அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்

விக்கிமூலம் இலிருந்து
2. அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்

அறிவான அர்த்தங்கள் :

அர்த்தம் உள்ளவைகள் தாம் விளையாட்டுக்கள், அப்படி இருப்பதால் தாம், மனிதகுல ஆரம்பத்திலிருந்தே ஆர்ப்பாட்டமாகத் தோன்றி, உயிரூட்டமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. படர்ந்து கொண்டிருக்கின்றன.

அதனால் தான், விளையாட்டுக்களை மனிதர்களோடேயே தொடங்கி, மனிதர்களுடனேயே முடிவு பெறுகின்ற மகிழ்ச்சியான செயல்கள் என்று அறிஞர்கள் புகழ்கின்றார்கள்.

ஏனெனில், விளையாட்டுக்கள் என்பன, மனிதரது இயற்கையான இயக்கங்களின் இனிய தொகுப்புகளாகும்.

அதாவது, நிற்றல், நடத்தல், ஒடுதல், தாண்டுதல், தித்தல், ஏறுதல், இறங்குதல், எறிதல், பிடித்தல், அடித்தல், போன்ற பல்வேறு வகையான உடல் உறுப்புக்களின் ஒருமித்த இயக்கங்களின் உன்னத வெளிப்பாடுகளாகவே இந்த விளையாட்டுக்கள் உருவாகி இருக்கின்றன.

ஆட்டம் என்கிறார்கள். விளையாட்டு என்கிறார்கள். இரண்டும், இருவேறு சொற்களாக இருந்தாலும், பெரும் பேறு

மிக்கப் பயன்தரும் சொற்களாகவே தோன்றியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

ஆட்டு என்றால் இயக்கம் அம் என்றால் அழகு, (ஆட்டு + அம் = ஆட்டம்) தனிமனிதர் ஒருவரின் உடல் உறுப்புக்களின் அழகான ஆற்றல் மிகுந்த இயக்கங்களே ஆட்டம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

விளையாட்டு என்பது விளை + ஆட்டு என்று பிரிந்து நிற்கிறது. விளை என்றால் விளைந்த அல்லது விருப்பமுள்ள என்றும், ஆட்டு என்றால் இயக்கம் என்று பிரிந்து பொருள் தருவதைக் கண்டு நாம் இன்புறலாம்.

மனிதர்கள் பலர் ஒன்றுகூடி, அழகாகவும் ஒழுங்காகவும், ஆன்ற விதிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடித்து, கட்டுப்பாட்டுடன் களிப்புடன் ஆடுகின்ற முறைகளையே நாம் விளையாட்டு என்கிறோம்.

தனிமனிதர் ஈடுபடுவதை ஆட்டம் என்றும், பலர்கூடி ஆடுவதை விளையாட்டு என்றும் நாம் இங்கே பொருள் பொதிந்து வந்திருப்பதை அறியும்போது, அர்த்தமுள்ளவைகளாக இருப்பதை அறிந்து மகிழ்கிறோம்.

விளையாட்டும் விளக்கமும் :

விரும்பியவர்கள் எல்லோரும், தாங்கள் விரும்புகிற இடங்களில் ஒன்று சேர்கிறார்கள். விருப்பமான இயக்கங்களில் ஈடுபடுகின்றார்கள். கால நேரம் பாராமல், வயது வித்தியாசம் நோக்காமல், ஆடுகின்றார்கள்.

இப்படிப்பட்ட எளிமையான கவர்ச்சியுடன், இனிமையான எழுச்சியுடன், பெருகிவரும் புத்துணர்ச்சியுடன் பங்கு 

பெறுவோர் திகழ்வதால் தான், காலங்காலமாக மக்களினத் தோடு விளையாட்டுக்கள் இடம் பிடித்துக்கொண்டு ஒளிர்கின்றன. மகிழ்கின்றன.

ஆர்வத்துடன் வருபவர் அனைவரும் ஆனந்தம் பெறுகின்றார்கள் என்பது தான் விளையாட்டுக்கள் வழங்குகின்ற வித்தியாசமான பரிசுகளாகும்.

துன்பம் தராத இன்பம் தருகின்ற பொருட்கள் நான்கு என்று கூறவந்த தொல்காப்பியர், செல்வம். புலன், புணர்வு, விளையாட்டு என்று சுவைபடத் தொகுத்துக் காட்டுகின்றார்.

தொல்லைகளைத் தவிர்த்துவிட்டு, தொடரும் துயரங்களைப் போக்கிவிட்டு, எந்நேரமும் இன்பத்தையே எல்லோருக்கும் அள்ளித்தருவதால் தான், விளையாட்டுக்கள் எல்லாம் அழிந்துபோகாமல், விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து கொண்டே வருகின்றன.

ஆனந்த ரகசியம்

எங்கே கிடைக்கும் இன்பம்? எனக்குக் கிடைக்குமா நிம்மதி? என்று ஏங்கி அலைபவர்க்கு, இன் முகம் காட்டி ஈடற்ற இன்பங்களை வழங்குவது விளையாட்டுக்களாகும். எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

தன்னுள்ளே தோன்றுகிற பயங்கர நினைவுகளிலிருந்து விளையாட்டுக்களில் பங்கு பெறுபவர் எளிதாக விடுபடுகிறார்.

தன்னுள்ளே தோன்றுகின்ற தாங்காதக்களைப்பிலிருந்து. சமர்த்தாக வெளியேறி உல்லாசமான ஓய்வினைப் பெறுகின்றார்.

மனதிலே தைரியத்தையும், உடலிலே சக்தியையும். திரட்டி, வலிமையுடன் எதிர்படும் தடைகளுடன் போராடும் வல்லமையை விளையாட்டுக்காரர் வளர்த்துக் கொள்கிறார்.

இது மட்டுமா? இன்னும் கேளுங்கள்,

விளையாட்டில் ஈடுபடும் ஒருவரை தனது சக்தியின் அளவினை அறிந்து, சாமர்த்தியமாக செலவழித்து செய்யற்கரிய சாதனைகள் செய்திடவும் வைக்கின்றன.

அதாவது, தனக்குள்ள பலஹீனம் என்ன? திறமையின் அளவு எது, தனது வலிமை எத்தகையது. செயலாற்றும் தன்மை, நெஞ்சுரம் எவ்வளவு, புத்திசாலித்தனம் எப்படி? உள்ளுணர்வுகளை விரைந்து வெளிப்படுத்தி இயங்கும் ஆற்றல் எப்படி? துன்பத்தையும் நெருக்கடிகளையும் சமாளிக்கின்ற சாமர்த்தியம் எப்படி என்பன போன்ற எண்ணற்ற அரிய, குணங்களை வளர்க்கின்ற அதிசய ஆற்றலை வளர்த்து விடுகிறது.

மனித குலத்தை விளையாட்டுக்கள் அற்புதமாக ஆட்சி செய்கின்றன. மாட்சியில் மகிமைப் படுத்துகின்றன.

வாழ்க்கையும் விளையாட்டும்

வாழ்க்கையும் விளையாட்டும் வெவ்வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றுதான். 'இயற்கை என்பது தான்' இப்படி இரண்டாகப் பிரிந்து, இன்பத்தின் திரண்ட வடிவமாகி விளங்குகின்றன.

வாழ்க்கையிலும் விளையாட்டுக்களிலும் இலட்சியங்கள் உண்டு. அதாவது இறுதியில் சேர்கின்ற இலக்குகள் உண்டு.

அவற்றை அடைந்திட கட்டுப்பாடுகள் உண்டு. கடுமையான தடைகள், சோதனைகள், விதிமுறைகள், வழிநடத்தும் வழி முறைகள் எல்லாமே நிறைய உண்டு.

வாழ்க்கையில் இன்ப துன்பம் இருக்கின்றன. வெற்றி தோல்வி இருக்கின்றன. இவைகள் விளையாட்டுக்களிலும் உண்டு. அல்ல அல்ல அவைகள் தாம் எல்லாமும்.

வாழ்க்கை உலகில் எதிர்ப்புக்கள், ஏமாற்றங்கள், பாதிப்புக்கள், நெருக்கடிகள், பதமான சூழ்நிலைகள் எதிர்ப்படுவது போலவே, விளையாட்டு உலகிலும் உண்டு.

நாம் ஒன்றை மட்டும் உறுதியாக உணர வேண்டும்.

வாழ்க்கை என்பது ஓர் அழகான கிண்ணம். அதில் விளையாட்டு என்னும் மகாசக்தி நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கின்ற சுவையான பழரசம் ஊற்றப் பட்டிருக்கிறது.

எண்ணத்தில் தேர்ந்து, கிண்ணத்தை எடுத்துப் பருகுவோர், உடல் வண்ணத்தில் பொலிவும், நினைவுகளில் தெளிவும், நிலையில் வலிவும் கொண்டு நிம்மதியுடன் வாழ்கின்றனர்,

பழரசத்தைப் பழித்து, புழுதியிலே ஊற்றுவோர், பெறுகிற பயன்களையெல்லாம் இழந்து, கிண்ணத்தையும் கவிழ்த்துக் கொண்டு காலாவதியாகிப் போகின்றனர்.

இவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றால், வைக்கோல் போரில் படுத்துக் கொண்டு, மாட்டையும் தின்னவிடாமல் குலைத்துக் கொண்டு, தானும் தின்னமுடியாமல் அதன்மேல் படுத்துக் கொண்டு கிடக்கும் தெரு நாய் போன்றவர்கள்.

இருந்தாலும், இப்படிப்பட்டவர்களால் விளையாட்டை இதுவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எதிர்த்தவர்கள் எல்லோருமே இடம் மாறி, தடம் மாறி, தரம் மாறி, தாழ்ந்து வீழ்ந்து போனவர்களாகி விட்டார்கள்.

விளையாட்டை விரும்பாத மக்கள் எல்லாம் தலமாக வாழவில்லையா என்று எதிர்வினா எழுப்புவாரும் உண்டு.

ஒன்றுமே செய்யாதவர்கள் உருப்படியாக வாழ்கின்றார்கள் என்றால், உடலை இயக்கி உற்சாகப்படுத்தி வாழ்பவர்கள் எவ்வளவு நலமாக வாழ்வார்கள்? அவர்கள் நலமும் பலமும் பெற்று, நாளெல்லாம் 'ராஜ வாழ்வு' வாழ்வார்கள், வாழ்கிறார்கள் என்பது தான் நாம் கண்ட அனுபவமாகும்.

ஏனெனில், விளையாட்டின் இயல்புகளும், அடிப்படை குணங்களும் அப்படித்தான் அமைந்து கிடக்கின்றன.

விளையாட்டின் இயல்புகள் :

விளையாட்டுக்கள் என்பன, மனிதர்களுக்குள்ளே இயற்கையாக அரும்பி மலர்ந்துவரும் அருமை நிறைந்ததாகும்.

விளையாட்டுக்கள் எப்பொழுதும் எல்லோராலும் விரும்பப்படும் இனிமை நிறைந்ததாகும்.

எந்த வயதினரும், எந்தப் பிரிவினரும், சாதிமத பேத மின்றி, ஆண் பெண் வேறு பாடின்றி, ஏழை செல்வர் என்ற ஏற்றத் தாழ்வின்றி, சமமாகப் பங்கு பெறுகின்ற அளவுக்கு எளிமை நிறைந்ததாகும்.

இத்துடன், பங்கு பெறுகின்ற எல்லோருமே கூடுதல் குறைச்சலின்றி இன்பம் கொடுக்கும் பெருமை நிறைந்ததாகும்.

விளையாட்டுக்களின் தோற்றம் :

விளையாட்டுக்களின் தோற்றத்தை நாம் ஆராயும் பொழுது, மனித வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் தோன்றியது போலவேதான் நமக்கு நம்பிக்கை யூட்டிக் கொண்டிருக்கின்றன.

காட்டிலே ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள், மிருகங்களின் பசிவேகத் தாக்குதல்களுக்குப் பயந்து, பல சமயங்களில் இரையாகிப் போயினர். சில சமயங்களில் தப்பித்துக் கொண்டனர். எப்படி? வேகமாக ஓடி, பள்ளங்களைத் தாண்டி கற்களை எறிந்து, மரத்தில் ஏறி, கனமானவைகளை நகர்த்தி வைத்து.

இப்படிப் பல முறைகளில் பயந்தவர்கள் தப்பி ஓடி, தலை மறைவாகிப் போயினர் என்பது தான் வரலாறு.

அவற்றைக் கொஞ்சம் நாம் கூர்ந்து கவனித்தால் இன்றைய விளையாட்டு இலட்சியங்கள் எளிதாகவே புரியும்.

தப்பி ஓட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் வேகமாக ஓடியது ஒட்டப் பந்தயமாக மாறியது.

பள்ளங்களைத் தாண்டியது நீளத்தாண்டலாக மாறியது.

புதர்களை, தடைகளைத் தாண்டியது உயரத்தாண்டலாக மாறியது.

கற்களை கம்புகளை வீசி மிருகங்களை விரட்டிய முறை எறியும் நிகழ்ச்சிகளாக (இரும்பு குண்டு, வேலெறிதல்) மாறியது.

இது விளையாட்டுக்களின் முதல் கட்டத் தோற்றம் என்றால், இரண்டாவது காணுவோம்.

மிருகங்களை எதிர்த்துத் தாக்கிக் கொல்லத் தொடங்கி அவைகளின் மாமிசங்களை உண்ணத் தலைப்பட்டபோது தெரிந்து கொண்ட சுவையானது, மிருகங்களைத் தேடிக் கொல்லத் தூண்டியது. அதன் ஆரம்பம் தான் வேட்டையாடுதல். கொல்லப் பயன்பட்ட ஆயுதங்கள் தான் கூரான கற்கள், கூரான தடி, வேகமாக வேலை செய்யும் வில் அம்பு போன்றவையாக மாறின.

மூன்றாவது கட்ட விளையாட்டுத் தொடக்கம், கற்கால மனித இனம், ஓரிடத்தில் தங்கி, ஒய்வினை அனுபவித்து, ஒன்றுகூடி சமுதாய வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது ஏற்பட்டிருக்கக் கூடும்.

இயற்கைத் தாக்குதல்களுக்குப் பயந்து ஒன்று சேர்ந்த மனித இனம், மற்றவர்களை அடிமைப்படுத்தி, தலைமைப் பதவியை பெற முனைந்த போது சிறுசிறு கூட்டமாகப் பிரியத் தொடங்கியது.

அந்தந்தக் கூட்டத்திற்கு ஓர் எல்லை, ஒரு தலைவன், அவர்களுக்கென்று பத்திரமான முறைகள், பாதுகாப்பு வழிகள் என்றெல்லாம் ஏற்பட்டன. மற்றவர்களை எதிரிகளாக எண்ணும் வெறித்தனம் மேலோங்கிய போது, அவர்களை அழிக்கப் புதுப்புது ஆயுதங்கள் தயாராயின. போர்கள் அடிக்கடி ஏற்பட்டன.

அமைதி வேண்டி அச்சத்திற்கு ஆட்பட்டு சமுதாயமாக சேர்ந்தவர்கள் இடையே ஆக்ரமிப்பு உணர்ச்சியும், ஆவேச எழுச்சியும் ஏற்பட்டதால், போர்களும், போராயுதங்களும் அளவில் பெருகி, வடிவில் பலப்பல விதங்களில் பிறப்பெடுத்தன.

1. வில் அம்பு. 2. வேல். 3. கனமான பொருளை எறிதல். 4. குறிபார்த்து வீசுதல். 5. கத்திச் சண்டை.

6. கம்புச் சண்டை. 7. குதிரையேற்றம். 8. யானை மீதமர்ந்து சண்டை. 9. தேர் மீதேறி சண்டை. 10. மல்யுத்தம். 11. குத்துச் சண்டை.

இவைகள் எல்லாம் போரில் பயன்படுத்தப்பட்ட சண்டை வழிகள். ஆயுதத் தாக்குதல்கள்.

ஒருவரை ஒருவர் தாக்கி அடக்க மேற்கொண்ட பயங்கர முறைகள் எல்லாம், தற்போது மாறி, புதிய வழியில் மென்மை முறையில் மக்களிடையே பிரபலமாகிக் கொண்டன. இது நாகரிக காலத்தின் நனி சான்ற பெருமை என்று கூறலாம்.

உயிர் போகத் தாக்கிக் கொண்ட பயங்கர முறைகள் இன்று, வெற்றித் தோல்விக்காக, திருப்தி உணர்வுக்காக, திசை மாறி வந்து விட்டன.

வில் அம்பு முறை வில் வித்தையாகிக் கொண்டது.

வேல் எறிந்து தாக்குதல் வேலெறிதலாகி விட்டது.

கனமான பொருள் எறிதிமுறை இரும்புக் குண்டு விசுதலாகியது.

கத்திச் சண்டை, கம்புச் சண்டை , குத்துச் சண்டை, மல்யுத்தம், எல்லாம் பாதுகாப்புச் சண்டைகளாகி விட்டன.

இப்படியாக விளையாட்டுக்கள் ஒரு அர்த்தம் உள்ளவைகளாகத் தோன்றி, மனிதர்களுக்கு உதவுவதையே ஒரு இலட்சியமாகக் கொண்டு விட்டன.

இயற்கையான உதைக்கும் பண்பிற்கு - கால் பந்தாட்டம்.

இயல்பாக பிடிக்க, எறிய - கைப்பந்தாட்டம்,எறிபந்தாட்டம்,கூடைப் பந்தாட்டம்.

கோல்களால் அடித்து அல்லது தள்ளி மகிழும் பண்புக்கு - கிரிக்கெட் ஆட்டம்,மென் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கோல்ப் பந்தாட்டம், பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் போன்ற ஆட்டங்கள்.

சுண்டி ஆடும் பண்பிற்கு - கேரம் போன்ற ஆட்டங்கள்.

இப்படிப்பட்ட விளையாட்டுக்கள், மனித தேவைக்கேற்ப, மனித ஆசைகளுக்கேற்ப பிரிந்து விரிந்து வந்திருப்பது தான் நமக்குப் பேராச்சரியத்தைக் கொடுப்பதாகும்.

உதைக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க வந்த கால்பந்தாட்டத்தில் இன்று 11 வகை ஆட்டங்கள். கோல்களைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டங்களில் 20 வகை, ஒரு குறிப் பிட்ட எல்லைக்குள் இருந்து ஆடும் ஆட்டங்களில் 40 வகை. மேசையின் மீது அல்லது அட்டைகள் மீது ஆடப்படுகின்றதாக 100 வகைகள் . சீட்டாட்டம் என்றாலோ 1000 வகை.

இப்படி ஆயிரக்கணக்காகப் பிரிந்த விளையாட்டுக்கள் அனைத்தும் அர்த்தம் நிறைந்தவைகளாகவே இருக்கின்றன.

அர்த்தம் உள்ள விளையாட்டுக்கள் அனைத்தும், அதனதன் தன்மைகளால், ஆடும் மக்களின் ரசனைக் கேற்ப, பிரிக்கப்பட்டுள்ளது. கீழ்க் காணும் பட்டியல், விளையாட்டுக்கள் தோன்றிய அர்த்தத்தை மேன்மைப் படுத்தியிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

விளையாட்டுக்களின் தலைப்பும், அவற்றிற்குரிய விளையாட்டுக்களும் தரப்பட்டிருக்கின்றன :

1. பெரும் ஆடுகள விளையாட்டுக்கள் (Field Games)

உதாரணம்: கால் பந்தாட்டம், வளை கோல் பந்தாட்டம் கிரிக்கெட், தளப் பந்தாட்டம், மென் பந்தாட்டம், போலோ கர்லிங் முதலியன.

2. சிறு ஆடுகள விளையாட்டுக்கள் (Court Games)

(உ. ம்) கூடைப் பந்தாட்டம், கைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம், வளையப் பந்தாட்டம், டென்னிஸ் முதலியன.

3. பனித்தரை விளையாட்டுக்கள்: (Rink Games)

(உ. ம்) பனி வளைகோல் பந்தாட்டம், காலுருளையுடன் வளை கோல் பந்தாட்டம், கர்லிங் போன்றவைகள்.

4. நெடுந்தூர இலக்கு விளையாட்டுக்கள் (Course Games)

(உ. ம்) தரைக் குழிப் பந்தாட்டம் (Golf) கிராகட் [Croquet]

5. நீச்சல் குள விளையாட்டுக்கள் (Water Games)

(உம்.) தண்ணிர் போலோ; ஆக்டோபுஷ் போன்றவை.

6. குறி பார்த்து எய்யும் விளையாட்டுக்கள் (Target Games)

(உ.ம்) பந்துருட்டல், (Bowling); கனத்தட்டு எறிதல் கோலிக்குண்டு ஆடுதல், போன்றவை.

7. மேசை மீதாடும் விளையாட்டுக்கள் (Table Games)

(உ.ம்) மேசைப்பந்தாட்டம், மேசைக்குழிப் பந்தாட்டம், (Billiards) கேரம், ஸ்நூக்கர் போன்றவை.

8. அட்டை மீதாடும் விளையாட்டுக்கள் (Board Games)

(உ.ம்) சதுரங்கம், டிராப்ட் போன்ற ஆட்டங்கள்.

9. சீட்டு விளையாட்டுக்கள் (Card Games)

(உ.ம்) பிரிட்ஜ், போக்கர், ரம்பி, ஃபரோ, ஸ்கேட் கனஸ்டி முதலியன.

10. சூதாட்டங்கள் (Dice Games)

(உ.ம்) கிராப்ஸ், பெல் அண்ட்ஹேமர், கிரெளன் அண்ட் ஆங்கர், ஹஸார்டு முதலியன.

11. தெரு விளையாட்டுக்கள் (Street Games)

(உ.ம்) தொட்டு விளையாடும் ஆட்டங்கள் (Tag) நொண்டி ஆட்டங்கள், உருளைக்கிழங்கு பொறுக்குதல் முதலியன.

12. விருந்து நேர விளையாட்டுக்கள் (Party Games)

கண்ணாமூச்சி ஆட்டம், கண்டுபிடி ஆட்டம், இசை நாற்காலி போன்றன.

அ. வி -2

பலர்கூடி போராடி இயங்குகிற விளையாட்டுக்களைப் பனிரெண்டு வகையாகப் பிரித்துக் காட்டினோம். அது போலவே, தனிமனிதருக்கான திறமை வளர்க்கும் போட்டிகளாகப் பனிரெண்டு வகைகளாக உள்ளன. அத்தனையும் தனி ஒருவருக்குத் தருகின்ற சிறப்பு வாய்ப்புக்களாகும்.

தனிநபர் போட்டி ஆட்டங்கள்

1. ஓடுகளப் போட்டிகள் (Athletic Sports)

(உ.ம்) ஒடும் போட்டிகள், தாண்டும் போட்டிகள் மற்றும் எறியும் போட்டி நிகழ்ச்சிகள் முதலியன.

2. பனிச்சறுக்குப் போட்டிகள் (Snow & Ice Sports)

(உ.ம்) பனிச்சறுக்குப் போட்டி, பனி மீது படகோட்டல் போன்ற ஆட்டங்கள்.

3. நீர்ப்போட்டிகள் (Water Sports)

(உ.ம்) நீச்சல், அழகாகத்தாவி முக்குளித்தல் (Diving) சிறுபடகு விடுதல் தோணிவிடுதல் முதலியன.

4. குதிரை மீதமர்ந்து போட்டிகள் (Equestrian Sports)

(உ.ம்) குதிரைப்பந்தயம், போலோ, குதிரைத்தாண்டல்கள் முதலியன.

5. வேட்டைப்போட்டிகள் (Blood Sports)

(உ.ம்) நரிவேட்டை, புலிவேட்டை, மான்வேட்டை போன்றவை.

1. ஆடுகளப் போட்டிகள் (Field Sports)

(உ.ம்) ஒற்றையர் ஆட்டப்போட்டிகள் பூப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், டென்னிஸ், கேரம் மற்றும் மான் விரட்டும் போட்டி, மலையேற்றம் முதலியன.

7. துவந்தப் போட்டிகள் (Combat Sports)

(உ.ம்) குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, கராத்தே, கத்திச்சண்டை போன்றவை.

8. குறியோடு எய்யும் போட்டிகள் (Target Sports)

(உ.ம்) வில்வித்தை, மண்புறா சுடுதல், துப்பாக்கிச் சுடுதல், போன்றவை

9. வான்வெளிப் போட்டிகள் (Air Sports)

(உ.ம்) பாராசூட் பறத்தல், பலூன் மூலம் பறத்தல்; சறுக்கி விழுதல் போன்றவை,

10. மோட்டார் ஒட்டும் போட்டிகள் (Motor Sports)

(உ.ம்) மோட்டார் வேகமாக ஓடும் போட்டிகள், சைக்கிள் மோட்டார் போட்டிகள் முதலியன.

11. சீருடற்பயிற்சி போட்டிகள் (Gymnastic Sports)

(உ.ம்) குட்டிக்கரணம் அடித்தல், கம்பி மீதாடும் போட்டிகள் துள்ளும்பாய் போட்டிகள் (Trampolining)

12. பல்வகைப் போட்டிகள் (Miscellaneous Racing Sports)

(உ.ம்) சைக்கிள் போட்டி, புறாப்போட்டி, நடைப் போட்டி, முயல் ஒட்டப் போட்டி, நாய் ஒட்டப்போட்டி முதலியன.

மனிதர்கள் தங்களுக்கிடையே மட்டும் போட்டிகள் நடத்தி மகிழ்வதுடன் நின்றுவிடாமல், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், புறாக்கள், நாய்கள், பன்றிகள், சுண்டெலிகள், கரப்பான் பூச்சிகள், நத்தைகள் இவைகளுக்கிடையே போட்டிகள் நடத்தியும் மகிழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

மிருகங்கள் மட்டும் அவர்கள் இலக்காக இல்லாமல், எந்திரங்களையும், முனைப்பாக வைத்து ஆடுவதில் மும்மரமாக இருந்திருக்கின்றனர்.

ரதங்கள், பலூன்கள், ஏரோபிளேன்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சைக்கிள்கள், பலவித வடிவம் உள்ள படகுகள், மற்றும் உருளையிலிருந்து போட்டிகள் போன்றவற்றில் உயிர் போனாலும் பரவாயில்லை, போட்டிதான் பிரதானம்' என்ற அளவிலே போட்டியிட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

ஆகவே அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் எல்லாம் தனிப்பட்ட மனிதரின் திறமையை வளர்க்க, வெளிப்படுத்த , திறமையுள்ளவர்களோடு போட்டியிட்டுத் தமது திறமையை தெரிந்து கொள்ள, புது உத்திகளுடன் பெருக்கிக்கொள்ள, எவ்வளவு முடியும் என்று தமது திறமையின் எல்லை காண உதவின. உற்சாகம் ஊட்டின.

இத்தகைய பெருமை மிக்க விளையாட்டுக்களில் பங்குபெறுவோர் பெறுகின்ற பயன்கள், பண்பாடுகள், புத்திசாலித்தனங்கள், பேரின்பச் சூழல்கள் பற்றி இனிவரும் தலைப்புகள் மூலமாக நாம் தெரிந்து கொள்வோம்.

அர்த்தம் புரியாமல் விளையாட்டுக்கள் பற்றி அனர்த்தமாகப் பேசும் அப்பாவி அறிவிலிகள், இனிமேலாவது புரிந்து கொண்டு, தாங்களும் விளையாட்டுக்களில் பங்கு பெற்று, பலருடன் பழகி, பல்வேறு இன்பமயமான சூழ்நிலைகளில் வதிந்து, வாழ்வில் பெறும்பேறுகள் அனைத்தும் பெற விரும்புகிறோம். வாழ்த்துகிறோம்.