாப்ளின்’ என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவ்வளவு பொருத்தமல்ல. சார்லி சாப்ளினே ஆயிரம் துண்டுகளாக்கினால் கிடைக்கிற ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்.

—கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

மல்யுத்த மேடையில் இறந்துவிட வேண்டும் என்பது தான் என் நீண்ட நாள் ஆசை. ஆனால் கடவுள் இந்தப் பாக்கியத்தை மட்டும் எனக்கு அளிக்க மாட்டார் போல இருக்கிறது.

—மல்யுத்த வீரர் கிங்காங்

சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளேயே சுயமரியாதையாகும். அக்குழந்தைத் தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

—திரு. வி. க.

நான் கல்லூரியில் படிக்காதவன். பூகோளம் தெரியாதவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். கல்லூரி போனவன் என்றோ, எனக்குப் பூகோளம் தெரியும் என்றோ, நான் எப்போதும் சொன்னதில்லை. ஆனாலும் எனக்கும் பூகோளம் தெரியும். தமிழ் நாட்டில் உள்ள ஊர்களையெல்லாம் பெரும் பாலும் அறிவேன். அவற்றிற்குப் போகிற வழி, இடையில் வரும் ஆறுகள், முக்கிய ஏரிகள், அவற்றின் உபயோகம் பற்றி எனக்குத் தெரியும். மற்றும் எந்தெந்த ஊரில் எப்படி எப்படி ஜனங்களுக்கு ஜீவனம் நடக்கிறது, எந்தத் தொழில் பிரதானமாக இருக்கிறது என்பதையும் நேரில் பார்த்திருக்கிறேன். வட இந்தியாவிலும் பல இடங்களைப் பார்த்துத் தெரிந்து வைத்திருக்கிறேன். இதெல்லாம் பூகோளம் இல்லை, கோடுகள் இழுத்துப் படம் போட்ட புத்தகந்தான் பூகோளம் என்றால், அது எனக்குத் தெரியாததாகவே இருக்கட்டும்.

—காமராசர்
(1959-ல் சென்னைப் புளியந்தோப்பு குட்டித் தம்பிரான் தெரு பொதுக் கூட்டத்தில்)


பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை, பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. நமது தமிழகத்தில் மறுபடி ஒரு அவ்வையார், ஒரு ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த 300 ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான்.

—ம.பொ.சி.

சின்ன வயதிலேயே எனக்கு நடிப்பின் மீது ஒரு பற்றுதல். பற்றுதல் என்று சொல்வதைவிட வெறி என்றுகூட சொல்லலாம். அந்த வெறியிலே தான் நான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டே ஓடிப்போய் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டேன். என்னை எங்கெல்லாமோ தேடிப்பார்த்து அலுத்துப் போய்விட்ட என் பெற்றோர்கள் கடைசியில் என்னத் தேடுவதையே நிறுத்திக் கொண்டு விட்டனர்.

—நடிகர் முத்துராமன்

கிரிக்கெட்டும், ஹாக்கியும்தான் எனக்குப் பிடித்த விளையாட்டுக்கள். கல்லூரி டீம்களில் சேர்ந்து இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, முதலிய நாடுகளுக்கெல்லாம் போய் விளையாடியிருக்கிறேன். இப்போது நாலைந்து ஆண்டுகளாக வாரம் ஒருமுறை கால்ஃப் ஆடுகிறேன்.

—பக்ருதீன் அலி அகமது (1975) (இந்திய ஜனதிபதி)

திண்ணைப் பள்ளியில் நான் படித்த காலத்தில், அங்கு எனக்குக் கொடுக்கும் பாடங்களைச் சரிவர ஒப்பித்து விடுவேன். நான் பதினைந்து வயதில் திருக்குறள் முழுதும் மனப்பாடம் செய்திருந்தேன்.

—பாரதிதாசன் (6-5-1963)

நான் வறுமையில் உழன்று கொண்டிருந்த நேரத்திலும் கவலைப்படாதவன். என் நண்பர்கள் வீட்டில்-ஒரு நாளைக்கு ஒரு வீடு என்று சாப்பிட்டால் கூட சாகும்வரை சாப்பிட முடியும். நான் இனி சம்பாதிக்க வேண்டியதில்லை. அவ்வளவு நண்பர்களைத் தொண்டர்களைப் பெற்றிருக்கிறேன். அப்படியிருக்க நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் ஏன் கொள்கையைச் சொல்லப் பின் வாங்க வேண்டும்?

—எம்.ஜி.ஆர். (9-10-1972)


பிறர் தம்மைப்பற்றிப் பேசுவதையே நான் எப்பொழுதும் கேட்க விரும்புகிறேன். அப்பொழுதுதான் நான் சதா நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க முடிகிறது.

—வில் ரோஜர்ஸ்

தற்போது கவர்ன்மெண்டார் அனுஷ்டித்து வரும் இராணுவ முறையை, எங்கள் நலனை யுத்தேசித்தே நாங்கள் கண்டிக்கிறோம். பிரபுவாகட்டும், பக்கிரியாகட்டும், வீரச் செயல்களைச் செய்யவும், மனிதர்களைச் சூரர்களாக்கவும்: மனிதர்களுக்கு அப்பெயரைப் பொருந்தச் செய்யவும், காரணமாயுள்ள தன்னம்பிக்கையை நாம் இழந்து வருறோம். நான் 5-வயது குழந்தையாயிருக்கும் பொழுதே என் பாட்டனார் யுத்தப் பயிற்சியை எனக்குக் கற்பித்தார். ஐம்பது வாருஷத்திற்கு முன் ஒவ்வொரு இளைஞனும் சமயம் ஏற்படும் பொழுது யுத்தத்தில் தன் புஜபல பராக்கிரமத்தைக் காட்ட அவாக் கொண்டிருந்தான். ஆனால் அதை நினைக்க என் உள்ளத்தில் நானா வித மனோ எழுச்சிகள் தோன்று கின்றன. மனிதர்கள் யுத்த வீரர்களாக வேண்டுமானல் கஷ்டகாலம் நேரிடும் சமயத்தில் எந்த வேலைக்கும் நாம் தயாராயிருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் அம்மாதிரியான சம்பவம் நேரிடும். நமக்கு ஆரம்ப முதல் யுத்தப் பயிற்சி வேண்டும். நம் தகப்பன் பாட்டன் ஏனேயோர் சண்டை செய்வதைப் பார்க்கவும், அவர்களோடு கலந்து கொள்ளவும் வேண்டும்.

—ராஜாராம்பல் சிங்கு
(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மகாநாட்டில்)

தீர்க்க தரிசியாய் இருப்பவர்கள் தமக்கு உண்மை எனத் தோன்றியதைக் கடைசி வரையில் தாம் கல்லால் அடிக்கப்பட்டு சாக நேரிட்டாலும் கடைப்பிடிக்கலாம். ஆனால் நாட்டுத் தலைவனாக இருப்பவன் பல நிலைமைகளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

—நேரு (17-6-1962)

நம் நாட்டில் உழவுத் தொழிலும் நெசவுத் தொழிலும் மிகப் பெரிய தொழில்களாகும். உழவுத் தொழில் உயிர் பிரச்சனை. நெசவுத் தொழில் மானப் பிரச்னை. உண்ணுவதை உனக்காக உண்ணு; உடுத்துவதைப் பிறருக்காக உடுத்து என்கிறார்கள். உண்மையிலேயே நாம் பிறருக்காகத்தான் உடுத்துகிறோம்.

— இரா. நெடுஞ்செழியன்
(கல்வி, தொழிலமைச்சர்)

25 வயதுக்கு முன்பு யாரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. 40 வயதுக்குப் பிறகு யாரும் திருமண இன்பம் அனுபவிக்கக்கூடாது. 40 வயதுக்கு மேற்பட்டவர் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

—வினோபா (3-7-1974)

நான் கொள்கையில் மிகவும் நிலைபெற்றிருப்பவள். என் சொந்தக் காலில், சொந்தத் தத்துவத்தில் வலிமையுடன் நான் நிற்பேன். இதைவிட்டு நான் என்றுமே பிறர் தயவை நாடி, அடுத்தவர் காலில் நிற்பவள் அல்ல. குறிப்பாக எந்த மகானும், எந்தக் கடவுளும் எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாரையும் மகானாக எண்ணி குருவாக ஏற்று அவர் காட்டும் வழியில் போய் மோட்சம் அடைய வேண்டும் என்பது என் விருப்பம் அன்று.

—பிரதமர் இந்திரா காந்தி

சிலர் ஐந்தாறு வேஷ்டி புடவைகளை வாங்கி, பீரோ நிறைய அடுக்கி வைத்துக் கொண்டு, யாராவது விருந்தினர்கள் வந்தால் திறந்து காட்டுவார்கள். அவ்வளவுதானே தவிர வேறு பிரயோசனமில்லை; பணம் முடங்கி வீணாகப் போகாமல் வெளியே வந்து நாட்டின் செல்வத்தை மேலும் வளர்க்க வேண்டும்.

—காமராசர்

இது என்ன வாழ்க்கை! ஜெயில் வாழ்க்கை போல் இருக்கிறது. மிருகக்காட்சி சாலையிலுள்ள குரங்கைப் போன்ற நிலையில் நான் இருக்கிறேன். எல்லோரும் என்னைப் பார்க்கும் பார்வையை எண்ணும்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. நான் எளிமையாக வாழ விரும்புகிறேன். எல்லோருடனும் தமாஷாகச் சிரித்துப் பேச வேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் அது முடிவதில்லை. புகழ் என்னைத் தேடி வந்திருக்கிறது. இதனால் எளிமையாகவும், எண்ணம் போலவும் வாழ முடியாது போல் இருக்கிறது.

—புருஸ்லீ (உலக கராத்தே மன்னன்)

எனக்கு நிலங்கள் உண்டு. எனினும் சிறு போழ்தில் வெயிலில் வேலை செய்து பழக்கமின்மையால் விவசாயம் செய்து ஜீவிக்க முடியவில்லை. என் மனைவி மக்களும் அவ்வாறே இருக்கின்றார்கள், என் செய்வது!

—வ. உ. சி. (3-3-1923)(காரைக் குடியில்)

என் வாழ்நாளில் நான் எழுதியது எல்லாம் தமிழில் தான். வியாசர் விருந்தும், கண்ணன் காட்டிய வழியும், சக்கரவர்த்தி திருமகனும், உபநிஷதப் பலகணியும், பல வருடங்களுக்கு முன்பே கதைகளும் தமிழில்தான் எழுதினேன். எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக எழுத வராது. விஞ்ஞான சொற்கள் அடங்கிய புத்தகமும் தமிழில்தான் எழுதினேன். தமிழிலேயே மூழ்கி வளர்ந்தவனை-என்னைப் பார்த்து தமிழுக்கு விரோதி எதிரி என்பது மோசடி-முழுப்பொய்-கலியுகப்புளுகு.

—ராஜாஜி (4-7-1965)

ஒருவருக்கு 24 வயதில்தான் நல்ல வாழ்க்கை தொடங்குகிறது. என்னுடைய வாழ்க்கையிலும் 24 வயதில்தான் நல்லநேரம் வந்தது.

—நடிகர் திலகம் சிவாஜிகணேசன்

இந்நாட்டின் பொருளாதார நிலைமையைப் பற்றி புத்தர்கள் எழுதிவைத்த புத்தகங்களிலிருந்து நாம் முதன் முதலில் அறிந்தோம். புத்தமதம் ஓங்கி வளர்த்திருந்த காலத்தில் நிலம் சம்பந்தமாகப் பட்டா மாற்றும் உரிமையில்லை என்று புரபசர் ரைஸ்டேவிட்ஸ் எழுதியுள்ள புத்தகத்திலிருந்து நாம் அறிகிறோம். அப்போது நாடு செழிப்பாகவும், க்ஷேமமாகவும் இருந்தது. கூலிக்கு வேலை செய்வதை மக்கள் வெறுத்து வந்தனர். அம்மாதிரியான சுபாவ குணம் இந்தியாவில் எல்லா யுகங்களிலும் எக்காலத்திலும் இருந்து வருகிறது.

—லாலா லஜபதிராய் (18-4-1928)
(எர்ணாகுளம்)

கோவிலுக்குள் மூலஸ்தானம் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் இந்துமதத்தை நம்பாதவர்களும், அதற்கு எதிரிடையாயுள்ளவர்களும் சுற்றித்திரிய இடங்கொடுத்துவிட்டு, இந்து மதத்தைக் கொண்டாடுவதோடு அல்லாமல், இந்து மதத்தில் பிறந்து, அதையே நம்பி, அதிலேயே இருந்து அதற்காகவே இறந்துகொண்டு இருக்கிற இந்து மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பது பொல்லாத தலைவிதியாயிருக்கிறது. என்னுடைய அபிப்பிராயத்தில் இது தீண்டாமையைவிடக் கேவலமானதாயிருக்கிறது.

—பி.டி.ராஜன்(9-6-1928)
(லால்குடி தாலுகா முதலாவது சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரையில்.)

என் குழந்தைப் பருவத்தில், என் தந்தை எனக்கு எழுத ஒரு சின்னஞ்சிறிய மேசையும், புத்தகங்கள் வைத்துப் படிக்கும் ரஹ்யாலும், ஒரு தங்க மோதிரமும் வாங்கித் தந்தார். அதன் பின் பழைய சாமான்கள் வாங்கும் ஒருவன் வந்தான். அவனிடம் நான் தங்க மோதிரத்தைக் கொடுத்தேன்.என் கை நிறைய அவன் பேரீச்சம் பழம் தந்து சென்றான்.

—பாரசீகக் கவிஞர் இமாம் சாஅதி
"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_21-30&oldid=1009800" இலிருந்து மீள்விக்கப்பட்டது