திருவிளையாடற் புராணம்/21

விக்கிமூலம் இலிருந்து




21. கல்லானைக்குக் கரும்பு அருத்திய படலம்

அபிடேக பாண்டியன் சித்தரை அவமதித்துவிட்டோமோ என்று கதி கலங்கினான். தானே சென்று அவரைக் காண அரண்மனை விட்டு வெளியேறி வந்தான்; இதனை அறிந்த சிவபெருமான் இந்திர விமானத்துக்கு வடமேற்குத் திசையில் வந்தருளினார்.

அன்று பொங்கல் திருநாள் ஆகையால் மக்கள் மகிழ்ச்சி பொங்க எங்கும் குழுமி இருந்தனர். அவரை மொய்த்துக் கொண்டிருந்த ஊர் மக்களை விலகச் செய்து அரசன் சித்தரை அணுகினான்.

"நீர் யார்? ஊர் எது? சொந்த நாடு யாது? உறவினர் யார்? இங்கு வந்தது எதற்காக? என்று வரிசையாகக் கேட்டான்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்; எமக்கு எந்த நாடும் சொந்த நாடே, காசி நகரத்தில் தங்குவது வழக்கம்; யாசித்து வாழ்க்கை நடத்துவது எங்கள் தொழில்; சித்து விளையாடி மக்களை மகிழ்விப்பது எங்கள் திறமை; வேதம் முதலிய கற்றவன் யான்; ஏதம் எது வந்தாலும் நீக்கித் தருவோம்; எல்லாம் வல்ல சித்தர் என்று என்னை அழைப்பார்கள்" என்றார்.

பாண்டியன் இவருடைய இறுமாப்பைச் சிதற அடிப்பேன் என்று சொல்லிக் கொண்டான்; அதற்குத் தக்க உபாயம் தேடிக் கொண்டிருந்தான்; அந்தச் சமயத்தில் கழனியிலிருந்து கரும்பு ஒன்றைக் களமன் ஒருவன் கொண்டு வந்து தந்தான்; கமுகு போன்று பருத்துத் திரண்டகணுக்களை உடைய அந்தக் கரும்பைப் பக்கத்தில் விமானத்தில் இருந்த கல்லானை அடுத்து செய்ய முடியுமா என்று கேட்டான்

ஆழம் தெரியாமல் காலை விட்டவன் கதியாயிற்று. வேழத்திடம் தந்த கரும்பை உயிர் பெற்று எழுந்து கடித்துத் தின்று அதை முறுக்கி வீழ்த்தியது. மதம் கொண்ட யானையாக அது மதர்த்து எழுந்தது. சித்தரின் திருக்குறிப்பை அறிந்து கல்யானை பாண்டியனின் முத்து மாலையை இழுத்துப் பறித்துத் கொண்டது. கஞ்சுக மாக்கள் கைத்தடி கொண்டு துதிக்கை உடைய யானையைத் தாக்க ஓங்கினர்; அது முத்து மாலையைச் சத்தம் செய்யாமல் வாயில் போட்டுக் கொண்டது; பாண்டியன் சினந்து சித்தரை உருத்துப் பார்த்தான். காவலனின் குறிப்பு அறிந்த ஏவலர் சிலர் சித்தரை அடிக்க ஓங்கிய கை அசையாமல் நின்றுவிட்டது. அவர்கள் அடியெடுத்து நகர்த்த மாட்டாமல் பதுமை என நின்றனர்; இந்தப் புதுமை கண்டு விதிர் விதிர்ப்பை அடைந்தனர்; அன்பும், அச்சமும் தோன்றத் துன்பம் தந்தமைக்கு வருந்திச் சித்தரிடம் மன்னிப்புக் கேட்டான்.

அவர் அவனைப் பார்த்துச் சிரித்து இவை எல்லாம் எம் சித்து விளையாடல்; உம்மோடு பரிகசித்து விளையாட வந்தோம். நீ வேண்டுவது கேள்" என்றார். யானை தான் விழுங்கிய முத்துமாலையைத் திருப்பி அவன் கையில் கொடுத்தது.

பொன்னும் பொருளும் மானுடர் முயன்று பெறுவன; கல்வி கற்று அறிவது; ஆட்சி வீரத்தால் விளைவது; செல்வம் தொடர்ந்து வருவது; எல்லாம் உடைய எனக்குக் கட்டி அணைக்க மனைவி உண்டு; என்னை எட்டி உதைக்கக் குழந்தைகள் இல்லை. மக்கட் செல்வம் தந்து என் துக்கத்தைப் போக்குவீர்" என்று கேட்டுக் கொண்டான்.

சித்தர் அருளால் நன் மகனைப் பெற்று விக்கிரமன் எனப் பெயரிட்டு அவனைப் பெரியோன் ஆக்கி ஆட்சியை ஒப்படைத்தான். பற்றுகள் நீங்கிப் பரமன் திருவடியில் விழுந்து சிவசக்தியோடு தானும் கலந்து முத்தியை அடைந்தான். 

22. யானை எய்த படலம்

சோம சுந்தரருக்கு அமைத்த இந்திர விமானத்துக்கு அருகே வடக்கே அழகிய ஒரு கோயில் கட்டிச் சித்தருக்கு உருவச் சிலை வைத்து விக்கிரம பாண்டியன் கிரமமாக பூஜித்து வந்தான். சைவம் தழைக்கச் சிவன் கோயில் திருப்யணிகள் செய்து வந்தான்.

அவன் வாழ்ந்த காலத்தில் சோழ நாட்டு அரசன் சமண சமயத்தைத் தழுவி இருந்தான்; அங்கிருந்த சமணர் அரசனைத் தூண்டி விட்டுப் பாண்டியனை அழிக்க வேண்டுதல் விடுத்தனர். அரசியல் காரணம் இன்றிப் போர் தொடுப்பது முறையன்று என எண்ணி அவர்களையே மந்திர சக்தியால் அவனை அழிக்கத் துணையாக்கினான். அழிவு தரும் வேள்வி ஒன்றைச் செய்து அதில் முரட்டு யானை ஒன்றைத் தோற்றுவித்தனர். இதளை 'அபிசார ஓமம்' என்பர். வேள்வியிலிருந்து உருத்து எழுந்த யானை படைத்தவர்கள் ஏவலைக் கேட்டுப் பாண்டிய நாடு நோக்கிப் பாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/21&oldid=1111423" இலிருந்து மீள்விக்கப்பட்டது