அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/பணிவு கனிவு துணிவு

விக்கிமூலம் இலிருந்து
10. பணிவு! கனிவு!! துணிவு!!!

இந்த மண்ணுலகை ஆள்கின்ற ஆதிக்கம் படைத்த சக்திகள் இரண்டு. ஒன்று பொருள். மற்றொன்று புகழ்,

ஒன்றை வைத்து ஒன்றைப் பெற்று, இந்த இரண்டுக்குள்ளும் எண்ணியதை எல்லாமே பெறுகின்ற முனைப்பிலும் முயற்சியிலும் தான் மக்கள் மாறாத மனத்தோடு உழல்கின்றார்கள்.

வந்த சுவடு தெரியாமல் வாழ்ந்து போவது மனித வாழ்வல்ல என்பதை எல்லோரும் அறிந்தே இருக்கின்றனர்.

இருக்கின்ற காலம் வரை சிறக்கின்ற காலமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதையும் யாரும் மறப்பதுமில்லை.

அப்படி சிறப்போடும், பொறுப்போடும், மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் ஒருவர் வாழ வேண்டும் என்றால், ஒருவர் கடை பிடிக்க வேண்டிய பண்புகள் மூன்று உண்டு. அவைதான் பணிவு கனிவு துணிவு என்பனவாகும்.

பண்பாட்டின் முதிர்ச்சி பணிவு. அன்பின் முதிர்ச்சி கனிவு. ஆண்மையின் முதிர்ச்சி துணிவு. ஒருவரை வாழ் வாங்கு வாழ வைக்க இம் மூன்று பண்புகளும் முக்கியமானதல்லவா!

பண்பு: `பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்பது புறநானூற்று வரியாகும். சூழ்நிலையறிந்து, சுற்றுப் புறம் தெளிந்து' சூழ்ந்திருப்போர் தன்மைகளை உணர்ந்து, பக்குவமாக ஒழுகுதல் தான் பண்பாகும்.

ஒருவர்க்கு அணி என்பது பணிவு தான் என்கிறார் வள்ளுவரும்.

ஏன் ஒருவருக்குப் பணிவு வேண்டும்? என்றால் பணிவு என்பது வெற்றியை வழங்கும் தாயாக விளங்குவதால் தான். அதோடு மட்டுமல்ல, ஒருவரை பத்திரமாக வழி நடத்தி, வாழவைக்கும் பாதுகாப்புச் செவிலியாகவும் விளங்குகிறது .

பணிவு என்பது உள்ளத்தோடு இணைந்து, இயைந்து பின் செயலாகப் பரிணமிப்பது நல்லவர்களும், அறிவாளிகளும். இதனை தாங்களாகவே செய்கிறார்கள் அது. தான் பண்புடமையாகும்.

நீதி தவறி நடப்பவர்கள், நெறிமாறிச் செல்பவர்கள் பணிகிறார்கள். எப்பொழுது? பயத்தால். தண்டனைக்குப் பயந்து. அதிகாரத்திற்குப் பயந்து.

நல்லவர்களோ அன்புக்கு மட்டுமே பணிகிறார்கள். ஆணவத்திற்கும் அதிகாரத்திற்கும் அவர்கள் பயப்படுவதேயில்லை.

பிறரிடம் பணிவாக நடக்க வேண்டும் என்பது தருமத்தின் தலையாய கொள்கை, ஆண்டவன் அளித்த சட்டங்களில் அதுவே முதலாவதாகவும் இருக்கிறது.

ஏன் பணிவினை இவ்வளவு வற்புறுத்துகிறார்கள் என்றால், பணிவுஎன்னும் குணமானது இயற்கையானது. உணர்வுகளுடன் இரண்டறக் கலந்ததாகும். ஒருவரை பத்திரமான

பாதையில் பயணம் போகவைக்கின்ற பக்குவத்தை அளிப்பதாகும். அத்துடன் பணிவானது. மனதுககு இதத்தையும் இன்பத்தையும் அளிப்பதாகும்.

கனிவு: அன்பின் முதிர்ச்சியையே கனிவு என்கிறோம். இந்தக் கனிவுதான் மனித வாழ்க்கையின் அடிப்படையாக இருந்து மக்களை வழி நடத்திச் செல்கிறது.

கனிவானது மின்னலைப் போன்றதாகும். மின்னல் எங்கு எப்போது எப்படித் தோன்றுகிறது என்பது யாருக்குமே தெரியாது. அதுபோல் தான் மனித மனம் என்னும் வானில் கனிவு என்னும் மின்னல் எப்பொழுது ஒளிக்கீற்றை வெளிப்படுத்துகிறது என்பதும் புரிந்துகொள்ள முடியாத விந்தை தான்.

இந்தக் கனிவானது எப்பொழுதும் மென்மை மிகுந்தது அறிவோடு உறவானது.

கனிவு என்பது பொதுமொழியாகும். இது விளையாட்டு போல பொதுமொழி மட்டுமல்ல. புதுமையான மொழியாகும்.

இந்தப் புதிய மொழியை ஊமையும் பேசலாம், செவி டரும் கேட்கலாம். உணரலாம். உய்த்து இன்புறலாம்.

இப்படிப்பட்ட கனிவு மொழியைக் கையாளுபவர்கள் மற்றவர்களுடைய மனங்களை வலை வீசிப் பிடித்து விடலாம். வெற்றி கொண்டுவிடலாம். அத்துடன் நில்லாது, பிறருடைய கைகளைக் குலுக்கலாம். அவரது பணத்தையும் கூட எளிதாகப் பெறலாம்.

கனிவுக்கு அத்தகைய ஆற்றல் நிறைந்திருக்கிறது, இந்த உலகத்திலேயே அதிக சக்தியும் வலிமையும உள்ளது கனிவு தான் என்கிறார்கள்.நம்பமுடியவில்லை தானே! ஏசு,

புத்தர், காந்தி இந்த கருணையைத்தானே கையாண்டு உலக மக்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.

கனிவாகப் பேசுவதைக் கனி என்றும், கடுமையான சொல்லைக் காயாகவும் வள்ளுவர் இதனால்தான் உவமித்துக் கூறுகின்றார்.

"கனிவாகப் பேசும் பொழுது, நாக்குக்குக் காயம் எதுவும் பட்டுவிடாது" என்று கூறுகிறது பிரெஞ்சுப் பழமொழி ஒன்று. ஆகவே, கனிவு என்பது அன்றாட வாழ்வுக்கு அவசியமானது என்பதை நாம் அனுசரித்துத் தானே ஆக வேண்டியிருக்கிறது.

துணிவு: ஆண்மையின் முதிர்ச்சி தான் துணிவு என்றோம். எடுத்ததெற்கெல்லாம் துள்ளிக் குதித்து அடிதடியில் இறங்குவது, சலசலப்புக்கு ஆட்படுத்துவது என்பதெல்லாம் ஆண்மையுமல்ல. துணிவும் அல்ல.

துணிவு என்பதற்கு அஞ்சாமை என்பார்கள். எதற்கும் அஞ்சாததற்குத்தான் துணிவு என்று அழைக்கிறார்கள். ஆனால், அஞ்சுவதற்கு அஞ்சுவது அறிவுடைமை என்ப தனையும் தாம் உணர்ந்து கொள்ள வேண்டும்,

எது சரி, எது தவறு என்பதை உணர்ந்து நடப்பது. தவறுக்காகப் போராடுவது, சரியானதற்காகத் துணை செல்வது இது தான் துணிவாகும்.

உடலால் ஆத்திரப்பட்டு செயல்படுதல் என்பது துணி வல்ல. அது மிருக நடைமுறையாகும். தாக்குதல் மட்டுமே துணிவல்ல. மனதால் உரத்துடன், பண்புடன் செயல்படுவது தான் உண்மையான துணிவாகும்.

இந்தத் துணிவு, பண்பான மனசாட்சியிலிருந்து தான்

. தொடர்கிறது. திறம் பெறுகிறது.

அ.வி.-5

"எந்த ஆபத்துக்கும் நான் அஞ்ச மாட்டேன்' என்பது துணிவுடைமை அல்ல. அது முட்டாள் தனமான துணி வாகும்.

சூழ்நிலைகளை அனுசரித்து, மன உறுதியுடன் போராடி, அந்த போராட்டத்தில் இறுதியாக வெற்றி பெறும் ஆற்றலே துணிவாகும்.

இந்த இனிய மூன்று பண்புகளையும் ஒருவர் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தானே எல்லா பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த சமுதாயமும் எதிர்பார்க்கிறது,

இவ்வினிய பண்புகளை வளர்க்க ஏற்ற இடம் விளையாட்டு மைதானம் தான் என்றால், ஆச்சரியப்படுபவர்கள் தான் அதிகம். பணிவும் கனிவும் துணிவும் போட்டியிட்டு வளருமிடம், போட்டிகளை வளர்க்கும் சூழ்நிலைகளை உரு வாக்கும் ஆடுகளங்கள் தாமே!

எதிராட்டக்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் பணிவாகப் பழகுதல், கனிவாக உரையாடுதல், உறவாடுதல், துணிவோடு அவர்களுடன் போராடுதல் அங்கே தானே நடைபெறுகிறது.

விளையாட வருகின்றவர்களை நண்பர்களாக முதலில் வரவேற்றல், அன்பர்களாக அவர்களை உபசரித்தல்: அவர்களை மதித்தல்: அவர்களுடைய திறமைகளைப் பற்றிப் பேசுதல், நல்ல திறமைகளுக்கு மதிப்பளித்தல் இவையெல்லாம் பணிவான பண்பினை வளர்க்கும் பெருமைக்குரிய நிமலையாகும்.

ஏழையோ, பணக்காரரோ, அதிகார வர்க்கமோ அடிபணிந்து வேலைசெய்யும் குடும்பமோ- யார் எங்கிருந்து வருகின்றார்கள் என்று பார்க்காமல், திறமைக்கு

மதிப்பளித்து, ஏற்பதுபோல பகைவர்களாக விளையாடுபவர்களை நேசிக்கும் பக்குவமும் விளையாட்டில் தான் விளைகின்றது.

தன்னைத் தோற்கடிக்க வருபவரையே வரவேற்பதும், அவர்களுடன் அன்புடன் பழகுவதும், அவர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பதும், அவர்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதுபோல பண்பாட்டுடன் நடந்து கொள்வதும் விளையாட்டு உலகில் நடைபெறும் விந்தை நடை முறைகளாகும்.

நேர்மையுடன் நல்ல காரியங்களுக்குப் போராடுவதைத் தான் துணிவு என்கிறோம். நம்மைவிட ஆற்றல் மிக்கவர்களிடமும், தோற்றுப்போவோம் என்று தெரிந்துகொண்ட பிறகும், கடைசிவரை, விடாமுயற்சியுடன் வெல்வோம்" என்று நம்பிக்கை உணர்வுடன் போராடும் அஞ்சாமைதான் விளையாட்டுத் துணிவாகும்.

தான் தோற்கடிக்கப்படும் போது உண்டாகும் கோபம், வெட்கம், எரிச்சல் ஆகிய உணர்வுகளையும் அடக்கி, தொடர்ந்து தூய்மையாகப் போராடவேண்டும் என்ற இலட்சிய ஒழுக்கத்துடன் விளையாடும் பண்பு தான் விளையாட்டுப் பண்பாகும். அதைத்தான் விளையாட்டுப் பண்பாடு என்கிறோம்.

அறிவோடு ஆற்றலோடு காரியத்தைச் செய்தல்; ஆத்திர உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுதல்; அடுத்தவர்களை மதித்தல், எதிரிகளை நேசித்தல்; அவர்கள் இழைக்கின்ற தவறுகளை மன்னித்தல்; தோல்வியை சகித்துக் கொள்ளுதல், பிறரது திறமைகளைப் பாராட்டுதல்; தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் வெற்றிக்காகக் கடைசி

வரை பாடுபடுதல்; எல்லாம் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கே அதிகம் கிடைக்கிறது.

இப்பண்புகள் எல்லாம் பணிவு, கனிவு, துணிவு என்கிற மூன்று பண்புகளிடையே மிளிர்கின்றன.

ஒருவரை சமுதாயத்தில் உயர்த்தி, உன்னதமான வாழ்வினை வாழச்செய்ய முயலும் விளையாட்டுக்கள் எல்லாமே அர்த்தமுள்ளவைகளாகவே விளங்குகின்றன.

இப்படிப்பட்ட இனிய வாழ்வுக்காக நாம் அனைவரும் விளையாட்டுக்களில் பங்கு பெற்று. வளமார்ந்த வாழ்வு வாழ முயல்வோமாக!