சீனத்தின் குரல்/புரட்சித் தொடக்கம்

விக்கிமூலம் இலிருந்து

புரட்சித் தொடக்கம்

1911-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி சீனப் புரட்சியின் முதல் நாள், புரட்சியுகம் பிறந்து விட்டது. இம்முறை யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு புரட்சி பூகம்பம் அதிருகிறது. இதை டோக்கியோவிலிருந்து அறிந்த சியாங் - கே ஷேக் ஜப்பான் இராணுவ கல்லூரியிலிருந்து விடுமுறைப் பெற்றுக்கொண்டு தாய்நாட்டுக்கு வந்து புரட்சியில் இரண்டறக் கலந்துவிட்டார். இந்த ஆண்டுகளிலெல்லாம் சன் யாட் சன்னுக்கு உதவியாக இருந்திருக்கின்றார். இங்கேதான் தன் சிற்றன்னையைப் பற்றி மிக உருக்கமான சொற்களை வெளியிடுகின்றார்.

"என்னை என் சிற்றன்னை கடுமையாக நடத்தியதாக பலர் ஆத்திரமடைந்தனர். இப்போது நான் இராணுவத்தில் இவ்வளவு கடுமையான வேலை செய்வதற்கு உதவியாக இருந்தது, என் இளமையில் வருங்கால தீர்க்க தரிசனத்தோடு பழகியது தான்,"என்கிறார்.