சீனத்தின் குரல்/அரசாங்கம்

விக்கிமூலம் இலிருந்து

அரசாங்கம்

இந்த கொந்தளிப்பில் சீனமக்கள் லட்சக்கணக்கானவர்கள் மடியுமளவுக்கு அன்றிருந்த மஞ்சு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதையரிய ஆவல் தோன்றுகிறது. இவ்வளவு வெளிநாட்டார் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்த காரணமாயிருந்தது இந்த மஞ்சு அரசாங்கத்தான். மக்கள் மடிந்து போனாலும் தன் சாம்ராஜ்ய கண்ணியத்திற்கு கடுகளவும் கேடு வரக்கூடாதென்றெண்ணியதால், தான் கொடுக்கக்கூடாத பல உரிமைகளைத் தந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டது. அதன் சுய நலத்தை மற்றுமோர் நிகழ்ச்சியின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

1870-ம் ஆண்டு ஒரு இங்கிலாந்து தேசத்தானை ஒரு சீனன் கொலை செய்துவிட்டான் என்ற காரணத்திற்காக மேலும் ஐந்து துறைமுகங்களை பிரிட்டிஷாருக்கு நஷ்ட ஈடாகக் கொடுத்தது. ஒரு ஆங்கிலேயனுடைய உயிருக்கு ஐந்து துறைமுகங்கள் ஈடாக்கப்பட்டிருக்கிறது. அன்றாடம் வறுமையால் செத்துக் கொண்டிருக்கும் சீனர்களின் உயிரை சிற்றெரும்புக்கும் மதிப்பாயில்லை. வெளிநாட்டிலிருந்து சீனத்துக்கு வந்து அக்ரமமாக ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயனுடைய. உயிர் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டது என்பதையும், அதே நேரத்தில் சீன மகனின் உயிர் எவ்வளவு கேவலமாக மதிக்கப்பட்டதென்பதையும் அறிய இந்த ஒரு ஆதாரமே போதுமென விடுக்கிறோம்.

இந்த சம்பவத்தின்போது, சீனாவுக்குத் தேவையான ஒரு அறிஞன் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றான். இரண்டு போர்முனைகளில் பெற்ற அனுபவத்தின் பயனாக, இனி வாள், தேவையில்லை, வழி காட்டி தேவை, குண்டுகள் குறி தப்பிவிடுகின்றன, குறி பார்த்துக்கொடுக்க ஒரு வீரன் தேவை என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்த அறிஞன் இன்னும் நேரடியாக அரசியலில் கலந்து கொள்ளவில்லை. இன்னமும் அவன் அந்த வயதையடையவில்லை. அத்தகு பேரறிஞனும், சீன நாட்டின் புதுயுகக் கர்த்தாவுமான சன்-யாட்-சன் அவர்களைப்பற்றி கவனிப்போம்.