திருவிளையாடற் புராணம்/01

விக்கிமூலம் இலிருந்து



திருவிளையாடற் புராணம்


1. இந்திரன் பழி தீர்த்த படலம்


சசியைப் பெற்று சாயுச்ய பதவி தாங்கிய இந்திரன் தன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருந்தான். அரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய ஆடல் மகளிர் நாட்டியம் ஆடினர் ; இசைக்கலைஞர் பலர் பாடல் பாடினர்; தேவர்கள் ஆடற் கலையையும் பாடற் கலையையும் நாடகக் கலையையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். இந்திரனும் அவ் இசைக் கலையிலும் நாட்டியத்திலும் மூழ்கிக் கிடந்தான். அவன் ஆசிரியராகிய வியாழன் என்று கூறப்படும் பிரகஸ்பதிவந்ததையும் அவன் கவனிக்கவில்லை. தையலர் அழகில் மையல் கொண்டிருந்த இந்திரன் ஐயன் ஆகிய ஆசிரியன் வந்ததையும். பொருட்படுத்தவில்லை; "வருக" என்று கூறி வரவேற்க வில்லை; "அமர்க" என்று கூறித் தன் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; களிப்புக் கடலில் மூழ்கிக் கிடந்தவன் விழிப்புத் திடலில் இருந்து செயல்படவில்லை.

பார்த்தார் ஆசிரியர்; சினத்தில் வியர்த்தார். மதியாதார் வாசல் மிதித்தது மரியாதைக் குறைவு என்று எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டார். அவர் சென்றதும் அவன் திடுக்கிட்டான். ஆசிரியர் எங்கே என்று கேட்டான்.

"தெரியவில்லை" என்று சொல்லிவிட்டார்கள்.

"தேடி அவரைக் கண்டு அழைத்து வாருங்கள்" என்றான்.

"அவரை அவமானப்படுத்திவிட்டேன்" என்று கூறி வருந்தினான்.

அதுமுதல் இந்திரனின் செல்வம் குறைந்து கொண்டே வந்தது; மதிப்பும் தாழ்ந்து கொண்டே வந்தது; பொலிவும் நலிந்து கொண்டே வந்தது; தேவர்களும் வளமான வாழ்வை இழந்து கொண்டே வந்தனர். போக பூமி சோக பூமி ஆகியது. காரணம் என்ன? ஆசிரியனை மதிக்காமல் நடந்து கொண்டதே என அறிந்தான். என் செய்வது? யாரிடம் சென்று முறையிடுவது? படைத்தவன் தான் துயர் துடைப்பான் என்று தன்னிலும் மேலான படைப்புக் கடவுளாகிய நான்முகனைச் சந்திக்கச் சத்தியலோகம் சென்றான். கலைமகள் வீற்றிருக்கும் நாவினைப் படைத்த பிரமன் இவனைக் கண்டு நலம் விசாரித்தான்.

"செல்வம் குன்றி சொர்க்க லோகம் பொலிவிழந்து வருகிறது" என்றான் இந்திரன்.

பிரமன் கையில் வேதம் படித்துக் கொண்டிருந்தான்.

"நாணய மதிப்புக் குறைந்து விட்டதோ?" என்றான். நா நயம் குறைந்துவிட்டது” என்று பதில் சொன்னான்.

"பா நயத்தில் நீ பகர்வது என்ன? நடந்தது என்ன?”

"நாட்டிலே உழைப்புக் குறைந்து விட்டது; உற்பத்தி பெருக்காமல் அனைவரும் நாட்டியம் கூத்து இது போன்ற கலைகளுக்கு ஆட்பட்டுவிட்டனர்; அளகைவேந்தன் குபேரனிடத்தில் இந்த அமராவதியையே அடகு வைக்க வேண்டியதாகிவிட்டது" என்றான்.

"காரணம்?"

"இன்பத்தில் மூழ்கிக் கிடந்த நாட்களில் இணையற்ற ஆசிரியர் வந்த போதும் அவரை மதிக்கவில்லை; ஆசிரியர் இல்லாமல் வேள்விகள் நடத்த முடியவில்லை; வேள்வி இல்லை என்றால் வேத முழக்கமும் இல்லை; அறம் குன்றி விட்டது; அதனால் சோம்பலும் பெருகிவிட்டது. தேவர்கள் உற்சாகமின்றs உலவுகின்றனர்"

"இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?"

"வேள்விகள் நடத்தக் கல்வித் தேர்வு மிக்க ஆசிரியர் ஒருவரை நீங்கள் அனுப்பி வைத்து உதவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

ஆசிரியனை மதிக்காத இவனுக்குத் தக்க பாடம் கற்பித்துத் தர வேண்டும் என்று யோசனை செய்தான். அவன் செய்த தவற்றை உணர வேண்டும் என்பதற்காக அசுர குரு ஒருவனை அவன்பின் அனுப்பி வைத்தான்.

"வியாழன் வரும் வரை காத்திரு சனியன் விலக ஞாயிற்று ஒளி தேவைப்படுகிறது. உன் வறுமை ஒழிய அதுவரை அசுர குருவை வைத்து யாகம் நடத்து" என்று அறிவித்தான்.

வந்தவன் மூன்று சிரங்களை உடையவனாக இருந்தான். இந்த விபரீத பிறவி கண்டு வியந்தான்.

"இவன் பெயர்?" "விசுவரூபன்" என அறிந்தான்.

ஆசிரியனுக்குரிய அடக்கம் சால்பு இவனிடம் காணப் படவில்லை. என்ன செய்வது? அவனைக் கொண்டு ஒரு வேள்வி நடத்துவது என்று தீர்மானித்தான்.

"குருவே! வேள்வி ஒன்று நடத்தித் தருக" என்று வேண்டினான். அதற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் வந்து குவிந்தன. யாகக் குழியில் தீ மூட்டப்பட்டது; நெய்க்குடங்கள் வந்து மொய்த்தன. ஓமகுண்டத்தில் அவி சொரிந்து வேள்விச் சடங்குகளைச் செய்தான். "இந்திரனுக்கு நன்மை உண்டாகுக" என்று சொல்லி மந்திரம் சொல்ல வேண்டியவன் தந்திரமாக "அசுரர்க்கு நலம் பெருகுக" என்று சொல்லிக் கொண்டான். இந்திரன் இதை அறிந்தான்.

"சாதி புத்தி இவனை விட்டு அகலவில்லை; நீதி நெறி முறைகளை இவன் கை விட்டான்; என் பொருட் செலவில் நடத்தும் இவ்வேள்வியைத் தனக்குப் பயன் படுத்துகிறான்" என்று சினந்து அவன் மூன்று தலைகளையும் இலைகளைப் போலக் கொய்து களைந்தான். அம் மூன்று தலைகளும் உயரப் பறந்தன. அவை மூன்றும் காடையும் ஊர்க்குருவியும் சிச்சிலிப் பறவையும் எனப் பறந்து மறைந்தன.

ஆசிரியனைக் கொன்ற பாவம் இந்திரனைச் சூழ்ந்து கொண்டது; அது ஒரு பூதம் போல் உருவெடுத்து இவனை மருட்டியது; எங்குச் சென்றாலும் அவனைத் தொடர்ந்து விரட்டியது; சேற்றிலே கால் வைத்தவன் சறுக்கி விழுந்த கதையாயிற்று. தேவர்கள் தம் தலைவனைக் காக்க வழியில்லாமல் தவித்தனர். அந்த பாவத்துக்குப் போக்கிடம் தேடினர். அப்பாவத்தை அவர்கள் தெய்வபலத்தால் திசை மாற்றித் திருப்பிவிட்டனர்.

அது பெண்ணின் பூப்பிலும், நீரின் நுரையிலும், மண்ணின் உவர்ப்பிலும், மரத்தின் பிசினிலும் பாய்ந்தது; அவனை விட்டு விலகியது. தீமையைத் தாங்கிய-இந் நால்வரும் தேவரை அணுகி இதனால் தமக்கு என்ன நன்மை என்று கேட்டனர்.

பூப்படைந்த பாவையர் புதுப்பொலிவோடு விளங்கிக் கணவனின் சேர்க்கையைப் பெறுவர் என்று கூறப்பட்டது. நுரையை ஏற்ற தண்ணிர் இறைக்க இறைக்க ஊறும் என்றும், மண் தோண்டத் தோண்ட அக் குழிகள் புதிய மண் கொண்டு நிரப்பப்பெறும் என்றும், மரம் வெட்ட வெட்டத் தழைக்கும் என்றும் கூறப்பட்டன. பிறர் துன்பம் துடைப்பவர் தாம் இன்புற்று வாழ்வர் என்னும் நியதிக்கு இவர்கள் இலக்காயினர்.

பாவச் சுமை நீங்கிய தேவர்களின் தலைவன் மீண்டும் ஆட்சி ஏற்று மாட்சி பெற வாழ்ந்தான்; இழந்த செல்வம் மீண்டும் நிலை பெற்றது; தொடர்ந்த பாவமும் அவனை விட்டு நீங்கியது; எனினும் பழி மட்டும் விடவில்லை; செத்த அசுரனின் தந்தை துவட்டா என்னும் துஷ்டன் பழிக்குப் பழிவாங்க நினைத்தான். விஞ்ஞான உலகத்தைவிடப் புராண உலகம் ஆற்றல் வாய்ந்ததாக விளங்கியது மந்திர சக்தியால் எதையும் சாதிக்க முடிந்தது. விஞ்ஞானம் ஆக்கத்திற்கும் பயன்படுகிறது: அழிவிற்கும். அதே போலத்தான் அக்கால வேள்விகளும் யாகங்களும். வேள்வி என்பது வேண்டுவதைப் பெறுவதற்காகச் செய்யப்படுவது. யாகம் என்பது உலக அறம் ஓங்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது. இந்த அசுரன் அழிவு வேள்வி ஒன்று செய்தான்; அதில் ஒரு பூதத்தை வர வழைத்தான்; விருத்திராசுரன் என்பது அப் பூதத்தின் பெயராகும்.

"ஐயா! எனக்கு இடும் கட்டளை யாது?" என்று கேட்டான்.

"நீ இந்திரனைச் சென்று அழிக்க வேண்டும்" என்று கட்டளை இட்டான்.

விருத்திராசுரன் இந்திரனைத் துரத்தித் துரத்தி அடித்தான்; இந்திரனின் குலிசப்படை மிகவும் பழையதாகிவிட்டது; அதனை வச்சிரப்படை என்றும் கூறுவர். அதனால் அந்த அசுரனை இந்திரனால் வெல்ல முடியவில்லை; உயிர் தப்பிச் செல்லவும் முடியவில்லை. புதிய படைக் கருவி கிடைத்தால்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்தான்.

ஆபத்துக்கு உதவும் படைப்புக் கடவுளிடம் மறுபடியும் சென்று முறையிட்டான். "இந்திரப் பதவி கொடுத்தீர். ஆனால் போதிய படைபலம் இல்லாமல் இருக்கிறேன்; பயங்கரவாதிகள் என்னை எளிதில் தாக்கி விடுகின்றனர்; புதிய படைக்கருவி தேவைப்படுகிறது" என்றான்.

"என்னுடைய தொழில் படைத்தல்தான்; காத்தல் கடவுள் வேறு இருக்கிறார். திருமாலின் துறை அது. அவரிடம் சென்று இருவரும் முறையிடுவோம் வா" என்று கூறி இந்திரனை அழைத்துச் சென்றான்.

பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனிடம் நூற்கடல் கண்ட பிரமனும் அமுதக் கடலில் திளைத்த இந்திரனும் சென்று தம் குறையைத் தெரிவித்தனர். அறிதுயிலில் அமர்ந்திருக்கும் அரிக்குப் பழைய நினைவுகள் வந்தன.

"தேவர்களும் அசுரர்களும் பகை மறந்து கடலில் அமுதம் கடைய ஒன்றுகூடித் திருமாலை அடைந்தனர். அப்பொழுது அவர்கள் படைகளை வைத்துவிட்டுக் கடைதல் தொழிலுக்கு வரவேண்டும் என்று சொல்லத் தவம் செய்து கொண்டிருந்த ததீசி முனிவரிடம் இருவரும் தம்தம் படைக்கருவிகளை ஒப்படைத்துவிட்டுப் பாற்கடல் கடைதலுக்கு வந்துவிட்டனர். அமிர்தம் பெற்ற மகிழ்ச்சியில் தாம் விட்டுவைத்த கருவிகளைக் கேட்டுப் பெற மறந்தனர்.

வைத்தவர் திரும்பி வருவார்கள் என்று காத்திருந்த முனிவர் அலுத்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டி இருந்தது. அவற்றை விழுங்கி விட்டார். அவை அத்துணையும் உருண்டு திரண்டு அவர் முதுகு தண்டமாக உருவெடுத்துள்ளது. யோக தண்டத்தை வைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டியிருந்த ததீசி முனிவரிடம் சென்று அதனைக் கேட்டுப் பெறலாம்; அவர் இல்லை என்ற சொல்ல அறியமாட்டார்" என்று திருமால் அவர்களுக்கு அறிவித்தார்.

ஈத்துவக்கும் இன்பம் அறிந்த அச்சான்றோன் தேவர்களின் நல்வாழ்வுக்காகத் தன்னை அழித்துக்கொண்டு முதுகு தண்டினைத் தானமாக அளிக்க முன் வந்தான். யோக நிலையில் நின்று மூச்சை அடக்கிக்கொண்டு பிரமகபாலம் வெடிக்க அதன் வழியாகத் தன் உயிருக்கு விடுதலை தந்தான். உயிர் நீத்த அம்முனிவனின் மெய்யுடல் கீழே சாய்ந்தது. அவன் முதுகின் தண்டினை முறித்து தேவ தச்சனிடம் தந்து வச்சிரப்படை ஒன்று செய்து கொண்டான். வயிரம் பாய்ந்த அப்புதிய வாட்படை பகைவர்களைத் தகைப்பதற்கு உகந்ததாக விளங்கியது.

வாலியால் தோற்று ஓடிய அவன் தம்பி சுக்கிரீவன் மறுபடியும் அவனைப் போர்க் களத்தில் சந்தித்தது போல இந்திரன் அசுரன் இருக்குமிடம் தேடிப் போருக்கு அழைத்தான். வேள்விப் படைப்பில் தோன்றிய அந்த அசுரன் இந்திரனின் புதிய தாக்குதலுக்கு முன் நிற்க முடியாமல் பெருமரம் முறிந்து விழுந்ததைப்போல அலமரல் உற்றுச் சரிந்து விழுந்து சாய்ந்தான்.

கதை முற்றுப்பெறவில்லை. தொடர் கதையாகியது. மறுபடியும் கொலைப்பாவம் வந்து இந்திரனை அலைத்தது. ஓடினான் ஓடினான் ஓட ஓட அது விரட்டத் தொடங்கியது. மருட்டி அவனை வாட்டியது. உயிர் தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்துகொள்ள இடம் தேடினான். தண்ணீர்க் குளத்தில் தாமரைத் தண்டு ஒன்றில் நுண்மையான வடிவு கொண்டு புகுந்து ஒளிந்து கொண்டான். அவனுக்காக அங்கேயே கரையில் அந்தப் 'பாவம்' காவல் காத்துக் கிடந்தது. தேவர்கள் ஆட்சிக்குத் தலைவன் இல்லாமையால் அவர்கள் புதிய தலைவனைத் தேடினர்.

பாரதக் கதையில் வரும் சந்திர குலத்து அரசன் ஒருவன் நகுடன் என்பவன் நூறு வேள்விகள் செய்து இந்திரப் பதவிக்குத் தகுதியுடையவன் ஆக ஆக்கிக்கொண்டான். இங்கே இந்திரப் பதவி இடம் காலியாக இருந்தது. தேவர்கள் சென்று அழைத்து வந்தனர். இந்திரப்பதவி என்றாலே சுந்தரியாகிய இந்திராணியை அடைவதில் ஆர்வம் காட்டினான். செய்தி அறிந்த இந்திராணி செய்வது அறியாது திகைத்தாள். தேவ குருவாகிய பிரகஸ்பதி "கவலைப்படத் தேவையில்லை; அவனைப் பல்லக்கில் வரச்சொல், பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லி ஆறுதல் தந்தார்.

"இந்திரனாக இருந்தால் அவன் பல்லக்கில் வருவது வழக்கம். அவ்வாறு புதிய இந்திரனை வரச்சொல்" என்று அழைப்பு விடுத்தாள். ஆசை அனல் அளவு அதிகம் ஆகியது. அவன் அறிவு மங்கியது. பதவிக்கு வருபவர் அதனை ஒரு புனிதப் பணியாகக் கொள்ளாமல் ஒழுக்கக் கேட்டுக்குப் பயன்படுத்துவதில் அவன் விதி விலக்கல்ல. கற்பு பெண்ணின் தனி உரிமை: அதை அவள் பறிகொடுக்கும் சூழ்நிலைக்கு அவள் ஆளாயினாள். பாரதக்கதையில்வரும் பாஞ்சாலி துரியன் முன் செல்லும் நிலையை அவள் அடைந்தாள்.

துரியோதனாதியர் கொடுமைக்கு அஞ்சிக் கண்ணனிடம் முறையிட்ட பாஞ்சாலி திரெளபதி போல இவள் ஆசானிடம் முறையிட்டாள். அவர் துச்சாதனின் துகிலுரிப்பில் இருந்து திரெளபதியைச் காப்பாற்றிய கண்ணனைப் போல சமயத்துக்கு வந்து உதவினார்.

"வருக என்று சொல்லி அவனுக்கு அழைப்பு விடுக" என்றார்.

வழக்கப்படி இந்திராணியிடம் செல்பவர் முனிவர் எழுவர் தாங்கும் பல்லக்கில் வருவது வழக்கம். அவ்வாறே அவனும் வந்தான்.

"கைக்கு எட்டியது" என்று அவன் தருக்குக் கொண்டான்

முனிவர்கள் கற்றவர்கள்; சபிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்; அவர்களிடம் இவன் ஆணை செல்லாது; அவர்களை மதிக்காமல் செல்க விரைவில் என்றான். விரைவில் என்பதற்கு "சர்ப்ப" என்று கூறினான். சர்ப்ப என்ற சொல்லுக்குப் பாம்பு என்ற ஒரு பொருளும் உண்டு. 'சர்ப்ப' என்றதும் அவனைச் "சர்ப்பமாகுக" என்று எழுவருள் தலைவரான அகத்தியர் அவன் வேண்டுகோள்படி சாபமிட்டார். ஏணிப்படியில் அடி எடுத்து ஏறியவன் பாம்பின் வாயில் விழுந்து பரமபத நிலையில் இருந்து பாதாள உலகத்தை அடைந்தான். மண்ணுலகில் விழுந்து பாம்பாகப் புரண்டு இந்திரப் பதவியை ஒரு நொடியில் இழந்துவிட்டான். உயர் பதவியில் இருக்கிறவர் விழிப்போடு நடந்து கொள்ளாவிட்டால் எவ்வாறு பெரிய இழப்புக்கு உரியவர் ஆவார் என்பதற்கு அவன் செயல் படிப்பினையாக அமைந்தது.

நகுடனை இழந்தவர்கள் மறுபடியும் இந்திரன் வேண்டுமே என்று தேடினர்; புதிய தலைவனைக் கொண்டு வந்தால் புதிய சிக்கல்கள் உண்டாகின்றன. அதனால் பழைய தலைவனே தேவை என்பதை உணர்ந்தனர். அதனால் பிரகஸ்பதியைத் தேடி அவரிடம் முறையிட்டுத் தம் தலைவன்செய்த தவற்றைமன்னித்து அவனைக் காக்கும்படி வேண்டினர்.

தாமரைத் தண்டில் ஒளிந்து கிடத்த அமரர் கோனை ஆசிரியர் அழைத்து எழுந்து வரச் செய்தார்; எனினும் அப்பாவம் அவனை விடுவதாக இல்லை; என் செய்வது ஆசிரியர் அதற்குரிய வழியைச் சொன்னார்.

தேவர்கள் பதவி அடைந்தவர்களாக இருக்கலாம். என்றாலும் புண்ணியம் ஈட்டுதற்கு மண்ணுலகமே தக்கதாகும் என்று கூறினார். வேட்டை ஆடுவது போலப் பூமியில் சென்று பல இடங்களும் குதிரை ஏறிச் சுற்றிவர் பாரத பூமியில் புண்ணியத் தலங்கள் பல உண்டு; அவற்றுள் தக்க ஒன்றில் நீ காலடி எடுத்து வைத்தால் நீ செய்த பாவம் உன்னை விட்டு நீங்கும்; புடத்தில் இட்ட பொன் என ஒளி பெறுவாய்" என்று கூறினான்

இந்திரனைத் தன் குருவும் தேவர்களும் சூழ்ந்து வரக் கைலாய மலை தொடங்கித் தெற்கு நோக்கிப் பல தலங்களையும் கண்டு வழிபட்டுச் சென்றான். கடம்பவனம் வந்து அடைத்ததும் தென்றல் காற்றுபட்டதும் சுகம் ஒன்று கண்டான்; பாவச் சுமை தன்னைவிட்டு நீங்கியமையை ஆசிரியனுக்கு அறிவித்தான். "இந்த மகிமைக்குக் காரணம் அத்தலத்தில் ஏதாவது அற்புதம் இருக்க வேண்டும்" என்று அறித்தார். இதற்குத்தல விசேஷமே காரணமாக இருக்க வேண்டும் என்றார். மூர்த்தியும் தீர்த்தமும் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். சிவலிங்கமும், தீர்த்தக் குளமும் இருக்குமிடம் அறிந்து செயல்படுங்கள்" என்று கூறினார்.

ஏவலரும் காவலரும் எடுபிடி ஆட்களும் நான்கு திசையும் சென்று துருவித் தேடினர். என்னே அவர்கள் கண்ட காட்சி சிவலிங்கமும் பொற்றாமரைக் குளமும் இருக்கக் கண்டனர்.

கோயில் வழிபாட்டுக்குரிய சிவலிங்கங்கள் மானுடர் படைப்பன அல்ல; அவை தாமே தோன்றுவன என்ற கருத்து உள்ளது யார் பிரதிட்டை செய்தது என்று கூற முடியாது; எனினும் திச்கற்ற நிலையில் மனித சஞ்சாரமில்லாத அந்தக் காட்டு முட்புதர் நடுவில் அது கிடப்பது கண்டு வியப்பும் திகைப்பும் அடைந்தனர். இருளில் மாணிக்கத்தைக் கண்டது போல் பேருவகை அடைந்தனர். மாயை இடையே ஞான ஒளி கண்டது போல் மனநிறைவு பெற்றனர்.

தம் பாவம் போக்கிய பெருமான் வெய்யில் பட்டு எழில் மாழ்குவது கண்டு வேதனையுற்றான்; தான் பிடித்திருந்த குடையைக் கொண்டு நிழல் உண்டாக்கிக் காளத்தி நாதனைக் கண்ட கண்ணப்பர் போல் நீங்காத காதலோடு பெருவியப்போடு பூசனை செய்யமுற்பட்டான். பக்கத்தில் இருந்த பொற்றாமரைக் குளத்தில் சென்று நீரில் முழுகி நிர்மலனாகிய இறைவனை வழிபடத் தாமரை மலர்களைப் பறித்தவந்து இட்டு அருச்சனை செய்தான்; குளத்து நீரைக்கொண்டு திருமஞ்சனம் செய்தான்; மலரிட்டு வழிபட்டான்.

முள்ளும் புதரும் நீக்கி அந்த நிலப்பரப்பினைத் தூய்மைப் படுத்தினான். வெயிலும் மழையும் தடுக்க வானத்தில் இருந்து விமானம் ஒன்று தருவித்தான். மயன் என்னும் தெய்வத் தச்சனைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் அமைய அவ்விமானத்தை அமைத்தான். எட்டு யானைகள் நின்று தாங்குவது போலச் சிற்பங்கள் தூண்களாக நிறுத்தப்பட்டன. போன்னாலான அவ்விமானம் திருச்சிற்றப்பலத்தில் சிதம்பரத்துக் கோயிலுக்குப் பொன் தகடு வேய்ந்தது போல இருந்தது, தேவர்கள் இந்திர உலகத்துக்குச் சென்று கற்பகத்தரு போன்ற உயர்ந்த தருக்கள் ஐந்தும் கொண்டு வந்தனர். பல்வகை மணிகளையும் சந்தனம், கங்கை நீர், திருப் பள்ளித்தாமம், பஞ்சகவ்வியம், தேன், பழம், திருவிளக்கு திருவமுது முதலியவற்றையும் கொண்டுவந்து படைத்தனர்.

இந்திரன் பொற்றாமரைக் குளத்தில் நீராடித் திருநீறு அணிந்து உருத்திராட்சரம் தரித்து அன்புருவாகச் சிவலிங்கப் பெருமானை வேத ஆகமவிதிப்படி மாலையிட்டு வணங்கி எழுந்து கும்பிட்டுக் கூத்தாடி இறைவனைத் துதித்தான். 'போற்றி போற்றி' என்று பாடல்கள் பல பாடினான்.

வந்தவன் இந்திரன் என்பதால் சிவனும் விரைவில் அவனுக்குக் காட்சிதந்து வேண்டுவதுயாது என்று கேட்கக் "கருணைக் கடலே! என் கொலைப் பழியை நீக்கிக் காத்து என்னைத் தூயவன் ஆக்கினாய்; பாவ விமோசனம் பெற்றேன்.

அன்பும் அருளும் உயர் பண்பும் பெறும் உள்ளம் உடையவன் ஆயினேன். ஆணவம் நீங்கி அடக்கம் என்பதை அறிந்தேன். அமரன் என்றும் அடக்கம் உடையவனாக இருத்தல் வேண்டும் என்ற பேருண்மையைக் கற்பித்தாய். ஆசானை அவமதித்த ஆணவம் அழிந்தது; அவசரப்பட்டுக் கொலைத் தொழிலைச் செய்த கொடுமைகள் என்னை விட்டு நீங்கின; என்றும் உன் திருவடித் தாமரை விழுந்து கிடந்து நித்திய பூசை செய்து நிலைத்து மன அமைதி பெற அருள் செய்ய வேண்டுகிறேன்" என்றான்.

"மாந்தரும் தேவரும் என்னை வணங்குவது முதற்படி: அதனால் அவர்கள் அடக்கமும் மனத்துாய்மையும் பெறுவர் என்பது உண்மைதான். அவர்கள் அரசர்க்குரிய கடமைகளிலிருந்து வழுவுவதை யான் விரும்ப மாட்டேன். எத்தொழில் செய்தாலும் ஏது அவத்தை பட்டாலும் முத்தர் மனம் இறைவனிடம் இருக்கவேண்டும். என்பது உண்மை தான். அதனால் அவர்கள் சோம்பலும் மறதியும் கொண்டு தத்தமக்கு விதித்த கடமைகளினின்று ஒதுங்குவதை யான் விரும்பமாட்டேன். உலகத்தில் அறநெறி தவறாது செயலாற்றுவதையே யான் விரும்புகிறேன். ஆண்டு முழுவதும் இங்கே இருந்து நீ பூசை செய்வது. புனலில் மூழ்குவது, புண்ணியம் தேடுவது, என்று இருக்கத் தேவை இல்லை. நீ இருக்கும் பதவி உயர் பதவி; தேவர் தலைவன்; நீ தலைமை தாங்கிநடத்த வேண்டிய கடமைகள் பல உள்ளன. அனுபவிக்கும் இன்பங்களும் உள்ளன, அவற்றை விட்டு விட்டுத் தவயோகிகளைப் போல இங்கே இருக்க வேண்டாம்; ஆண்டுக்கு ஒரு நாள் இங்கு வந்து போனால் போதும். ஒவ்வோர் ஆண்டும் வசந்த காலம் சித்திரைத் திங்களில், சித்திரை பூரண நிலவு நாளில் வந்து போ; அது போதும், இந்நாள் உனக்காக ஒதுக்கி வைக்கிறேன். பக்த கோடிகள் பலரும் வருவர்; அவர்களுக்கும் இடம் வேண்டும்; மற்றைய நாள்களை அவர்களுக்குரிய நாளாக ஒதுக்கி வைக்கிறேன். 'வருக' என்று சொல்லி விடை தந்து அனுப்பினார். பதவி என்பது கடமை செய்வதற்கே அன்றி அதிக மோகம் கொண்டு உழல்வதற்கு அல்ல; பிரம பதம்விஷ்ணுபதம் இவற்றை எல்லாம் கண்டு நீ ஆசை கொள்ளாதே, மனம் மாசு நீங்கி நிராசையோடு எம்யை வந்து அடையும் போது உனக்கு நிரந்தரமான நித்ய வாழ்க்கையைத் தருவோம்" என்று கூறி வாழ்த்தி அனுப்பினார்.

மண்ணுலகம் பாவங்களைப் போக்கும் கொல்லன் உலைக்களமாக விளங்குகிறது. தெய்வ வழிபாடுகளும், தரும சிந்தனைகளும், அறக் கோட்பாடுகளும், மனிதர்களுக்கு உயர்வு அளிக்கின்றன. சொக்க நாதன் ஆகிய சோமசுந்தரக் கடவுளிடம் நீங்காத அன்பு கொண்டு இந்திரன் மறுபடியும் அமராவதி சேர்ந்தான்; ஆசிரியரிடம் தன் தவற்றை மன்னிக்கும்படி வேண்டி அவர் ஆசி பெற்றுத் திருந்தியவனாகத் தேவர் உலகத்தை ஆண்டு வந்தான். ஆண்டுக்கொருமுறை சித்திரைத் திங்களில் சித்திரை நிலவில் இங்கு வந்து பூஜித்துச் சென்றான். இந்திரன் வழிபட்ட ஆலயம் என்பதால் அத்தலம் பெருமை பெற்றது. மக்கள் திரள் திரளாக வருவதற்கு இந்நிகழ்ச்சியும் ஒரு காரணம் ஆகியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/01&oldid=1110605" இலிருந்து மீள்விக்கப்பட்டது