சிந்தனை துளிகள்/1801-1905

விக்கிமூலம் இலிருந்து

1801. “ஒருவருக்குக் கேடு வந்ததெனில் - கேடு வந்தவுடன், கேட்டிற்குரிய காரணங்களைக் கண்டு அறிவறிந்த ஆள்வினையை மேற்கொண்டு கேட்டினை நீக்கிக் கொள்ளாது வந்துள்ள கேட்டிற்குக் கவலைப் படுபவர்களை நோக்கிக் கூறியது” கெட்ட குடியே கெடும்’ என்பது.

1802. “மனம் கெட்டு உறவு கெட்டுப்போன குடியே கெடும். மற்ற கேடுகளால் அதாவது வறுமையால் பிணியால் ஒரு குடி கெட்டுவிடாது.”

1803. “செயலற்றுப் போன”-என்பதை விளக்குவது “படுட” என்ற சொல். உயிர்ப்பு குறைந்து செயலற்றுப் போன காலிலேயே மீண்டும் மீண்டும் பிணியும் செயலற்ற தன்மையும் தோன்றும் நல்ல உயிர்ப்புடன் செயலும் உள்ள காலில் பிணி வந்தாலும் நீங்கும். காலுக்கு உயிர்ப்பு உழைப்பால் வருவது.”

1804. “பிறப்பின் காரணமும் சூழலும் நல்ல வகையினதாக அமையாவிடில் நீங்காத் துன்பம் வந்து பொருந்தும்.”

1805. “ஆசையில் விளைவது அனைத்தும் அவலமே.”

1806. “வன்மமும் வளரும் தன்மையதே. தோல்விகளாலும் அறிவுரைகளாலும் கூட வன்மமுடையவரை மாற்றுதல் அரிது.”

1807. “தீமையில் எல்லாம் தீமை’ வன் கண்மையே!”

1808. “இன்றும் பேச்சு, எல்லோருக்கும் சமநிலை வாழ்வு. நடப்பது வல்லாங்கு வாழ்வோருக்கு வாழ் வளித்தலே.”

1809. “இன்று கையூட்டு வாங்குபவர்கள் ஒளிவு மறைவுடன் வாங்குவதில்லை. வெளிப்படையாகவே விகிதம் விதித்து வரிபோலத் தண்டுகின்றனர்.

1810. “இந்த நூற்றாண்டு செய்த மகத்தான சாதனை, கையூடுடை தேசியமயப்படுத்தியது.”

1811. “ஒத்த நோக்கு, ஒத்த செயல், ஒத்த திறன் உடையோராக நட்பு கிடைத்தல் அரிது.”

1812. “பரிவுணர்வுகள் தண்ணீரைப் போலத் தான், வளர்ச்சிக்குத் துணை செய்யும். பரிவு உணவாக அமைந்து உதவி செய்யாது.”

1813. “காரணங்களே இல்லாமல் மோதிக்கொள்ளும் அளவுக்கு அறியாமை வளர்ந்திருக்கிறது.”

1814. “படித்தவர்கள் கூட காரண காரியங்களை ஆராய்ந்து பிரச்சனையை, தீர்வுக்கு வழி காணாமல் வளர்த்துவிடுகிறனர்.”

1815. “இருவேறு அணியினர் என்ற நிலை உருவான பிறகு, நடுவுநிலை அணி ஒன்று இல்லாது போனால் வம்பு வளரும்.”

1816. “இம்! என்றால், சாதி, கடுசி அடிப்படையில் கூடுவது விரும்பத் தக்கதல்ல.”

1817. “இன்று மக்கள், வாக்க்ாளர்கள் குறை, நிறை பார்த்து வாக்களிப்பதில்லை. அவர்கள் விருப்பம் போல.“

1818. “கடந்த காலத் தவறுகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணியே பல அரசியல் தலைவர்கள் உலா வருகிறார்கள்.”

1819. “பச்சையாகச் சொல்வதுதான் பலருக்கும் புரியும். பண்பட்ட மொழியில் சொல்வது புரிவதில்லை. ஒரு வகையான பாமரத் தன்மை.”

1820. “ஒரு தீமையைக் கண்டிப்பது மட்டுமே போதாது. தீர்வும் காட்ட வேண்டும்.”

1821. “தீமையுடைய நபரைக் கண்டித்தால் வரவேற்கிறவர்கள், தீமையைக் கண்டித்தால் வரவேற்க முன்வருவதில்லை, இவர்கள் நபரைப் பற்றியே கேட்டுப் பழகியவர்கள்.”

1822. “முன்பே கேட்டு பழகிய செய்தியை மனத்தில் வைத்துக் கொண்டே கலந்து பேச முன்வருபவர்கள் ஆய்வு மனப்பான்மை இல்லாதவர்கள்.”

1823. “உச்சந்தலை உரோமம் முதல், உள்ளங்-கால் வரை உயிர்ப்பு நிலை இருக்கிறது. உள்ளங் காலில் எறும்பு ஊரினாலும் உடன் செய்தி தலைக்குப் போய் தலை கையை அழைத்து தள்ளு என்று அறிவுறுத்தும். அதுபோல ஒரு இயக்கம் அதன் கிளைகளிலும், இருக்கவேண்டும்.

1824. “சமூக வாழ்க்கையில் மாறுதல் காண விழையாமல் புறத்தே சின்னங்கள் அமைப்பதிலேயே பலர் முனைகின்றனர். இது ஒரு உண்ர்ச்சி”.

1825. “இன்றைய தமிழர்களில்பலர் பெயரளவில் தமிழர். இவர்களுக்கு மொழி உணர்வு இல்லை.”

1826. “அரசியல் இயக்கங்களுக்கு பதவிசுகம், அதிகார ஆசை இருக்கும் வரை உருப்படியான சமூக மாற்றத்திற்குப் புரட்சி செய்ய மாட்டார்கள்.”

1827. “பல தவறுகள், பழக்கத்தை மாற்ற இயலாமையினாலேயே யாம்.”

1828. “தொழில் நுட்பத்துடன் கூடிய உழைப்பே பயன்தரும்”.

1829. “பணியார்வம் இல்லாமல் பிழைப்பைக் கருதுபவர்கள் பயன்பட மாட்டார்கள்.”

1830. “யார் மாட்டும் கடும்ப்கை கொண்டு அழிக்க முயன்றாலும் கேடு வரும்.”

1831. “இன்றைய உலகத்தில் சினவாமல் இருப்பதற்கு முயன்று, வெற்றி பெற்று விட்டால் அது ஒரு சாதனையே!”

1832. “விதிகள், முறைகள், நெறிகள் வாழ்க்கையின் படிப்பினைகளில் பிறந்தவை. அவற்றை நாம் ஏற்காது போனால் முன்னோர் பெற்ற தோல்விகளை நாமும் பெறுவோம்.”

1833. “பெரும்பாலும் அரிய சாதனைகளைச் செய்ய முயன்றோர் தனி மனித நிலையிலேயே செய்துள்ளனர். பந்திக்கு வருவது போல் அனைவரும் பணிக் களத்திற்கு வரமாட்டார்கள்.”

1834. “நாளது வரையில் உயரிய இலடுசீயங்களுக்காகப் போராடியவர்கள் சாகடிக்கப் பட்டே வந்துள்ளனர். அதில், அன்னை இந்திராகாந்தியும் ஒருவராகிவிட்டார்.”

1835. “வேதனை, ஊக்கமுடையோருக்கு படைக்கும் ஆற்றலையே தரும்.”

1836. “அனைத்தும் இருந்தும் சிறப்பாக வாழாதோர் கொடுத்து வைக்காதவர்கள் என்று சொல்லித் தான் அழவேண்டியிருக்கிறது.”

1837. “வரவுக்குள் செலவு” என்பது தற்காப்பு யுக்தி. ஆனால் வரவுக்கு எல்லை கட்டக்கூடாது.”

1838. “நல்ல பணி வெளியே தெரிந்தவுடன் அவரவர் ஊருக்குச் செய்யும்படி கோருவார்கள்; அதன் அடிப்படையை அறியாமலே.”

1839. “வங்கியில் இட்டு வைப்பதும் இன்று அறமேயாகும்.”

1840. “வெப்பம் நிறைந்த நிலப்பகுதிகளில் எண்ணெய்க் குளியல் இன்றியமையாததே.”

1841. “உணவும் உழைப்பும் அளவாகக் கிடையா விடில் நோயேயாம்.”

1842. “வேலையைத் தேடிச் செய்யாமல் கையில் வந்த வேலையைச் செய்பவர்களால் உடனுறை எழுத்தர்களாக இருப்பது சாத்தியமில்லை.”

1843. “எந்த ஒரு பணியையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் விழைவு தேவை.”

1844. “விழித்திருத்தல் என்பது ஆயத்த நிலையில் இருப்பதையே குறிக்கும்.”

1845. “எப்போதும் ஆயத்த நிலையில் பிணிப்பு இல்லாதவர்களிடமிருந்து பலமணித் துளிகள் நழுவி விடும். காலத்தையும் செய்த வேலையையும் கனக்கிட்டுப் பார்க்க முடியாது."

1846. “முற்றாக நல்லவர்களும் இல்லை; முற்றாக கெட்டவர்களும் இல்லை.”

1847. “ஏவவும் செய்கலான்தான் தேறான் அவ்வுயிர்க்கு போஒம் அளவும் ஒர் நோய்” என்ற திருக்குறள், வாழ்வின் படிப்பினையில் பிறந்த திருக்குறள். இன்னும் இந்தக் குறளுக்கு இலக்கியமாகப் பலர் உளர்.”

1848. “தவறுகளை உணர்த்துகிற பொழுது, எதிர்ப்புணர்ச்சி காட்டுபவர் அல்லது பயப்படுகிறவர், யாதொரு உணர்ச்சியும் காட்டாது இருப்பவர் ஆகிய மூவகையினரும் திருந்துதல் அரிது. மாறாக வருந்து தலையும் உணர்தலையும் புலப்படுத்துகிறவர்கள் திருந்துவர்.”

1849. “எண்ணிக்கை கூடுதல் இருந்தாலும் பணி கெடும்.”

1850. “நாம் செய்யத் தவறுகின்ற காரியங்களால் எத்தகைய இழப்புக்கள், கேடுகள் வருகின்றன என்று உய்த்துனரும் அறிவு இருந்தால் செய்ய வேண்டியன எதையும் செய்யாது இருக்கமாட்டோம்.”

1851. “தவறு”, ‘தப்பு’ என்று குற்றங்களையும் செய்யாமையையும் சொல்லுதல் கூடாது.”

1852. “உடலிலிருந்து கழிவுகள் நீங்குவதில் ஏற்படும் சிக்கல் உடலைப் பிணிக்கு ஆளாக்கி விடுகிறது. அதுபோல, கெட்டப் பழக்கங்களிலிருந்து மீளத் தயங்குதல் பலவித இழப்புகளையும் இழிவுகளையும் கொண்டுவந்து சேர்க்கும்.”

1853. “சிறுநீர், உடல் இயக்கத்தில் கெட்டுப் போனதுதான். அதுபோல் கெட்டப் பழக்கங்கள் வாழ்க்கையில் தோன்றுபவைதாம். அவை நற்பழக்கங் களாகத் தோன்றிக்கூடப் பின் காலப் போக்கில் கெட்டப் பழக்கங்களாகியிருக்கலாம்.”

1854. “பணத்தின் அருமை இன்றும் ஏழை களுக்குத் தெரியாது. கையில் ஐந்து ரூபாய் கொடுத்துப் பாருங்கள்.”

1855. “அன்னை இந்திராவின் ஆட்சிப் போக்கால் கடைக்கோடியில் நின்ற ஏழை மக்களுக்கு வாழ்வு கிடைத்தது.”

1856. “விசுவாசம் என்பதற்குரிய பொருளைக் கொச்சைப் படுத்தாமல் இருந்தால் ஒத்த மனத்துடன் பூரணமான ஒத்துழைத்தலையே குறிக்கும்.”

1857. “கூட்டுறவு இயக்க விழாவில், சுதந்திர தின விழாவில், குடியரசுத் தின விழாவில் ஆர்வம் காட்டாதவர்கள் எல்லாம் கட்சி அரசியல் விழாக்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். அறியாமையே காரணம்.”

1858. “நாடு ஒன்றாக இருக்கவேண்டும் என்று சொன்னால் போதாது. ஒன்றாக இருப்பதற்குரிய காரணங்கள் வளர்ந்தாகவேண்டும்.”

1859. “அங்கீகரிக்கப் பெற்ற நிறுவனங்கள் சொல்வதை நம்பவேண்டும். அதைப் பொய் என்று சொல்லலாகாது. அப்படிச் சொன்னால் நிறுவனங்கள் மக்களிடம் நம்பிக்கையை இழக்கும். அரசின் மதிப்பு குறையும்.”

1860. “செயலற்ற நிர்வாக இயந்திரம் இருப்பதை விட அது இல்லாமல் இருப்பதே மேல்.”

1861. “எளியவர்கள் தொடக்க நிலையிலேயே யாதொன்றையும் கூறுவதில்லை. அதனால் எளிதில் களைய முடிவதில்லை.”

1862. “நிதியை, வரவு-செலவு செய்தால் மட்டும் போதாது. நிதி நிர்வாகம் வேண்டும்.”

1863. “நிதி நிர்வாகம் பொறுப்புள்ள ஒன்று.”

1864. “நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு நாமும் பொறுப்பு என்று உணர்தல் அவசியம். இப்படி உணர்தல் வேலைக்கு உந்து சக்தியாக உதவி செய்யும்.”

1865. “ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்தாலே போதும். நல்ல நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பார்கள்.”

1866. “பணம் இருப்பதைவிட, பெரிய ஆபத்து பணம் இருப்பதாகக் காட்டி நடந்து கொள்வது-”

1867. “செல்வம் உடைமையில் எளிமை, செல்வத்திற்குப் பாதுகாப்பு.”

1868. “தன்னிறைவுக்கு நிகரான வலிமை இல்லை.”

1869. “சொன்னதைச் செய்பவர்கள் கடைநிலை. அடி ஒற்றிச் செய்பவர்கள் மத்திமம். நினைப்பதை நினைந்து செய்து முடிப்பவர்கள் உத்தமம்.”

1870. “இந்திய நாட்டு ஏழைகளின் தோள்கள் மீது சுரண்டும் சக்தி, வலிமையாக உட்கார்ந்திருக்கிறது. சுரண்டும் சக்தியிடமிருந்து ஏழைகளை மீட்பது கடினம்.”

1871. “ஒழுங்கு முறைகளுக்கு சட்டம் இயற்றுவதற்காகச் சட்டசபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலிலேயே சட்டத்திற்கு மரியாதை இல்லை.”

1872. “இன்று சட்டசபை உறுப்பினர் பதவி நாட்டுப் பற்றுக்கு உரியது அல்ல. அதிகார ஆசை, செல்வாக்குப் பெருமை ஆகியனவற்றுக்கேயாம்.”

1873. “இந்தியாவில் தேர்தலின் விலையும் உயர்ந்துவிட்டது.”

1874. “பிழைக்க மாட்டார் பிழைத்தாலும் வேலை செய்ய இயலாது என்று கூறுவதன் மூலம் எதிரியிடம் எவ்வளவு அச்சம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.”

1875. “ஆட்சி இயந்திரங்கள் எல்லாம் சரியாகத் தான் இருக்கின்றன. இயங்குவதுதான் இல்லை.”

1876. “பொறுப்புள்ள வாழ்க்கை என்பது புனித மானது. அன்பை ஆழப்படுத்தும்; நட்பை உறுதிப் படுத்தும்; நலத்தைக் கூட்டும்; இன்பத்தை வளர்க்கும், அழிவைத் தடுத்து நிறுத்தும்.”

1877. “எந்த வகையான பிரிவினை எண்ணங்களும் குழந்தைகள் மனத்தில் பதியாவண்ணம் பார்த்துக் கொள்ளல் அவசியம்.”

1878. “நமது தலைமுறையில் நாம் கண்ட மாபெருந்தலைவர்களையடுத்து வந்த தலைமுறையினர் தலைவர்கள் பெயரை மட்டுமே உச்சரிக்கின்றனர். தலைவர்களுடைய கொள்கைகளை விட்டு விட்டனர்.”

தலைவர்கள் பெயரைப் பயன்படுத்துவதற்குரிய காரணம் அத்தலைவர்கள் மக்களால் அங்கீகரிக்கப் பெற்றவர்கள். அத்தலைவர்களுக்கு மக்கள் வழங்கியுள்ள அங்கீகார நிழலிலேயே வாழ ஆசைப்படுகின்றனர்.”

1879. “மக்கள் கூடித் தொழில் செய்யும் பொழுதெல்லாம் ஒன்றிரண்டு காவல்காரர்கள் அந்த இடத்தில் இருப்பது தவிர்க்க முடியாத தேவையாகி விட்டது.”

1880. “சாத”ி உணர்ச்சி சராசரி மனிதனிடம் கூட இடம் பெற்று வருகிறது.”

1881. “எந்த ஒரு பணிக்கும் திட்டமிடுதல் தவிர்க்க இயலாத தேவை.”

1882. “உழைப்பின் அடிப்படையில் ஊதியம் என்றால் பல அலுவலர்கள் பட்டினி கிடக்க வேண்டி வரும்.”

1883. “உழைத்தல், உழலுதல், என்ற சொற்களின் வழியில் பிறந்தது “உழைப்பு” என்ற சொல். அதாவது கடுமையான சோதனைகளைத் தாங்கி ஒரு பணியை முனைப்புடன் செய்து பயன் தரத்தக்க வகையில் முடித்தல் உழைப்பு ஆகும்.”

1884. “தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது வாக்குகள் எண்ணி அறிவித்தப் பிறகு, கேட்கப்பெறும் செய்தியை வைத்தே முடிவு செய்யவேண்டும். அது வரையில் கேட்பது எல்லாம் அவரவர்களுடைய ஆசையையேயாம்.”

1885. “கிராமப்புறங்களில் புஞ்சையில் பாதிக்கு மேல் தரிசு. அதனாலேயே கிழக்கு இராமநாதபுரம் வறுமை நிறைந்த பிரதேசமாகக் காட்சியளிக்கிறது,”

1886. “உள்ளீடு இல்லாத மனிதர்கள் முரட்டுத் தனமாக நடந்துகொள்வார்கள். ஆனால் வஞ்சனை இருக்காது. உள்ளிடு உள்ளவர்களில் பலர் நாகரிகமாக நடந்துகொள்வர். ஆனாலும் வஞ்சனை இருக்கும்.”

1887. “வாழ்க்கையில் உன்னுடன் ஏதாவதொரு நோக்கத்தில் உடனுழைப்பவர்களாகப் பணியாளர்கள் அமைந்தால் நல்லது. வேலையை, வேலைக்காரர் என்ற மனப்பான்மையில் பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு விதமான வேசைத்தனமாகும்.”

1888. “இன்னமும் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பலர் பள்ளிக்குச் செல்லவில்லை.”

1889. “புரட்சித் தலைவர் மதுவிலக்கைமட்டும் ரத்து செய்யாமல் இருந்திருந்தால் மக்களிடம் மிகப் பெரிய அன்பைப் பெற்றிருப்பார்.”

1890. “ஒத்துவராத செய்திகளில் தொடக்கத்திலேயே கண்டிப்பு இல்லாதிருத்தல் தவறு. பின் விளைவுகள் மோசமாகிவிடும்.”

1891. “செய்திகள், உண்மைக் கலப்புடையன. வதந்திகள்.பொய்மையும் புனைந்துரையும் கலந்தவை.”

1892. “அமெரிக்கா ஒதுங்கி விட்டாலே இலங்கைச் சிக்கல் தானே தீர்ந்துவிடும்.”

1893. “விலங்குகளுக்குள்ள உறவுணர்வு, மனிதர்களிடம் இல்லை.”

1894. “வேலை செய்பவர்கள் எல்லாம் உழைப்பாளிகள் அல்லர்.”

1895. “பலனைக் கணக்கிட்டுத்தான் உழைப்பின் மதிப்பைக் கண்டுபிடிக்க முடியும்.”

1896. “இந்திய வாக்கரளர்களிடம் “அகட விகடங்கள்” செல்லு படியாகவில்லை,”

1897. “ராஜீவ் காந்தியின் பேச்சு, பழைய நாட்டுத் தலைவர்களை நினைவிற்குக் கொண்டுவருகிறது.”

1898. “ஒரு மாதமாக இரவு பகலாக உழைத்ததற்கு தமிழ் நாட்டு மக்கள் கொடுத்த பரிசு” இதுதான் என்றால் தமிழ் மக்களுக்காகவா உழைத்தார்கள்? தங்கள் கட்சிப் பதவிக்கு வரத்தானே உழைத்தார்கள். கட்சிக்கு உழைப்பதற்குப் பரிசு மக்கள் எப்படி தருவார்கள்?”

1899. “ஜனதாவில் சில உயர்ந்த மரபுகளுடைய பெரிய அரசியல் மேதைகள் உள்ளனர். அவர்களும் பாராளுமன்றத்திற்கு வராதது ஏமாற்றத்தைத் தருகிறது. பிரதமர் ராஜிவ் இவர்களை ராஜ்ய சபைக்கு வர ஏற்பாடு செய்தல் நல்லது.”

1900. “நமது நாட்டு மக்களுக்குப் பணத்தில் உள்ள ஆசையை, பொருள்கள் மீதாக மடை மாற்ற வேண்டும்.”

1901. “கிராமங்களின் வளம் முடங்கிக் கிடக்கிறது.”

1902. அரசியல் வெறியும் நல்லதல்ல.

1903. “நமக்கு வேண்டியவர்கள் நமது வளர்ச்சிக்குத் துணை செய்ய வேண்டுமே தவிர சலுகைகள் தரக்கூடாது.”

1904. “மிதமாக உண்டால், கடுமையாக உழைத்தால், ஆன்மா சமநிலையில் இருந்தால், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.”

1905. “நாம் நாகரிகமாக நடந்து கொள்வதால் தோற்கலாம். ஆனால் கொல்லைப்புற வெற்றிகள் தோல்வியையே தரும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/1801-1905&oldid=1055659" இலிருந்து மீள்விக்கப்பட்டது