அறிவியல் அகராதி/C

விக்கிமூலம் இலிருந்து

C

cable television - கம்பிவடத் தொலைக் காட்சி: கம்பிகள் வழியாகக் காண்போருக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குதல். இதில் முதன்மையாகப் பதிவு செய்த திரைப்படங்களே காட்டப்படுகின்றன. இது நல்ல வணிக முயற்சி. (இய)

cadmium - கேட்மியம்: Cd. இது வெண்ணிற உலோகம். அல்லணுக்களை உறிஞ்சுவது. அணு உலைகளில் கட்டுப்பாட்டுக் கோல்களாகப் பயன்படுவது. (வேதி) cadmium cell - கேட்மியம் மின்கலம்: பா. weston cell (இய)

caducous - உதிரும்; உதிரக்கூடிய பூப்பகுதிகள். (உயி)

caecum - குடல்பை: முட்டுபை, உணவு வழியில் பெருங்குடலும் பின் சிறுகுடலும் சேருமிடத்திலுள்ள ஒரு வழிப்பை. குடல் வாலில் முடிவது. இப்பையில் கூட்டு வாழ்விகள் தங்கி நொதிகளை உண்டாக்குபவை. இந்நொதிகள் செல்லுலோசைச் செரிக்கவைப்பவை. பா.alimentary canal. (உயி)

caesium - சீசியம்: Cs, இயற்பண்புகளிலும் வேதிப்பண்புகளிலும் சோடியத்தை ஒத்தது. மென்மையானதும் வெண்மையானதுமான உலோகம், வானொலிக் குழாய்களும், ஒளிமின்கலமும் செய்யப் பயன்படுவது. (வேதி)

caesium clock - சீசியக் கடிகாரம்: ஆற்றல் வேறுபாட்டு அடிப்படையில் வேலை செய்யும் அணுக்கடிகாரம். (சீசியம் 133). (இய)

caffeine - கேஃபின்: C8H10N4O2 காப்பி அவரையிலும் தேயிலைகளிலும் உள்ள பியூரின், பட்டுப் போன்ற வெண்ணிறப் பொருள். செயற்கையாகப் பெறலாம். இதயச்செயலை ஊக்குவிப்பது. பல மருந்துகளில் பயன்படுவது. (வேதி)

cainozoic, cenozoic - புத்தூழி: புவி வளரியில் காலம். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னுள்ள பாலூட்டிகள் காலம். (உயி)

calamine - காலமின்: ZnCO3. துத்தநாகக் கனிமம். தோல் மருந்துகள் செய்யப்பயன்படுவது. வெயிலினால் முகங்கருத்தலுக்கு இதன் கரைசல் மருந்து. (வேதி)

calcarea - சுதைய முட்கூட்டுலிகள்: துளை தாங்கிகள். (பொரி பெரா) தொகுதியைச் சார்ந்த வகுப்பு. இவை கடற்பஞ்சுகள். அனைத்தும் கடல் வாழ்பவை. சுதைய முட்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர். (உயி)

calcicole - காரநிலத் தாவரங்கள் : சுண்ணாம்பு ஊட்டமுள்ள நிலங்களில் வாழ்பவை. (உயி)

Calciferol - கால்சிபெரால்: வைட்டமின். டி (உயி)

calciferous glands - சுதையச் சுரப்பிகள்: சில வகை மண்புழுக்களில் தொண்டைப் பகுதியிலுள்ள கழிவுச்சுரப்பிகள். (உயி)

calcifuge - களிமண்நிலத் தாவரங்கள்: சுண்ணாம்பு ஊட்டமில்லா நிலங்களில் வாழ்பவை. (உயி)

calcination - சுதையமாக்கல்: நீற்றுதல், வெப்பப்படுத்தும் முறை. இதில் தாது வெப்பப்படுத்தப் படுதல். இதனால் அதன் அய்டிரேட்டுகள் அல் லது அய்டிராக்சைடுகளிலிருந்து நீர் வெளியேறும். கரிஈராக்சைடு கார்பனேட்டுகளிலிருந்து நீங்கும். இறுதியாகக் கிடைப்பது உலோக ஆக்சைடு. (வேதி)

calcinite - கால்சினேட்: பொட்டாசியம் அய்டிரஜன் கார்பனேட்டின் (KHCO3). கனிம வடிவம். (வேதி)

calcite - கால்சைட்: மிகப்பரவலாகவுள்ள கனிம வடிவங்களில் ஒன்று. படிகக் கால்சியம் கார்பனேட்டைக் கொண்டது. (வேதி)

calcium - சுதையம்: Ca, கடினமான வெள்ளி போன்ற பளபளப்பான உலோகம். கம்பியாக்கலாம், தகடாக்கலாம். சாக்கட்டி சுண்ணாம்புக்கட்டி முதலியவற்றிலுள்ளது. (வேதி)

calcium carbide - கால்சியம் கார்பைடு: CaC2. சாம்பல் நிறப் படிகம். சுண்ணாம்பையும் கல்கரியையும் மின் உலையில் 3000°செ. இல் வெப்பப்படுத்தக் கிடைக்கும். உரம்.(வேதி)

calcium cyanamide -கால்சியம் சயனமைடு: CaCN2. சாம்பல் நிறப் படிகம். நைட்ரஜன் சுழற்சியால் கால்சியம் கார்படை 1000° செ. இல் வெப்பப்படுத்தக் கிடைக்கும். உரம் - யூரியா. (வேதி)

calcium hydroxide - கால்சியம் அய்டிராக்சைடு: Ca(OH)2. நீற்றின கண்ணாம்பு. வெண்ணிறப் படிகம். கால்சியம் ஆக்சைடுடன் நீரைச் சேர்த்துப் பெறலாம். சிமெண்ட் தொழிலில் பயன்படுதல். (வேதி)

calcium oxide - கால்சியம் ஆக்சைடு: CaO. சுட்ட சுண்ணாம்பு. வெண்ணிறம், படிகமற்றது. சிமெண்ட் செய்யப்பயன்படுதல். (வேதி)

calcium phosphate - கால்சியம் பாஸ்பேட்: Ca3(PO4)2. வெண்ணிற வீழ்படிவு. கால்சியம் சூப்பர் பாஸ்பேட், பாசுவரிகக் காடி, பாசுவரம் ஆகியவை தயாரிக்கப் பயன்படுவது. (வேதி)

calculus - நுண்கணிதம்: சார்புகள் தொடர்பாகத் தொகையீடு செய்தல், வகைக் கெழுகாணல் ஆகியவை பற்றி ஆராயும் கணிதப் பிரிவு. வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் என இரு வகைப்படும். (கண)

calf muscle - கெண்டைக்கால் தசை: இஃது ஒர் இயக்குத் தசை. இத்தசை சுருங்கும்போது, குதிகால் தூக்கப்படுகிறது. காலடி நீட்டப்படுகிறது. நடத்தல், ஒடுதல், குதித்தல், நிற்றல் முதலிய இயக்கங்களுக்கு இது முதன்மையானது. (உயி)

californium - கலிபோர்னியம்: Cf, கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. இதிலிருந்து பல ஓரிமங்கள் தொகுக்கப்படுகின்றன. கலிபோர்னியம் 252 அல்லணுக்களின் (நியூட்ரான்கள்) ஊற்றுவாய். (வேதி)

calomel - இரசகற்பூரம்: பாதரச (l) குளோரைடு, பூஞ்சைக் கொல்லி (வேதி) calorescence - வெப்ப ஒளிர்வு : ஒளிக்கதிர்களை ஒரு பரப்பு உறிஞ்சுதலும் வெப்பமானபின் அவை வெப்பக்கதிர் வீச்சாதலும் வெப்ப ஒளிர்வாகும். (இய)

Call - பேச்சு: தொலைபேசியில் பேசுதல் (தொ.நு.)

call, local -உள்ளூர்ப் பேச்சு. (தொ.நு.)

call, trunk -வெளியூர்ப் பேச்சு. (தொ.நு.)

call, STD - உறுப்பினர் நேரடி வெளியூர்ப் பேச்சு (இய)

callipers - கிடுக்கிமானி: கம்பிகளின் வெளிக் குறுக்களவையும் குழாயின் உள்குறுக்களவையும் காணப் பயன்படுங்கருவி. (இய)

callose - கேலோஸ்: தாவரச் சல்லடைத் தட்டுகளில் நிலையாகவோ, பருவத்திற்கேற்பவோ படியும் மாப்பொருள். இதனால் அத்தட்டுகள் செயலிழக்கும். (உயி)

Callus - 1. பட்டைவிடல்: தாவரக் குழாய்த் தொகுதி காயமுறும் பொழுது, அதற்குத் துலங்கலாக, வளர் திசுவில் வேறுபாடு அடையாத பஞ்சுக் கண்ணறைகள் தோன்றுதல். 2. காய்ப்பு: தோலில் கரடு தோன்றுதல் (உயி)

calorie - கலோரி: வெப்ப அலகு. 1. கிராம் நீரை 1 செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப அளவு சிறிய கலோரி. 1 கிலோ கிராம் நீரை 1 செ. க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப அளவு பெரிய கலோரி. உடல் வெப்பம் கலோரிகளிலேயே அளக்கப்படுவது. 4.185 ஜூல்களுக்குச் சமமான ஆற்றலின் அலகு. (இய)

calorimeter - கலோரிமானி: உருவாகும் வெப்பத்தை அளக்கப் பயன்படும் கருவி (இய)

calorimetry - கலோரி அளவை: வெப்பத்தை அளக்கும் வேதி இயல் பிரிவு. (இய)

Calvin cycle - கால்வின் சுழற்சி:பென்சன் - கால்வின் - பாஷம் சுழற்சி. ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் இருட் செயல்வினைகள் இதில் அடங்கும். இறுதியாகக் கரி ஈராக்சைடு மாப் பொருளாகிறது. பசும்பாசியில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவு. பா. Blackman reaction, Hill reaction. (உயி)

calx - நீறு: உலோக ஆக்ஸைடு. அதிக வெப்ப நிலையில் காற்றில் ஒரு தாதுவை வெப்பப்படுத்தக் கிடைப்பது. (வேதி)

calyptra - மூடுபடை: பெண்ணியத்தின் அடிப்பகுதியிலிருந்து வளரும் சிதல் பயிரை மூடுவது. எ-டு. மாசிகள். (உயி)

calyptrogen - மூடுபடலம்: ஆக்குதிசுவடுக்கு. புற்களின் வேர் முனை ஆக்குதிசுவை மூடி இருக்கும். வேர் மூடியை உண்டாக்கும். (உயி)

calyx - புல்லி வட்டம்: ஒரு பூவின் முதலடுக்கு. பச்சை நிறமுள்ள புல்லிகளாலானது. ஒளிச் சேர்க்கை நடத்துவது மட்டுமல்லாமல் பூவிற்குப் பாதுகாப்பும் அளிப்பது. (உயி)

cambium - அடுக்கியம்: அடுக்குத் திசுவான வளர்திசு. தாவரங்களில் பக்க வளர்ச்சிக்குக் காரணமானது. தண்டிலும் வேரிலும் உள்ளது. பா.vascular bundle. (உயி)

Cambrian -கேம்பிரியன் ஊழி: தொல்லூழியின் தொடக்கப் புவிவளரியல் காலம். 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 100 மில்லியன் ஆண்டுக்காலம் வரை நிலவியது. இக்காலத் தொல்லுயிர்ப் படிவங்கள் கடல் உயிர்களாலானவை. (உயி)

camera - புகைப்படப் பெட்டி: நிழற்படங்கள் எடுக்க உதவும் பெட்டி. (இய)

camouflage - நிற மாறாட்டம்: பா. warning colouration. (உயி)

camphor - சூடம்: C10H16O. வெண்ணிறப்படிகம். தனக்கே உரிய மணம், ஊக்கி, வயிற்று உப்புசம் நீக்கவும் செல்லுலாய்டு செய்யவும் பயன்படுவது. (வேதி)

Canada balsam - கனடா பால்சம்: மஞ்சள் நிறப்பாய்மம். நுண்ணோக்கியிலும், கண்ணாடி வில்லைகளை நிலைநிறுத்தவும் ஒளிக்கருவிகளுக்கு ஒட்டு பொருளாகவும் பயன்படுவது. (உயி)

cancer - புற்று நோய்: இயல்பு மீறிய உயிரணு வளர்ச்சியால் உண்டாகும் நோய். புற்றுநோய் உயிரணுக்கள் மிக விரைவாக வளரக்கூடியவை. முழுதும் குணமாக்கும் மருத்துவம் இன்னும் கண்டறியப்படவில்லை. (உயி)

candela - கேண்டலா: Cd. ஒளிச்செறிவின் எஸ்ஐ அலகு (இய)

candidate - தேர்வர், தேர்வுப்பொருள் (ப.து)

candle - மெழுகுவத்தி: கொழுப்புக் காடிகளிலிருந்து தயாரிக்கப்படுவது. (வேதி)

candle flame - மெழுகுவர்த்தி சுடர்.

candle power - வத்தித் திறன்: ஒளிச் செறிவின் முந்தைய அலகு. அனைத்துலக வத்தியின் அடிப்படையில் அளக்கப்பட்டது. 1940இல் உருவானது. (இய)

cane sugar - கரும்புச்சர்க்கரை: சுக்ரோஸ் (உயி)

cannie tooth - கோரைப்பல்: நாயிடத்துக் கோரைப்பல் நன்கு வளர்ந்துள்ளது. பாம்பிடத்து இது நச்சுப்பல். யானையினிடத்து தந்தம். பா. eye tooth. (உயி)

cannibal - தன்னின உண்ணி: தன்னின உயிர்களைத் தானே உண்ணும் உயிரி. அரசநாகம் சிறிய பாம்புகளை இரையாக உண்ணும். (உயி)

cannizzaro reaction - கன்னிசாரோ வினை: பென்சால்டிகைடை ஒரு கார அடர்கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும் பொழுது பென்சைல் ஆல்க காலாகவும் பென்சாயிகக் காடியாகவும் அது மாறும். (வேதி)

capacitance - மின் ஏற்புத்திறன்: C. மின் தேக்கு திறன். காப்புகள், கடத்திகள் ஆகியவற்றின் மின்னேற்றத்தேக்கு திறன். (இய)

capacitor - மின் ஏற்பி: மின் தேக்கி. பா. condenser (இய)

capillarity - நுண்புழைக்கவர்ச்சி: நுண்புழைத்திறன். புவிஈர்ப்புவிசைக்கு எதிராக நீர்மங்கள் தாமாகவே ஒடுங்கிய திறப்புகளில் உயரும் நிகழ்ச்சி. இம்முறையில் நீர்மங்கள் உயர்வது அவற்றின் அடர்த்தியையும் நுண்புழைத் திறனையும் பொறுத்தது. நிலத்தடி நீர் இத்திறனாலேயே மேலே உயர்கிறது. இந்நீரை அதிகம் உறிஞ்சித் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்பவை. (உயி)

capillary tube - நுண்புழைக்குழாய்: நுண்புழைக் கவர்ச்சியுள்ள குழல். (இய)

capillary water - நுண்புழை நீர்: நுண்புழைக் கவர்ச்சியால் தாவரங்களில் ஏறும் நிலத்தடி நீர். பயன்கள். 1. தாவரத்தண்டு வழியாக ஊட்ட நீர் தாவரத்தின் மற்றப் பகுதிக்குச் செல்லுதல். 2. இந்நெறிமுறையில் தானே மைநிரப்பும் ஊறி, மைஉறிஞ்சித் தாள், பூத்துணித் துண்டுகள் எல்லாம் வேலை செய்கின்றன. (உயி)

capitulum - தலைக்கொத்து: இப்பூக்கொத்தின் அடிக்காம்பின் தட்டு முனையில் பல காம்பிலாப்பூக்கள் இருக்கும். இவற்றையடுத்து மலட்டுச் செதில் வளையம் இருக்கும். எ-டு. சூரிய காந்தி. பா. inflorescence. (உயி)

capsule - பொதிகை: பெட்டகம். 1. ஒரு பிளவுறுகனி-வெண்டை 2. குச்சியத்தால் கண்ணறைப் படலத்தைச் சுற்றியுள்ள படலம். 3. மாசியின் கருப்பயிர் தலைமுறையின் சிதல்களில் காணப்படும் பகுதி. 4. ஒர் உறுப்பு அல்லது பகுதியில் குழ்ந்துள்ள பாதுகாப்புறை. (உயி)

capture - பிடிப்பு: ஒரு துகளை மற்றொரு துகள் கவரல். எ-டு. நேர் அயனி மின்னணுவைக் கவர்ந்து அல்லணுவை உண்டாக்குதல். சில அணுக்கரு வினைகளில் ஒர் அணுக்கரு அல்லணுவைக் கவர்வதால் காமாகதிர் ஒளி உமிழ்வு ஏற்படும். (இய)

carapace - புற ஓடு: ஆமை, நண்டு ஆகியவற்றின் உடலில் மூடியிருக்கும் கடினப் புறஎலும்புக் கூடு. (உயி)

carat - கேரட்டு: பொன்னின் தூய்மையளவையும், வைரத்தின் எடையளவையும் குறிக்கும் சொல். தூய பொன் 24 கேரட்டு பொன் ஆகும். 14 கேரட்டு பொன் என்பது அதன் 24 பகுதிகளில் 14 பகுதிகள் பொன்னும் எஞ்சிய 10 பகுதிகள் செம்பு என்பதும் பொருளாகும். 0.200 கிராமுக்கு இணையான ஓரலகு பொருண்மை, வைரங்களின் பொருண்மைகளை அளக்கப்பயன்படுதல், ஏனைய மணிக்கற்களுக்கும் இதுவே பொருந்தும். (இய)

carbaryl - கார்பரில்: C12H15NO3 வார்ப்புரு:S C12H11NO2 வெண்ணிறப் படிகம். கரிமக் கரைப்பான்களில் கரையும். பூச்சிக் கொல்லி. (வேதி)

carbide - கார்பைடு: கரியின் கூட்டுப்பொருள். பல வகைப்படும். (வேதி)

carbohydrates - மாப்பொருள்: உணவின் பகுதிப் பொருள்களில் ஒன்று. ஸ்டார்ச்சும் சர்க்கரையும் சேர்ந்தது. இதிலுள்ள தனிமங்கள் கரி, நீர்வளி, உயிர்வளி, வெப்பத்தையும், ஆற்றலையும் தருபவை. (உயி)

carbolic acid - கார்பாலிகக் காடி: பினாயில். தொற்று நீக்கி. (வேதி)

carbon - கார்பன்-கரி: C. அதிகம் பரவியுள்ள அலோகம், புற வேற்றுமை கொண்டது. எல்லாக்கரிமச் சேர்மங்களிலும் உள்ளது. சேராமல் இருப்பவை வைரமும் கிராபைட்டும். மின்சாரத்தையும் வெப்பத்தையும் நன்கு கடத்துவது. மின்கலங்களின் நேர்மின்வாயான கரித்துண்டுகள் செய்யப்பயன்படுவது. (வேதி)

carbonation - கரியாக்கஞ் செய்தல்:கார்பனேட்டுகள் என்னும் உப்புகள் உண்டாகக் கரியைக் கரி ஈராக்சைடுடன் சேர்த்தல். (வேதி)

carbon cycle - கார்பன் சுழற்சி, கரிச்சுழற்சி: சூழ்நிலைக்கும் உயிரிகளுக்குமிடையே நடைபெறும் கரிச்சுற்று. தம்மூட்ட வாழ்விகளான பசுந்தாவரங்கள் காற்றிலுள்ள கரி ஈராக்சைடைக் கொண்டு மாப்பொருள் தயாரிக்கின்றன. இவை வேற்றுாட்ட வாழ்விகளான விலங்குகளுக்கு உணவு. எல்லா உயிரிகளும் மூச்சுவிடுதல், கரிஈராக்சைடு மீண்டும் காற்றுவெளிக்குச் செல்கிறது. கார்பனேட்டிலும், இரு கார்பனேட்டிலும் கரி அமைந்து ஒளிச்சேர்க்கைக்கு ஊற்றாக அமைதல். (உயி)

carbon dating - கரிக்காலக் கணிப்பு: தொல்பொருள்களின் வயதை கரி - 14 அடிப்படையில் உறுதி செய்யும் முறை. கரி - 14 என்பது ஒரு சுவடறி தனிமம் (ட்ரேசர் எலிமண்ட்). (வேதி)

carbon dioxide - கரிஈராக்சைடு: CO2. காற்றுவெளியில் 0.04% உள்ளது. நீரில் சீராகக் கரைந்து கார்பானிக் காடியைக் கொடுக்கும். இந்நீரே சோடாநீர். தீயணைப்பான், சலைவவைச்சோடா செய்யப்பயன்படுதல். (வேதி)

carbon disulphide - கரிஇரு சல்பைடு: CS2. எரியக் கூடிய நீர்மம். அழுகிய முட்டையின் மணம், கரைப்பான், பூச்சிக் கொல்லி. (வேதி)

carbonisation - கரியாக்கல்: கரியாகக் குறைத்தல். (வேதி)

carbon monoxide - கரி ஓராக்சைடு: CO. நிறமற்றது, நச்சுத்தன்மையுள்ளது. எரிபொருள். (வேதி)

carbon tetrachloride - கரிநாற்குளோரைடு: CC4 கனமான நீர்மம். நிறமற்றது. இனிய மணம். நீரில் கரையாது. ஈதரில் கரையும். தீயணைப்பானாகவும கொழுப்புக் கரைப்பானாகவும் பயன் படுவது. (வேதி)

carbuncle - பிளவை: கருமையான ஸ்டேப்பிலோ காக்கஸ் என்னும் நுண்ணியிரியால் ஏற்படும் அழற்சி. ஒ. boils. (உயி)

carburettor - கலவையாக்கி: அக கனற்சி எந்திரத்தின் மிக இன்றியமையாப் பகுதி. பெட்ரோலை ஆவியாக்கித் தக்க வீதத்தில் காற்றுடன் கலக்கச் செய்வது. (இய)

carcinogen - கார்சினோஜன்: புற்று நோய்க் காரணி. எ-டு. புகையிலை. (உயி)

cardiac muscle - இதயத்தசை: தானியங்கு தசை. (உயி)

cardiogram - இதயவரைவு: இதயத்துடிப்புகளை நெளிவுகளாகக் காட்டும் வரைபடம். (மரு)

cardiograph - இதய வரவி: இதய அலை இயக்கத்தைப் பதிவு செய்யும் கருவி. (உயி)

caries - சொத்தை: பற்சிதைவு அல்லது எலும்புச் சிதைவு. முதுகெலும்பு சிதைதல். (உயி)

carnivore - ஊனுண்ணி: உயிரின் சதையை உண்ணும் விலங்கு. எ-டு. சிங்கம், புலி. (உயி)

carnivorous plant, insectivorous plant - ஊனுண்ணித் தாவரம், பூச்சியுண்ணுந் தாவரம்: சிறிய பூச்சிகளை உட்கொண்டு நைட்ரஜனைப் பெறுந் தாவரம். நைட்ரஜன் குறை ஏற்படும் பொழுது இது நடைபெறுகிறது. எ-டு உட்ரிகுலோரியா, நெபன்தஸ். (உயி)

Carnot cycle - கானோ சுழற்சி: ஒரு நிறைவான வெப்ப எந்திரத்தில் 4 வீச்சுக்களாவன. 1. வெப்பம் மாறா இறுக்கம், 2. ஓரக வெப்ப நிலை விரிவு 3. வெப்பமாறா விரிவு. 4. ஓரக வெப்பநிலை இறுக்கம். (உயி)

carnotite - கார்னோடைட்: கதிரியக்கக் கனிமம். யுரேனிய, ரேடியம், வெனாடியம். ஆகியவற்றின் ஊற்றி. (உயி)

carotene - கரோட்டின்: மஞ்சள் நிறத்தையும் சிச்சலி நிறத்தையும் உண்டாக்கும் நிறமி. வைட்டமின் ஏ முன்னோடி. (உயி)

carotenoids - கரோட்டினாய்டுகள்: பச்சையம் இல்லாதபோது, தாவரப் பசுங்கணிகங்களில் காணப்படும் நிறமிகள். நிறம் மஞ்சள், சிவப்பு, கிச்சலி. (உயி)

carotid artery - கழுத்துத் தமனி: பெருந்தமனியிலிருந்து கிளம்பி இருதமனிகளாகப் பிரிந்து தலைக்குக் குருதியளிப்பது. (உயி) carp - கார்ப்பு மீன்: நன்னீர் மீன். குளங்குட்டைகளில் காணப்படும் உணவு மீன். (உயி)

carpal bone - மணிக்கட்டு எலும்பு: இருவகைகளில் எட்டாக ஒவ்வொரு வரிசையிலும் நான்கு அமைந்திருக்கும். (உயி)

carpet - சூல் இலை: பூக்குத் தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு. சூல்பை, சூல் தண்டு, சூல்முடி ஆகியவற்றைக் கொண்டது. இவ்விலைகள் தனித்தும் சேர்ந்தும் இருக்கும். (உயி)

carpus - மணிக்கட்டு: மணிக்கட்டு எலும்புகளின் திரட்சி. (உயி)

carrier - மரபணுச் சுமப்பி: ஒடுங்கு மரபணுவைச் சுமந்து செல்லும் உயிரி. எ-டு. நிறக்குருடைக் கொண்டு செல்லுதல் (உயி) 2. மின்னேற்றச் சுமப்பி: முன்னணு அல்லது நேர்மின்னேற்றத் துளை. 3. ஊர்தி: ஊர்தி அலை. (இய)

carrier gas - சுமப்பு வளி: வளி நிறவரைவியலில் பயன்படுவது.

carrier wave - ஊர்தி அலை: மின்காந்த அலை. வழக்கமாக, நீள் வானொலி அலை. அதிர்வெண் எல்லையையோ ரேடார் அதிர்வெண் எல்லையையோ கொண்டது. செய்தியைச் சுமந்து செல்வது. பண்பேற்றம் வாயிலாகச் செய்தி சேர்க்கப்படுகிறது. (இய)

Cartesian coordinates - கார்ட்டீஷியன் ஆயத் தொலைகள்: பகுப்பு வடிவக் கணிதத்தில் பயன்படுத் தொகுதி. (கண)

cartilage - குருத்தெலும்பு: செறிவான இணைப்புத்திசு. அழுத்தத்தைத் தாங்கவல்லது. முக்கு, செவிமடல், முள் எலும்புத் தட்டுகள், எலும்பு முனைகள், மூட்டுகள் ஆகியவற்றில் குருத்தெலும்பு அமைந்து நெகிழ்ச்சி அளிப்பது.

cartilage culture - குருத்தெலும்பு வளர்ப்பு: நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ்செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல், ஸ்வீடிஷ் மருத்துவர்கள் காயமுற்ற முழங்கால் மூட்டுகளைப் பல் நோயாளிகளிடம் நன்கு பழுதுபார்த்துள்ளனர். (1994) (மரு)

cartography - படவரைவியல்: படங்களை உருவாக்கும் துறை. (தொ.நு)

caruncle - விதைமுண்டு: (உயி)

caryopsis - மணிக்கனி: உலர் வெடியாக் கனி. விதையுறையுடன் சூல்பைச் சுவர் சேர்ந்திருக்கும் நெல். (உயி)

cascade process - அருவிமுறை: பலநிலைகளில் நடைபெறும் முறை. எ-டு: யுரேனியத்தை வளமாக்கும் விரவல் முறை. (வேதி)

case hardening - உறைக்கடினமாக்கம்: எஃகின் மேற்பரப்புக் கடினத்தன்மையை உயர்த்தும் முறை. இம்முறை பல்லிணை (கியர்) கிறங்கு தண்டுகள் ஆகியவற்றின் பகுதிகள் செய்வதில் பயன்படுவது. (வேதி)

casein - கேசின்: பால்புரதம். எளிதில் செரிக்கக் கூடியது. (உயி)

cassette - நுண்பெட்டகம்: சிறியதும் நெருக்கமானதுமான காந்த நாடாக் கொள்கலன். பெட்டக நாடாப் பதிவில் நாடாவைப் பதிவுசெய்து பதிவை மீண்டும் கேட்கலாம்.

cassiterite - கேசிடெரைட்: வெள்ளீயத்தாது. வெள்ளீய (SNO2) ஆக்சைடு. (வேதி)

cassius, Purple of - கேசியஸ் ஊதா: கருஞ்சிவப்புக் கண்ணாடிகள் செய்யப் பயன்படுவது.

caste - இனப்பிரிவு: தேனீ, எறும்பு முதலிய சமூகப் பூச்சிகளில் காணப்படும் பிரிவு. எ-டு அரசி, வேலையாட்கள், ஆண்கள். (உயி)

caste iron - வார்ப்பிரும்பு: இரும்பு உலோகக் கலவை. 2-5% கரியும் மற்ற மாசுகளும் கொண்டது. கடினமானது, நொறுங்கக் கூடியது. இதிலிருந்து எஃகு கிடைப்பது. குழாய்கள். அடுப்புகள், விளையாட்டுப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது. (வேதி)

castration - காயடித்தல், விரை நீக்கல்: பிறப்புறுக்களைக் குறிப்பாக விரையை நீக்குதல். இது பொதுவாகக் கால்நடைகளுக்குச் செய்யப்படுவது. காளைமாடுகள். (உயி)

catabolism - சிதைமாற்றம்: வளர் சிதைமாற்றத்தின் சிதைவுப்பகுதி. இதில் அரிய பொருள்கள் எளிய பொருள்களாகும். உயிர் வேலை செய்ய ஆற்றல் உண்டாகும். எ-டு. உயிர்வளியேற்றம் (ஆக்சிடேஷன்). இச்செயல் திசுக்களில் நடைபெறுவது. (உயி)

catalysis - வினையூக்கம்: பா. catalyst. (வேதி)

catalyst - வினையூக்கி: தான் மாறுபடாமல் தன்னுடன் சேருகின்ற பொருளை மாறுபாடு அடையச்செய்யும் வேதிப் பொருள். இது இரு வகைப்படும். 1. கனிம வினையூக்கி: மாங்கனிஸ் ஈராக்சைடு. 2. கரிம வினையூக்கி: தைராக்சைன். வினையூக்கி உண்டாக்குஞ் செயல் வினையூக்கம். இவ்வூக்கி வேதிவினையை விரைவுபடுத்துவது. இதன் வேறு பெயர்கள் விரைவாக்கி (ஆக்சலேட்டர்), உயர்த்தி (புரோமோட்டர்). இம்மூன்றும் ஒரு பொருள் பல சொற்கள் (வேதி)

category - உயர்வரிசை: வகைப்பாட்டுப் படிநிலையில் டேக்சானின் நிலை. எ-டு. குடும்பம், இனம், சிறப்பினம். (உயி)

catenation - தனிம இணைவு: மூலக்கூறுகள் உண்டாகத் தனிமம் தன்னை இணைத்துக் கொள்ளுதலும் அவ்வாறு செய்தலுக்குரிய பண்பும் ஆகும் (வேதி)

caterpillar - கம்பளிப்புழு: பூச்சிகளின் வாழ்க்கை வரலாற்றில் முட்டையை அடுத்த இரண்டாம் நிலை.

catgut - தொய்நரம்பு: ஆட்டின் குடலிலிருந்து செய்யப்படும் கயிறு. அறுவையில் தையல் நார்களாகவும் இசைக்கருவிகளில் வயலின் இழுநார்களாகவும் பயன்படுவது. (உயி)

catharsis - எழுச்சிப்பாடு: உள மருத்துவத்தில் ஒடுங்கிய எண்ணங்களும் கருத்துகளும் வெளியாவதைக் குறிப்பது. (க.உள)

cathetometer - நீள அளவுமாணி: கண் வில்லையில் குறுக்குக் கம்பிகள் பொருத்தப்பட்ட தொலைநோக்கி அல்லது நுண்ணோக்கி.

cathode - எதிர்மின்வாய்: நேரயனிகள் கவரப்படும் முனை. பா. anode. (இய)

cathode ray - எதிர்மின் வாய்க்கதிர்: வெற்றிடக் குழாயில் மின்சாரம் செலுத்தப்படும் பொழுது, எதிர்மின்வாயிலிருந்து மின்னணுக்கள் உமிழப்படும். இதுவே எதிர்மின்வாய்க் கதிர்கள். (இய)

cathode ray oscilloscope - எதிர்மின் வாய்க்கதிர் அலைவி: எதிர்மின்வாய்க் கதிர்க்குழாய் அடிப்படையில் அமைந்து மின்குறிபாடுகளின் உருக்களைக் காட்டும் கருவி. (இய)

cathode ray tube, CRT - எதிர்மின்வாய்க் கதிர்க்குழாய்: திரையில் மின்குறிபாடுகளை ஒரு கோலமாக மாற்றும் மின்னணுக்குழாய். மின்வாய்க் கதிர் அலைவி மற்றும் தொலைக்காட்சிப் பெறுவி ஆகியவற்றின் அடிப்படை இக்குழாய். (இய)

catholyte, electrolyte - மின் பகுளி: மின்னாற் பகுபடுநீர்மம். எதிரயனிகளையும், நேரயனிகளையும் கொண்டது. இம்மின்னேற்றங்கள் கொண்ட ஓட்டத்தால் மின்சாரத்தைக் கடத்துவது. எ-டு காடி கலந்த நீரை மின்னாற் பகுக்க அது நீர்வளியாகவும், உயிர்வளியாகவும் பிரியும். உப்புக் கரைசல்களும் காடிக்கரைசல்களும் மின் பகுளிகள். (வேதி)

catio - நேரயனி: வார்ப்புரு:S cation நேர் மின்னேற்றங்கொள்ளும் அயனி. அணுக்களிலிருந்தும் மூலக்கூறுகளிலிருந்தும் மின்னணுக்களை நீக்குவதால் தோன்றுவது. மின்னாற் பகுப்பில் நேரயனிகள் எதிர்மின்வாய் நோக்கிச் செல்பவை. பா. (இய)

catkin - ஊசல் பூங்கொத்து, கதிர்ப்பூக்கொத்து: பல காம்பற்ற பூக்கள் இதிலிருக்கும். இவை வழக்கமாக ஒருபால் பூக்கள் நாயுருவி. (உயி)

cauda equina - வால் நரம்புத்திரள்: தண்டுவட நரம்புகளின் கடைசி 4 இணைகளால் உண்டாகும் நரம்பு முடிச்சு. முதுகெலும்புக்குள் அமைவது. (உயி)

caudal lobe - வால்மடல்: பாலூட்டிகளின் கல்லீரலிலுள்ள சிறு கதுப்பு. (உயி) caudate - வால்நுனி: இலையின் முனை மெலிந்து நீண்ட வாலாதல். (உயி)

caudex - அடிமரம்: 1. பனை அல்லது பெரணியின் நடுப்பகுதி. 2. சில பருவப் பயிர்களின் அடி நிலையாகப் பருத்திருத்தல். (உயி)

cauliflory - தண்டுபூக்கள் உண்டாதல்: இது முதியதும் தடித்ததும் இலையற்றதுமான கிளைகளில் உண்டாதல். எ-டு. கோகோ. (உயி)

caustic alkali - எரிகாரம்: சோடியம் அல்லது பொட்டாசியம் அய்டிராக்சைடு. (வேதி)

caustic potash - எரி பொட்டாஷ்: பொட்டாஷியம் அய்டிராக்சைடு. (வேதி)

caustic soda - எரிசோடா: சோடியம் அய்டிராக்சைடு. (வேதி)

cavitation - குழியாதல்: உயர்நேர் விரைவினால் அழுத்தங் குறைவதால் ஒடும் நீர்மத்தில் ஆவி நிறைந்த குழிகள் உண்டாதல். நீர்மத்தில் குழிகள் தோன்றுதல். (இய)

celestial equator - விண் நடுக்கோடு: விண்கோளப் பெருவட்டம். விண்கோளத்தை இது வட, தென் கோளங்களாகப் பிரிப்பது. (வானி)

celestial mechanics - விண் விசை இயல்: விண்பொருள்களுக்கிடையே உள்ள விசைகள், இயக்கங்கள் ஆகியவற்றை ஆராயுத்துறை. நியூட்டன் இயக்க விதி, ஈர்ப்பு விதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. ஏவிய பின் செயற்கை விண் பொருள்களையும் ஆராய்வது. (வானி)

celestial sphere - விண் கோளம்: முடிவிலா ஆரமுள்ள கற்பனைக் கோளம். இதில் விண்பொருள்கள் அடங்கியுள்ளன. (வானி)

celestine - ஸ்ட்ரான்ஷியம் சல்பேட்டின் கனிம வடிவம். (வேதி)

cell - உயிரணு, கண்ணறை: உயிரியின் அடிப்படை அமைப்பலகும் வேலையலகுமாகும். உயிரணுவின் மரபணுக்களில் டி.என்.ஏ, ஆர்என்ஏ என்னும் விந்தை வேதிப்பொருள்கள் உள்ளன. இவற்றில் முன்னது மரபுப் பண்பை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்வது. புரதச் சேர்க்கையைக் கட்டுப்படுத்துவது. பின்னது முன்னதிற்கு அதன் பல வேலைகளிலும் துணைபுரிவது. முன்னது இல்லையேல் பின்னதும் இல்லை. கண்ணறை என்பது மிகப் பொருத்தமான சொல். (உயி)

cell - மின்கலம்: நேர் மின்னோட்டத்தை அளிக்கும் கருவி. முதன் முதலில் அமைக்கப்பட்டது ஓல்ட்டா மின்கலம். இதில் முனைப்படுதல், உள்ளிட நிகழ்ச்சி ஆகிய இரு குறைகள் உள்ளன. இவை நீங்கிய மின்கலம் முதல் மின்கலமாகும். இது தானியல் மின்கலம், பைக்ரோமேட் மின்கலம், லெக்லாஞ்சி மின்கலம், பசை மின்கலம் என ஐந்து வகைப்படும்.

cell body, perikaryon - கண்ணறைப் பொருள்: உட்கருவுள்ள நரம்பணுவின் பகுதி. இதன் விரிவுகளே அச்சியன்களும் கிளையன்களும். பா. neuron. (உயி)

celldivision - கண்ணறைப் பிரிவு: இது முதன்மையாக இரு வகைப்படும். 1. இழைப்பிரிவு (மிட்டாசிஸ்) 2. குன்றல் பிரிவு (மீயாசிஸ்). ஏனைய இரு வகைகள் 1. இழையில் பிரிவு (ஏமிட்டாசிஸ்) 2. கட்டவிழ் உட்கருப்பிரிவு (ஃபிரீ நியூக் கிளியர் டிவிஷன்).

cell inclusions - கண்ணறைச் சேர்வுகள்: இவை கண்ணறைச் சாற்றிலுள்ள கரிம, கனிம வகைப் பொருள்கள். கரைசல்களாகவோ திண்மத் துகள்களாகவோ இருக்கும். (உயி)

cell membrane, plasma membrane, plasma lemma - கண்ணறைப் படலம், கணிமப் படலம்: கண்ணறையின் வெளிப்புற எல்லையான ஒரு வழி ஊடுருவு படலம். புரதத்ததாலும் கொழுப்பாலும் ஆனது. பொருள்கள் உள் வருவதையும் வெளிச் செல்வதையும் கட்டுப்படுத்துவது. கண்ணறைச் சுவராக்கத்தில் சிறந்த பங்கு பெறுவது. (உயி)

cell theories - கண்ணறைக் கொள்கைகள்: 1. உயிரிகளின் அமைப்பலகும், வேலையலகும் உயிரணு. 2. அனைத்து உயிரணுக்களும் முன்னரே தோன்றிய கண்ணறைகளிலிருந்தே உண்டாகின்றன. (உயி)

cell wall- கண்ணறைச் சுவர்: பா. cell. (உயி)

cellular phone - கைத் தொலைபேசி: பா. pager.

cellophane - கண்ணாடித்தாள் காடியுடன் செல்லுலோஸ் சாந்தேட்டுக் கரைசலைச் சேர்க்க, இத்தாள் கிடைக்கும். பொருள்கள் மீது சுற்றப்பயன்படுதல். (வேதி)

celluloid - செல்லுலாய்டு: சூடத்திலிருந்தும் செல்லுலோஸ் நைட்ரேட்டிலிருந்தும் செய்யப்படும் வெப்பப் பிளாஸ்டிக் பொருள். (வேதி)

cellulose - மாவியம்: பன்மச் சர்க்கரைடு எல்லாத் தாவரக் கண்ணறைச் சுவர்களின் சட்டகம். (உயி)

cement - படிகாரை: இது ஒரு கட்டுமானப் பொருள். 1824இல் ஆங்கில நாட்டைச் சார்ந்த கொத்தனார் ஜோசப் ஆஸ்பிடின் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காரை கால்சியம் சிலிகேட்டு, கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் கலவை. இதில் சிறிது ஜிப்சமும் உண்டு. இது பல வகைப்படும். (வேதி) cement, setting of - படிகாரை இறுகுதல்: பா. setting (வேதி)

Centigrade thermometer - சென்டிகிரேடு வெப்பநிலைமானி: செல்சியஸ் என்பவரால் (1701 -44) 1742-இல் அமைக்கப் பட்டது. இதில் வழக்கமாக உருகுநிலை 0° (பனி உருகுநிலை) கொதிநிலை 100° (நீரின் கொதிநிலை). பா. (இய)

centimetre gram - சென்டிமீட்டர் கிராம்: புவிஈர்ப்பு அலகு. ஒரு கிராம் எடை விசை. ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அதனை ஒரு சென்டிமீட்டர் தொலைவு நகர்த்தும் போது செய்யப்படும் வேலையின் அளவாகும். (இய)

centipede - பூரான்: ஊனுண்ணி. உதட்டுக் காலிகள் (சைலோபோடா) வகுப்பைச் சார்ந்தது.

central nervous system, CNS - மைய நரம்பு மண்டலம்: மூளை, தண்டுவடம் அவற்றோடு தொடர்புடைய நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. தூண்டலுக்கேற்ற துலங்கலை உண்டாக்குவது. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒரு முகப்படுத்திக் கட்டுப்படுத்துவது. இதன் துணை மண்டலமே தானியங்கு நரம்பு மண்டலம். இது பரிவு நரம்பு மண்டலம், துணைப் பரிவு மண்டலம் என இரு வகைப்படும்.

central processing unit, CPU - மைய முறையாக்கு அலகு: மையச் செயலகம். பா. computer. (இய)

centrarch - மையம் அமைதிசு: (புரோட்டோஸ்டில்) அச்சின் மையத்தில் முன் மரவியம் (புரோட்டோசைலம்) இருத்தல். பா. endarch, exarch, measarch. (உயி)

centre - மையம்: நரம்புத் தொகுதியின் பகுதி. எ-டு. மூச்சு மையம். (இய)

centre of curvature - வளைவு மையம். பா. mirror. (இய)

centre ofgravity - ஈர்ப்பு மையம்: ஒரு பொருளின் பொருண்மை முழுதும் குவியும் புள்ளி. காட்டாக, வட்டத்திற்கு ஈர்ப்பு மையம் அதன் மையப்புள்ளியாகும். (இய)

centrifugal force - மையவிலகு விசை: மையம் நோக்கியுள்ள முடுக்கத்தில் சுழலும் பொருள் ஒன்று தன் நிலைமத்தினால் உண்டாக்கும் தடை. இது மையநோக்கு விசைக்குச் சமமானதும் எதிரானதுமாகும். தலைக்குக் கிடைமட்டமாகச் சுற்றும் கல்லில் மையத்தை விட்டு வெளியே இழுக்கும் விசையே மையவிலக விசை. வட்ட இயக்கத்தைச் சார்ந்தது. இதனடிப்படையில் மையவிலக்கு சுழலி, வாட்டின் ஆளி ஆகிய கருவிகள் வேலை செய்பவை. பா. centrepetal force. (இய)

centriole, centrosome - மையப்புரி: உட்கருப்படலத்திற்கு வெளியே செயல் ஒடுங்கிய கண்ணறைகளில் காணப்படும் நுண்ணிய உருளை வடிவப் பொருள்.

centripetal force - மையநோக்கு விசை: வட்டப் பரிதி வழிச் செல்லும் துகள்மீது வட்ட மையத்தை நோக்கிச் செயற்படும் விசை. கயிற்றில் கட்டப்பட்ட கல் சுழற்சியில் கயிற்றில் உருவாகும் விசை மைய நோக்கு விசை. இது வட்ட இயக்கத்தைச் சார்ந்தது. பா. centifugal force. (இய)

centroid - திணிவு மையம்: ஒரே சீரான அடர்த்தியுள்ள ஒரு பொருளின் மேற்பரப்பில் ஈர்ப்பு மையம்.

centromere, kinomere, spindle attachment - மையப்படி, இயக்கப்படி, கதிர் இணைப்பு: நிறப்புரியின் பகுதி. இழைப் பிரிவிலும் குன்றல் பிரிவிலும் கதிரிழை இதில் இணைந்திருக்கும். (உயி)

centrum - நடுவகம்: ஒரு முள்எலும்பின் எடை தாங்கும் மையப்பகுதி பிடர் எலும்பிலும், பிடர் அச்சிலும் இல்லை. (உயி)

cephalothorax - தலைமார்பு: நண்டிலுள்ளது போன்று தலையும் மார்பும் இணைந்திருப்பது (உயி)

ceramic engine - வனைபொருள் எந்திரம்: புதிய தொழில் நுட்பம்.

ceramic fibre - வனைபொருள் நார்: புதிய தொழில்நுட்பம்.

ceramics - வனைபொருள்கள்: அதிக உருகுநிலையிலுள்ள கனிமங்கள், பயனுள்ளவை மட்பாண்டம். பீங்கான். (வேதி)

cercaria - முதிரிலி: முதிரா உயிரி. ஒட்டுண்ணிகளான தட்டைப்புழுக்களில் இம்முதிரா உயிரிநிலை உள்ளது. (உயி)

cerci - வாலுறுப்புகள்: பூச்சிகள், கணுக்காலிகள் ஆகியவற்றின் வயிற்றின் பின் முனையிலுள்ள ஓரிணைப் படல உறுப்புகள். (உயி)

cerebellum - சிறுமூளை: பின்மூளையின் பெரும்பகுதி இது. இரு அரைத்திரளைகளாகப் பிரிந்துள்ளது. இத்திரளைகளில் மேலும் பல பகுதிகள் உள்ளன. வேலைகள் 1. இயக்குத் தசைகளுக்கிடையே ஒத்துழைப்பை உண்டாக்கி நடத்தல், ஓடுதல் முதலிய இயக்கு வேலைகள் நடைபெற மூளைக்கு உதவுதல் 2. உடலின் நேர்த்தோற்றத்திற்கும் நிலைப்புக்கும் இதுவே காரணம். ஒ. cerebrum.

cerebral cortex, pallium - பெருமூளைப் புறணி, மூடகம்: பெருமூளையின் பகுதி விருப்பத்திற்குட்பட்ட இயக்கங்களையும் பார்வை, கேட்டல், தொடுதல் முதலிய உறுத்துணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது. பா. cerebrum. (உயி) cerebro-spinal fluid, CSF - பெருமூளைத் தண்டு வடப் பாய்மம்: கொழுநீரை அமைப்பில் ஒத்தது. மைய நரம்பு மண்டலத்தைத் தீங்கிலிருந்து காப்பாற்றுவது. (உயி)

cerebrum - பெருமூளை: இது மூளையின் சிறந்த பகுதி இட அரைத்திரளை, வட அரைத்திரளை என இரண்டாகப் பிரிந்துள்ளது. இத்திரளைகளில் பல பகுதிகள் உண்டு. வேலைகள் 1. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துகிறது. 2. செயற்கை மறிவினையைக் கட்டுப்படுத்துகிறது. 3. அறிவுக் கூர்மைக்கும் நினைவாற்றலுக்கும் காரணம். (உயி)

ceresin - வெண்மெழுகு கடினமானது. நொறுங்கக் கூடியது. தேன்மெழுகிற்கு மாற்றாக வண்ணங்களிலும் மெழுகுகளிலும் பயன்படுவது. (வேதி)

Cerium - செரியம்: Ce. கம்பியும் தகடுமாகக் கூடிய தனிமம். பல கனிம உப்புகளில் காணப்படுவது. உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது. (வேதி)

cerumen - செவிமெழுகு: காதுக் குரும்பை. புறச் செவிக்குழல் மெழுகுச் சுரப்பிகள் இதனைச் சுரப்பவை. செவிக்குள் புழுதி நுழைவதைத் தடுப்பது. (உயி)

cerussite - செருசைட்: காரீயத்தாது. (வேதி)

cervical vertebrae - கழுத்து முன் எலும்புகள்: தலையைத் தாங்குபவை. பா. Vertebral column

cervix - கழுத்து: 1. பாலூட்டிகளில் கருப்பைக்கும் பிறப்புவழிக்கும் இடையே உள்ள பகுதி. 2. மார்பையும் தலையையும் இணைப்பது. (உயி)

cgs system - செ.மீ. கி.வி. முறை: செண்டிமீட்டர், கிராம். வினாடி ஆகியவைகளை அடிப்படை அலகுகளாகக் கொண்ட முறை. தற்பொழுது நடைமுறையில் இல்லாதது. (இய)

chaeta - முள் மயிர்கள்: மண் புழுக்களில் உள்ளவை. கைட்டினாலானவை. (உயி)

chain - தொடர்: ஒரு மூலக்கூறில் இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்றுடன் மற்றொன்று பிணைப்புகள் உண்டாக்கும் பொழுது ஏற்படும் தொடர். (வேதி)

chain reaction - தொடர்வினை: யுரேனியம் 235 என்னும் கதிரியக்கத் தனிமம் தொடர்ந்து சிதைதல். இச்சிதைவுக்கு அல்லணுக்கள் குண்டுகளாகப் பயன்படுதல். இதனால் கிடைப்பது அளப்பரிய ஆற்றல். (இய)

chalaza - சூலடி விதையிலைத் தாவரச் சூலில் பரு திசுவும் (நியூசெல்யலஸ்) மேலுறைகளும் (இண்டகுமெண்ட்ஸ்) சேருமிடம். (தாவ) 2. சூல்நாண் பறவை முட்டையின் மஞ்சள் கருப்பையை நிலைநிறுத்தும் கயிறு. (வில)

chalk - சாக்கட்டி: சுண்ணாம்புக் கட்டி கால்சியம் கார்பனேட். (வேதி)

change, chemical - வேதி மாற்றம்: புதிய பொருள் உண்டாகக் கூடிய நிலைத்த மாற்றம். எ-டு. துருப்பிடித்தல்.

change, physical - இயல்பு மாற்றம்: புதிய பொருள் உண்டாகாத தற்காலிக மாற்றம். எ-டு. பனிக்கட்டி உருகி நீராதல். இம்மாற்றத்திற்குக் கலவை உட்பட்டது. (வேதி)

change of state - நிலைமாற்றம்: ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ஒரு பொருள் மாறுதல். எ-டு. பனிக்கட்டி நீராதல். (இய)

channel - செல்வழி: 1. ஒரு செய்தித் தொகுதியின் பகுதி மூலத்திலிருந்து அடையும் இடத்திற்கு இதன் வழியாகச் செய்தி செல்லும், எ.டு. சென்னைத் தொலைக் காட்சி முதல் செல்வழி, இரண்டாம் செல்வழி ஆகிய இரண்டில் இயங்குவது. சென்னையில் இருப்பவர்கள் இவ்விரு வழிகளிலும் நிகழ்ச்சிகளை எளிதில் கண்டு களிக்கலாம். 2. உட்பாட்டு வெளிப்பாட்டு வேலைகளைச் செய்யும் கணிப்பொறித் தொகுதியில் ஒரு பகுதி. 3. புல விளைவுப் படிகப் பெருக்கியில் விடும் முனைகளுக்கும் மூலத்திற்கு மிடையே உள்ள கடத்தும் வழி. (இய)

characteristic - சிறப்பியல்பு, சிறப்பு வரை: தனித்த பண்பு. (இய)

characteristic curve - சிறப்பியல்பு வளைகோடு: வானொலித் திறப்பியில் நேர்மின்வாய் ஒட்டத்தைத் தடுவாய் மின்னழுத்தம் எவ்வாறு உயர்த்துகிறது என்பதைக் காட்டும் கோடு. வேறு பெயர் பரிமாற்றச் சிறப்பியல்பு. (இய)

characteristic diagram - சிறப்பியல்புப் படம்: இருமின்வாய், படிகப் பெருக்கி ஆகியவற்றில் தோன்றும் படம். இருமின் முனைகளிலும் மின்னோட்டம் வேறுபடுவதைக் காட்டுவது. (இய)

characteristics of living things - உயிரிகளின் சிறப்பியல்புகள்: இவை பின்வருமாறு. 1. முன்கணியம் 2. அளவும் வடிவமும் 3. கட்டமைப்பு 4. உறுத்துணர்ச்சி 5. வளர்சிதை மாற்றம் 6. வளர்ச்சி 7. குறிக்கோளுடைய செயல் 8. இனப்பெருக்கம் 9. சுழல் மாற்றங்கள். இவை உயிரற்ற பொருள்களுக்கு இல்லை. (உயி)

charcoal - மரக்கரி: அடுப்புக்கரி, படிக வடிவமற்றது. மரக்கட்டை முதலிய கரிமப் பொருள்களைக் காற்றில்லாமல் எரித்துப் பெறப்படுவது. வளிகளை உறிஞ்சும் நீர்மங்களிலிருந்து மாசுகளை நீக்கவும் பயன்படுவது. (வேதி)

charge - மின்னேற்றம்: அடிப் படைத் துகள்களின் மூலப்பண்பு. நேர்மின்னேற்றம் (+), எதிர்மின்னேற்றம் (-) என இருவகைப்படும். ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றை மற்றொன்று விலக்கும். எதிர்மின்னேற்றங்கள் ஈர்க்கும். அலகு கூலூம். (இய)

charge density - மின்னேற்ற அடர்த்தி: ஒரு பருப்பொருளின் அலகுப் பருமனிலும் அலகுப் பரப்பிலும் உள்ள மின்னேற்றம். இது மூவகைப்படும். 1. பரும மின்னேற்ற அடர்த்தி: ஒரு கனமீட்டருக்கு இத்தனை கூலூம்கள் என அளக்கப்படுவது. 2. மேற்பரப்பு மின்னேற்ற அடர்த்தி: ஒரு சதுர மீட்டருக்கு இத்தனை கூலூம்கள் என அளக்கப்படுவது. 3. நீள் மின்னேற்ற அடர்த்தி: அலகு கூலூம்/மீ (இய)

Charles' law - சார்லஸ் விதி: மாறா அழுத்தத்தில், குறிப்பிட்ட பொருண்மையுள்ள வளியின் பருமன், 0° செ. வெப்ப நிலையில், ஒவ்வொரு செல்சியஸ் பாகைக்கும் அதன் வெப்பநிலை உயர்த்தப்படும்பொழுது, அதன் பருமன் மாறாப் பின்ன அளவில் பெருகுகிறது. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் வளிக்கு அப்பின்னம் 1/273. இதை ஒரு சமன்பாடாக அமைக்கலாம்.

V = V°(1+t/273)
V° - 0° செ.இல்பருமன்.
v-t° செ இல் பருமன்.

chassis - சட்டகம்: கருவி அமைப்புத் தொகுதி ஓர் உந்து வண்டியில் சக்கரம், எந்திரம் முதலியவற்றைக் கொண்ட தொகுதி. வானொலி, தொலைக் காட்சி ஆகியவற்றின் அமைப்புத் தொகுதி வானுர்தியின் இறங்கு வண்டி. துப்பாக்கி வண்டி. (தொ.நு)

cheddie - செடைட்: உயர் வெடி பொருள்களில் ஒன்று. சோடியம் அல்லது பொட்டாசியம் குளோரேட் கலந்த நைட்ரோ சேர்மங்களிலிருந்து செய்யப்படுவது. (வேதி)

chelate - இடுக்கிணைப்பு: உலோக ஒருங்கிணை அசைவு. கொடுக் கிணைப்பு என்றும் கூறலாம். (வேதி)

chemical affinity - வேதி நாட்டம்: ஒரணு மற்றொரு அணுவோடு சேரும் போக்கு. வேதிச் செயலுக்கு இன்றியமையாதது. (வேதி)

chemical bond - வேதிப் பிணைப்பு: ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களை நெருக்கிவைக்கும் விசை. ஐந்து பிணைப்புகள் வரை உருவாக்கலாம் ஒற்றைப் பிணைப்பு H + Cl H → Cl

நாற்பிணைப்பு

H
|
Cl - C - O - H
|
H
ஈலியம், நியான் ஆர்கன் ஆகிய தனிமங்களின் அணுக்கள் பிணைப்புக்கு உட்படா. (வேதி).

chemical engineering - வேதிப் பொறிஇயல்: வேதிநிலையங்களை வடிவமைத்து அவற்றைப் பேணுவதை ஆராயும்துறை. (வேதி)

chemical equation - வேதிச் சமன்பாடு: பல பொருள்களின் வேதிவினையைத் தெரிவிக்கும் குறியீட்டு விளக்கம், வேதிஇயலில் சிறப்பிடம் பெறுவது. இது இரு வகைப்படும். 1. முற்றுறாச் சமன்பாடு: (ஸ்கெலிடல் ஈக்குவேஷன்)

நீர் அய்டிரஜன் + ஆக்சிஜன் Н2O → H2↑ + O2

2. முற்றுறு சமன்பாடு: (பாலன்ஸ்டு ஈக்குவேஷன்) 2H2O → H2↑ + O2 (வேதி)

chemical formula - வேதிவாய்பாடு: ஒரு மூலக்கூறின் குறியீட்டு விளக்கம். இது மூலக்கூறின் வேதி இயைபைக் குறிக்கும். ஆகவே, இது மூலக்கூறு வாய்பாடே. எ-டு. நீர், கரி ஈராக்சைடு சமன்பாட்டிற்கு மின் இன்றியமையாதது. (வேதி)

chemical inhibitor - வேதி நிறுத்தி: வேதிவினையை நிறுத்தும் பொருள். (வேதி)

chemical kinetics - வேதிவினை இயல்: இயல்: வேதிஇயலின் பிரிவு வேதிவினைச் செயல்நுட்பம், வீதங்கள் ஆகியவை பற்றி ஆராய்வது. (வேதி)

chemical reaction - வேதி வினை: இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வினையாற்றுவதால், புதிய பொருள்கள் தோன்றுதல். இவ்வினையைச் சமன்பாடு தெரிவிக்கும். அய்டிரஜன் + ஆக்சிஜன் → நீர் Н2 + O2 → 2Н2O

chemical signs - வேதிக் குறிகள்: சேர்தல் (+), கொடுத்தல் (→), வெப்பம் (Δ). கனமுள்ளது (↓). கனமற்றது (↑). முதலியவற்றை உணர்த்தும் குறிகள். (வேதி)

chemical symbol - வேதிக் குறியீடு: தனிமங்களை உணர்த்தும் குறி. எ-டு. ஆக்சிஜன் O. அய்டிரஜன் H சமன் பாட்டிற்கு இன்றியமையாதது. (வேதி)

chemical warfare - வேதிப்போர்: போர்வினைகளில் வேதியாற்றலைப் பயன்படுத்துதல். எ-டு. குளோரின். ஆனால் குண்டுகளில், இயல்பாற்றலே பயன்படுகிறது. (வேதி)

chemiluminescence - வேதி ஒளிர்வு: வெப்பநிலையில் எவ்வகைத் தோற்ற மாறுபாடு மில்லாமல், ஒரு வேதிவினையில் உமிழப்படும் ஒளி. இதில் சிறிது வெப்பம் உடன் நிகழ்ச்சியாக இருக்கும். எ-டு. மக்னீசியத்தைக் காற்றில் எரிக்கக் கண்கூசும் ஒளி உண்டாகும். உடன் வெப்பமும் தோன்றும். (வேதி)

chemistry - வேதியியல்: தனிமம், சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்பையும் ஆராயுந்துறை. இதனை இயைபியல் எனவும் கூறலாம். தவிர, இது பொருள்களின் சேர்க்கை, அவை ஒன்றன்மீது மற்றொன்று ஆற்றும் வினை ஆகியவற்றையும் ஆராய்வது. ஒர் அடிப்படை அறிவியல். பலவகைப்படும்.

chemotaxis - வேதியமைவு இயக்கம்: வேதித் தூண்டலுக் கேற்றவாறு குறிப்பிட்ட திசையில் உயிரி நகர்தல். எ. டு பெண் அணு நோக்கித் தாவர ஆண் அணு செல்லுதல். (வேதி)

chemotaxonomy - வேதிவகைப் பாட்டியல்: வேறு பெயர் உயிர்வேதிய வகைப் பாட்டியல். வேதிப்பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் தாவரங்களை வகைப்படுத்தப் பயன்படுத்தல். (வேதி)

chemotropism - வேதிநாட்டம்: வேதித் தூண்டலுக்கேற்றவாறு உண்டாகும் துலங்கல். இதில் வேறுபட்ட வளர்ச்சியினால் உயிரியில் ஒழுங்கமைவு உண்டாதல்.

chemurgy - வேளாண் வேதி இயல்: 1. வேளாண்மைக்கு வேதிஇயலைப் பயன்படுத்துதல் 2. வேதி நோக்கங்களுக்காக வேளாண்மை நடைபெறுதல். எ-டு. தொழிற்சாலைச் சாராயம் தயாரிக்க உருளைக்கிழங்கு பயிர் செய்தல். (வேதி)

chewing - அசைபோடுதல்: விழுங்கப்பட்ட உணவு இரைப்பையிலிருந்து கவளங்களாக வாய்க்குக் கொண்டுவரப்படுகிறது. இஃது உணவு செரிப்பதற்கு இசைவான இயல்பு நிலையாகும். இச்செயல் அசை போடும் விலங்குகளில் காணப்படுவது எ-டு. பசு, ஆடு. (உயி)

chiasma - குறுக்கு: குன்றல் பிரிவின் முதல் நிலையில் காணப்படும் ஒரக நிறப்புரிகளின் இடையே உள்ள இணைப்பு. (உயி)

Chile, salt petre - சிலி வெடியுப்பு: பா. sodium nitrate. (வேதி)

China clay - சீனக்களிமண்: கேயோலின். (வேதி)

Chinese white - சீனவெள்ளை: முத்துவெள்ளை. துத்தநாக ஆக்சைடு. வண்ணக் குழைவிலும் பூசு மருந்திலும் பயன்படுவது (வேதி).

chirality - சுழித்திறன்: இடப்பக்க வடிவமாகவும் வலப்பக்க வடிவமாகவும் இருக்கும் பண்பு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று ஆடி பிம்பம் போல் தொடர்புடையவை. வேதிஇயலில் இச்சொல் ஒளி ஒரகச்சீரிகள் (ஆப்டிகல் ஐசோமர்ஸ்) இருப்பதைக் குறிக்கும். பா. isomerism, optical activity. (வேதி)

chlamydomonas - கிளமிடோமோனாஸ்: பசுங்கணிகன். தாவரத்தில் முதலில் தோன்றிய ஒரு கண்ணறையுள்ள உயிரி. கிண்ண வடிவமுள்ள பசுங்கணிகம் உள்ளதால், தன் உணவைத் தானே உருவாக்கிக் கொள்வது. கண்ணறையின் முன்முனையில் நீரில் நீந்த இரு குற்றிழைகள் இருக்கும். மற்றும் கண்ணறைக் கணிகத்தில் உட்கருவும் குமிழிகளும் இருக்கும். முதன்மையாகக் கலவியிலா இனப்பெருக்கமும் அடுத்துக் கலவி இனப் பெருக்கமும் நடைபெறும். (உயி)

chlorate - குளோரேட்: குளோரிகக் காடி உப்பு. (வேதி)

chloride - குளோரைடு: ஏலைடு உப்பின் ஒரு வகை. (வேதி)

chlorination - குளோரினாக்கல்: குளோரினை நீருடன் சேர்த்து, அதிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லுதல். பொன்னை அதன் தாதுவிலிருந்து குளோரின் கொண்டு பிரிக்கலாம். (வேதி)

chlorine - குளோரின்: பசுமஞ்சள் நிறமுள்ள வளி, மூச்சுத்திணறும் மணம். வெளுக்கவும், நோய் நுண்ண நீக்கியாகவும் பயன்படுவது. (வேதி)

chlorine dioxide - குளோரின் ஈராக்சைடு: மாவை வெளுக்கவும் நீரைத் தூய்மையாக்கவும் பயன்படுவது. (வேதி)

வார்ப்புரு:Schlorite - குளோரைட்: குளோரசக் காடி உப்பு. (வேதி)

chloroform - குளோரபாம்: CHCl3 முக்குளோரோ மீத்தேன். நிறமற்ற நீர்மம். சலவைத்தூளுடன் எத்தனால் அல்லது அசெட்டோனைச் சேர்த்து வெப்பப்படுத்தக் கிடைக்கும் மயக்க மருந்து. (வேதி)

chlorophyll - பச்சையம் தாவர உறுப்புகளிலுள்ள பசும்பொருள். ஒளிச்சேர்க்கைக்கு இன்றியமையாதது. இதனால் தாவரம் தன்னூட்ட வாழ்வியாக அமையமுடிகிறது. பச்சையமுள்ள அணு பசுங்கணிகம். (உயி)

chloroplast - பசுங்கணிகம்:தாவர உயிரணுக்களில் உள்ளது. ஒளிச் சேர்க்கைக்கு இன்றியமையாதது. (உயி)

chlorosis - (குளோரோசிஸ்) - 1. பச்சையச் சோகை: இரும்பு ஊட்டம் குறைவதால், தாவரப் பசும் பகுதிகள் வெளுக்கும். 2. பச்சை நோய்: இளம்பெண்களிடம் காணப்படும் ஒரு வகைக் குருதிச் சோகை. (உயி)

choke - மின்கட்டுப்படுத்தி: மின்மறுப்பு என்பது ஒருவகை மின்எதிர்ப்பு. குழாய் மின்விளக்குச் சட்டத்தில் ஒரு சிறிய நீள் சதுர உலோகப்பெட்டி பொருத்தப் பட்டிருக்கும்.

choking - மூச்சடைப்பு: புகை, நெடி முதலியவற்றால் மூச்சில் தடை ஏற்படுதல். (உயிர்)

cholesterol - கொலாஸ்டிரால்: C27H45OH. வார்ப்புரு:S C27H46O. கொழுப்பிலிருந்து பெறப்படுவது. வெண்ணிற மெழுகுப் பொருள். மனிதத் திசுக்களில் காணப்படுவது. பல உயிர்ப்புச் செயல்களுக்குக் காரணி. ஆனால், இது உடலில் அதிகமானால் மாரடைப்பு ஏற்படும். இதற்குரிய துணுக்கச் சொல் இதயத்தமனிக் குழாய் அடைப்பு. (கரோனரி துரோம்போசிஸ்). (உயி)

chordata - தண்டு அல்லது நாண் உடையன: உயர்வகை விலங்குகள். 7,000 வகைகள். இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுத் தண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்புவடம் ஆகிய மூன்று சிறப்புறுப்புகள் காணப்படும். நரம்புவடம் முதுகுப்புறம் அமைந்த குழாய் ஆகும். துணைப் பிரிவுகளும் உண்டு. எ-டு. ஆம்பியாக்சஸ். (உயி)

chorion - பிரிபடலம்: மூன்று கருப்படலங்களில் ஒன்று. (உயி)

choroid - விழியடிக் கரும்படலம்: கண் நடுவடுக்கு. விழிவெண் படலத்திற்கும் விழித்திரைக்கும் இடையிலுள்ளது. பா. கண். (உயி)

choroid plexus - மூளையின் அடிப்பின்னல்: மூளையிலுள்ள அதிகம் மடிந்த குழாய்ப் பகுதி. (உயி)

chromatid - நிறணியன்: கண்ணறைப் பிரிவின் தொடக்க நிலைகளில் நிறப்புரியிலிருந்து தோன்றும் இழை போன்ற பொருள். (உயி)

chromatography - நிறவரைவியல்: பொருள்களைப் பகுத்துப் பார்க்கும் முறை. பல கூட்டுப் பொருள்களைத் தேர்வு உட்கவரல் முறையில் பிரித்து, அவற்றை இனங்காணல். இது தாள் நிறவரைவியல், மென்படல நிறவரைவியல், வளி நீர்ம வரைவியல் எனப் பல வகைப்படும். (வேதி)

chromatophore - நிறத்தாங்கி: பச்சோந்தி முதலிய முதுகெலும்பிகளின் தோலில் காணப் படும் நிறமியுள்ள உயிரணு. (உயி)

chromatin - நிறமியன்: உட்கருப் புரதம். நிறப்புரியின் பகுதி. இழைவலைப் பின்னலாலானது. நல்நிறமியன், வேற்றக நிறமியன் என இருவகையுண்டு. (உயி)

chromatopsia - நிறப்பார்வை: இது ஒரு பார்வைக் குறைபாடு. நிறமற்ற பொருள்கள் நிறமுள்ள பொருள் போன்று தெரியும். நிறங்கள் நிறைவாக வெளிப்படா. (உயி)

chromic acid - குரோமிகக் காடி: மூவிணை திறனுள்ள குரோமியம். கிச்சிலி சிவப்பு நிறம் வெளுக்கவும் சாயம் ஏற்றவும் பயன்படுவது. (வேதி)

chromite - குரோமைட்: Fe.Cr2O4. குரோமியத் தாது (வேதி)

chromium - குரோமியம்: Cr. நீலமும் வெள்ளையும் கலந்த கடின உலோகம், காற்றில் சிதையாதது. தட்டுகளுக்கு முலாம் பூசவும் எஃகு செய்யவும் பயன்படுவது. (வேதி)

chromogen - நிறமாக்கி: சாதகச் சூழ்நிலையில் நிறத்தை உருவாக்க வல்ல நுண்ணுயிரி. (உயி)

chromomere - நிறப்படி: நிறப்புரியின் ஒரு பகுதி. ஒடுங்கல் பிரிவில் நிறமியன் சுருங்கும் பொழுது நன்றாகத் தெரிவது. அளவிலும் வடிவத்திலும் வேறுபடுவது. (உயி)

chromonema - நிறணியம்: இழை போன்ற பொருள். உட்கருப் பிரிவில் சில நிலைகளில் மட்டும் தெரிவது. நிறப்புரிக்கு இணையாகச் செல்வது.பா. chromomere

chromophyll - நிறவியம்: தாவர நிறப்பொருள். பா.chlorophyll (உயி)

chromoplast - நிறக்கணிகம்: பா. plastids.

chromosome - நிறப்புரி, இழைப்புரி: கால்வழியுள்ள மரபணு நிறமியனிலிருந்து தோன்றும் ஓரிணை இழை போன்ற பொருள். ஒவ்வொரு உடல் கண்ணறையிலும் இரண்டு இரண்டாகக் காணப்படுவது. உயிரி வகைகளுக்குத் தகுந்தவாறு எண்ணிக்கையில் வேறுபடுவது. 100 இணைகளுக்கு மேலுண்டு. எ-டு மனிதன் 23, டிரசோபைலா 4. (உயி)

chronograph - காலவரைவி: காலத்தைத் துல்லியமாகப் பதிவு செய்யும் கருவி. (இய)

chronometer - காலமானி: காலத்தைத் துல்லியமாக அளக்குங்கருவி. கடிகாரத்தை ஒத்தது. கப்பல்களில் பயன்படுவது. (இய)

chyle - குடற்பால்: செரித்தலின் பொழுது சிறுகுடல் உணவிலிருந்து குடற்பால் குழல்களால் இது உறிஞ்சப்படுவது.

chyme - இரைப்பைப் பாகு: இரைப்பையில் செரித்த உணவு பாகுநிலை அடைதல். இதுவும் ஓர் இயல்புநிலையே. (உயி)

cilia - குற்றிழைகள்: கசை இழைகள். புரோட்டோசோவா முதலிய உயிரிகளின் உடல் மேற்பரப்பில் காணப்படும் மயிரிழை போன்ற குறுகிய இழைகள். இயக்கத்திற்கும் உணவு உட்கொள்ளவும் பயன்படுபவை. கிளமிடோமோனாஸ், குச்சியங்கள் முதலிய கீழினத் தாவர உயிரிகளிலும் காணப்படுபவை. (உயி) ஒ. flagella.

ciliary feeding - குற்றிழை வழி உணவு கொள்ளல்: சில முதுகெலும்பிலா விலங்குகளில் குற்றிழைகள் மூலம் உணவு உட்கொள்ளப்படுதல் நடைபெறுகிறது.

cinematograph - படவீழ்த்தி ஒலி அல்லது ஒலி இல்லாத இயக்கப் படத்தைத் திரையில் வீழ்த்துங் கருவி. (இய)

cinematography - திரைப்படவியல்: திரைப்படத் தொடர்பான நுணுக்கங்களை ஆராயுந்துறை. (இய)

cineole - சினியோல்: C10 H18O. காரமணமுள்ளது. நிறமற்ற எண்ணெய் போன்ற டெர்பின் மருத்துகளிலும், நறுமணப் பொருள்களிலும் பயன்படுவது. (உயி)

cingulum - வளையம்: தண்டுக்கும் வேருக்கும் இடையிலுள்ள தாவரப்பகுதி. (உயி)

cinnabar - இங்குலிகம்: இயற்கைப் பாதரசச் சல்பைடு. ஒளிர்வான செந்நிறப் படிகம். பாதரசத்தின் முதன்மையான தாது. (வேதி)

circadian rhythm - பகற் பொழுது ஒழுங்கு: பகற் பொழுது தாளமுறை. தாவரங்களிலும் விலங்குகளிலுமுள்ள பல் வளர்சிதை மாற்றச் செயல்களான பகற்கால ஒழுங்கு. மனிதன் 40 பகற்கால ஒழுங்குகளைக் கொண்டவன். (உயி)

circinate vernation - இலைச் சுருளமைவு: இளமையாக இருக்கும்பொழுது, இதில் முழுக்கூட்டிலையும் கடிகாரச் சுருள் போன்று வளைந்திருக்கும். இலைகளை மாநிற மயிர்கள் முடியிருக்கும். எ-டு. பெரணி. (உயி)

circuit - மின்சுற்று: ஒரு மின் கலத்தின் மின்னோட்ட வழி. இது இரு வகைப்படும். 1. மூடிய சுற்று: கலத்தின் இரு முனைகளும் கம்பியால் இணைக்கப்பட்டிருக்கம். விளக்கு எரியும். 2. திறந்த சுற்று: கலத்தின் இரு முனைகளும் கம்பியால் இணைக்கப்படாமல் இருத்தல். விளக்கு எரியாமல் இருத்தல். இச்சுற்றை மூடித் திறப்பதற்கான உரிய அமைப்புகளாவன. தொடு சாவிகள், குமிழ்கள், பொத்தான்கள். ஒ. short circuit. (இய)

circular motion - வட்ட இயக்கம்: வளைவழி ஒன்றில் செல்லும் துகளின் இயக்கம். மைய நோக்குவிசை, மைய விலக்குவிசை இவ்வியக்கத்தைச் சார்ந்தவை. (இய)

circulatory system - சுழல் மண்டலம்: குருதிக் குழாய் மண்டலம், இதயமும் குருதிக் குழாய்களும் கொண்டது. குருதி மூலம் உணவுப் பொருள்கள் உடலின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவுவது. (உயி)

circumnutation - (சர்கம்நியூட்டேஷன்) சுற்றியக்கம்: தாவர வளர்ச்சிப் புள்ளியில் உண்டாகும் இயக்கம். (உயி)

cirrhosis - இறுகுநோய்: ஒர் உறுப்பின் நோய் நிலை. எ-டு. கல்லீரலுக்குரிய பொருள் நீங்கி. அதற்குப் பதில் நார்த்திசு உண்டாதல். ஆகவே, அடிவயிறு பருத்துக் காணப்படும். பா. ascites (மரு)

cirrus - பற்றுக்கம்பி: 1. நலிந்த தண்டுடைய தாவரங்களில் காணப்படுவது: பிரண்டை 2. சுருளிழை சிறிய சுருண்ட நார் (உயி) 3. சுருள் முகில்: முகில்களின் மிக உயர்ந்த வடிவம். (இய) cis - வடிவமைப்பு: வடிவியல் அமைப்பு. இதில் ஒத்த தொகுதிகள். ஒன்று மற்றொன்றுக்கருகில் இருக்கும். (இய)

cisterna - பை, இடைவெளி உயிரணுவின் கோல்கை உறுப்பின் பை. அல்லது அகக்கணிய வலைப்பின்னலின் பை. (உயி)

citrate - சிட்ரேட்: நாரத்தைக் காடி உப்பு (வேதி)

citric acid - நாரத்தைக் காடி: C6H14O.வார்ப்புரு:S C6H8O7 வெண்ணிறப் படிகக் காடி. நாரத்தைகளின் பண்புகளுக்குக் காரணம், இதன் உப்பு சிட்ரேட் (வேதி)

citrol - சிட்ரால் C10H14O. வார்ப்புரு:S C10H16O. வெளிறிய மஞ்சள் நிற நீர்மம். நாரத்தை மணம். எலுமிச்சையிலிருந்து பெறப்படுவது. நறு மண மூட்டும் பொருள். (வேதி)

cladode - இலைத்தொழில் தண்டு: தண்டின் கணுவிடை உருமாற்றம் பெறுவது. இலையாக வேலை செய்தல். அகன்றிருக்கும். ஒளிச்சேர்க்கை நடத்த வல்லது. எ-டு. சப்பாத்தி. பா. phylloclade (உயி)

claspers - பற்றிகள்: 1. சில ஆண் பூச்சிகள் வயிற்றின் பின் முனையில் காணப்படும் ஓரிணை இணையுறுப்புகள். கலவியின் பொழுது பெண் பூச்சியைப் பற்றப் பயன்படுவது. 2. குருத்தெலும்பு மீனான நாய்மீனில் இது புணர்ச்சியுறுப்பு. (உயி)

class - வகுப்பு: வகைப்பாட்டு அலகுகளில் ஒன்று. ஒத்த பல வரிசைகளைக் கொண்டது. (உயி)

classification - வகைப்பாடு: உறுப்பு முதலிய பண்புகளைக் கொண்டு உயிரிகளைப் பல தொகுதிகளாகவும் அதற்குட்பட்ட பிரிவுகளாகவும் பகுப்பதற்கு வகைப்பாடு என்று பெயர். (உயி)

claudetite - கிளாடைட்: AS4O4. வார்ப்புரு:S AS2O3. அர்சினிக ஆக்சைடின் கனிம வடிவம். (வேதி)

clavicle - காறை எலும்பு: கழுத்துப் பட்டை எலும்பு, தோள்பட்டையையும் மார்பெலும்பையும் இணைப்பது.

clay - களிமண்: பிளாஸ்டிக் தன்மை, ஈர நிலையில் ஊடுருவாமை, உலர்ந்தால் வெடித்தல் ஆகியவை பண்புகள். களிக்கனிமங்களாலானது.

clay minerals - களிமண் கனிமங்கள்: மிகச்சிறிய துகள்கள். அலுமினிய நீர்ச் சிலிகேட்டுகளாலானது. அடுக்கு அமைப்பும் படிகத் தன்மையும் கொண்டவை. முக்கிய தொகுதிகள். 1. கேயோலினைட் 2. கேலாய்சைட் 3. இலைட் 4. மாண்ட்மாரிலோனைட் 5. வெர்மாகுலைட். (வேதி)

cleaners -1. தூசித் துடைப்பிகள்: பொருள்களிலிருந்து தூசி நீக்கும் எந்திரம். 2. தூசி துடைப்பவர்.

cleaners, dry - உலர் சலவையாளர்கள்: உலர் முறையில் துணிகளைச் சலவை செய்பவர்கள். இன்று மனித முயற்சிகளைக் குறைக்கச் சலவை எந்திரங்கள் சந்தைக்கு வந்துள்ளன. (இய)

clean programming - நிறை நிகழ்நிரலாக்கல்: கணிப்பொறி சார்ந்தது. (தொ.நு)

cleansing agents - துப்புரவாக்கிகள்: சவர்க்காரம், பெட்ரோல், ஆக்சாலிகக் காடி முதலியவை. துப்புரவாக்குவதில், கறைநீக்கமும் அடங்கும். மசகை பெட்ரோல் மூலமும் எண்ணெய் வண்ணக் குழைவைக் கற்பூரத் தைலம் மூலமும், மையை ஆக்சாலிகக் காடி மூலமும் போக்கலாம். (வேதி)

clearing - தெளிவாக்கல்: நிலையான நுண்ணோக்கிப் படவில்லைகள் தயாரிப்பதில் நீர்நீக் கலுக்கும் பதிய வைத்தலுக்கும் இடையிலுள்ள நிலை. இதன் நோக்கம் நீர்நீக்கு பொருளை அகற்றி, அதனைப் பதிய வைக்கும் பொருளோடு கலக்கக் கூடிய பொருளால் மாற்றீடு செய்தலே ஆகும். இச்செயல் திசுக்களை ஒளி ஊடுருவுமாறு செய்யும், தெளிவாக்கு பொருள்களாவன, பென்சீன், சைலீன். (உயி)

cleavage - 1. பிளவு: மென்பரப்புகளை உண்டாக்க அணுத்தளங்களில் படிகத்தைப் பிளத்தல். (இய) 2. பிளவிப் பெருகல்: கருவுற்ற முட்டை இழைப் பிரிவுகளால் பிளவுறுதல். அதில் சம எண்ணிக்கை உட்கருவுள்ள சிறிய கண்ணறைகள் உண்டாகும். (உயி)

cleistogamy - மூடுதோற்றம் : தெளிவாகக் கண்ணுக்குத் தெரியாத சிறு பூக்கள் உண்டாதல். இவை திறப்பதில்லை. ஆகவே, தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல். (உயி)

climate - தட்பவெப்ப நிலை: வெப்பநிலை, ஈரநிலை முதலியவற்றைப் பொறுத்தவரை ஓரிடத்தின் அல்லது ஒரு நாட்டின் பருவநிலை. பா. weather. (இய)

climatic elements - தட்ப வெப்பநிலை மூலங்கள் இவை வெப்பம், காற்றுப்பதம், ஈரம் வடிதல், ஈரநிலை, காற்று முதலியவை ஆகும். (இய)

climatology - தட்பவெப்ப நிலை இயல்: தட்பவெப்ப நிலைகளை ஆராயுந்துறை. பா. meteorology. (இய)

cline - வடிவ வேறுபாடு: உயிர்களின் உருவ வேறுபாடு. (உயி)

clinic - மருத்துவ அகம்: தனியார் மருத்துவமனை (மரு) பா. hospital.

clinical genetics - மருத்துவ மரபணுவியல்: நோயாளியை நேரடியாக உற்றுநோக்கி, உயிரியில் மரபுரிமையை ஆராயுந்துறை. (மரு).

clinical pathology - மருத்துவ நோய்இயல்: ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர் முதலியவற்றை ஆய்ந்து, நோய்க் குறிகளின் தன்மையை அறிதல். (மரு)

clinical thermometer - மருத்துவ வெப்பநிலைமாணி: மனித உடலின் வெப்பநிலையைப் பதிவு செய்யுங் கருவி. (மரு)

citellum - சுரப்பி வளையம்: மண்புழுவின் புறத்தோல் உப்பல், சுரப்பியாலும் குழாயாலுமானது. இனப்பெருக்கத்தில் தொடர்புடையது. (உயி)

clitoris - அல்குல் அரும்பு: பெண் பாலூட்டியின் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படும் ஆண்குறி போன்ற உறுப்பு. அல்குல் பருப்பு என்றுங் கூறலாம். (உயி)

cloaca - கழிவழி: உடலுக்கு வெளியே அமைந்துள்ள பொதுக் கழிவழி. இதன் வழியாகச் சிறுநீர், கழிவு, முட்டை முதலியவை செல்லும். எ- டு. தவளை. (உயி)

clone - பால்தொகுதி: உறுப்பினப் பெருக்கம் மூலம் உண்டாகும் உயிரிகள் மரபணு நிலையில் ஒத்தமைபவை. எ-டு. உருளைக் கிழங்குகளைப் பயிர் செய்தல்.

cloning - படியாக்கம்: நகலாக்கம். (உயி)

close packing - நெருக்கமைவு: படிகத் திண்மங்களில் துகள்கள் அல்லது அணுக்கள் நெருங்கி அமைந்திருக்கும் முறை.

clotting - உறைதல்: பா. bloodcotting. (உயி)

clouds - முகில்கள்: ஒருவகையில் இவை உயர் மட்டத்தில் தோன்றும் மூடுபனியே. காற்றுவெளியில் உண்டாகும் நிகழ்ச்சிகளை விளக்குபவை. நடப்பிலிருக்கும் வானிலை நிலைமைகளை எடுத்துக் காட்டுபவை. இவை நான்கு வகைப்படும். 1. மேல்பட்ட முகில்கள்: சிரிரோ குமுலஸ். 2. இடைமட்ட முகில்கள்: ஆலிட்ரோஸ்டேடஸ். 3. கீழ்மட்ட முகில்கள்: நிம்போ ஸ்ரேடஸ். 4. செங்குத்து முகில்கள்: குமுலே நிம்பஸ். (இய)

clutch - பிடிப்பி: பா. gear.

cnidoblast - கொட்டணு: குழிக்குடலிகளின் புறப்படையில் உள்ளது. எ-டு. இழுது மீனுக்குண்டு. (உயி)

coagulation - திரளல்: கூழ்மத் துகள்கள் பெருந்திரள்களை உண்டாக்கிச் சேர்தல். (இய)

coal - நிலக்கரி: நீண்ட நெடுங்காலத்திற்கு முன் புவிக்குக் கீழ்ப் புதையுண்ட காடுகள் நாளடைவில் தம்மீது ஏற்பட்ட அழுத்தம், வெப்பம் ஆகிய காரணிகளால் நிலக்கரியாக மாறின. இது மூன்று வகைப் படும். 1. அனல்மிகு நிலக்கரி 2. புகைமிகு நிலக்கரி 3. பழுப்பு நிலக்கரி. இதைச் சிதைத்து வடிக்கப் பல பயனுள்ள பொருள்கள் கிடைக்கும். (வேதி)

coal gas - நிலக்கரி வளி: நிலக்கரியைச் சிதைத்து வடிக்கக் கிடைக்கும் எரிபொருள். (வேதி). coal tar - நிலக்கரித்தார்: நிலக்கரியைச் சிதைத்து வடிக்கக் கிடைப்பது. சாலை போடப் பயன்படுவது. (வேதி)

coaxial cable - மைய அச்சுக்கம்பி வடம்: காப்புறையால் சூழப்பட்ட மையக் கடத்தியைக் கொண்ட கம்பி வடம். இது மற்றொரு கடத்தியின் நில இணைப்பு உறையில் பொருந்தி இருக்கும். மையக் கடத்தியும், வெளிப்புறக் கடத்தியும் மைய அச்சு உடையவை. அதாவது, ஒரே அச்சு உடையவை. புறப் புலங்களை உண்டாக்காததால் அவை அதிக அதிர்வெண் குறிபாடுகளைச் செலுத்தப் பயன்படுபவை. (இய)

cobalt - கோபால்ட்: Co. வெண்ணிறமும் கடின மாறுநிலையுங் கொண்ட உலோகம். கம்பியாக்கலாம். தகடுமாக்கலாம். சிறிது காந்த ஆற்றலுமுண்டு. பல உலோகக் கலவைகளில் பயன்படுவது. தவிர மின்முலாம் பூசுவதிலும் உயர்விரைவு வெட்டுக் கருவிகளிலும் பயன்படுகிறது.

coccus - கோளியம்: கோளவடிவக் குச்சியம். கோளியங்கள் ஒற்றையாகவோ இரட்டையாகவோ தொடராகவோ இருக்கும். ஒழுங்குள்ள ஒழுங்கற்ற கொத்துகளாகவும் காணப்படும். (உயி)

coccyx - வால் எலும்பு: மனித முதுகெலும்பில் முக்கோண வடிவமுள்ள சிற்றெலும்பு. மூவககோள எலும்பிற்குக் கீழுள்ளது. (உயி) பா. vertebral column.

cochlea - காது நத்தை எலும்பு: பா. ear. (உயி)

cockroach - கரப்பான்: கணுக்காலி. (உயி)

cocoon - கூடு: பூச்சிக் கூட்டுப்புழுவிற்குப் பாதுகாப்புறை வண்ணத்துப் பூச்சி. (உயிர்)

cod - காட்: ஒருவகை உணவு மீன். இதன் ஈரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காட் கல்லீரல் எண்ணெய் ஆகும். சிறந்த மருத்துவச் சிறப்புடையது. வைட்டமின் டி பெறக் குழந்தைக்குக் கொடுக்கப்படுவது.

code - குறியம்: குறித்தொகுதி. குறிவடிவமுறை. செய்திகளைக் குறிப்பது. இச்செய்திகள் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் குறி வடிவத்தில் செல்பவை. எ-டு. இரு குறியம், எந்திரக் குறியம், மோர்ஸ் குறியம். (இய)

codon - குறியன்: குறிப்பிட்ட அமினோகாடிக்குக் குறிமை செய்யும் நியூக்ளியோடைடு மூலங்களைக் கொண்ட ஒரு தொகுதி. (உயி)

coefficient - மாறிலி, நிலை எண், கெழு: வரையறுத்த நிலைமைகளில் குறிப்பிட்ட பொருளின் வரையறுபண்பின் அளவு. எ-டு. விரிவெண், வெப்ப எண். (இய)

coelenterata - குழிக்குடலிகள்: இருபடைப்படலக் கண்ணறை விலங்குகள். 1000 வகைகள். பை போன்ற உடற்குழி இருப்பது தனிச்சிறப்பு. இதனாலேயே இதற்கு குழிக்குடலி என்று பெயர். உணர் விரலில் கொட்டும் அணுக்கள் உண்டு. விலங்குகள் வகைப்பாட்டில் உடற்குழி சிறப்பிடம் பெறுவது. ஆரச்சமச்சீர் உடையவை. (உயி)

coelom - உடற்குழி: மிக முன்னேறிய விலங்குகளின் இடைப்படையில் உண்டாகும் பாய்மம் நிரம்பிய குழி. மண்புழு, நத்தை, முட்தோலி, முதலியவற்றில் இது முதன்மையானது. (உயி)

cohesion - அணுப்பிணைவு: பருப்பொருள் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவரும் ஆற்றலே, அவற்றை ஒன்றாகப் பிணைக்கின்றன. இதற்கு அனுப்பிணைவு என்று பெயர். பாதரசம் கையில் ஒட்டாததற்கு இதுவே காரணம் ஆகும். (இய).

coinage metals - நாணய உலோகங்கள்: தனிமவரிசை அட்டவணையில் முதல் தொகுதியின் துணைத் தொகுதியைச் சார்ந்தவை செம்பு, வெள்ளி, பொன். (வேதி)

coitus - மெய்யுறுபுணர்ச்சி: பாலூட்டிகளுக்குரியது. (உயி)

coke - கல்கரி: நிலக்கரியை வெப்பப்படுத்திப் பெறலாம். இச்செயலில் அதிலிருந்து ஆவியாகக் கூடிய பொருள்கள் நீங்கும். ஊதுலையில் இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரிப்பதில் ஒடுக்கியாகப் பயன்படுதல். (வேதி)

cold blooded animals - மாறும் வெப்பநிலை விலங்குகள்: குளிர்க்குருதி விலங்குகள் உடலின் வெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மாறுவது. எ-டு. மீன்.

cold light - குளிர்ஒளி: ஒளிர் ஒளியில் அகச்சிவப்புக் கதிர்வீச்சு இல்லலாததால், வெப்ப விளைவு இராது. இந்நிலையே ஒளிர்ஒளி அல்லது தண்ணொளி. (உயி)

cold, common - பொது நீர்க்கொள்ளல்: காலநிலை வேறுபாட்டினாலும் நோய்த்தொற்றலினாலும் உண்டாவது, நோய்த்தொற்று நச்சியமாகும். அடைகாலம் மூன்று நாட்கள். தடுப்பாற்றல் ஒரு திங்கள் வரை இருக்கும். ஓய்வு தேவை. ஊட்ட உணவு உட்கொள்வது நல்லது. சல்பா மருந்துகளையும் உட்கொள்ளலாம். (உயி)

collagen - நார்ப்புரதம்: இணைப்புத் திசுவிலுள்ள நார் போன்ற புரதம். எலும்புப்பசையாக (ஜெலாட்டின்) மாறுவது. தோல், தசைநாண், எலும்பு முதலியவற்றிலுள்ள முதன்மையான புரதம். (உயி)

coleoptile - விதைக்குருத்துறை: புல் முளைக்கருவின் இளத்தண்டகத்தை மூடும் பாதுகாப்புறை. முதல் இலை வெளிப்பட்டதும் அது வெடிக்கும். (உயி) coleorhiza - விதை வேறுறை: புல்முளைக் கருவின் இளம் வேரை மூடிப்பாதுகாக்கும் உறை. (உயி)

collector - திரட்டி: படிகப் பெருக்கியின் ஒரு பகுதி. (இய)

collenchyma - உரத்திசு: உரவியம். தாவரத் திசுவில் ஒருவகை. (உயி)

colligative properties - தொகைசார் பண்புகள்: 1. ஆவி அழுத்தத்தைக் குறைத்தல் 2. கொதிநிலையை உயர்த்தல் 3. உறைநிலையைத் தாழ்த்தல் 4. ஊடுபரவழுத்தம். (வேதி)

collision - மோதல்: துகள்கள் ஒன்றை மற்றொன்று தாக்குதல். (இய)

collision density - மோதல் அடர்த்தி: ஓர் அல்லணுப் பாய்மம் பருப்பொருள் வழியாகச் செல்லும்பொழுது, ஒரலகு நேரத்தில் ஓரலகுப் பருமனில் தோன்றும் மோதல்களின் எண்ணிக்கை. (இய)

colocation – ஒத்தநிலைக் கொள்ளிடம்: ஒரு நுட்பம். புவிநிலைப்புச் சுற்றுவழியில் இடம் கிடைக்காத பொழுது இந்நுட்பம் மேற்கொள்ளப்படும. இன்சட் 2சி மற்றொரு நிலாவிற்கு நெருக்கமாகவும், ஒத்ததாகவும் நிலைகொள்ளுமாறு செய்யப்பட்ட முதல் நிலா. இதனால் இருநிலாக்களும் ஒரே பெரிய நிலா போன்று தெரியும். (வா. அறி)

colloid - கூழ்மம்: கரைசல் அல்லது தொங்கலிலுள்ள பொருள். இதன் துகள்கள் பெரியவையாக இருப்பதால், கரிமப்படலத்தின் வழியே அவை செல்லா. ஒ. gel, sol. (இய)

colloid gold - கூழ்மப்பொன்: கூழ்மத்தங்கம். (வேதி)

colon - பெருங்குடல்: குடல்பையிலிருந்து கழிகுடல் வரை விரிந்துள்ள பகுதி, ஏறுகுடல், குறுக்குக் குடல், இறங்குகுடல் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பா. alimentary canal. (உயி)

colony - 1. வாழிருப்பு: ஒரே வகைத் தனி உயிரிகள் நெருங்கி வாழும் தொகுதி. 2 கூட்டுயிரி: பல ஒரே வகை உயிரிகள் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடன் வாழ்தல். (உயி)

colorimeter - நிறமானி: நிறங்களின் செறிவைப் பகுக்குங் கருவி. (இய)

color - நிறம்: பார்வைக் கதிர்வீச்சின் அலைநீளத் தொடர்பாகக் கண் - மூளை மண்டலத்தில் உண்டாக்கப்படும் உடலியல் உணர்ச்சி. மரபு நிலை வழியில் பார்க்க பார்வை நிறமாலை ஏழு நிறங்களாலானது. வேறுபட்ட அலைநீளங்களைக் கொண்ட ஒற்றை நிறக் கதிர்வீச்சுகளுக்குக் கலப்பு நிறங்கள் என்று பெயர். கலப்பு நிறத்தோடு வெண்ணொளியைச் சேர்க்க. அது நிறைவுறா நிறமாகும். அதற்குப் பெயர் சாயல் நிறம். வழக்கமான மூன்று முதன்மை நிறங்களாவன, பச்சை, சிவப்பு, நீலம். இவற்றைக் கலந்து எவ்வகை நிறத்தையும் பெறலாம். வெள்ளொளி என்பது பார்வைக் கதிர்வீச்சுகளின் இயல்புக் கலவையாகும். சிவப்பு நிறம் ஒரு பொருளால் மறிக்கப்படுவதால் அது சிவப்பாகத் தெரிகிறது. ஒரு பொருள் எல்லா நிறங்களையும் உறிஞ்சும்பொழுது கறுப்பாகவும் வெளிவிடும் பொழுது வெள்ளை யாகவும் தெரியும். இரு நிறங்களைச் சேர்த்து வெள்ளை உணர்ச்சியை உண்டாக்குவதற்கு நிரப்பு நிறங்கள் என்று பெயர். இவற்றை உண்டாக்கப் பல இணைநிறங்கள் உள்ளன. (இய)

colour blind - நிறக்குருடு: சில நிறங்களைப் பிற நிறங்களிலிருந்து பிரித்தறிய இயலாத நிலை. குறிப்பாகச் சிவப்பு, பச்சை நிறங்களைப் பிரித்தறிய முடியாத நிலை. (உயி)

colour vision - நிறப்பார்வை: வேறுபட்ட நிறங்களைப் பிரித்தறியும் கண்ணின் திறன். விழித்திரையிலுள்ள மூவகைக் கூம்பணுக்கள் சிவப்பு, பச்சை, நீல ஒளிக்கேற்ற துலங்கலை உண்டாக்குகின்றன. பலவகை நிறக்குருடுகள் உண்டு. உண்மை நிறக்குருடு எந்நிறத்தையும் அறிய இயலாது. இவ்வாறிருப்பது அருமை. பொதுவாக, ஆண்களுக்குச் சிவப்பு, பச்சை, மாநிறம், வெளிறிய சாம்பல் நிறம் ஆகியவற்றைப் பிரித்தறிவதில் இடர் உண்டு. பா. colour blind. (இய)

columella - திசுமுகடு: 1. மாசி என்னும் பூக்காத் தாவரத்தின் நடுப்பகுதியில் காணப்படும் பகுதி செழுமையற்ற பகுதியைச் சுற்றிலும் சிதலை உண்டாக்குந் திசுவுள்ளது. 2. சுருள் சிப்பியின் மைய அச்சு. 3 முதுகெலும்பிலாக் கீழின விலங்குகளின் கேள்குழி. 4. கனி பிளவுறுதலில் சூல்இலைகள் பிரிந்த பின் மையத்தில் எஞ்சும் பகுதி. (உயி)

coma-1. ஆழ்மயக்கம் 2 குஞ்சம் 3. சூழுறை: வால்மீன் உட் கருவைச் சூழ்ந்துள்ள வளியும் புழுதியும் கொண்ட புகை முகில் 4. பிறழ்ச்சி வில்லை ஆடியின் திரிபு.

combinational chemistry - கூடுகை வேதிஇயல்: இது ஒரு துணுக்கம். மூலக்கூறுகள் வரம்பற்றுச் சேர்வதை அனுமதிப்பது. இதனோடு தொடர்புடையவை கூடுகை முறையும் கூடுகை நுணுக்கமும் ஆகும். (வேதி)

combinatorics - கூடுகைக்கணக்கு.

combustion - கனற்சி: எரிதல். உயிர்வளி ஏற்றத்தால் அல்லது அதை ஒத்த செயலினால் வெப்பம் அல்லது ஒளி உண்டாதல். இதன் அடிப் படையில் வெப்ப எந்திரங்கள் அமைக்கப்படுதல். இது இரு வகைப்படும். 1. புறக்கனற்சி எந்திரம் (எக்ஸ்டர்னல் கம்பஷ்டன் எஞ்சின்): நீராவி எந்திரம். 2. அகக்கனற்சி எந்திரம் (இன்டர்னல் கம்பஷ்டன் எஞ்சின்) டீசல் எந்திரம். (இய)

comet - வால்மீன்: நடுவிலிருந்து விலகிய சுற்று வழியில் கதிரவனை வலம் வருவது. குறுகிய கால மீன்கள், நெடுங்கால மீன்கள் என இருவகை உண்டு. ஏலி வால்மீனை யாவரும் நன்கறிவோம். இது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை கதிரவனை வலம் வருவது. 1986ல் கடைசியாகத் தோன்றியது. (வானி)

commensallism - வேற்றின இணை வாழ்வு: வேறுபட்ட வகைகளைச் சார்ந்த இரு விலங்குகள் ஒருசேர வாழ்தல். இச்செயலில் ஒன்றுக்கு நன்மை, மற்றொன்றுக்கு ஏற்போ இழப்போ இல்லை. எ-டு. துறவி நண்டின் ஒட்டில் கடலனிமோன் இணைந்து வாழ்தல். (உயி)

commissure - நரம்பிணைப்பு: இது நரம்பிழை முடிச்சாகும். மையநரம்பு மண்டலத்தின் சமச்சீருள்ள பகுதிகளை இணைப்பது.

common sait - பொது உப்பு: சோடியம் குளோரைடு. (வேதி)

communication - செய்தித் தொடர்பு: செய்திப் பரவலுக்காக் மக்களிடையே ஏற்படும் தொடர்புகள். செய்திப்பரவல் கூட்டுச் செயல்களுக்காக அமைபவை. இதழ்கள். வானொலி, தொலைக்காட்சி, செயற்கை நிலாக்கள் முதலியவை இதற்குப் பயன்படுபவை. (இய)

communication satellite - செய்தித் தொடர்பு நிலா: நாட்டளவிலும் உலக அளவிலும் செய்தித் தொடர்பு கொள்ள உதவும் நிலா. எ-டு. இத்திய இன்சட் மற்றம் இண்டல்சட்.

communication theory - செய்தித் தொடர்புக் கொள்கை: வானொலி, தொலைக்காட்சி முதலிய ஊடகங்கள் மூலம் செய்தி அனுப்புவதையும் பெறுவதையும் ஆராயும் நிலை. (இய)

community - உயிர்ச்சமுதாயம்: இயற்கையாகத் தோன்றும் உயிர்த் தொகுதி. இதில் வேறுபட்ட உயிரிகள் பொதுச் சூழ்நிலையில் வாழ்பவை. (உயி)

community gene bank - சமுதாய மரபணு வங்கி: இது சென்னை தரமணி அரசு வளாகத்திலுள்ள சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. உயிர் வேற்றுமையைப் பாதுகாக்க இது மிக இன்றியமையாதது. (உயி)

commutator - திசைமாற்றி: மின்னோட்டத் திசையை மாற்றுங் கருவி. (இய)

companion cell - தோழமை அணு: பூக்காத் தாவரங்களில் பட்டைத் திசுவில் காணப்படும் ஒரு வகைக் கண்ணறை. (உயி)

compensated pendulum - ஈடு செய்த ஊசல்: பா. pendulum. (இய)

competition - போட்டி: உணவு, நீர் முதலியவற்றிற்காக இரு உயிரிகளுக்கிடையே ஏற்படும் இடைவினை. இயற்கைத் தேர்வில் இது ஓர் இன்றியமையாக் காரணி. (உயி)

complex - 1. உளச்சிக்கல்: ஒர் உளக்குறைபாடு, உளப்பகுப்பில் நனவிலித் தோற்றம் எனக் குறிக்கப்பெறும். நனவாற்றலின் திசையையும் அமைப்பையும் உறுதி செய்வது. இச்சிக்கலை நோயாளியின் நனவிற்குக் கொண்டு வருவதே உளப்பண்டுவத்தின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும். இது தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல், ஒடிபஸ் சிக்கல் எனப்பல வகைப்படும். 2. அணைமம்: ஒருவகைக் கூட்டுப்பொருள். இதில் அயனிகள் அல்லது மூலக்கூறுகள் உலோக அணு அல்லது அயனியோடு சேர்ந்து ஈதல் பிணைப்பை உண்டாக்கும். பிணைப்புறும் வகைகளுக்கு ஈந்திகள் (லிகண்ட்ஸ்) என்று பெயர். பா. chelate. (வேதி) 3. கலவை: மருந்துக் கலவை. 4. தொகுதி: வைட்டமின் தொகுதி. (உயி)

complex number - சிக்கல் எண்: கற்பனை எண்ணோடு சேர்க்கப் படும் மெய்யெண். எ-டு. 5 + √-1, 3.5 x √-7 (கண)

component, constituent - இயைபுறுப்பு: பகுதிப் பொருள். ஒரு கலவையிலுள்ள தனிமவேதிப் பொருள்களில் ஒன்று. இக்கலவையில் வேதிவினை நிகழாது. எ-டு. நீர் பனிக்கட்டி சேர்ந்த கலவை ஓர் இயைபுறுப்பு கொண்டது. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்த கலவை இரு இயைபுறுப்புகளைச் கொண்டது. (வேதி)

compost - தொழுஉரம்: குச்சிய வினையினால் தாவரப் பொருள் சிதைதல். இதனால் செழிப்பான மண் தாவரத்திற்குக் கிடைக்கும். (உயி)

compound - சேர்மம்: கூட்டுப் பொருள். இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்த ஒருபடித்தான கலவை. இதன் பகுதிப் பொருள்களைப் பொதுவான இயற்பியல் முறைகளால் பிரிக்க இயலாது. இது வேதிமாற்றத்திற்குட்பட்டது. எ-டு. நீர், கரி ஈராக்சைடு. ஒ. கலவை. (வேதி)

compound eye - கூட்டுக்கண்: பூச்சிகளின் கண்கள் பலபார்வை அலகுகளாலானவை. ஒவ்வொரு அலகும் குவிந்து அல்லது அரைக்கோள நிலையில் இருப்பது எப்பொழுதும் புதைந்திருப்பது. எ-டு. நண்டு. (உயி)

compound lens - கூட்டு வில்லை: இரண்டிற்கு மேற்பட்ட குவி வில்லைகள் சேர்ந்திருப்பது. ஒன்று பெரிதான பிம்பத்தை உண்டாக்குவது. மற்றொன்று முதலில் தோன்றிய பிம்பத்தைப் பெரிதாக்குவது. எ-டு. தொலைநோக்கி, துண்ணோக்கி. (உயி)

compounder - மருந்து கலப்பாளர்: மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்துகளை உரிய முறையில் கலந்து கொடுப்பவர். ஒ. pharmacist. (மரு)

compression - துகள்நெருக்கம்: ஒலிஅலையில் குறிப்பிட்ட பகுதிகளில் இம்மிகள் மிக நெருக்கமாகவுள்ள இடத்திற்குத் துகள்நெருக்கம் என்று பெயர். (இய)

Compton effect - காம்ப்டன் விளைவு: தடையில்லா மின்னணுக்களால் எக்ஸ் கதிர்கள் அல்லது காமா கதிர் ஒளியன்கள் சிதறும்பொழுது, அவற்றின் ஆற்றலில் ஏற்படும் குறைவு அல்லது ஒடுக்கம்.

computer - கணிப்பொறி: கணினி. இது ஒரு மின்னணுக் கருவியமைப்பு. கட்டளைக் கேற்பச் செய்திகளை முறையாக்குவது. இதற்கு நிகழ்நிரல் (புரோகிராம்) என்று பெயர். பொதுவாக இது நுண்கணிப்பொறி, பெருங்கணிப்பொறி என இரு வகைப்படும். ஏனைய வகைகள். 1. எண்ணிலக்கக் கணிப்பொறி 2. ஒப்புமைக் கணிப்பொறி 3. கலப்பினக் கணிப்பொறி. இவற்றில் நடைமுறையில் நன்கு செயல்படுவது எண்ணிலக்கக் கணிப்பொறியே. இதில் உட்பாடு (இன்புட்) எண்களாகவும் எழுத்துக்களாகவும் ஈரெண்குறியீடாகக் குறிக்கப்பெறும் (0,1)

ஒரு கணிப்பொறியின் மூன்று முக்கியப் பகுதிகளாவன: 1. உட்பாட்டு வெளிப்பாட்டுக் கருவிகள். 2. நினைவகம். 3. மையச்செயல்முறையாக்கி அல்லது மையச் செயலகம்.

கணிப்பொறியில் கருவியம் (ஹார்டுவேர்) என்பது கருவித்தொகுதிகள் அடங்கியது. மென்னியம் (சாப்ட்வேர்) என்பது நிகழ்நிரல்களையும் தகவல்களையும் கொண்டது. விரைவு, நுண்மை, நம்புமை, மாற்றுதல் ஆகியவை இதன் சீரிய சிறப்பியல்புகள். (இய)

computer business - கணிப்பொறித் தொழில்.

computer communication - கணிப்பொறிச் செய்தித் தொடர்பு.

computer education - கணிப்பொறிக் கல்வி.

computer memory - கணிப்பொறி நினைவகம்.

concave lens - குழிவில்லை: ஒரங்களில் தடித்தும் நடுவில் மெலிந்தும் இருக்கும் வில்லையின் இரு வகைகளுள் ஒன்று. பொதுவாகக் குவிவில்லைத் தொடர்பாகப் பயன்படும் கலைச்சொற்கள்.

1. குவியத் தொலைவு: வில்லையின் மையப்புள்ளிக்கும் முக்கிய குவியத்திற்கும் இடையிலுள்ள தொலைவு. 2. முக்கிய அச்சு (பிரின்சிபல் ஆக்சிஸ்): வில்லையின் வளைவு மையங்களைச் சேர்க்கும் நேர்க்கோடு.

3. முக்கிய குவியம் (பிரின்சிபல் போகஸ்): முக்கிய அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள் வில்லையில்பட்டு, விலகலடைந்து மறுபக்கத்தில் அவை குவியும் புள்ளி.

4. ஒளிமையம் (ஆப்டிக் சென்டர்): முக்கிய அச்சும் வில்லையின் அச்சும் சேருமிடம். குழிவில்லையில் எப்பொழுதும் மாயபிம்பம் உண்டாகும். இது தொலைநோக்கியிலும் முக்குக்கண்ணாடியிலும் பயன்படுவது. (இய)

concave mirror - குழியாடி: கோள ஆடியின் ஒருவகை. மறிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இதனோடு தொடர்புடைய கலைச்சொற்களாவன: 1. வளைவு மையம் (சென்டர் ஆஃப் கர்வேச்சர்): ஆடியின் கோளத்தின் மையம். 2. குவியத் தொலைவு (போகஸ் லெங்த்): ஆடிமையத்திற்கும் முக்கிய குவியத்திற்கும் இடையிலுள்ள தொலைவு. இது வளைவு ஆரத்தில் பாதி. 3. ஆடிமையம் (போல் ஆஃப் மிரர்): கோள ஆடியின் மறிக்கும் பரப்பின் மையம். 4. முக்கிய குவியம் (பிரின்சிபல் போகஸ்): முக்கிய அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள் ஆடியில் பட்டு மறிக்கப்பட்டு, அவை எல்லாம் குவியும் புள்ளி. 5. முக்கிய அச்சு (பிரின்சிபல் ஆக்சிஸ்): ஆடிமையத்தையும் வளைவு மையத்தையும் சேர்க்கும் நேர்க்கோடு. 6. வளைவு ஆரம் (ரேடியஸ் ஆஃப்கர்வேச்சர்): வளைவு மையத்திற்கும் ஆடிமையத்திற்கும் இடையிலுள்ள தொலைவு. (இய)

concentrated - அடர்மிகு: அடர் கந்தகக் காடி, நீர் சேராதது. ஒ. dilute. (வேதி)

concentration - அடர்ப்பித்தல்: செறிவு மிகுத்தல். துத்தநாகத்தை அதன் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் முறைகளுள் ஒன்று. நன்கு பொடி செய்த துத்தநாகத் தாது. எண்ணெய் கலந்த நீரில் சேர்க்கப்பட்டு நீரின் வழியாகக் காற்று செலுத்தப் படுகிறது. மண் துகள்கள் நீரில் நனைந்து அடியில் தங்குகின்றன. தாதுக்கள் எண்ணெய் சேர்ந்த நீர் நுரையுடன் கலந்து, மேற்பரப்பில் மிதக்கின்றன. பின்னர், இவை தனித்து வழித்தெடுக்கப்படு கின்றன. இவ்வாறு மண் போன்ற பொருள்களை நீக்கித் தாதுவைச் செறிவு படுத்தும் முறைக்கு நுரைமதிப்பு முறை (பிராத் புளோட்டேஷன் மெத்தேடு) என்று பெயர். 2. அடர்வு: செறிவு ஒரு கரைசலின் ஓரலகு பருமனின் பொருள் அளவு. அலகு மோல். (வேதி) concentric - பொதுமைய: ஒ. eccentric.

condensation - குறுக்கம்: வளியை அல்லது ஆவியைக் குளிர்வித்து நீர்மமாக அல்லது திண்மமாக மாற்றுதல். (வேதி)

condensation reaction - குறுக்க வினை: இதில் இரு முலக்கூறுகள் சேர்ந்து ஒரு மூலக்கூறு வழக்கமாக நீர் - நீங்குதல். இதனைக் கூட்டு நீங்கல்வினை எனலாம். இவ்வினை ஆல்டிகைடுகளுக்கும் கீட்டோன்களுக்கு முரியது. கூட்டுவினையைச் சேர்ப்புவினை என்றுங் கூறலாம் (வேதி)

condenser, capacitor - மின்னேற்பி, மின்தேக்கி: மின்னாற்றலைச் சேர்த்து வைப்பது. இரு நெருக்கமான உலோகத் தகடுகளுக்கிடையே மின்கடத்தாப் பொருள்கள் இதில் இருக்கும். மெழுகு தடவிய தாள், காற்று முதலியவை மின் கடத்தாப் பொருள்கள். பெஞ்சமின் பிராங்கிளின் அமைத்த லேடன்ஜாடி ஒரு வகை மின்னேற்பியே. பொதுவாக இது இருவகைப்படும். 1. நிலை மின்னேற்பி 2. மாறுமின்னேற்பி.

condiment - சுவையூட்டி: உணவுக்குச் சுவையும் மணமும் சேர்க்கப் பயன்படும் பொருள். எ-டு. உப்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய். (உயி)

conditioning - கட்டுப்படுத்துதல்: இயற்கைத் தொடர்பற்ற தூண்டலுடன் ஒரு துலங்கலைப் பொருந்துமாறு செய்யும் செயல் முறை. இதனை நிறுவியவர் பாவ்லவ். கற்றல் வகைகளுள் ஒன்று.

conduction - கடத்தல்: திண்பொருள்வழியே வெப்பமும் மின்சாரமும் செல்லுதல். இவை இரண்டும் வெப்பக்கடத்தல் மின்கடத்தல் எனப்படும். (இய)

conductivity - கடத்தும் திறன்: வெப்பங் கடத்தும் திறன். மின் கடத்தும் திறன். (இய)

conductor - 1. கடத்தி: வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தும் பொருள். கடத்தல் அடிப்படையில் இது அரிதில் கடத்தி, எளிதில் கடத்தி, கடத்தாப் பொருள் என மூன்று வகைப்படும். 2. நடத்துநர்.

conduplicate - நீள்சம மடிப்பு: நடுநரம்பு நெடுக இலை மடிந்திருத்தல்: பூவரசு, கொய்யா. (உயி)

condyle - எலும்புமுண்டு: குமிழ்வடிவ வட்ட எலும்பு. அடுத்த எலும்பின் குழியில் பொருந்தி மூட்டை உண்டாக்குவது. பா. (உயி)

Condy's fluid - காண்டியின் பாய்மம்: கால்சியம் பர்மாங்கனேட், பொட்டாசியம் பர்மாங்கனேட் ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை. புரையத்தடுப்பி (வேதி)

cone - கூம்பு: 1. விழித்திரையில் காணப்படும் ஒளியுணர் அணுக் களில் ஒருவகை. 2. சில பெரணிகள், உறையில் விதையில்லாத் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு. 3. கலவைக்கனி. (உயி)

configuration - உருவமைவு: 1. ஓர் அணுவின் உட்கருவைச் சுற்றி மின்னணுக்கள் அமைந்திருக்கும் முறை. உருவ அமைவுகள் பல குறியீடுகளால் குறிக்கப்படுபவை. 2. ஒரு மூலக்கூறில் அணுக்கள் அணுத்தொகுதிகள் அமைந்திருப்பதையும் இச்சொல் குறிக்கும். (வேதி)

conformation - அமைப்பாக்கம்: ஒற்றைப் பிணைப்புகளைச் சுற்றி ஒரு மூலக்கூறின் அணுக்கள் அல்லது அணுத்தொகுதிகள் இயல்பாகச் சுழல்வதால் ஏற்படும் அம்மூலக்கூறின் குறிப்பிட்ட வடிவமே அமைப்பாக்கம் ஆகும். இதை உண்டாக்குவது அமைப்பாக்கி (கன்பார்மர்) எ-டு. பூட்டேனில் இவ்வமைவு காணப்படுகிறது. (வேதி)

congenital - பிறவிநிலை: பிறப்பிலிருந்து இருக்கும் ஒரு நிலையைக் குறிப்பிடுவது.

conjugate - பரிமாற்றம்.

conjugate axes - பரிமாற்ற அச்சுகள்.

conjugate foci - பரிமாற்றக் குவியத் தொலைவுகள்.

conjugation - புணர்ச்சி, இணைவு: இரு உயிரணுக்கள் தற்காலிகமாக இணையும் செயல். கீழின உயிர்களில் நடைபெறுவது. இதில் இரு உயிரணுக்களின் பொருள்கள் பரிமாற்றம் பெறுதல். எ-டு. ஸ்பைரோகைரா. (உயி)

connection in parallel and series - பக்க அடுக்கு தொடரடுக்கு இணைப்பு: 1. பக்க அடுக்கு: இதில் எதிர்மின்வாய்கள் எல்லாம் ஒன்றாகவும் நேர்மின்வாய்கள் எல்லாம் ஒன்றாகவும் இணைக்கப்படும். வீட்டு மின்விளக்குகள் இவ்விணைப்பில் உள்ளன. 2. தொடரடுக்கு: இதில் ஒரு மின்கலத்தின் நேர்மின்வாய் அடுத்த மின்கலத்தின் எதிர்மின்வாயுடன் இணைக்கப்பட்டிருக்கும். அலங்கார விளக்குகளிலும் துருவு விளக்குகளிலும் பயன்படுவது. (இய)

connective - இணைப்பி: உடலில் ஒரே பகுதியிலுள்ள இரு நரம்பு முடிச்சுகளையும் நரம்பிழைத்திரள்களையும் இணைப்பது. பா. commissure. (உயி)

connective tissue - இணைப்புத்திசு: தாங்குதல், பாதுகாப்பு, பழுது பார்த்தல் முதலிய வேலைகளைச் செய்வது. தோலுக்குக் கீழுள்ளது. மற்றும் தமனிச் சுவர்கள், பந்தகங்கள் முதலியவற்றிலும் உள்ளது. (உயி)

conservation, law of - ஆற்றல் மாறா விதி: ஆற்றல் அழியா விதி. ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ இயலாது. ஒருவகை ஆற்றல் மறைவின்றிச் சிதையுமாயின் பிறிதொருவகையில் அது வெளித்தோன்றும். (இய)

constellations - விண்மீன் தொகுதிகள்: விண்மீன் கூட்டம் கூட்டமாக இருப்பதற்கு விண்மீன் தொகுதிகள் என்று பெயர். எ-டு. ஆடு, நண்டு முதலிய விண்மீன் தொகுதிகள். சோதிடத்தில் இவற்றை ராசிகள் என்பர். (வானி)

constipation - மலச்சிக்கல்: செரிக்கப்படாத உணவுப் பொருள் கழிகுடலில் இறுகிக் குறிப்பிட்ட காலத்தில் (48 மணி நேரத்திற்குள்) கழிவாக வெளியேறாத நிலை.

consumer electronics - நுகர்வோர் மின்னணுக் கருவிகள்: நுகர்வோர்க்குரிய வீட்டு மின்னணுக் கருவியமைப்புகள் வானொலி, தொலைக்காட்சி, வீடியோ முதலியவை. பா. electronics. (இய)

consumers - நுகரிகள்: தாவரங்களை உண்ணும் விலங்குகள். இவை இரு வகைப்படும். 1. முதல்நிலை (பிரைமரி) நுகரிகள்: மான், எருமை. 2. இரண்டாம் நிலை (செகண்டரி) நுகரிகள்: இவை இரையாக்கிகள். பாம்பு, சிங்கம். (உயி)

contact process - தொடுமுறை: கந்தகக் காடி தயாரிக்கும் தொழிற்சாலை முறைகளில் ஒன்று. (வேதி)

continent - (காண்டினெண்ட்) கண்டம்: கடல் தரைக்கு மேல் எழும் பெரிய நிலத்தொகுதி. கண்டங்கள் ஏழு - ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா. (பு.அறி)

continental drift - கண்ட நகர்ச்சி: ஒரு தனித் தொகுதியாகத் தோன்றிய புவிக் கண்டங்கள் ஒன்றுக்கொன்று சார்பாக நகர்ந்து வருகின்றன என்னுங் கொள்கை 1858இல் ஏ. சிண்டர் என்பவரால் உருவாக்கப்பட்டு 1912இல் ஆல்பிரட் வேக்னர் என்பவரால் விரிவாக்கப்பட்டது. (பு.அறி)

continuum - தொடரியம்: உண்மைக் கோடு (கண). உயிர்த் தொகையின் கோலம். (உயி)

contour - சம உயரக்கோடு: ஒரு படத்தால் வரையப்படும் கோடு. ஒரு மட்டத்திற்குக் கீழோ மேலோ சம உயரமுள்ள புள்ளிகளைச் சேர்க்கும் கோடு. நில மேற்பரப்பின் தோற்றத்தைக் காட்டுகிறது. (பு.அறி)

contour feather - உடல் இறகு: பறவையின் உடலுக்கு இது உருவத்தை அளிப்பது. உடல் கதகதப்பிற்கும் பறத்தலுக்கும் காரணம். இதனை உருவ இறகு என்றுங் கூறலாம்.

contractile root - சுருங்குவேர்: சிறப்பு வேர். கிழங்குள்ள தாவரங்களிலுள்ளது. (உயி) contractile vacuole - சுருங்கு குமிழி: பலமுன் தோன்றிகளில் காணப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட படல எல்லையுள்ள குழிகள். ஊடுபரவழுத்தத்தைச் சீராக்குபவை, எ-டு. அமீபா. (உயி)

control grid - கட்டுப்பாட்டுத்தடுவாய்: ஒரு எதிர்மின்வாய்க்கதிர்க் குழாயில் நேர்மின்வாய்க்கும் எதிர்மின்வாய்க்கு மிடையே வைக்கப்படும் கம்பிவலை மின்வாய். ஒரு வாயிலிருந்து மற்றொரு வாய்க்கு மின்னணுக்கள் செல்வதை இது கட்டுப்படுத்துவது. (இய)

convection - வெப்பச்சுழற்சி: வெப்பச் சலனம் வெப்பம் பரவும் முறைகளில் ஒன்று. இது பரவ ஊடகம் தேவை. வெற்றிடத்தில் பரவாது. (இய)

convergence - குவிதல்: ஒத்த குழ்நிலையில் வாழ்வதால், தொடர்புடைய வகைகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமை.(உயி)

convergent evolution, convergence - குவி உயிர்மலர்ச்சி: ஒத்த சூழ்நிலைகளில் வாழ்வதால் உறவிலா உயிரிகளுக்கிடையே ஒத்த உறுப்புகள் உண்டாதல். எ-டு. பூச்சிகள், முதுகெலும்பிகள் ஆகியவற்றின் சிறகுகள். பா. parallel evolution. (உயி)

converter - மின்மாற்றி: இரு திசை மின்னோட்டத்தை ஒரு திசை மின்னோட்டமாக மாற்றுங் கருவியமைப்பு. (இய)

convex lens - குவிவில்லை: இது நடுவில் தடித்தும் ஒரங்களில் மெலிந்தும் இருக்கும். ஒரு நிலையில் மட்டும் மாயபிம்பம் விழும். ஏனைய ஐந்து நிலைகளில் உண்மை பிம்பமே உண்டாகும். இது நுண்ணோக்கி, தொலைநோக்கி, திரைப்பட வீழ்த்தி, முக்குக் கண்ணாடி முதலியவற்றில் பயன்படுவது. (இய)

convex mirror - குவியாடி: இதில் மறிக்கும் பரப்பு குவிந்திருக்கும். எப்பொழுதும் மாய பிம்பம் விழும். பேருந்தில் பின்வரும் பிம்பங்களைக் காட்ட ஒட்டுநருக்கு முன் இருப்பது. (இய)

copper - செம்பு: Cu. தாமிரம். சிவந்த மாநிற உலோகம். கம்பியாக்கலாம். தகடாக்கலாம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்துவது. பித்தளை, வெண்கலம், வெடிகுழல் உலோகம் முதலிய உலோகக் கலவைகள் செய்யவும் மின்கம்பிகள் அணிகலன்கள் செய்யவும் பயன்படுவது. இதன் சல்பேட் பூச்சிக்கொல்லி. இதன் அய்டிராக்சைடு சுவைட்சர் வினையாக்கி செய்யப் பயன்படுவது. (வேதி)

copulation - புணர்ச்சி: இது பால்புணர்ச்சி. இதில் ஆண் பெண் விலங்குகள் இரண்டும் தற்காலிகமாகச் சேர்ந்து ஆணிலிருந்து பெண்ணிற்கு விந்து செல்லும். இஃது உயர்ந்த விலங்குகளில் ஒரே மாதிரி நடைபெறும் அடிப்படை இனப் பெருக்கச் செயல். (உயி)

corals - பவழ உயிரிகள்: சிறிய கடல் விலங்குகள். கடல் அனிமோனோடு தொடர்புடையவை. சுண்ண ஊட்டத்தாலானது கூடு. மையத் தரைக்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் காணப்படுபவை. குழிக்குடலிகள் வகுப்பைச் சார்ந்தவை. இவை பவழப் பாறைகளை உண்டாக்குபவை. (உயி)

cordate - இதய வடிவ இலை: காம்புக்கருகில் இலையின் அடி இதில் அகன்றும் மேல் குறுகியும் இருக்கும் பூவரசு. (உயி)

cordite - கார்டைட்: நைட்ரோ கிளிசரின், செல்லுலோஸ் நைட்ரேட் ஆகிய இரண்டுஞ் சேர்ந்த வெடிகலவை, மென்மையூட்டிகளும் நிலைப்படுத்திகளும் சேர்க்கப்பட்டிருக்கும் துப்பாக்கி வெடிமருந்து. (வேதி)

core - உள்ளகம்: உட்பகுதி, மின் மாற்றிகளிலுள்ளது. (இய)

cork - தக்கை: அடுக்குத் திசுவிற்கு வெளியே ஆரமுறையில் கண்ணறைகள் அமைந்து உண்டாகும் தாவரப்பாதுகாப்புறை. பா. bark phellem. (உயி)

cork cambium - தக்கை அடுக்கியம்: தக்கை அடுக்குத் திசு. இரண்டாம் நிலை வளர்ச்சிக்குப் பின் ஏற்படுவது. (உயி)

corm - குமிழ்க்கிழங்கு: கந்தம். உணவுச் சேமிப்பும் இனப் பெருக்கமும் வேலைகள், எ-டு. கருணைக் கிழங்கு. (உயி)

cornea - விழி வெண்படலம்: விழிவெண்படல முன்பகுதி. ஒளியை உள்விடுவது. (உயி).

corola - அல்லிவட்டம்: பூவின் இரண்டாமடுக்கு இதில் அல்லிகள் நிறமுள்ளதாக இருக்கும்.இவ்வட்டம் தன் உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பளிப்பது. நிறங்களால் பூச்சிகளைக் கவர்வது. பச்சையத்தினால் ஒளிச் சேர்க்கை நடத்துவது. இதன் முக்கிய மூன்று வகைகள்: 1. இயல்பானவை 2. ஒழுங்குள்ளவை 3. ஒழுங்கற்றவை. இம்மூன்றும் மேலும் பலவகைப்படும்.

corona - முடிவட்டம்: 1. விலங்குகளில் உணர்விரல் கொண்ட வளையம் 2.ரோஜா போன்ற பூவின் கொம்பு இதழ் இலைகள் செதில்களாலானவை. (உயி) 3. திங்கள் அல்லது கதிரவனைச் சூழ்ந்துள்ள வளைவட்டம். 4. கதிரவன் வெளியின் வெளிப்புறப் பகுதி. 5. ஒரு கடத்தியைச் சூழ்ந்துள்ள காற்றின் ஒளிவிடுபகுதி. 6. வளர்கதிர்களின் ஒளிப்புள்ளி.(இய)

coronary vessels - இதயக் குருதிக் குழாய்கள்: இதயத் தமனிகளும் (2) சிரைகளும் (2) இதயத் தசைகளுக்குக் குருதி வழங்குபவை. (உயி) corpus allatum - மூளை பின் சுரப்பி: பூச்சித் தலையில் மூளைக்குப் பின்னுள்ள நாளமிலாச் சுரப்பி. இது சுரக்கும் வளர்துாண்டி கூட்டுப் புழு தோலுரிக்க உதவுகிறது. (உயி)

corpus callosum - குறுக்கிணைப்பி: பாலூட்டிகளில் குறுக்கு நரம்புகளின் வழிகள். இவை இரு பெருமூளை அரைத்திரள்களையும் இணைப்பவை. (உயி)

corpuscular theory - துகள் கொள்கை: துகள்களாலானது. ஒளி என்னுங் கொள்கை. அலைகளாலானது. ஒளி என்பதும் மற்றொரு கொள்கை. முன்னது. நியூட்டன் வழி வந்தது. பின்னது தாமஸ் யெங் வழி உருவானது. (இய)

corpus luteum - மஞ்சள் திரள்: முட்டை வெளியானதும் பாலூட்டியின் சூல்பையில் கிராபியன் நுண்ணறைக் குழியில் தோன்றும் மஞ்சள் நிறப் பொருள். புராஜெஸ்ட்ரான் என்னும் தூண்டியைச் சுரப்பது. (உயி)

corrosion - உலோக அரிமானம்: உலோகம் அல்லது உலோகக் கலவை சுற்றுப்புறத்துடன் வேதிவினையுற்று அழிதல். உலோக மேற்பரப்பில் நிகழ்வது.

கட்டுப்படுத்தல்: 1. தார்பூசுதல் 2. மின்னாற் படிய வைத்தல் 3. எனாமல் பூசுதல் 4. நாகமுலாம் பூசுதல் 5. வண்ணம்பூசுதல். ஒ. erosion. (வேதி)

cortex - புற அடுக்கு: 1. தாவரத்திசு, 2. சிறுநீரகம், பெருமூளை ஆகியவற்றின் புறப்பகுதி. (உயி)

corticosteroid - கார்டிகோஸ்டெராய்டு: அடரினலின் சுரப்பியின் புறணிச் சுரப்பிகளில் ஒன்று. (உயி)

cortisol - கார்ட்டிசால்: அய்டிரோ கார்ட்டிகோன். அட்ரினல் சுரப்பு. கொழுப்புப் படிவதை ஒழுங்கு படுத்துவது. (உயிர்)

cortisone - கார்டிசான்: அய்டிரோ கார்ட்டிகான், அட்ரினல் கரப்பு. கொழுப்புப் படிவதை ஒழுங்கு படுத்துவது. (உயி)

corrundum - குருந்தக்கல்: இயற்கையில் கிடைக்கும் கடினமானதும் சிலிகான் இல்லாதததுமான தேய்ப்புப் பொருள். (வேதி)

corymb - தட்டைக்கொத்து: நுனிவளர் பூக்கொத்தின் ஒரு வகை நுண்பூக்காம்புகள் வேறுபட்ட நீளத்தில் இருப்பதால், எல்லாப்பூக்களும் ஒரே மட்டத்தில் இருக்கும். எ-டு. மயில் கொன்றை. (உயி)

cosmic rays - விண்கதிர்கள்: விண்வெளியிலிருந்து தோன்றும் கதிர்கள். குறிப்பிடத்தக்க மாற்றங்களை உடலில் உண்டாக்குபவை. இவற்றைச் செயற்கைக் கோள்கள் நன்கு ஆராய்ந்தள்ளன. இவை வானவெளிப்பயணத்திற்குத் தடையாக இருப்பவை. முழுமை யாக ஆராயப்படாத கதிர்களாகவே இன்னும் உள்ளன. (இய)

cosmoid scale - காஸ்மாய்டு செதில்: மீன்தோலிலுள்ள செதில். (உயி)

cosmology - விண்ணியல்: விண்ணகத் தோற்றம், மலர்ச்சி, இயல்பு ஆகியவை பற்றி ஆராயுந் துறை. (வானி)

cotyledon - வித்திலை, விதையிலை: விதைத்தாவர முளைக்கருவின் முதல் இலை. முளைக்கும் விதைக்கு உணவளிப்பது. மாவிதையில் இரு விதை இலைகளும் நெல்லில் ஒரு விதைஇலையும் உள்ளன. (உயி)

coughing - இருமல்: நுரையீரல், நுரையீரல் உறை, குரல்வளை ஆகியவற்றில் ஏற்படும் அரிப்பினால் இது உண்டாவது. இதில் ஆழ்ந்த உள்மூச்சும் வலுவான வெளிமூச்சும் இருக்கும். குரல்வளை உடனடியாக மூடப்பட்டுக் காற்று எக்களித்து வெளிச் செல்வதால் ஒலி உண்டாகிறது. இயல்பான இருமல் வேறு. நோய் இருமல் வேறு. (உயி)

coulomb - கூலூம்: C. அலகுச்சொல். மின்னேற்றத்தின் எஸ்.ஐ அலகு. ஒரு வினாடியில் ஒர் ஆம்பியர் மின்னோட்டத்தால் மாற்றப்படும் மின்னேற்றத்திற்கு அது சமம். இவ்வலகு பிரெஞ்சு இயற்பியலார் கூலூம் (1736-1806) என்பவர் பெயரால் அமைந்தது. (இய)

Coulomb's law - கூலூம் விதி: இரு காந்த முனைகளுக்கிடையே ஏற்படக்கூடிய கவரும் அல்லது விலக்கும் விசையானது, அவற்றின் முனை வலிமைகளின் பெருக்கல் பலனுக்கு நேர்வீதத்திலும் அவற்றிற்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்வீதத்திலும் இருக்கும். (இய)

coulometer - கூலூமானி: ஒரு மின்சுற்றில் செல்லும் மின்னேற்றத்தின் அளவை அளக்கப் பயன்படுங்கருவி. (இய)

count down - கீழவாய் எண்ணல்: ஏவுகணை ஏவுதல்.

counter - மின் எண்ணி: மின்துகள்களைக் கண்டறியவும் எண்ணவும் அதேபோல் மின்காந்தக் கதிர்வீச்சை அறியவும் பயன்படும் கருவி. எ-டு. கெய்கர் எண்ணி. (இய)

couple - இரட்டை: எதிர்த்திசைகளிலுள்ள சமமான ஓரிணை ஒருபோக்கு விசைகள். ஒரு தனிப் புள்ளியின் வழியாகச் செயற்படாதவை. நீள்தொகுபயன், நிகரத்திருப்புத் திறன் உண்டு. (இய)

coupling - இணைதல்: இருதொகுதிகள் அல்லது மூலக்கூறுகள் சேரும் வேதிவினை. எ-டு. ஆசோசாயங்கள். (வேதி)

courtship - காதலாட்டம்: புணர்ச்சிக்குமுன் தன் இணையைக் கவர்ந்து தேர்ந்தெடுக்கும் விலங்கு நடத்தை, மென்மையும் வன்மையும் கலந்தது. (உயி)

covalent bond - இணைப்பிணைப்பு: இணையும் இரு அணுக்களுக்கிடையே ஒரு மின்னணு இணை, பகிர்ந்து கொள்ளப்படுவதால் உண்டாகும் பிணைப்பு. எ-டு. மீத்தேன். இதில் கரி, நீர்வளி ஆகிய இரண்டிற்கிடையே உள்ள பிணைப்பு இணைப்பிணைப்பு. இணைப்பிணைப்புகளால் சேர்க்கப்பட்ட அணுக்களின் கூடுகையே மூலக்கூறுகள். (வேதி)

cracking - பிளத்தல்: கச்சா எண்ணெய் அல்லது அதிக மூலக்கூறு எடையும் உயர் கொதிநிலையும் கொண்ட பகுதிப் பொருள்களைச் சூடாக்கிக் குறைந்த மூலக்கூறு எடையும் கொதிநிலையும் கொண்ட அய்டிரோகார்பன்களாகச் சிதைக்கும் வினை. இஃது இருவகைப் படும். 1. வெப்பப்பிளத்தல் 2. வினையூக்கிவழிப் பிளத்தல். (வேதி)

cramp - பிடிப்பு: தசைப்பிடிப்பு. தசையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வலிதரும் சுருக்கம். உடற்பயிற்சியின் பொழுது உண்டாவது தொடை அல்லது கெண்டைக்கால் தசையில் ஏற்படுவது. தசையை நீட்டி இதனைப் போக்கலாம். (உயிர்)

crane - 1. பளு உயர்த்தி: மின்காந்த அடிப்படையில் மின்சாரத்தால் இயங்கும் கருவி. அதிகப் பளுக்களைத் தூக்கத் தொழிற்சாலைகளிலும் துறைமுகங்களிலும் கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களிலும் பயன்படுவது. (இய) 2. நாரை: பா. whooping crane. (உயி)

cranial nerves - மூளை நரம்புகள்: இரண்டு இரண்டாக மூளையிலிருந்து கிளம்புபவை.

cranium - மண்டை ஓடு: குருத்தெலும்பு அல்லது எலும்பாலான பெட்டி. இதில் மூளை பாதுகாப்பாக உள்ளது. (உயி)

crenate - பிளவிலை நுனி: கூரிய பிளவுகளுக்கிடையே வட்ட நீட்சிகளை இலை விளிம்பு கொண்டிருப்பது. பிளவு சிறியதாக இருந்தால், அது சிறு பிளவிலை. (கிருனுலேட்) ஆகும். பா.leaf margin. (உயி)

cresol - கிரிசால்: நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கும் நிறமற்ற நீர்மம் அல்லது படிகங்கள். புரையத்தடுப்பி செய்யப் பயன்படுவது, மற்றும் சாயங்கள் வெடிமருத்துகள், பிளாஸ்டிக்குகள் ஆகியவை செய்வதிலும் பயன்படுபவை. (வேதி)

creosote - கிரியோசோட்: நிலக்கரித் தாரிலிருந்து பெறப்படும் செம்பழுப்பு நிறமுள்ள நீர்மம். மரத்தைப் பாதுகாக்கப் பயன்படுவது. (வேதி)

crepucular - பொழுது விலங்கு: அந்திக்கருக்கல், விடியற்காலை, அந்திவேளை ஆகிய பொழுது களில் சுறுசுறுப்பாக இயங்கும் விலங்கு எ-டு. விட்டில் பூச்சிகள், கொசு. (உயி)

crest - முகடு: ஓர் ஒலிஅலையின் மேட்டுப் பகுதி. (இய)

cretinism - குருளைமை: குருளைத் தன்மை தொண்டையடிச் சுரப்பி. சரியாக வேலை செய்யாவிடில், குழந்தைகளிடத்து ஏற்படும் குறைநோய். வளர்ச்சி குன்றி, 15 வயதுடையவர் 3 வயது குழந்தை போல் இருத்தல். (உயி)

cristae - விரலிகள்: விரல் போன்ற நீட்சிகள். உயிரணுவிலுள்ளன. இழையனின் உட்படலம் இம்மடிப்புகளாலானது. (உயி)

cristobalite - கிரிஸ்டோபலைட்: சிலிக்கன் ஆக்சைடின் கனிம வடிவம். (வேதி)

critical angle - மாறுநிலைக் கோணம்: அடர்மிகு ஊடகத்தில் எப்படுகோணத்திற்குச் சரியாகக் காற்றில் விலகுகோணம் 90° ஆகவிருக்கிறதோ அப்படுகோணம் அந்த ஊடகத்தின் மாறுநிலைக் கோணமாகும். எ-டு. நீரின் மாறுநிலைக் கோணம் 48.5°. வைரம் 2455° (இய)

critical mass - மாறுநிலைப் பொருண்மை: அணுவினையில் தொடர்வினையினை நிலைநிறுத்தத் தேவைப்படும் பிளவுப் பொருள்களின் குறைந்தஅளவு மாறுநிலைப் பொருண்மையாகும். பொருண்மையை நிறை என்றுங் கூறலாம். (இய)

critical pressure - மாறுநிலை அழுத்தம்: தன் மாறுநிலை வெப்பநிலையில், ஒரு வளியை நீர்மமாக்கத் தேவைப்படும் குறைந்த அளவு அழுத்தம். (இய)

critical reaction - மாறுநிலை வினை: அணுக்கருத் தொடர் வினை (இய).

critical state - மாறுநிலை: பாய்மநிலை. இதில் நீர்மமும் வளியும் இரு நிலைகளும் ஒரே அடர்த்தி கொண்டிருக்கும். இப்பொழுது பாய்மமே மாறுநிலை வெப்பநிலை, அழுத்தம், பருமன் ஆகியவற்றில் இருக்கும். (இய)

critical temperature - மாறுநிலை வெப்பநிலை: அழுத்தத்தைப் பயன்படுத்தி, எவ்வெப்பநிலைக்குக் கீழ் ஒரு வளியை நீர்மமாக்க இயலுமோ அவ்வெப்பநிலை. அவ்வெப்பநிலைக்கு மேல் வெப்பம் எவ்வளவு மிகினும், அவ்வளியை நீர்மமாக்க இயலாது. அறைவெப்ப நிலைக்கு மேல் சில வளிகளுக்கு இவ்வெப்பநிலை உள்ளது. எ-டு. கரி இரு ஆக்சைடு 311 செ. வெப்ப நிலைக்குக் குறைந்த மாறுநிலை வெப்பநிலை வகைகளும் உண்டு. எ-டு. உயிர்வளி 118° செ. (இய)

critical volume - மாறுநிலைப் பருமன்: தன் மாறுநிலை வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் ஒரு பொருளின் ஓரலகுப் பொருண்மை அடைத்துக் கொள்ளும் பருமன். (இய) Cromagnon man - குரோமக்னன் மனிதன்: தற்கால மனிதன் முதல் தோற்றம்: ஓமோ சேப்பியன்ஸ். 35,000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் தோற்றம் ஏற்பட்டது. (பு.அறி)

crop - தீனிப்பை: உணவு வழியின் விரிந்த முன்பகுதி. இதனை முதல் இரைப்பை எனலாம். உட்கொண்ட உணவுப் பொருளை இது சேமித்து வைப்பது. எ-டு. பூச்சிகள், பறவைகள். (உயி)

cross - கலப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட இரு தனி உயிரிகளுக்கிடையே நடைபெறும் இணைவு. (உயி)

crossing over - குறுக்குக் கலப்பு: குறுக்கு (சியாஸ்மேட்டா) தோன்றுவதன் வாயிலாக அதன் மூலம், ஓரக நிறனியன்களுக்கிடையே (ஓமலாகஸ் குரோமடிட்ஸ்) ஏற்படும் பொருள் பரிமாற்றம். இவ்வரிய நிகழ்ச்சி கண்ணறைப் பிரிவில் நடைபெறுவது. இதனைப் புகழ் வாய்ந்த அமெரிக்க உயிரியலார் மார்கன் தாம் செய்த கனிஈக்கள் ஆராய்ச்சியின் வாயிலாகக் கண்டறிந்தார். (உயி)

cross section - குறுக்குவெட்டுப் பகுதி: ஒரு பொருளைக் குறுக்குவாட்டில் வெட்டுவதால் உண்டாகும் பகுதி. (உயி)

crucible - புடக்குகை: பொருள்களை உயர் வெப்பநிலைக்குச் சூடாக்கும் பீங்கான் கிண்ணம். (வேதி)

crude oil - பண்படா எண்ணெய்: பெட்ரோலியம். (வேதி)

crust - தோடு: 1. ஒரு பொருளின் கடின வெளிப்பகுதி 2. ரொட்டியின் வெளிப்பகுதி 3. கனி உறை 4. நிலவுலகின் கெட்டியான வெளிப்பகுதி. உயிர்வாழத் தகுதியுள்ளது.

cryobiology - தண் (குளிர்) உயிரியல்: உயிரிகளின் கடுங்குளிர் விளைவுகளை ஆராய்வது.

cryogen - குளிராக்கி: உறை கலவை.

cryogenic engine - குளிர் எந்திரம்: ஏவுகணையின் மேல் அடுக்கில் பயன்படுவது.

cryogenics - தண்ணியல் குளிரியல்: மிகக் குறைந்த வெப்பநிலைகளை உண்டாக்குதல். அவற்றின் இயற்பியல் தொழில் துணுக்க விளைவுகளை ஆராய்தல் ஆகியவை பற்றிக் கூறுந்துறை. 20ஆம் நூற்றாண்டின் இளைய அறிவியல். குறைந்த வெப்பநிலை என்பது 150 செ. க்குக் கீழுள்ள வெப்பநிலை. தனிச்சுழி வெப்பநிலை குளிரியலுக்குரியதே. இதை நிலவுலகில் அடைய இயலாது. (இய)

cryptogams - மறைகலவித் தாவரங்கள்: பூக்காத் தாவரங்கள். தாவர இனத்தின் பெரும் பிரிவு. மூன்று பிரிவுகளைக் கொண்டது. 1. தண்டகத் தாவரங்கள் (தேலோபைட்டா): கிளமிடோமோனாஸ், 2. பாசிகள் (பிரையோபைட்டா) பாசி 3. பெரணிகள் (டெரிடோபைட்டா) பெரணி.

crystal - படிகம்: திண்மப் பொருள். இதன் அணுக்கள் திட்டமான வடிவியல் கோலத்தில் இருக்கும். (வேதி)

crystailisation - படிகமாதல்: படிகம் உண்டாகும் முறை. (வேதி)

crystallography - படிகவியல்: படிகங்களின் அமைப்பு, வடிவம், பண்புகள் ஆகியவற்றை ஆராயுந் துறை. (வேதி)

crystal chemistry - படிக வேதியியல்.

crystal system - படிகத்தொகுதி: படிகங்கள் தம் அலகு அணுக்களின் வடிவ அடிப்படையில் பிரிந்திருத்தல். (வேதி)

cultivar - பயிரிடப்பட்ட வகை: சாகுபடி வகை. வேளாண் அல்லது தோட்டக்கலை வகை சார்ந்தது. பா. variety (உயி)

culture medium - வளர்ப்பு ஊடகம்: வளர்ப்புக் கரைசல், ஊட்டங்கள் சேர்ந்த கலவை. அகாரைச் சேர்த்து நீர்மநிலையிலோ திண்மநிலையிலோ வைக்கலாம். குச்சியங்கள், பூஞ்சை முதலிய நுண்ணுயிரிகளை வளர்க்கப் பயன்படுவது. (உயி)

cuneate - ஆப்பு வடிவம்: இலை ஆப்பு வடிவத்திலிருத்தல். எ-டு. நீர்ப்பசலை. பா. leaf shape (உயி)

cupellation - புடமிடல்: வெள்ளி அல்லது பொன்னை அதன் மாசுகளிலிருந்து வெப்பப் படுத்திப் பிரிக்கும் முறை. இதில் எளிதில் உயிர்வளி ஏற்றம் பெறக்கூடிய உலோகம் (காரியம்) பயன்படுத்தப்படுகிறது. (வேதி)

cupric sulphate - செம்பகச் சல்பேட்: CuSO45H2O பொதுப்பெயர் நீலத் துத்தநாகம். நீலநிறப் படிகம். செப்புத்துருவலுடன் கந்தகக் காடியைச் சேர்த்துப் பெறலாம். நீரில் கரையக்கூடியது. சாயத்தொழில், மின்முலாம்பூசுதல், மருந்துகள் செய்தல் ஆகியவற்றில் பயன்படுதல். (வேதி)

cuprite - குப்ரைட்: செம்பக (I) ஆக்சைடின் சிவந்த கனிம வடிவம். முக்கிய செம்புத்தாது. (வேதி)

curie - குயூரி: C. அலகுச்சொல். கதிர்வீச்சலகு. மேரி குயூரி பெயரால் (1867-1934) அமைந்தது. இவர் போலந்து நாட்டில் பிறந்த பிரெஞ்சு இயற்பியலார். நோபல் பரிசு பெற்றவர். பா. radiation units. (இய)

Curie's law - குயூரி விதி: துணைக் காந்தப் பொருளின் காந்தஏற்புத் திறன். தனிவெப்பநிலைக்குத் தலைகீழ் வீதத்திலுள்ளது. அதாவது, இவை இரண்டும் ஒன்றுக்கு மற்றொன்று எதிர் வீதத்திலிருக்கும். (இய)

Curies point - குயூரி வெப்பநிலை: கொடுக்கப்பட்ட இரும்புக் காந்தப் பொருளின் வெப்பநிலை. அதற்கு மேல் அது துணைக் காந்தப் பொருளாதல். (இய)

Curie therapy - குயூரி பண்டுவம்: கதிர்வீச்க மூலம் நோயைக் குணப்படுத்தல். (மரு)

curing - பதமாக்கல்: சிமெண்டு இறுகும்பொழுது வெடிக்காமல் இருக்க அதன் மீது தொடர்ந்து நீரை ஊற்றுதல். பூச்சுவேலை நடந்த மறுநாள் இது நிகழும். பா. setting. (தொ.நு)

curium - குயூரியம்: Cm. அதிக நச்சுத்தன்மையுள்ள தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. புளுட்டோனியத்திலிருந்து தொகுக்கப்படுவது. கு-244, 242. மின்வெப்ப ஆற்றல்பிறப்பிகளில் பயன்படுதல். (இய)

current - மின்னோட்டம்: பா. electric Current.

current balance - மின்னோட்டத் தராசு: ஆம்பியர் தராசு, மின்னோட்டத்தை முழுமையாக அளக்கப் பயன்படுவது. (இய)

current density - மின்னோட்ட அடர்த்தி: ஒரு மின்வாயின் ஓரலகு பரப்பிற்குரிய மின்பகுளி வழியே செல்லும் மின்னோட்டம். (இய)

cusp - முகடு: கடைவாய்ப் பற்கள். கடைவாய்முன்பற்கள் ஆகியவற்றின் முடியில் காணப்படும் கூம்பு வடிவங்கூர்ச்சி. சிறிய முன்பற்களுக்கு இரு முகடுகளும் பெரிய கடைவாய்ப்பற்களுக்கு மூன்று அல்லது நான்கு முகடுகளும் உண்டு. அவை துண்டாக்கவும் வெட்டவும் பயன்படுபவை. (உயி)

cuticle - தோலி: மேல் தோலினால் சுரக்கப்படும் பாதுகாப்படுக்கு. இது தாவரத்திலும் விலங்கிலும் அமைந்திருப்பது. இது கியூட்டின் என்னும் கரிமப் பொருளினால் உண்டாவது. (உயி)

cuticularization - தோலி தோன்றல்: நீர்மப் பொருள் சுரப்பினால் தோலி உண்டாகிக் கடினமாதல். (உயி)

cutinization - குயூட்டின்வயமாதல்: குயூட்டின் தாவரக் கண்ணறைச் சுவர்களில் படிதல். இலை, தண்டு. (உயி)

cuts - வெட்டுக்காயங்கள்: கத்தி, ஊசி, கூர்த்தகடு முதலியவற்றால் ஏற்படுங் கீறல்கள். புரை எதிர்ப்பு மருந்து தடவினால் போதும். எ-டு. அயோடக்ஸ் அல்லது அயோடின் கரைசல். (மரு)

cutout - மின்நீக்குகூடு: மின்நீக்கி. சில நிலைகளில் தானாக மின்சுற்றைத் திறந்து மின்னோட்டத்தை மூடும் கருவியமைப்பு. மின்பலகையில் இருப்பது. (இய)

cutting - வெட்டி தடுதல்: போத்து நடுதல்: விதையிலா இனப் பெருக்கஞ் சார்ந்தது. எ-டு. கிளுவை, பூவரசு. பா. Vegetative propagation. (உயி)

CVI, Children's Vaccine Initiative - சிவிஐ, குழந்தைகள் ஆவைன் முயல்வுத் திட்டம்: இது ஒர் உலகத்திட்டம். யூனிசெப், உலக நல நிறுவனம் முதலியவற்றால் துவக்கப் பட்டது. ஒரே தடவையில் பாதுகாப்பாகச் செலுத்தக்கூடிய இசிவுநச்சுமத்தை உருவாக்கியுள்ளது. குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் இதைச் செலுத்தலாம். (மரு)

cyanamide - சயனமைடு: கால்சியம் சயனைடு. உரம். (வேதி)

cyanamide process - சயனமைடு முறை: காற்றில் கால்சியம் இரு கார்பைடை வெப்பப்படுத்தி நைட்ரஜனை செயற்கையாக நிலைப்படுத்தும் தொழில்முறை. (வேதி)

cyanide - சயனைடு: அய்டிரஜன் சயனைடின் உப்பு. தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கப் பயன்படுதல். (வேதி)

cyanogas - சயனோ தூள்: HCN நேர்த்தியான கறுப்புத்தூள். கால்சியம் சயனைடு இதிலுள்ளது. காற்றுவெளி ஈரத்துடன் சேர்ந்து இது அய்டிரோ சயனிகக்காடி வளியைக் கொடுப்பது. எலிவளைகளில் புகையூட்டும் பொருள். (வேதி)

cyanometer - நீலமானி: கடல் அல்லது வானத்தின் நீல நிறத்தை அளக்கப் பயன்படுங் கருவி. (இய)

cyber attack - கணிப்பொறி தாக்குறுதல்.

cyber cash - கணிப்பொறி வழிப்பணம்.

cybernetics - ஒப்புத்தொடர்பியல்: விலங்கிலும் எந்திரத்திலும் நடைபெறும் செய்தித் தொடர்பு, கட்டுப்பாடு ஆகிய முறைகளை ஒப்புநோக்கி ஆராயுந்துறை. எ-டு. மனிதமூளை - கணிப்பொறி. இது தொழில்நுணுக்கத் துறையைச் சார்ந்தது. நன்கு வளர்ந்துள்ளது. (இய)

cyberphobia - கணிப்பொறி அச்சம்.

cyberpunk - கணிப்பொறி புதினம்.

cyberspace - கணிப்பொறி வெளி.

cycas - சைக்கஸ், சளம்பனை: உறையில் விதையில்லாத் தாவரம். சிறிய ஈச்சை மரம் போன்றது.

cycle - சுழற்சி: 1. ஒரு தொகுதி அடையும் மாற்றங்கள் இறுதியாகத் தன் பழைய நிலைக்கு வருதல். எ-டு. நைட்ரஜன் சுழற்சி. 2. ஒரு வினாடிக்கு இத்தனை சுற்றுகள், சுழற்சி/வினாடி. (இய)

cyclic compound - வளையச் சேர்மம்: அணு வளையங்களைக் கொண்ட கூட்டுப் பொருள். ஓரக வளையச் சேர்மம், வேற்றக வளையச் சேர்மம் என இருவகைப்படும். (வேதி)

cyclization - வளையச் சேர்மமாதல்: இது ஒரு வேதி வினை. இதில் நேர்த்தொடர் சேர்மம் வளையச் சேர்மமாகும். (வேதி)

cyclone - புயல்: பொதுவாகப் புறக்காற்று. முகில் மற்றும் மழையை உருவாக்கிய வண்ணம் சூறைக்காற்றைச் சுழியிட்டுச் செல்லும். இவ்வாறு சுழியிட்டுச் செல்லும் குறையழுத்தப் பகுதியே புயல். (பு.அறி) cyclone tracking - புயல்வழியறிதல்: திரட்டிய வானிலைச் செய்திகளைக் கொண்டு புயல் எவ்வாறு உருவாகி மேல் நகர்ந்து செல்லும் என்பதை அறிந்து, அதன் தீச்செயலை அறிவித்தல். இதற்குச் செயற்கை நிலாக்கள் தற்பொழுது பெரிதும் பயன்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு நவம்பர் திங்கள் புயல் மாதமாகும். (பு.அறி)

cyclopropane - சைக்ளோ புரோப்பேன்: C3H6 இனிய மணமுள்ள நிறமற்ற வளி, மயக்கமருந்து. (வேதி)

cyclosis - சுழலியக்கம்: கண்ணறைக் கணியத்தின் தொடர்ந்த ஒழுங்கான இயக்கம். உட்கரு முதலிய பொருள்கள் இதில் வீறற்ற நிலையிலேயே உள்ளன. (உயி)

cyclosporine - (F - 5061) சைக்ளோஸ்போரின்: தடுப்பாற்றலை ஒடுக்குவது. மருத்துவ வேதிப்பொருள். இதன் கண்டுபிடிப்பு பதியஞ் செய்யும் உறுப்புகள் தள்ளப்படுவதைத் தவிர்க்க உதவுவது. (மரு)

cyclotron - சுழலியன்: அணுவிரை வாக்கி: முன்னணு முதலிய நேர் மின்னேற்றம் பெற்ற துகள்களை விரைவாக்கும் கருவியமைப்பு. அணு ஆராய்ச்சிக்குப் பயன்படுவது.

суmе - குறுமம்: குறும்பூக்கொத்தில் ஒரு வகை. எ-டு, பூவரசு. (உயி)

cymose inflorescence - குறுமம்: பா. inflorescence. (உயி)

Cyst-பை, கட்டி: உயிர்ப்பொருள் தொகுதியைச் சுற்றிச் சுரக்கப்படும் கடின உறை. தடித்த சுவருள்ள ஓய்வுச்சிதல். (உயி)

cytochemistry - கண்ணறை வேதிஇயல்: உயிரணுக்களின் வேதிச் செயல்களை ஆராயுந்துறை. (உயி)

cytode - கருவிலி: கருவிலா முன்கணியம். (உயி)

cytogenetics - கண்ணறை மரபணுவியல்: மரபுவழித் திறனோடு நிறப்புரியின் அமைப்பையும் நடத்தையையும் தொடர்பு படுத்துவதை ஆராயுந்துறை. (உயி)

cytokinesis - கண்ணறைக் கணியப் பிரிவு: உயிரணுவில் கருப்பிரிவைத் தொடர்ந்து கண்ணறைக் கணியம் பிரிதல். (உயி)

cytokinins - சைட்டோகினின்கள்: தாவரங்களில் கண்ணறைப் பிரிவைத் துண்டும் வளர்ச்சிப் பொருள்கள். (உயி)

cytology - கண்ணறைவியல்: உயிரணுக்களையும் அவற்றின் பகுதிகளையும் அமைப்பு நோக்கிலும் வேலைநோக்கிலும் ஆராயுந்துறை. (உயி).

cytolysis - கண்ணறைச் சிதைவு: கண்ணறைகளின் மேற்படலம் அழிவதால் அவை சிதைதல். (உயி)

cytoplasm - கண்ணறைக் கணியம்: கண்ணறையின் உயிர்ப் பகுதிகள் அடங்கிய பகுதி. உட்கருவும் பெரும்நுண்குமிழிகளும் நீங்கியது. இதில் பல வளர்சிதைமாற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. பா. cell (உயி)

cytotaxonomy - கண்ணறை வகைப்பாட்டியல்: உயிரிகளை வகைப்படுத்துவதில் நிறப்புரிகளின் எண்ணிக்கை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளுதல். (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/C&oldid=1039047" இலிருந்து மீள்விக்கப்பட்டது