கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/தமிழ்ப் பற்று ஊட்டினார் தாகூர்

விக்கிமூலம் இலிருந்து
கவியரசர்
இரவீந்திரநாத் தாகூர்

தமிழ்ப் பற்று ஊட்டினார் தாகூர்

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற முழக்கம் இன்றும் தமிழ் நாட்டில் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது!

அரசியல் அரங்குகளிலும், மக்கள் அவைகளிலும், அரசு அலுவல்களிலும், அறிவியல் துறைகளிலும், நாடகமேடைகளிலும், இலக்கிய விழாக்களிலும் அழகுத் தமிழோசை கேட்ட வண்ணம் உள்ளது.

பல்கலைக் கழகக் கல்வியையும், பழகு தமிழில் பயிற்றுவிக்க முடியும் என்ற முயற்சி நாட்டில் நடை பெற்று வருகின்றது.

எல்லாம் தமிழ்மொழியால் முடியும் என்ற எண்ணம், இன்று எல்லாத் துறைகளிலும் உறுதிப்பட்டுள்ளது.

ஆனால், எண்பது ஆண்டுகளுக்கு முன்னர்; இத்தகைய தாய்மொழிப் பற்றுணர்வைக் காண்பதரிதாகவே இருந்தது. தமிழ் மொழியிலே பேசுவதும், எழுதுவதும் கூட இழிவாகக் கருதப்பட்ட காலம் அது. 

ஆங்கிலத்தில் பேசுவதும், எழுதுவதும், பெருமையாகப் பேசப்பட்ட நேரம்! வட மொழி என்கின்ற சமஸ்கிருதம் தமிழிலே புகுந்து; புலவர் பெருமக்களை மணிப் பிரவாளம் என்ற பைத்தியம் பற்றிக் கொண்டிருந்த சமயம்!

ஆங்கில மொழி, ஆட்சி மொழிப் பல்லக்கில் ஏறிச் சவாரி செய்து கொண்டு, தமிழர்களையும்: தமிழ்ப் புலவர்களையும் பல்லக்குச் சுமப்பவர்களாக்கி, அரசுப் பணியின் சுமைதாங்கிகளாக, அதிகாரச்சுமை தூக்கிகளாக வைத்துக்கொண்டிருக்கும் நிலைமை-அக்காலத்தில்!

ஆங்கிலப் பேரரசுக்கு அடிமைகளாக இருந்து கொண்டு, இங்கிலீஷ் மோகம் என்ற வியாதியுடன் வங்காள மாநிலத்திலே திரிந்து கொண்டிருக்கும் இந்தியர்கள்-அதவாது வங்காளியர்களைக் கண்டித்து, தாய்மொழிப்பற்றுணர்ச்சியின் முக்கியத்துவங்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தார்-வங்கக் கவிஞர் தாகூர்.

1912-ஆம் ஆண்டில் கவிஞர் தாகூர் நோபல் பரிசு பெற்றதற்குப் பிறகு இந்தியா முழுவதும் அவரைப் பெருமைப்படுத்த எடுக்கப்பட்ட விழாக்களில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர், தமிழ் நாட்டிற்கும் வருகை தந்தார்!

சங்கம் வைத்து மொழி வளர்த்த மதுரையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராட்டு விழாவிலே கலந்து கொள்ள தாகூர் மதுரை மாநகர் வந்தார். அவருடன் அவரது செயலாளர் பியர்சன் என்பவரும் வந்திருந்தார்.

தமிழ் நாட்டில், கவிஞர் திலகம் ரவீந்திரநாத் தாகூர் தங்கியிருந்த இடத்தில், அவரைக் காண வந்தவர்கள் எல்லாம் இங்கிலீஷிலே பேசினார்கள், விருந்துபசாரமும் நடத்தினார்கள் அறிமுகங்களும் செய்து வைக்கப்பட்டார்கள்.

இந்த வேடிக்கைகளை எல்லாம் கவிஞர் தாகூர் பார்த்து “தமிழ் மக்கள் இங்கிலீஷ் மோகத்திலே இவ்வாறு பேய் பிடித்தது போல அலைகிறார்களே, இவர்களை எவ்வாறு திருத்துவது” என்று மனம் நொந்தார்.

ஒவ்வொரு இந்தியனும், அவரவர் தாய் மொழியில் தான் பேசவேண்டும்; எழுத வேண்டும் என்ற கொள்கையுடையவர் கவிஞர் கோமான் தாகூர். அந்தத் தாய்மொழிப் பற்றுணர்ச்சியை, தான் பிறந்த வங்காள மக்களுக்கும்-மாணவர்களுக்கும் இடைவிடாமல் வலியுறுத்தி வருபவர். பாராட்டு விழா நடத்தும் தமிழர்களிடம் தாய் மொழிப் பற்றை எப்படி வலியுறுத்துவது என்று சிறிது தயங்கினார்.

அப்போது இரண்டு தமிழறிஞர்கள் அவரைச் சந்திக்க வந்தார்கள். விழாப் பொறுப்பாளர், அந்த இரு பெரும் தமிழ்ப் புலவர்களை கவிஞர் ரவீந்திரரிடம் அறிமுகப்படுத்தும்போது, “ஐயா, இவர்கள் இருவரும் சிறந்த தமிழப் பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் கவிஞர்கள், பத்திரிகை தொடர்புடைய எழுத்தாளர்கள்” என்று ஆங்கிலத்தில் பேசி அறிமுகப்படுத்தினார்!

அந்த இரு தமிழ் மேதைகளுக்கும் கவிஞர் தாகூர் கைகூப்பி அவரது வங்காள மொழியிலே வணக்கம் உட்காரும்படி சொன்னார். கவிஞரின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அவர்கள் கெளவுரவமாக அமர்ந்து விட்டார்கள்.

நோபல் பரிசு பெற்ற தாகூரைப் பாராட்டி ‘ஆங்கிலத்திலே எழுத்ப்பட்ட பாமாலை வாழ்த்திதழ்கள் இரண்டை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.

கவிஞர் தாகூருக்குத் தமிழ் மொழி தெரியாது; தமிழில் எழுதினால் தாம் எழுதும் அற்புதமான தமிழ்ச் சொல்சோவியங்களின் உட்பொருள் புரியாது; அதனால் தமிழின் அருமையை, அவர் பெருமையோடு உணர முடியாது போய் விடுமே என்ற ஆர்வத்தில் ஆங்கிலத்திலே பாமாலைகளை எழுதி வந்திருந்தார்கள்.

பாமாலை பாட எழுந்த புலவர் தனது வாழ்த்திதழை ஆங்கிலத்தில் தங்குதடையின்றிப் படித்தார்! இந்தப் பாடலை மிகவும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த கவிஞர் தாகூர்,

“குயில் தன் குரலிலேயே கூவிட வேண்டும். கிளியைப் போல பாட பயிற்சி செய்யக் கூடாது.” நீங்கள் உங்களுடைய அருமையான தாய் மொழியிலேயே என்னைப் பெருமையோடு பாராட்டிப் பாடியிருக்க வேண்டும்.

நான் 1911-ஆம் ஆண்டில், எனது ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில், இந்திய நாட்டிற்காக ‘நாட்டு வணக்கம்’ என்ற பாடலை எழுதினேன். அந்தப் பாடலில் எனது தாய் நாடான வங்காள மாநிலத்தை, உங்களுடைய தாய் நாடான ‘திராவிட நாட்டின் பெருமைக்குப் பின்னே தான்-வைத்து எழுதினேன். ஏன் தெரியுமா?

“எனது வங்கம் ஒரே ஒரு நாடு! அதாவது ஒரே ஒரு மாநிலம்! எனது தாய்மொழி வங்கம், வளமான மொழிகளிலே ஒன்று. ஆனால், உங்களது ‘திராவிட’ என்ற நாடு, நான்கு நாடுகள். அதாவது நான்கு மாநிலங்களைக் கொண்ட தென்னாடு... மூலமொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நான்கு மொழிகள் உடைய மொழி உங்களது தமிழ் மொழி என்ற மேல் நாட்டு மொழி ஆய்வாளர்களது கருத்துக்களைப் படித்தவன் நான்! உண்மையும் அதுதானே!

“நான் உங்களுடைய மொழியைப் பெருமைப்படுத்திய பிறகு, நீங்கள் குயிலைப் போலக் கூவி, உங்களது தாய் மொழியிலே பாடி என்னைப் பாராட்டாமல், யாரோ கற்றுக் கொடுத்த மொழியிலே பாராட்டிப் பாடலாமா? இது அவமானம் அல்லவா? நமக்கு?

“உங்களுடைய தாய் மொழியான தமிழிலேயே என்னைப் பாராட்டியிருக்க வேண்டாமா? இனியாகிலும், தாய் மொழியிலேயே உமது எண்ணங்களைச் சிந்தித்துப் பாராட்டுங்கள்! பேசுங்கள்; எழுதுங்கள்; பாடுங்கள்; அது இந்திய நாட்டுக்கே பெருமை, இவ்வாறு கவிஞர் தாகூர் அறிவுறுத்தினார்.

கவிஞர் தாகூர், மதுரை அறிஞர்கள் இடையே தனது தாய் மொழியான வங்காள மொழியில் பேசியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சாந்திநிகேதனம் பொறுப்பாளராக இருந்த ஆண்ட்ரூஸ் என்ற ஆங்கிலேயர்.

இந்த மொழிபெயர்ப்பினை கவிஞர் தாகூர் நடத்திய ‘பாரதி’ என்ற மாத ஏட்டிலே 1914-ஆம் ஆண்டு டிசம்பர் இதழிலே ஆண்ட்ரூஸ் என்பவர் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். கட்டுரைக்குத் தலைப்பு ‘தாய் மொழிப் பற்று ஏன்?’ என்பதாகும்.

கவிஞர் தாகூர், ஆங்கிலத்திலே வாழ்த்துப் பாடிய தமிழறிஞரைக் கண்டித்த அறிவுரையினை கேட்டு வெட்கமடைந்த மற்றொரு தமிழறிஞர், தனது வாழ்த்துப் பாடலைப் பாடாமலே மறைத்து வைத்துக் கொண்டபடியே வெளியே சென்றார்.

கவிஞர் பெருமகன் தாகூர், தமிழறிஞர்கள் இருவரையும் அழைத்து, தாய்மொழிப் பற்றும், தாய் மண்ணைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் குறுகிய நோக்கமல்ல என்று அமைதிப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.

இந்தியாவின் எந்தெந்த மாநிலத்தவர்கள் நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூரைப் பாராட்டி, மதிப்பும், மரியாதையினையும் காட்டிட அழைத்தார்களோ, அவரவர்களுக்கெல்லாம் அவரவர் தாய்மொழிப் பற்று வளர்ந்திட, அறிவுறுத்தி வந்தார் கவிஞர் தாகூர்.

“உங்களுடைய தாய் மொழியான தமிழ் ஓங்கி வளர்ந்திட, ஒவ்வொருவரும் கடமையாற்றுங்கள்” என்ற அறிவுரையை, தனக்களித்த பாராட்டு விழாவுக்குரிய நன்றியுரையாக, தமிழ் நாட்டுக்கு அடையாளம் காட்டியவர் கவிஞர் தாகூர்.

அவரவர் தாய்மொழிப் பற்றுக்கொண்டு உணர்ச்சியுடன் வாழவேண்டும் என்ற பரந்த நோக்கத்தாலும், அவருக்கே இயல்பாக அமைந்திருந்த மொழிப் பற்றினாலும், ‘யாம்பெற்ற மொழியுணர்ச்சிப் பேரின்பம்-பெறுக இந்த வையகம்’ என்ற தனியா வேட்கையாலும், ஒவ்வொரு மொழியும் அவரவர் மாநிலத்தில் ஓங்கி வளர வேண்டும் என்ற கடமை உணர்ச்சியாலும் தான் கவிஞர் தாகூர் எல்லா மொழியாளர்களுக்கும் உரிய சுயமரியாதை உணர்வைத் தட்டி எழுப்பினார்! அதனால், தமிழ் மக்களும் தமிழ் மொழி வளர்ச்சியில் தன்மானம் பெற வேண்டும் என்று கவிஞர் தாகூர் தமிழர்களுக்கு மொழிப் பற்றை ஊட்டினார்!