சீனத்தின் குரல்/கல்விச் சங்கம் புரட்சி சங்கமாயிற்று

விக்கிமூலம் இலிருந்து

கல்விச் சங்கம் புரட்சி சங்கமாயிற்று

ஆரம்பிக்கப்பட்டது கல்விச்சங்கந்தான் எனினும் சர்க்காரின் சம்மதம் பெற முடியவில்லை. அதில் காணப்பட்ட திட்டங்கள் மஞ்சு சர்க்காருக்கு மரண ஓலை நீட்டியதைப் போலிருந்தது. தூது வந்த மனுவில் கண்ட திட்டங்களைத் தூக்குத் தண்டனையென நினைத்தாள் இராணியார். கல்வித் திட்டம் கலக்கத்தைக் கொடுத்தது. அதில் கண்ட திட்டப்படிப் பார்த்தால் மஞ்சு சர்க்கார் மரியாதையாக வெளியேறுவது தவிர வேறுவழியில்லாமலிருந்தது, விருந்தாளியை வீட்டினுள் தள்ளிப் பூட்டி அடுப்பில் மிளகாயைப் போட்டதுப்போல் மஞ்சு சர்க்காரின் மூக்கில் நெடியையேற்றியது இந்தத் திட்டங்கள். ஒன்று இந்த திட்டங்களை சர்க்கார் ஏற்றுக்கொள்வதானால் சிங்காதனத்தைக் காலி செய்யவேண்டும், அல்லது சிங்காதனத்தைவிட மனமில்லையானால், இந்தத் திட்டத்தைத் தயாரித்த வர்களை வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டிலொன்றுதான் செய்ய முடியும். ஆனால் மகாராணியார் பல நாட்கள் உட்கார்ந்து பழகிவிட்ட சிங்கத்தனத்தை இழக்கச் சம்மதிப்பார்களாம். ஆகவேதான் அங்கீகாரம் அளிக்க மறுத்து விட்டார்கள்.

போட்ட திட்டங்கள் பொல்லாத இராணியால் பொடிப் பொடியானதை எண்ணி கல்விச் சங்கத்தை புரட்சி சங்கமாக மாற்றியமைத்துக்கொண்டு, ஆங்காங்கே புரட்சிக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார் சன்-யாட்-சன். இதையறிந்த சர்க்கார் தன் இரும்புக் கைகளை ஓங்கியது. அடி பலமாக விழும் என்று தெரிந்தவுடனே வெளிநாட்டுக்கு ஓட்ட மெடுத்தார் சன்-யாட்-சன். புரட்சி வளரவேண்டுமென்ற பெருநோக்கால் பல நண்பர்கள் தாராள சிந்தையோடு 6000 டாலர்கள் புரட்சி இயக்கத்துக்கு நன்கொடையாக வழங்கினார்கள். சீன நாடு முழுதும் சன்-யாட்-சன் தேடப்பட்டார். ஒற்றர்கள் புகுந்து பார்க்காத இடமில்லை. எங்கும் கிடைக்கவில்லை சன். ஆள் கிடைக்காமல் போகவே சர்க்காரின் பீதி பன்மடங்கு அதிகமாயிற்று. ஆனால் சன்-யாட்-சன். இங்கிலாந்துக்கு ஓடிவிட்டார்.