உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தனை துளிகள்/301-400

விக்கிமூலம் இலிருந்து

301. “எல்லோரையும் திருப்திப்படுத்த முயல்கிறவன் பைத்தியக்காரனாகி விடுவான்”.

302. “எப்போதும் கடமைகளைச் செய்யும் ஆயத்த நிலையில் இருப்பவர்கள் எதையும் சாதிப்பார்கள்”.

303. “கடமைகளைச் செய்வதற்குரிய விதிமுறைகளை மேற்கொள்ளாதார் கடமைகளைப் பயனுறச்செய்தல் இயலாது”.

304. “வழியோடு போதல் உழைப்பைக் குறைக்கிறது. களைப்பைக் குறைக்கிறது. பயத்தை குறைக்கிறது. பயணத்தை எளிதாக்குகிறது. அதுபோலவே விதிமுறைகளின்படி கடமைகளைச் செய்து வாழ்தலும் பயன்பல கூட்டுவிக்கும்”.

305. “இப்போதுள்ள முறையில் இல்லற வாழ்க்கையின் மூலம் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள்”.

306. “காதல் வளர்ந்தால்தான் இன்பம் தரும். காதல், திருமணத்தில் முற்றுப்பெறுவதையே பலர் வாழ்க்கையில் பார்க்கிறோம்”.

307. “கோப்புகள் நினைவுக்குரிய சாதனமே தவிர, பணிகளை நிறைவேற்றக்கூடிய சாதனமல்ல”.

308. “வளர்ச்சிப் பெறாத மக்களிடம் நன்றியை-கடப்பாட்டை எதிர்பார்ப்பது தவறு; கிடைக்காது”.

309. “விளம்பர வெளிச்சம்” விபசாரத்தைத் தவிர வேறென்ன?”

310. “தொழிலுக்குத் தகுந்த நபர்களும் கிடைப்பதில்லை: நபர்களுக்குத் தகுந்த வேலை தேடுவதும் தொல்லையே!”

311. “ஒரு பெண் தான் சம்பாதிக்கும் பணத்தில் கூட, தன் தாய்க்கு அனுப்பக் கணவன் சம்மதிப்ப தில்லை. இதுதான் இந்திய ஆடவர்களின் சர்வாதிகாரம்”.

312. “சுற்றத்தை மீறிக் காதல் செய்யும் துணிவுள்ள பெண்கூட மிருகத்தனமான கணவன் முன்னே கோழையாகி விடுகிறாள்”.

313. “நாளை எண்ணிச் சம்பளம் கொடுக்கும், வாங்கும் பழக்கம் உள்ள வரை வேலை செய்ய விருப்பம் வராது”.

314. “உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் என்பதே மனிதனை வளர்க்கும் நெறி”.

315. “பெட்டியில் வைக்காமல் எடுக்க முயற்சிப்பவர்கள் மூளைக் கோளாறு உள்ளவர்கள்”.

316. “பால் பிடித்த கதிர் தாழ்கிறது. பதர் தலை நிமிர்ந்தாடுகிறது. அற்ப மனிதர்கள் ஆர்ப்பரவம் செய்வர். பொருட்படுத்தாதே! அடக்கமானவர்களை அணுகுக; அமரத்துவம் பெறுக”.

317. “எவ்வளவுதான் நேசித்தாலும், நமது பணிகளில் பங்குபெற வராது போனால் பயனில்லை”.

318. “ஒப்புரவு இல்லாத உறவு, உப்புக்கும் பயனில்லாதது”.

319, “புறத்தே புதுமை காட்டி அகத்தே பழைமையை ஒளித்து வாழ்வோரும் உண்டு.”

320. நாலுபேர்’ நன்மைக்கு மட்டுமல்ல; தீமைக் கும் சேர்கிறார்கள்.”

321. ‘உழைக்காமல் வாழ நினைப்பது மனித இயற்கை உழைத்து வாழ நினைப்பது அறிவுடமை யின் அழகு.’ -

322. பணத்தின் மீது ஆசை, மனிதனை மிருக மாக்குகிறது. பணம் செய்வதற்குரிய உழைப்பை விரும்புகிறவன் மனிதனாகிறான்.

323, “தனிமனிதச் சிக்கல்களுக்குத் தீர்வு காண, சமுதாயத்தைத் திரட்டுவது தவறு’

324. “நாட்டின் நலனில் கருத்தும், தொழில் செய்யும் மனப்பான்மையும் தோன்றாத வரையில் நாடு வளராது.’ -

325. பசு, தெய்வம் போலப் போற்றப்படுகிறது. ஏன்? பசுவின் உணவோ வைக்கோல். பசுவின் கழிவு கள் அனைத்தும் மனிதனுக்கு மருந்தாக-உணவாகப் பயன்படுகின்றன. இப்படி வேறு ஒரு வாழ்க்கை இல்லை, - - .

326. “உழைக்காமல் வாழ நினைப்போர் வேலை தேடுகின்றனர். உழைத்து வாழ விரும்புவோர் வேலைகளை எடுத்துக் கொள்கின்றனர்”.

327. “அரசுகளுக்கிடையில்கூட விளம்பர ஆசையில் ஒரு அரசின் பணியைப் பிறிதொரு அரசு மறைக்கிறது”.

328. “மேலாண்மை என்பது தரம் குறைந்த விமர்சனம் அல்ல. பணிகளை உடனிருந்து செய்வித்தல்”.

329. “ஒருமணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்த, பல மணி நேரம் படிக்கவேண்டும்”.

330. “அரசியல் ஒரு இயக்கம்; அரசாங்கம் ஒரு - நிறுவனம்”.

331. “ஒவ்வொரு நாளும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்னியத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன”.

332. “தனக்குரியதை விட்டுக் கொடுக்காமல், மற்றவர்களிடம் தியாகத்தை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்”.

333. “தமிழக அரசியலுக்குத் திரைப்படம் காரணம் அல்ல; வேறு சில காரணங்களும் உண்டு”.

334. “இன்றைய உலகை தீமைகளே அலங்கரிக்கின்றன. தீமை என்ற பெயரில் அல்ல-நன்மை என்ற போர்வையில்”.

335. “இயற்கை மனிதனின் கழிவையே உணவாக ஏற்றுக் கொள்கிறது. இதைக்கூட மனிதன் முறையாக இயற்கைக்குத் தர முன்வருவதில்லை”.

336. மக்களுக்கு அவசியமானது நிகழாததால் எங்கும் தேநீர்க்கடை-லாகிரி பொருள்கள் விற்கும் கடை. இவை மனிதனுக்குரியன அல்ல.”

337. நாட்டு மக்கள் மதர்த்த சோம்பலுக்கு இரையாகி பிச்சைக்காரர்களாகிவிட்டனர்.” . . .

338. “நல்லதை நாடிச் செய்யும் மனிதன் நாளும் வளர்வான்.”

339. “ஆசை தீரக் கொடுப்பது இயலாத காரியம்.” ஆசையும் நன்றியும் முரண்பட்ட பண்புகள்.”

340. “பழங்காலத் தமிழரசர்கள் எளிய வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.”

341. “குழு மனப்பான்மை நீதியைக் காட்டாது.”

342. “அரசு நிர்வாகத்தின் மையப்பங்கு-அரசின் உரிமைகளை-அதிகாரங்களை யாரும் மீறக்கூடாது.”

343. பண வரவு இருந்தால் மட்டும் செல்வந்தராக இருக்க முடியாது. எண்ணிச் செலவழித்தால்தான் செல்வந்தராக இருக்கலாம்.”

344. “எதையும் காலத்தில் முறையோடு செய்தால் எண்ணிலா நன்மைகள் வளரும்.”

345. “நிதி நிர்வாகம் திறறை இல்லாதுபோனால் பற்றாக்குறை மனப்பான்மை உருவாகும்.”

346. “பல பணிகள் இருந்தால் பலரை இயக்கி-பலமுனைகளில்-தொழிற்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்.”

347. “வரவு இல்லாமல்-செலவை வரவழைத்துக் கொள்பவர்கள் யோக்கியர்களாக இருத்தல் அரிது, இயலாது.”

348. “எந்த ஒரு செயலுக்கும் பயன் என்ன என்று அளந்தறிதல் ஒழுக்கத்தினை வளர்க்கும். உழைப்பின் திறனை வளர்க்கும்.”

349. “இயற்கையும் விலங்குகளும் விவகாரமான மனம் இன்மையால் செயற்பாடுகளில் ஒழுங்கும் பயனும் மாறா நிலையினவாக உள்ளன.”

350. “மனிதனின் மனம் விவகாரத் தன்மையுடையதாக இருப்பதால் ஒழுங்கு, ஒழுங்கின்மை, பயன், பயனற்ற நிலை என்று கலந்துள்ளன. ஆனாலும் வளர்ச்சியிருக்கும்.”

351. “மனிதன் தீமையிலிருந்து விடுபட்டு ஒரு நிலையில் ஒழுங்கமைக்கப் பெற்ற உழைப்போடு கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வானாயின் எதையும் வெற்றி பெறலாம். “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்று வாழலாம்.”

352. “ஐம்பூதங்களிலும் (நிலம், நீர், தீ, வளி, வான்) தண்ணிர் கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியைத் தருகிறது.”

353. “ஐம்பூதங்களின் ஒருங்கிணைந்த-ஒத்திசைந்த செயற்பாட்டிலேயே உயிரியல் இயங்குகிறது.”

354. “ஒன்றுமே இல்லாதிருப்பர். ஆனால், ஒன்று கிடைத்தவுடன் மன அமைதி பெறார். பிறிதொன்றை அவாவுவர். இது மனித இயற்கை.”

355. “நிர்வாகம், பொருள் பொதிந்த சொல்; உயிர், உடலை நிர்வாகம் செய்கிறது. ஆனால் இந்த நிர்வாகத்தையும் நடைபெற வொட்டாமல் கிளர்ச்சி செய்ததடை செய்த குற்றவாளிகள் மருத்துவமனைக்கு தண்டனை கொடுத்து அனுப்பப்படுகிறார்கள்,

356. “பொது அறிவு. இயற்கை அறிவு ஏற்புடையதே! ஆயினும் சோதித்தே ஏற்றல் வேண்டும்.”

357. “மனுக்கள் வெறிச்சோடிய விளம்பரத்தின் சின்னங்களே!”

358. “அரசியல் வேறு. அரசாங்கம் வேறு.”

359. “அரசியல் மாறுபடலாம்; அரசாங்கத்தின் நடைமுறையில் மாறுபடக் கூடாது.”

360. “வேலை செய்யும் விருப்பமே தேவை. விருப்பம் வந்துவிட்டால் வேலை கிடைத்துவிடும்.”

361. “பிழைப்புக்கு வேலை தேடுபவர்கள் பயனற்றவர்கள். வேலை செய்வதன் மூலம் பிழைப்பு நடத்த விரும்புகிறவர்கள் வாழ்பவர்கள்.”

362. “கடவுள், சோதனைக்காகத் துன்பத்தைத் தருவான் என்பதும் சுரண்டல் வர்க்கத்தின் தத்துவமே.”

363. “நமது மக்கள் யாரையும் தங்களுக்குப் பயன்படுத்த நினைப்பார்களே தவிர, மற்றவர்களுக்குப் பயன்படமாட்டார்கள்.”

364. “அரசாங்கத்திடம் கேட்டதையெல்லாம் உரிமையோடு பெற விரும்புபவர்கள், அரசாங்கத்திற்குரிய கடமைகளை செய்ய முன்வருவதில்லை.”

365. “இந்திய நாட்டின் கலாச்சார மொழியாக இருக்க சமஸ்கிருதம் தகுதி உடையதன்று. சமஸ்கிருத கலாச்சாரம் வளர்ச்சியடையாதது; தமிழே தகுதியுடையது.”

366. “தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல. தமிழே ஒரு நாகரிகமாகவும் சமயமாகவும் வளர்ந்துள்ளது."

367. “நிதியியல் நாகரிகம் நுணுக்கமானது. அதனைக் கையாளத் தெரியாததே நமது துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.”

368. “காலத்தில் செய்யும் எந்தப் பணியும் பயனுடையது.” பணிகளை முறையாகப் பயன்படும் வகையில் செய்வது உரிமையாகவும், உரிய ஊதியத்தினை எடுத்துக் கொள்வது கடமையாகவும் மாறுதல் வேண்டும்.

369. “தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் நல்லவர்கள் அல்லர்.”

370. “வாழ்க்கையின் இயக்கம் ஊக்கத்தின் விளைவே. ஊக்கமிலாதார் சாதனைகளுக்கு ஆகார்.”

371. “பெருமைக்குரிய யாதொரு இயல்பும் இல்லாமல் பெருமை பாராட்டுதல் கூடாது.”

372. “பணத்தின் மீது நேரிடையாக ஆசை காட்டுவது தீது, பணம் வரும் வாயில்களில் ஆர்வங் காட்டுவது அறிவுடைமை.”

373. “நாட்டில், எல்லாம் பணமாகிவிட்டது. இனி ஏது ஏழைகளுக்கு வாழ்க்கை?”

374. “இன்று பலர் வைக்கோல்போரில் நாய் போல வாழ்கின்றனர். அதாவது, தாமும் வாழார். மற்றவர்களையும் வாழ விடார்!”

375. “ஏழ்மைக்குத் தகுந்த அளவு சிறுமைகளும் இருக்கும், சிறுமை கண்டு சீறாமல் சிறுமையை வளர்த்த ஏழ்மையை அகற்றவேண்டும்.

376. “மூன்றுகால் ஒட்டம் தொடர்ந்து ஓட முடியாது. பாண்டிச்சேரியாகிவிடும்.”

377. “ஆர்வம் மின்விசையின் ஆற்றலிலும் வலிமையானது. ஆர்வமே செயலூக்கத்தின் ஊற்றுக் களன்.”

378. “உடலை வளர்த்தவர்கள், உணர்வை வளர்த்துக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.”

379. “காரியங்கள் நடந்தால் மட்டும் போதாது. உரிய காலத்தில் நடக்க வேண்டும்.”

380. “உடலுக்கு, இன்புறுதலே இயற்கை நோய் இயற்கையன்று. நோய் வரவழைத்துக் கொண்டதே.”

381. “விலங்குகள் கூடக் காலந்தவறாமல் பழகிக்கொள்கின்றன. ஆனால் மனிதர்கள்...?

382. “கடமைகள் அழுத்தும் பொழுது அவலத்திற்கு ஆளாவோர்கள் கடமைகளைச் செய்யும் மனப் போக்கில்லாதவர்கள்.”

383. “அதிருப்தியைத் தருபவர்கள் திருப்தி பற்றிப் பேசும் உரிமை இல்லாதவர்கள்.”

384. “ஒழுங்குகள் - ஒழுக்கங்கள் உருவாகப் பல ஆண்டுகள் ஆகும்.”

385. “காதல் வாழ்க்கையற்றோர் வீட்டில் குழந்தைகள் அதிகம் இருக்கும்.”

386. “முறைப்படுத்தப்பெற்ற செயல்கள் முழுப் பயன்தரும்.”

387. “விதிமுறைகளைப் பின்பற்றிக் காரியங்கள் செய்தலே விழுமிய பயனைத்தரும்.”

388. “ஏரிகளில், தானே நத்தைகள், மீன்கள் தோன்றிவிடுகின்றன. இதுபோலச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி வளம் அடைபவர்களே வாழ்பவர்கள்.”

389. “இனிப்புச்சுவை - சர்க்கரை சுவையாகவும் இருக்கிறது; அதுவே சுமையாகவும் மாறிவிடுகிறது.”

390. “விலங்குகளுக்கு அவைகளின் பசியே தெரியும். தன்பசி நீங்கிய விலங்குகள் மற்றவைகளின் பசியைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதுபோலவே மனிதர்களிலும் பலர் வாழ்கிறார்கள்.”

391. “சிறப்புக்கும், பொருள் வளர்ச்சிக்கும் தொழில் காரணமல்ல. தொழிலைச் செய்வோரின் திறமையே காரணம்.”

392. “பெரிய மரத்தையும் மரத்தின் சுற்றுப் புறங்களை ஆழப்படுத்துவதன் மூலம் வீழ்த்திவிடலாம். அதுபோல் சமூகத்தின் எந்தத் தீமையையும் சுற்றுப் புறத்தை - சூழலைச் சரிப்படுத்துவதன் மூலம் அகற்றி விடலாம்.”

393. “சுகம்” என்பது வளத்தில் மட்டுமல்ல. வறுமையிலும் சுகம் அனுபவிப்பவர் உண்டு. இதற்கும் காரணம் உடற்சோம்பல்.”

394. “கணவனின் அரசியலுக்கு மனைவி மக்களைத் துன்புறுத்துவது கயமைத்தனம்.”

395. “எதிர்க் கருத்துடையவர்களை நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆத்திரத்துடன் பகைத்து அணுகுவது ஜனநாயக மரபன்று.

396. “கால்நடை எளிமை, காரில் செல்வது ஆடம்பரம் என்று கருதக் கூடாது. ஆகும் செலவின் அளவையும் பயனையும் கணக்கிட்டு நோக்கினால் இன்று சில கால்நடைகளுக்கு, காரில் செல்வதை விடச் செலவு கூடுதல்.

397. “அரசியல் இன்னாருக்குத்தான் என்று வரை யறை செய்வது மக்களாட்சி.”

398. “விரோதிகளை விட வஞ்சகர்கள் மோசமானவர்கள்.”

399. “உலகின் சிறு சிறு நிகழ்வுகள் கூட திட்டமிட்டே நிகழ்கின்றன. ஆனால் மனிதன் திட்டமிட மறுக்கிறான்.”

400. “திட்டமிடாத வாழ்வு, காட்டாற்று வெள்ளம் போன்றது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/301-400&oldid=1055644" இலிருந்து மீள்விக்கப்பட்டது